மகாதேவன் ரமேஷ் எழுதிய Carnatic Music - A gentle Introduction என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகம் ’கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்’ என்ற பெயரில் நேற்று வெளியிட்டுள்ளது. இது நான் தமிழாக்கம் செய்த முதல் புத்தகமாகும்.
பத்ரி இப்புத்தகத்தின் அறிமுகத்தில் - `கிரிதரனும் மகாதேவன் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மைதான். ஆனால் நான் மகாதேவனின் எழுத்தை பத்து வருடங்களுக்கு முன்னர் `பார்க்கத்` தொடங்கிவிட்டேன்.
*
அப்போது என் முதல் வேலைக்காக சென்னையில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் என்றழைக்கப்படும், ஒரு ஆரம்ப நிலை கணினி நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கியிருந்தேன். என்னையும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்கள் கொண்ட மென்பொருள் உருவாக்கும் நிறுவனம். அதில் பதிமூன்று பேர் முன் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு சேர்ந்தவர்கள். என் நண்பனும், நானும் என் நிறுவனரின் பழைய கர்ம பலனை அவர் அனுபவிப்பதற்காகச் சேர்ந்தவர்கள். ஏனென்றால்,முதல் நாள் வேலைக்குச் சென்ற போது, எங்கள் கணினி அறிவு ,வேலை செய்யத் தெரியாத அளவுக்கு மட்டுமே இருந்தது ஒரு முக்கியமான காரணம்.
சின்ன நிறுவனம் என்பதால் பயிற்ச்சியெல்லாம் கிடையாது. கஜா கா தோஸ்த் போல ‘வாங்க ஆடுகளத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என எங்கள் பாதுகாப்பு அட்டைகளைக் கொடுத்து நிராயுதபாணியாய் இருந்த எங்களைப் போருக்கு அனுப்பினார் நிறுவனர்.
`
ஆரம்ப நிலையில் இருந்ததால், மிக அதிக விலை கொண்ட மென்பொருட்களை நிறுவனத்தில் தடை செய்திருந்தனர். அங்கொன்று, இங்கொன்றாக மைக்ரோசாப்டின் ஆபிஸ் தலைகாட்டுவதோடு சரி. இதர மென்பொருட்கள் அனைத்தும் ஓபன் சோர்ஸ் தயவில் திணறிக்கொண்டிருந்தன. இப்போதிருக்கும் உபண்டு லினக்ஸ் போன்ற மேம்பட்ட மென்பொருட்கள் அப்போது கிடையாது. கணந்தோறும் தரவிறக்கம் செய்யும் பைனரிகளை ஆங்காங்கு செதுக்கி உபயோகப்படுத்தும் திறமையான குள்ளநரிகள் பலர் இருந்தனர். வித்தைக்காரன் தொப்பியிலிருந்து எடுக்கும் முயல் போல், இவர்கள் மனது வைத்தால் மட்டுமே ஓடக்கூடிய நிலையில் பல மென்பொருட்கள் உலவிக்கொண்டிருந்தன. நிறுவனமும் இவர்கள் புண்ணியத்தில் மென்பொருள் ஏற்றுமதியை காமாசோமா என ஓட்டிக்கொண்டிருந்தது.
நான் சேர்ந்த நேரம், இருந்த கடைசி விண்டோஸ் கணினியையும் ஏலத்தில் விற்றுவிட்டார்கள். கல்லூரியில் மவுஸ் இல்லாத கணினி முன் உட்கார நேர்ந்தால், கலைந்த தலைமுடியை சரிசெய்ய மட்டுமே எனக்குத் தெரியும். ஏதோ மவுஸைப் பிடித்து, டெஸ்க்டாப்பில் இருக்கும் சில கோப்புகளை மட்டும் படிக்கக் கூடிய நிலையில் இருந்த என்னை லினக்ஸில்(Linux) வேலை செய்யச் சொன்னார்கள். பச்சை, கறுப்பு என பலவண்ண எழுத்துகளில் எல்லோரும் வேலைசெய்துகொண்டிருக்க, நானும் தப்புத் தப்பாக யுனிக்ஸ் கட்டளைகளை உள்ளீடு செய்யத் துவங்கினேன். பதினைந்து பேர் மட்டும் இருந்ததால் சுலபமாக உதவி கிடைத்தன என்றாலும், அதே நேரத்தில் சங்கடமான சம்பவங்களும் நிகழ்ந்தன. நிறுவனர் கணினி வல்லுநர் என்பதால், பல சமயங்களில் ‘இது எப்படிண்ணே வேலை செய்யுது’ என்ற ரேஞ்சில் தொல்லைப்படுத்தியிருக்கிறேன்.
