சொல்வனம் இதழில் 'மித்திலன்' நித்ய கன்னி நாவலை அறம் பற்றிய விசாரணையாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை கச்சிதமாக முன்வைத்துள்ளார்.
அக்காலகட்டச் சமூகப் போக்கையும் இன்றைய விழுமியங்களையும் ஒப்பிட்டால் நித்ய கன்னி மேலும் பல விஷயங்களைக் கொண்டிருக்கிறாள் எனப்படுகிறது. இதற்குத் துணையாக ராஜ் கெளதமன் முன்வைத்த தமிழ் சமூக அறம் குறித்த பார்வையை போட்டுப்பார்க்கலாம் ('தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்').
நித்ய கன்னி, புராண மகாபாரத மாதவிக் கதையின் மறு உருவாக்கம். இந்த நூற்றாண்டுக் கண்ணோடு முரணியக்க முறையில் அறத்தையும், அழகியல் நோக்கையும் விவாதப் பொருளாக உட்படுத்துகிறார் எம்.வி.வெங்கட்ராம்.
மகாபாரத மாதவி காலகட்டம் இனக்குழு சமூகத்திலிருந்து, உடைமைச் சமூகமாக (அதிகாரம், மன்னராட்சி) மாறிய காலகட்டம்.
இனக்குழு சமூகத்தில் இருந்த அறம் எப்படிப்பட்டது - அதிகாரத்தை நோக்கிக் குவியாத, உணவு விளைச்சல் செய்யாத காலம். பாணர்கள், விறலிகள் போன்றவர்கள் ஒன்றாகப் பகிர்ந்து உணவை உண்ட காலம். அதாவது உணவு சேகரிப்பு இருந்தாலும் உணவு சேமிப்பு பற்றித் தெரியாத காலகட்டம். அன்றைய அற விழுமியங்கள் வேறு - அங்கு ஈதல் என ஒன்று கிடையாது, காமம் காதலாக மேம்படுத்தப்படவில்லை , அதிகாரம் வழி கட்டுப்பாடு இல்லை. சுருக்கமாக, ஜாதி, பால், உடைமை கொடுக்கும் வசதி போன்ற வித்தியாசங்கள் இல்லாத சமூகம்.
உடைமைச் சமூகத்தில் உணவு விளைச்சளோடு, உணவு பராமரிப்பும் உண்டானது. உணவைப் பகிர்வது நல்லது செய்வது எனும் அறம் உண்டானது. ஈதல் பெருமைக்குரிய அம்சமாக இருந்தது. பகிர்ந்து உண்பதோடு , உணவைக் கொடுத்தால் உணவு பெருகும் என்ற லாப நம்பிக்கைகள் பிறந்த காலகட்டம். அரசாட்சி உண்டாகி, அதிகாரக் குவிமையங்கள் உருவானது. அதனால் ஒருவித நேர்வரிசை (hierarchy) சமூகத்தில் உண்டானது. அதிகார குவிமையங்கள் ஆண் சார்ந்தவையானது. பால் சமத்துவம் குலைந்தது. கற்பு நெறி உண்டானது. காமம் உடைமையாகப் பார்க்கப்பட்டு காதலாக உருவமெடுத்தது. பாணர்கள் புலவர்களாக மாறினர். உணவுக்காக, செல்வத்துக்காகப் பாடல்கள் புனையப்பட்டன. இரத்தல் இழிந்தது, ஈயேன் எனச் சொல்லுதல் அதனினும் இழிந்தது என அறக் கோட்பாடுகள் உண்டானது.
இவற்றின் தொடர்சியாக தர்மம் செய்தால் குடும்பம் தழைக்கும், விளைச்சம் அதிகமாகும் என வைதீகக் கோட்பாடுகள் உருவாயின. மதக் கோட்பாடுகளாக, தண்டனைக்குரியவையாக அற விழுமியங்கள் வைதீகப் பழக்கங்களாக மாறின (தீயினால் சுட்ட புண், நா காக்க போன்ற நாக்கு சார்ந்த புலன் கட்டுப்பாட்டுகள் தோன்றியது). இந்த காலட்டத்தில் வைதீக எதிர்ப்பாக, சமண மதம் அறக்கோட்பாடுகளை முன்னிறுத்தியது. இந்தப் பின்புலத்தில் நாம் மாதவி கதையைப் படிக்கலாம்.
இப்போது கட்டுரை சொல்லும் நாவலின் மூன்று பாத்திரங்களை அவரவர்விழுமியங்களுக்கேற்ப எம்.வி.வி உருவாக்கியுள்ளதைப் பார்க்கலாம்.
இந்த சமூக மாற்றமடையும் காலகட்டத்தில் மூவகை மக்கள் இருந்திருக்கிறார்கள்.
வைதீக விழுமியங்கள் உருவாக்கியவை (ஆசார சீலர்கள்), இனக்குழு விழுமியங்கள் உருவாக்கியவை (காமுகர்கள் - காதல் அறியாதவர்களாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அதாவது காமம் காதலாக மாறாத சமூகம்) எனப் பிரிக்கலாம். மூன்றாவது எழில் சீலர்கள் (aesthetician) - இதற்கு இருபதாம் நூற்றாண்டு உசீதரன் தான் பிரதிநதி.
