கதைக்கு ஒரு முறை, சதைக்கு ஒரு முறை என விக்டோரியன் காலத்து நாவல்களை குறைந்தது இருதடவை படிக்கலாம். கத்திரி எடுத்து சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்குவதற்கு முன்னே சொல்லிவிடுகிறேன், உயிரோட்டமான பாத்திரப்படைப்பே சதை. பல நாவல்களில் முதல் நூறு பக்கங்கள் வரை பாத்திரங்களை வர்ணித்துக்கொண்டே போவர். பாதிக்கு மேல் புரியாது என்பதால் ரசித்திருக்க முடியாது. நாவல் முடிந்தவுடன் ஒரு ஜிக்ஸா போல் எல்லா பாத்திரங்களும், சம்பவங்களும் நம் எண்ணத்தில் சேரத் தொடங்கும். ஓரளவு குத்துமதிப்பாகப் புரிந்தவுடன், மறுபடியும் முதல் நூறு பக்கங்களைப் படிக்கலாம். `உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்` என எந்திரன் பாடுவதைப் போல், நுணுக்கமான வர்ணனைகளுக்கு நடுவே கதையின் ரகசியம் அல்லது ஒருவனின் செயலுக்கான அர்த்தம் ஒளிந்திருக்கும்.
குணாதிசையங்களை விவரிப்பதில் அப்படி என்னதான் ஈர்ப்போ இவர்களுக்கு? வல்லவர், நல்லவர் என ஓரிரு உதாரணங்களோடு நிறுத்த முடியாது. அட்சயப் பாத்திரம் போல் அள்ளிக்கொண்டேயிருக்கலாம்;ஆனாலும் கதாப்பாத்திரத்தின் முழு ஸ்வரூபம் வெளியே தெரியாது.
பல சமயங்களில், கதாபாத்திரங்களின் நீண்ட கோட்டு பாக்கெட்டின் அடியாழத்தில் ஏதாவது கருமை ஒட்டியிருக்கும். இவற்றைத் தாண்டி, விக்டோரியன் காலத்து மரபை கொண்டாட, ஏளனம் செய்ய பல நிகழ்வுகளின் விவரிப்பு. முக்கியமாக, விருந்து என்ற பெயரில் ஊரிலுள்ள பெரிய மனிதப் பட்டாளமே வரிசையில் நிற்கும். A Chrome Yellow, Mayor of Casterbridge, Point Counterpoint, ஏறத்தாழ எல்லா டிக்கன்ஸின் நாவல்களும், இப்படிப்பட்ட பெளராணிக மரபின் வீழ்ச்சியைப் படம்பிடிப்பவையே.
எட்கர் ஆலன் போ, ஜி.கே.செஸ்டர்டன்,ஷெர்லாக் ஹோம்ஸ் என்றால் யார் செய்த குற்றம் பற்றி எழுதுவார்கள். குற்றம் ஏன் நடந்தது என நோண்டினால் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், தாமஸ் மன். குற்றம் ஒரு பின்னணி மட்டுமே. தேசம், மரபு,மனிதத்துவம்,கலை போன்றவற்றின் வீழ்ச்சியை படம்பிடிப்பதே முதன்மையான நோக்கம்.
(படத்தைச் சொடுக்கினால் பிராஜெக்ட் குடென்பெர்கில் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்).
சமர்செட் மாம் எழுதிய The Moon and Six pence நாவலும் இவ்வகையைச் சார்ந்ததே.
ஒரு ஊரில் இரு நண்பர்கள். இருவரும் ஒன்றாக நடக்கும் சமயம் ஒருவன் கீழிருக்கும் பணத்தைப் பார்க்கிறான். இதனால், கணநேரம் மேகம் விலகி வெளிவரும் பூர்ண சந்திரனை பார்க்கத்தவறுகிறான். மற்றொருவன் சந்திரனின் அழகில் மயங்கி கவிஞனைப் போலாகிறான். மேலே பார்த்தபடி பணத்தை மிதித்துச் செல்கிறான்.
பணத்தைக் கையிலெடுத்தவனை விட்டுவிடுவோம். அவனை பின் நவீனத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
சந்திரனைப் பார்த்தவன் அதை வர்ணிக்கத் துவங்குகிறான். சொற்களின் வனத்தில் சிக்கிக்கொள்கிறான். மண்ணின் ஆழத்தை அளக்கும் சொற்கள், காற்றில் மிதக்கும் எடையில்லா பூக்களைப் போன்ற சொற்கள் என அவன் உபயோகிக்காதவை இல்லை. எனினும் வார்த்தைக்குள் அக்காட்சி அடங்க மறுத்தது. எவ்விதத்திலாவது அதைச் சிறைப்படுத்த முடியுமா எனத்தூரிகை கொண்டு ஓவியமாகத் தீட்டத் துவங்குகிறான். மண்ணில் முளைக்காத எதுவும் அவன் முன் மண்டியிடாது எனப் புரிந்தும் தொடர்ந்து வரைந்துகொண்டேயிருந்தான். ஒவ்வொரு வண்ணமாக குழைத்துத் தனக்குப் புரிந்த மொழியில் ஓவியத்தை வரைகிறான். ஆனால், ஒவ்வொரு முறையும் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிப்பது போல வண்ணங்களின் சேர்க்கை விசித்திரமாக வெளிப்பட்டது.
