சில மாதங்களுக்கு முன் ப்ரூஸ் சாட்வின் (Bruce Chatwin) எழுதிய Utz எனும் சிறு நாவலைப் படித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பயணக் கட்டுரைத் தொடர்பாக சில அபுனைவு நூல்களைப் படித்த பொது இவரைப் பற்றி முதல் முதலில் கேள்விப்பட்டேன். தொடர்ந்து அவருடைய The Songlines எனும் புத்தகத்தைப் படித்து அசந்துபோனேன். ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினருடன் பல மாதங்கள் தங்கியிருந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். Tristes Tropiques புத்தகத்துக்குப் பிறகு மிகுந்த மனவிரிவை ஏற்படுத்திய தத்துவ புத்தகமாக என்னை The Songlines மிகவும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, நான் வழக்கமாக மேயும் பழைய புத்தகக் கடையில் Utz நாவலைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன்.
ஸ்டாலினின் கம்யூனிச ஆட்சியின் போது (1940களில்) உட்ஸ் எனும் செல்வந்தர் செக் குடியரசில் வாழ்கிறார். பரம்பரைப் பணக்காரரான உட்ஸால் பலதரப்பட்ட பீங்கான் பொம்மைகளைச் சேகரிக்க முடிகிறது. பதின்ம வயது தாண்டுவதற்குள் ஆயிரக்கணக்கான பீங்கான் பொம்மைகளை சேகரித்து வைத்துள்ளார். பொழுதுபோக்கு எனும் அளவிலில்லாமல் அது ஒரு கைவிட முடியாத வியாதி போல அவரைத் தொற்றிக் கொள்கிறது. மியூசியத்தில் இருக்கும் பீங்கான் பொம்மைகள் மேல் பரிதாபப்படுகிறார் - 'பாவம், மூச்சு விட முடியாமல் அவை தவிக்கின்றன'. ஐரோப்பாவின் ஏதேனும் நாட்டில் பொருட்நசிவு ஏற்பட்டால் மிகுந்த சந்தோஷத்தோடு அங்கு சென்று வீழும் குடும்பங்களின் சேகரிப்பிலிருந்து பீங்கான் கலைப்பொருட்களை சேகரிப்பார். பெரும் பணக்காரனாக இருந்தாலும் மேற்குலகுக்கு தப்பிச் செல்ல சிறிதும் நாட்டமில்லாமல் இருப்பதால், பீங்கான் பொருட்களைப் பிரிய மனமில்லாமல் செக் குடியரசிலேயே காலத்தைக்கழிக்கிறார்.
தனிச்சொத்துகளில் உபயோகமான பொருட்களை சமூகத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் சட்டம் வரும்போது உட்ஸிடம் இருக்கும் பீங்கான் பொருட்களை மட்டும் விட்டுவிடுகிறார்கள். எந்தவிதமான உபயோகமும் இல்லை என்பதால் அவை தப்பிக்கின்றன.
ஆனால் செக் குடியரசைத் தாண்டி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது எனும் சட்டம் இருப்பதால் அவற்றுடன் கம்யூனிச ஆட்சியில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பண வசதி இருப்பதால் அடிக்கடி பிரான்ஸ், ஜெர்மனி எனச் சென்றுவருகிறார் உட்ஸ். அப்போதெல்லாம் மிகச் சுருக்கமாகப் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிவிடுவார். 'என்ன இருக்கிறது அந்த நாடுகளில், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் என எங்கும் மனித பொம்மைகள் மட்டுமே வாழ்கிறார்கள்.' என ஏர்போர்டில் சந்திக்கும் அதிகாரிகளிடம் சலித்துக்கொள்கிறார்.
பதினேழாம் நூற்றாண்டின் அரசர் ருடால்ப் பீங்கான் பொருட்களின் பெரும் சேகரிப்பாளர். அவரைப் பற்றி புத்தகம் எழுத ஒரு எழுத்தாளர் விருப்பப்படுகிறார். இறந்துபோனவரைப் பற்றி என்ன எழுதப்போகிறாய், பராக்கில் உட்ஸ் எனும் கிறுக்கன் இருக்கிறான், அவனிடம் செல் என ஒரு நண்பர் அவருக்குச் சொல்ல உட்ஸைத் தேடி ப்ராக் வருகிறார் அந்த எழுத்தாளர். வந்த சமயத்தில் உட்ஸ் இறந்துவிட, அவரைப் பற்றி செய்திகள் சேகரிக்கத் தொடங்குகிறார்.
