தந்தியிசை கன்சர்ட்டோ வகையில் விவால்டியின் நான்கு பருவங்கள் (Four Seasons) மிகவும் பிரபலம். போன வாரம் பார்ப்பிகன் அரங்கில் மோசார்ட் சிம்பொனி குழுவினர் இசைத்த இந்த கன்சர்ட்டோவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பொனியைப் போலல்லாது சிறு தந்தியிசைக் குழுவினரின் கன்சர்ட்டோக்கள் சேம்பர் இசை வடிவில் அமைந்திருக்கும். வி.எஸ்.நரசிம்மனின் Madras String Quartet குழுவினர் சேம்பர் வகையினராக இருந்தாலும், ஒரே ஒரு வயலின் மட்டுமே இசைப்பதால் கன்சர்ட்டோ எனும் அமைப்புக்குள் அடங்காது. இப்படி பிரித்து வகைபடுத்துவது ஒரு செளகரியத்துக்காக மட்டுமே. பறவைகளை இனம் காண்பதற்காக அவற்றின் இறெக்கை வடிவம், உணவு முறை, இருப்பிடம் சார்ந்து வகைப்படுத்துவதைப் போல, ஒழுங்காகப் பிரித்து அமைத்துக்கொள்வது இசை வடிவை அடையாளம் காணப்பயன்படும்.
விவால்டியின் நான்கு பருவங்கள் நான்கு விதமான கன்சர்ட்டோக்கள் அடங்கியது. வசந்தகாலம், வெயில் காலம், இளவேனில் காலம், குளிர் காலம் என பருவத்தை இசையின் அடையாளமாக மாற்றியுள்ளார். பொதுவாக இயற்கையை நம்பி வாழும் விலங்கினங்களின் குணாதிசய மாற்றங்களைக் கொண்டு பருவக்கால மாற்றங்களை விளக்கிவிடலாம். அப்படிப்பட்ட இயற்கை மாற்றங்களை இசை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார் விவால்டி.
வசந்தகாலத்தில் பறவைகளின் கீச்சொலி, இளவேனில் காலத்து மரங்களின் சலசலப்பு, குளிர் காலத்து பனிப்பொழிவு என இயற்கை ஒலிகளை இசையாக்கியுள்ளார். பர்ரோக் இசை பாணியில், மிக அலங்காரமான வடிவமும், உணர்வுபூர்வமாகச் சொல்லவந்ததை சொல்லிச் செல்வதுமாக இருப்பதால் முன்னூறு வருடங்களுக்கும் மேலாக மிகப் புகழ்பெற்ற கான்சர்ட்டோவாக இது நிலைத்து நிற்கிறது.
விவால்டி இசையமைத்த பல தேவாலைய இசையைத் தாண்டி இன்றளவும் நான்கு பருவங்கள் பல அரங்குகளில் வாசிக்கப்படுவதற்கு அலெக்ஸ் ராஸ் போன்ற இசை விற்பன்னர்கள் பல காரணங்களைக் கூறினாலும், அடிப்படையில் இந்த கான்சர்ட்டோவில் வெளிப்படும் தூய்மையான உணர்வுவெளியே சாகாவரத்தைத் தந்துவிடுவதாகத் தோன்றுகிறது. கிரீச்சிடும் பறவை ஒலிகளும், குடிகாரர்களின் குழறல்களும், பனி ஊளை சத்தமும், தெளிந்த நீரோடையின் ஒலியும் இதை ஒரு மேம்பட்ட அனுபவமாக மாற்றுகிறது. தேவாலய இசையைப் போல இன்றும் நம்மருகே இயற்கையை ஓரடி அருகே அழைத்து வருவது போன்ற பிரமையை அளிக்கிறது.
Recent Comments