குழல் கொண்டு ஊதும்போது வெந்து தணியும் கரியைப் போல், ஏதோ ஒரு உருவம் தோன்றிய பொழுதில் மறைந்துகொண்டேயிருந்தது. ஒவ்வொரு தீட்டலிலும் ஒன்று மறைந்து மற்றொன்று உருவானது. முடிவில் எல்லா வண்ணங்களும் சேர்ந்து வெள்ளையானது. சந்திரனைப் பார்த்தவனின் நினைவு தப்பிப் போகிறது.
கிட்டத்தட்ட இதே போன்ற நிகழ்ச்சி.
ஜெயமோகன் நித்ய சைதன்ய யதியுடன் ஊட்டியில் நடைபயிற்சி சென்றபோது ஒரு சம்பவம். அதிகாலை நேரம்.மேகக் கதவுகள் திறக்க கண்ணாடி தூண்கள் போல் மெல்ல சூரியன் வெளியே வருகிறது. நடக்கும் பாதை மலையின் விளிம்பைச் சந்திக்கிறது.அப்போது சுற்றிலும் மலைகளைப் பார்த்த ஜெயமோகனுக்கு உலகமே எல்லையற்ற ஆனந்தவெளியாகத் தெரிந்திருக்கிறது. அதை நித்யாவிடம் சொல்லியிருக்கிறார். இயல்பிலேயே குறும்பு மனங்கொண்ட நித்யா `நீ எழுத்தாளன் தானே? இதைச் சொல்ல முயற்சி செய்யேன்` எனக் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் `இதெல்லாம் இருக்கிறது. நான் இருக்கிறேன். நான் இதன் ஒரு பகுதி.இது என்னைச் சேர்ந்தது.ஒளி இருக்கிறது.வானம் இருக்கிறது.நான் சிறியவனாக அற்பமானவனாக இருக்கிறேன்.அதே சமயம் எல்லைகளில்லாத மகத்தானவன் என்றும் தோன்றுகிறது. மனதை நெகிழச் செய்யும் விரிவான ஓர் உணர்விது.` என தான் கண்ட காட்சியை விவரிக்க முயன்றிருக்கிறார். (நினைவிலிருந்து கருத்தை மட்டும் எழுதியிருக்கிறேன்)
**
பால் காகுயின் (Paul Gauguin) என்ற ஓவியர் பின்-பதிவுவாத (Post Impressionism) பாணியின் தலைவர். வண்ணங்களைச் சீராக தீட்டினால் மட்டும் போதாது. வெளிச்சத்தில் பொருட்கள் எப்படி வெவ்வேறு தெளிவுகளில் தெரிகிறதோ, ஓவியங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றது பின் - பதிவுவாதம். போட்டோ எடுப்பது போல் தத்ரூபமாக ஒளிச்சிதறல் நிகழ வேண்டும் என விளக்குகிறார் பால் காகுயின். வெளிச்சம் மற்றும் கோணங்களைக் காட்சிப்படுத்தினாலே போதும்; ஒரு ஓவியம் இயல்பாக இருக்கும் என்கிறார்.
இந்நாவல் பால் காகுயின் வாழ்க்கையை அடியொற்றி எழுதப்பட்டது.ஓவியத்தின் இயல்பை அடைவதற்கு, பால் சந்திக்க நேர்ந்த மன உளைச்சல்களை இந்நாவல் விவரிக்கிறது.
சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லாண்ட் பங்குச் சந்தையில் வேலை செய்பவர். அவரது மனைவி அரைகுறை எழுத்தாளர். விருந்துக்காக பல நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது அவரது வழக்கம். மனைவியின் எழுத்தாள நண்பர்கள் முன் சார்லஸ் மிக அமைதியாகவே இருப்பார்.விருந்தில் கலந்துகொள்ள அவருக்கு நாட்டமில்லையோ என நினைக்குமளவு அவரது மெளனம் அனைவரையும் கொல்லும். ஆனாலும், அவரது மனைவி விருந்து கொடுப்பதை கைவிடுவதில்லை. பழைய நண்பர் மூலம், அறிமுகம் ஆகிறார் எழுத்தாளர் தாமஸ். இவர் விவரிப்பது போல் முழு நாவல் அமைந்திருக்கிறது.
கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்த சார்லஸ் ஒரு நாள் வீட்டை விட்டுச் சென்றுவிடுகிறார். தான் பாரீஸுக்குப் போவதாகவும், தன்னைத் தேட வேண்டாமென கடிதம் எழுதுகிறார்.நிலைகுலைந்து போவதைக் தாண்டி, காரணம் தெரியாமல் மிகக் குழப்பமான மனநிலைக்கு ஆளாகிறார் சார்லஸின் மனைவி. அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தாமஸ் தலையில் விழுகிறது.
பாரீஸை நோக்கி பயணத்தைத் துவங்குகிறார் தாமஸ். இப்பயணம் அவரை பல புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. ஏறக்குறைய ஒரு ஜீனியஸ் எனப் புரியாமல் சார்லஸின் எண்ண ஓட்டங்களுடன் பயணிக்க வைக்கிறது.
(தொடரும்)
Recent Comments