உட்ஸின் சிறுவயதில் அவரது அம்மாவுக்கு மகனின் பீங்கான் சேகரிப்பு பற்றி மிகுந்த கவலை வர, குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசிக்கிறார். பலவிதமான மனவிகாரங்களைப் போல இதுவும் ஒன்று எனச் சர்வசாதாரணமாகச் சொல்லிச் செல்கிறார் அவர். நாவலின் மிக முக்கியமான கட்டமாக எனக்குத் தோன்றுகிறது.
உடமைகளைப் பகிர்ந்து கொள், தனிப்பட்ட சுகங்களுக்காக பொருள் சேகரிக்கக் கூடாது எனும் சட்டம் அரசு போடும்போது உட்ஸின் இந்த பீங்கான் சேகரிக்கும் பழக்கம் மிக விசித்திரமாகக் கருதப்படுகிறது. மற்றவர்களுக்கு உபயோகமில்லை என்பதால் இந்தப் பழக்கத்தை மறுதலிக்காத சட்டம், மற்ற தனிப்பட்ட அடையாளங்களை விட்டுவைக்கிறதா? உட்ஸினுடைய இருப்பின் அடையாளமே அவர் சேகரித்த பீங்கான் பொருட்களால் தான் உருவாகிறது. அதைப் போலவே சமூகத்தில் தனி மனித விருப்பு வெறுப்புகள் அவரவர் அடையாளமாக மாறும்போது அதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசாட்சியை இந்த நாவல் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.
பிரூஸ் சாட்வினின் மொழி லாகவமும் சொற் சிக்கனமும் வாகியங்களில் விஷய அடர்த்தியும் நாவலின் ஆத்மாவை கச்சிதமாகப் படம் பிடிக்கின்றன. பொதுவாக இவ்வகை மொழியை தென் அமெரிக்க நாவலலசிரிய்கள் பயன்படுத்துவர்.
நள்ளிரவின் குழந்தைகள் நாவலில் பிரூஸின் மொழிநடையை பின்பற்ற முயற்சித்ததாக சல்மான் ரஷ்டி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். வெளித்தோற்றத்தில் தொடர்பற்றதாகத் தெரியும் பல விஷயங்களை ஒரே வாக்கியத்தில் அமைப்பதன் மூலம் மொழியின் கவர்ச்சியைக் கூட்டுவது இப்பாணியில் பிரதானமானது. உதாரணத்துக்கு,
It was now early evening and we webling sitting on a slatted seat in the Old wish Cemetery. Pigeons were burbling on the roof of the Klausen Synagogue. The sunbeams, falling through camores, lit up spirals of midges and landed on the mossy tombstones, which, heaped one upon the other, resembled sea weed-covered rocks at low-tide.
செக் நாட்டின் கம்யூனிச சட்டங்கள் கடுமையாக்கப்படும்போது மணமாகாதவர்களுக்கு ஒற்றை படுக்கையறை போதுமென்ற சட்டம் அமலுக்கு வருகிறது. தன் பீங்கான் சேகரிப்பைக் காப்பாற்ற தன் சமையற்காரி மார்த்தாவை உட்ஸ் திருமணம் செய்துகொள்கிறார். வேறெனென்ன சிக்கல்கள் வருமோ என பயந்து, பீங்கான் சிலைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு செய்கிறார். செக் குடியரசின் எல்லா சத்தங்களையும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது எனும் பயம் எல்லாருக்கும் இருப்பதால், மிக ரகசியமாக இத்திட்டம் உருவாகிறது. கடைசியில் அவர்களது திட்டம் முடிவடைந்ததா என தெளிவான முடிவு நாவலில் இல்லை.
இது எப்படிப்பட்ட நாவல்?
நூற்றி ஐம்பது பக்கங்களில் ஒருவரது வாழ்க்கையைச் சொல்ல முடியாதுதான் என்றாலும், உட்ஸின் பீங்கான் பிடிப்பைக் கொண்டு ஒரு நாட்டின் வரைபடத்தை வரைய முற்படுகிறார் ப்ரூஸ்.சமூகத்தின் வரைபடத்தை, நாட்டின் வரலாறை எழுத பல உத்திகள் இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான விஷயத்தை கையிலெடுக்கிறார் என படிக்கும்போது நாம் யோசித்தால் பல விஷயங்கள் கிடைக்கக்கூடும்.
நாவலைப் படிக்கும்போது வெளிப்படையாகச் சொல்லப்படாத ஆழங்களைத் தேடுவது மிக சுவாரஸ்யமான விஷயம். ஒரு எல்லைவரை ஆசிரியர் சொல்லவரும் கருப்பொருளின் ஆன்மா அங்கே தான் அடங்கியிருக்கும் என்பது என் எண்ணம். தவறாகவும் இருக்கலாம்.