இதனால் லினக்ஸைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமானது.பல மணிநேரங்கள் கணினியில் லினக்ஸ் கற்றுக்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கினேன் அப்போது சென்னை லக் (CLUG - Chennai Linux Users Group) எனக்கு அறிமுகம் ஆனது. இது, சென்னையில் இருந்த லினக்ஸ் தன்னார்வலர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய குழுவின் பெயர். ஒவ்வொரு மாதமும் சென்னை ஐ.ஐ.டியில் ஒன்றாகக் கூடி , சில கலந்துரையாடல்கள், கேள்வி நேரம் என நடத்தி வந்தனர். மெதுவாக, இக்குழு நடத்திய சந்திப்புகளில் கலந்து கொள்ளத்துவங்கினேன்.
எனக்கு லினக்ஸ் பற்றி குழப்பிய பல மேக மூட்டங்கள், மடற்குழுக்கள் வழியாகவோ, நேரடியாக சந்திப்பின் போதோ மறையத் தொடங்கின. அப்போது ரிச்சர்ட் ஸ்டால்மேன்(Richard Stallman) , எரிக் ரேமண்ட் (Eric Raymond), லினஸ் டோர்வால்ஸ் (Linus Torvolds) போன்ற உலக நாயகர்கள் இருந்தாலும், வியத்தகு விதத்தில்பல உள்ளூர் நாயகர்களும் இருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் தாத்ஸ். முழு பெயர் சுதாகர் ‘தாத்ஸ்’ சந்திரசேகர்.
இந்தியாவில் லினக்ஸின் தாக்கம் முழுமையாக உருவாவதற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம். இவர் 1990களில் முதல்முறையாக லினக்ஸ் எனும் இயக்கு தளத்தின்(Operation System) நெளிவு சுளிவுகளை இந்திய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.
ஒரு சென்னை சந்திப்பில் இவர் பேச்சைக் கேட்ட காலத்தில் , இணையப் பத்திகள் படிக்கத் துவங்கியிருந்தேன். நான் வருடக்கணக்காக படித்துவரும் இணையத்தளங்களில் இவர் எழுதும் பக்கங்களும் அடங்கும். தாத்ஸ் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. ஏகலைவன் போல் மறைமுகமாக நான் தொடர்ந்த ஒரு கணினி வல்லுனர். பலருக்கும் குரு. இவரைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
இவர் எழுதி வந்த இணையத்தளத்தில் முதல்முறையாக மகாதேவன் ரமேஷின் பெயரைப் பார்த்தேன்.
அப்பாடா..ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தியா என உங்கள் பெருமூச்சு கேட்கிறது.
பின்னர் ரமேஷ் எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் படிக்கத் தொடங்கினேன். அக்காலகட்டங்களில் அமெரிக்க வாழ்வைப் பற்றியும், வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எம்.எஸ் படிப்பில் சந்திக்கும் சிக்கல்கள் பற்றியும் என் அலுவலக நண்பர்கள் மற்றும் என் அண்ணன் மூலம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கியது.
ரமேஷின் ஆங்கில கட்டுரைகள் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் வாழ்வு, அங்கிருக்கும் மாணவர்களின் நிலை பற்றியும் எள்ளலுடன் நிரம்பி இருக்கும். அக்கால மடற்குழுக்களில் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப்பிரபலம். ஒவ்வொரு வரியிலும் சுயஎள்ளல், மேம்பட்ட நகைச்சுவை உணர்வு, அதீத மேதைமைத்தனம் என அனைத்தும் இவர் கட்டுரைகளில் காணப்படும்.
