விமலாதித்த மாமல்லன் கதைகள் தொகுப்பு - முடவன் வளர்த்த வெள்ளை புறாக்கள் பதிவில் வரும் குறிப்பிட்ட ஒரு வரி ரெண்டு நாட்களாக பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.
//பல விதத்தில் இந்நாவல் முடவன் கதையின் விரிவான பார்வையை முன்வைக்கிறது என்றே தோன்றுகிறது. //
இந்த வரி நான் சொல்லவந்ததை வெளிப்படுத்தவில்லை என நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த வரியைப் படிக்கும்போது, மாமல்லனின் கதையைப் பார்த்துதான் ஜெயமோகன் எழுதிவிட்டார் எனப் பொருள் வரும்படியாகத் தோன்றுகிறது என நண்பர் சொன்னார். அதுவல்ல நான் சொன்னது.
நான் சொல்ல வராத விஷயத்தை முன்வைப்பதாக இருப்பதால் இப்போது படிக்கும்போது எனக்கும் அந்த வரி சங்கடத்தை உண்டாக்குகிறது. எனது மொழிப் பிரயோகத்தின் குறைபாடு தான் அது.
//பல விதத்தில் இந்நாவல் முடவன் கதையின் விரிவான பார்வையை முன்வைக்கிறது என்றே தோன்றுகிறது. //
முடவன் வளர்த்த புறாக்கள் கதையின் கரு இயக்கத்துக்கும் தனி மனிதனுக்கும் உள்ள உறவைப் பேசுகிறது. ஒரு குமாஸ்தாவின் டயரி குறிப்பின் மூலம் அவனது தியாகத்தின் அர்த்தமின்மை பற்றிய நிகழ்வாக இக்கதை உள்ளது.
பின் தொடரும் நிழலின் குரல் ஒரு பெரும் விவாதக்களம். தியாகத்தைப் பற்றிய விசாரணையாக இந்த நாவல் அமைந்துள்ளது. பல தளங்களிலும் கோணங்களிலும் தியாகத்தின் மேன்மை, அர்த்தமின்மை, தேவை பற்றி பல நிகழ்வுகள் மூலம் பரிசீலிக்கிறது.
'முடவன் கதையின் விரிவாக பார்வை' எனச் சொல்லும்போது தியாகம் எனும் கருப்பொருளைத் தான் நான் குறிப்பிட நினைத்தேன். எனது மொழியின் குறைபாடால் இந்த தப்பர்த்தம் வந்துவிட்டது.
இது சம்பந்தமாக, நண்பர் ஆர்.வி பதிவில் நான் எழுதிய கமெண்டு இங்கே:
//அன்புள்ள ஆர்.வி,
ரெண்டு கதைகளுக்கும் சில பொதுவான விஷயங்கள் உள்ளன என்பது மட்டுமே இரண்டையும் படித்த என் எண்ணமும். புகாரினின் வாழ்க்கைக் குறிப்பே கையில் இருக்கும்போது இந்தக் கதையைப் படித்துதான் நாவல் எழுதப்பட்டது என்பதெல்லாம் சும்மா. அப்படி செய்திருக்கக் கூடிய வாய்ப்பே இல்லை என இரண்டையும் படித்தவர்கள் சொல்வார்கள். அதே சமயம், சிலர் சொல்வது போல பத்து பக்கங்களிலிருந்து ஆயிரம் பக்கம் எழுதமுடியுமா என்பதும் சரியான வாதமில்லை.
.... நாவலின் முன்னுரையிலேயே அதைச் சொல்லியிருப்பார். இரு குறள்களின் சாராம்சமாக தியான மந்திரம் போல ஒரே கேள்வியின் பன்முக விசாரணைகள் தான் அந்த நாவல். என்னைப் பொறுத்தவரை மாமல்லனின் கதை விசாரணையாக அமையவில்லை. அது ஒரு நிகழ்வு என்றளவில் எழுதப்பட்டது.
....மேலும், இது ஒரு காலகட்டத்தில் பலரும் எழுதிய பாணி தான். ஹென்ரி ஜேம்ஸ், ஜே.டி.லாங்கிஸ் (Longing) போன்றவர்கள் இப்படி மற்றவர்களின் குறிப்புகளைக் கொண்டு நாவல் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் புனைவிலிருந்து புனைவும் எழுதப்பட்டுதான் வருகிறது – ஹென்ரி ஜேம்ஸை முன்வைத்து டோபின் எழுதிய The Master நாவல் அதற்கு சரியான உதாரணம். இதெல்லாம் ஒரு வகைக்குள் அமைந்துவிடுவதால் காப்பி அடித்ததாக ஆகாது.//
Recent Comments