ஒரு தேர்ந்த நாவலாசிரியர் எண்ணிலடங்கா தளங்களில் கதைக்கண்ணிகளை ஒளித்துவைத்து வாசகர்களுக்குப் போக்கு காட்டக்கூடும். மிகக் கவனமாகப் படிக்காதபோது அவற்றை நாம் கவனிக்காமல் கடந்து சென்றுவிடுவோம் எனத் தோன்றுகிறது.
இந்த நாவலில் அப்படிப் பல பொறிகள் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது உட்ஸ் தனக்குள் நிகழ்த்தும் சில உரையாடல்கள். குறிப்பாக,
They listen, listen, listen to everything but...they hear nothing
மேலுள்ள வரியை நாவலில் கேப்ஷனாகக் கூடப் போட்டுவிடலாம். அந்தளவு ஆழமுள்ள வரி. உண்மையில், மக்களை கண்காணிக்க செக் கம்யூனிச அரசு பல உளவு அமைப்புகளையும், தொழில்நுட்பக் கருவிகளையும் பிரயோகப்படுத்தியது என்பது உண்மை. உட்ஸின் வீட்டில் கூட அப்படிப்பட்ட கருவிகள் இருக்கலாம் எனப் பயந்துதான் சமையலறைப் பாத்திரங்களைக் கழுவியபடி மார்த்தாவுடன் ரகசியம் பேசுவார். இவ்வரியில், பெரியண்ணனின் கண்காணிப்பு மட்டும் வெளிப்படுவதில்லை, they hear nothing என்பதில் பல அர்த்தங்களும் உள்ளன.
The Lives of Others 2006இல் ஆஸ்கார் வாங்கிய ஜெர்மன் படத்தின் கதையோடு இதை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு எழுத்தாளரைக் கண்காணிக்க பெர்லின் உளவு அமைப்பு ஒரு குழுவை ஏற்பாடு செய்யும். கிழக்கிலிருந்து மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லவோ, பிரசங்கங்களை அனுப்பவோ அவருக்கு அனுமதியில்லை. அவ்வீட்டில் நடக்கும் சம்பவங்களை இருபத்து நான்கு மணிநேரமும் கேட்கும் உளவாளி மெல்ல எழுத்தாளன் பக்கம் இருக்கும் நியாயத்துக்கு செவி சாய்க்கத் தொடங்குவார். ஒவ்வொரு நாளும் எழுதப்படும் ஆடிட்டில் இன்று ஒன்றும் நடக்கவில்லை அல்லது உப்புச் சப்புப் பெறாத விஷயம் நடந்ததாக எழுதி வைத்துவிடுவார். ஆனால், மெல்ல எழுத்தாளனின் புரட்சிக்கு தன்னை அர்பணிக்கத் தொடங்குவார். இது உளவாளி மனமாறும் சம்பவம். உண்மைச் சம்பவம்.
they hear nothing என்பதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்.
அதே போல் பீங்கான் உருவ குள்ளர்களான 'கோலம்' பற்றி உட்ஸ் மிக உயர்வாகப் பேசும் இடங்களும் மிக ரம்மியமானவை. ஆதாம் முதல் உலகின் பல மனிதர்கள் பீங்கான் கோலத்திலிருந்து வந்தவர்கள் எனும் நம்பிக்கையால், உலகமே மெளன மனிதகளால் நிரம்பியது என்ற முடிவுக்கு வருகிறான் உட்ஸ். அதே சமயம், கம்யூனிச சீர்கேடுகளை முன்வைத்து செக் குடியரசுச் சமூகத்தையே பல பீங்கான் கோலம்களாக ஆட்சியாளர்கள் நடத்துகிறார்களோ என்பதும் தோன்றாமல் இல்லை. உட்ஸின் இந்த வினோத விளக்கங்கள் உணர்ச்சியற்ற நிலையில் வைக்கப்படும் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகின்றன.
மிக எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் பல வாசிப்புகளைச் சாத்தியப்படுத்துகிறது. தகர டப்பாவை அடித்தபடி டான்சிக் நகரத்தில் அதிர்வலைகளை வெளிப்படுத்திய குந்தர் க்ராஸின் ஆஸ்கார் போல, பீங்கான் பொம்மைகளை சேகரித்து ஊமை நாடகத்தையே தன் அடையாளமாக மாற்றிக்கொண்டு, கம்யூனிச நாசத்தையும் ஆதிக்கத்தின் பெருங்கரத்தை காட்டிய உட்ஸும் மறக்கமுடியாத பாத்திரமாக அமைந்துள்ளது. அதனால் தான் சிறு நாவலாக இருந்தாலும் எந்த பக்கத்தை புரட்டிப் படித்தாலும் ஏதேனும் பளிச்சென ப்ருஸ் சாட்வினின் பார்வை உட்ஸ் வழியாக நம்மை உலுக்கிவிடுகிறது.
Recent Comments