இவர் எழுதிய பல கட்டுரைகளும், கதைகளும் ஆங்கில நாவலாசிரியர் பி.ஜி.வுட்ஹவுஸின் படைப்புகளின் தரத்தில் இருப்பவை. வரிக்கு வரி கட்டுரைகளில் நகைச்சுவையும், கிண்டலும் பரிமளிக்கும். இளையராஜாவின் ரசிகரான இவர், இந்திய சினிமா பற்றி பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒருமுறை இவர் வைரமுத்துவின் பாடல் வரிகள் எதுகை மோனையில் இருக்கும் கணித தருக்கத்தை தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்திருந்தார். ஒரு கண்னி நிரலாக்க மொழியில் (programming language) வைரமுத்துவின் பாடலை இயற்றுவது எப்படி என நகைச்சுவையாக எழுதியிருந்தார். மகாதேவனின் புகழ்பெற்ற கட்டுரையாக இது பல இணையத் தளங்களில் பரவியது. கடைசி பக்கத்தில் சுஜாதா கூட சற்றே கோபமாக இதைச் சாடியிருந்தார்.
இவர் எழுதிய A Gentle Introduction to Carnatic Music என்ற இணையக்கட்டுரைகளை அப்போதே படித்திருந்தாலும், நிறையப் புரியவில்லை; பாதியில் நிறுத்திவிட்டேன். பின்னர் இசைப் பற்றி படிக்கத் தொடங்கிய பின்னர் இக்கட்டுரைகளை ரசிக்க முடிந்தது.நான் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிப் படித்த முதல் கட்டுரையானது. அதன் நெளிவு சுளிவுகளும் ஆழங்களும் அதிகமானது எனப் புரியவைத்தது. இசையைக் கற்றுக்கொள்ள நினைக்கும் மாணவன் படிக்க வேண்டிய முதல் கட்டுரையாக இதை இன்றளவும் மதித்து வருகிறேன்.
*
பத்ரி வெளியிட்ட ஆங்கில புத்தகத்தைப் படித்தவுடன் இதைப் போல் பலவிதமான நினைவுகள் தோன்றின.இதையெல்லாம் மீறி ஒரு எண்ணம் தோன்றியது - முதல் தமிழாக்க முயற்சியைச் செய்ய இதைவிட நல்ல புத்தகம்,அனுபவம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. முண்டியடித்துக்கொண்டு பத்ரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். மீதத்தை பத்ரியே எழுதிவிட்டார்.
அவர் எழுதாமல் விட்ட விஷ்யம் ஒன்று உள்ளது. அது, பத்ரியின் எடிட்டிங். புத்தகத்தில் என் உழைப்பை விட, பத்ரியின் உழைப்பு மிக அதிகம்.நான் எழுதிய சாப்டர்களையும் கிழித்துப் போடாமல், நிதானமாக ஒவ்வொரு நாளும் எடிட் செய்து அடுத்த நாள் தவறாமல் அனுப்பிவிடுவார். அனேகமாக எல்லா வரிகளும் மாறியிருக்கும். இது அவருக்கு ஒரு இம்சையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும், அடுத்த நாளே மிகச் சிரத்தையோடு தெளிவாக எடிட் செய்து அனுப்பிவிடுவார். கூடவே நான் ஒன்றும் மாற்றவில்லை என ஒரு வரியும் மின்னஞ்சலில் எழுதியிருப்பார்!
இரண்டு வாரங்களில் முடிக்க முடிந்தாலும் பல முறை மூல நூலை படித்தேன். இதுவரை செய்த தமிழாக்க கதைகள், கட்டுரைகள் என்முன் வந்து கேலிசெய்தது போலிருந்தது. இத்தமிழாக்கம், எனக்கு மிக நல்ல, சுவாரசியமான அனுபவமாக இது இருந்தது.
பத்ரிக்கும், கிழக்கு பதிப்பத்தாருக்கும் என் நன்றிகள்!
கர்நாடக சங்கீத அடிப்படைகளை தெளிவாக இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இவ்வள்வு கடினமான கலை பற்றி, இதைவிட எளிமையான விளக்கங்களுடன் படிக்க முடியாது. இசையில் பிடிப்பும், கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடலாம்.
இப்புத்தகம் கர்நாடக இசையைப் பற்றிய அடிப்படைகளை விரிவாகப் விவரிப்பதோடு, இசைப் பற்றிய நம் அறிவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது நிச்சயம்.
Recent Comments