இப்போது இவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள் தான் கதை. இன்றைய நோக்கில் எழில் ரசிகரான உசீதரன், மற்றக் காதாபாத்திரங்களின் சமூக உலகை எப்படிப் பார்க்கிறார் என்பதே எம்.வி.வியின் நோக்கம்.
நாவலின் அடி நாதமாக கட்டுரையாசிரியர் சொல்வது -
"பெண்மையை ஆக்கத்தின் உருவகமாகக் கொண்டால், படைப்பின் இருமுனையும் கூர் கொண்ட தன்மையை அறியாதவர்களின் அறிவீனத்தைக் கண்ட கசப்பு;, அதை முரட்டுத்தனமாகக் கையாள்வோர் தற்சார்பால் கட்டமைத்த அறக்கொள்கைகளின் மேல் சினம் - இந்த கசப்பும் சினமும் நித்ய கன்னியின் அடிநாதமாக இருக்கின்றன."
ஆனால்,சமூக மாற்றங்களைக் கணக்கில் கொண்டால் நித்ய கன்னி எதைச் சொல்வதாக நாம் புரிந்துகொள்வது?
இனக்குழு மக்களும் பெண்மையைப் புரிந்துகொள்ளவில்லை (ஏனென்றால் அவர்களுக்கு காதல் இல்லை), ஆசார சீலர்களும் புரிந்துகொள்ளவில்லை (ஏனென்றால் அது ஆதிக்கத்தின் மறு உரு). இவர்கள் இருவரைப் பொறுத்தவரை பெண்கள் உடைமைகள் மட்டுமே. இந்த இரு முனையும் பெண்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், . அதை உணர்வுபூர்வமாக கையாலத்தெரியாததால், அவர்களைப் பொறுத்தவரை பெண்மை என்பது கைக்கு சிக்காத, புரிந்துகொள்ள முடியாத விசித்திரமாக இருக்கிறது(கானல் நீர்) - அதனால் அப்பெண்கள் இந்த இரு சமூகத்துக்கும் நித்தியகன்னிகள் தான். உடம்பைத் தீண்டினாலும், பெண்மையைத் தீண்ட முடியாததால் அவர்கள் நித்தியகன்னிகள்.
"மனுதர்மமே முடிவான தர்மம் அல்ல. தர்மம் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி வளைந்து கொடுக்க வேண்டும். மனிதனுக்காக, மனிதன் உயர்வு பெறுவதற்காகத்தான் தர்மம்; தர்மத்திற்காக மனிதன் அல்ல..."
உசீதரன் சொல்லும் இந்த வார்த்தைகள் வழி அவன் இருபதாம் நூற்றாண்டு மனிதன் எனக் கட்டாயமாகச் சொல்லிவிடலாம். தர்மம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பது உண்மைதான் என்றாலும், மனிதன் உயர்வு பெறத்தான் தர்மம் எனும் வாக்கியம் பழைய சமூகத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. உசீதரன் கூறுவது ஒரு பெரும் கனவு மட்டுமே. அது இனக்குழு, உடைமை சமூகம் என்ற எதிலும் நடக்காது. அதனால், உசீதரன் முன்வைப்பது இந்த நூற்றாண்டுக்கான கனவு. எம்.வி.வியின் கனவு.
உசீதரன் சொல்லும் அறம் மனிதனை உய்விக்க வந்த அறமல்லவா? உடமைச் சமூகத்தில் பலிகடா ஆகாத மனிதக் குழு சாத்தியமில்லை. அந்தப் பலியை குறைவாக்கும் செயலைத்தான் ஒவ்வொரு சமூகமும் அந்தந்த காலகட்டத்தில் செய்ய முற்படுகிறது. அதனால் முழுமையாக மனிதனை உய்விப்பது சாத்தியமேயில்லை. அதனால் தான் எம்.வி.வி உசீதரனின் மரணத்தைச் சொல்கிறார் போலும்?
எம்.வி.வி முன்வைக்கும் பூரண அறமும் ஒரு மிகுகனவு தான். அது சமூகத்தில் ஆழ் மனதின் (கூட்டு நனவிலி) கனவு மட்டுமே. சமத்துவ சமூகம் போல. நூற்றாண்டு காலமாக மனிதன் அதை நோக்கி தான் நகர்ந்துகொண்டிருக்கிறான். ஏனோ, பிடிபடாத கனவாகவே இருக்கிறது, பெண்மையின் ஆழத்தைப் போல.
உசீதரன் முன்வைக்கும் ஆண் அறம், வைதீக உடைமைச் சமூக விழுமியங்களால் புனையப்பட்டது. அது ஆண் மைய சமூகமாக இருந்ததால் வந்த விளைவு. கற்பு, ஒழுக்கம், அதிகாரம், நேர்வரிசை (hierarchy ) என்பது இந்த அமைப்பின் பண்புகள் ஆண் அறம் எனும் சிக்கல் இனக்குழு சமூகத்தில் இல்லை. பொதுமையான அறம் மட்டுமே இருந்தது. ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கும் இன்றையச் சமூகத்தில் பகிர்ந்து பூரணமாகும் அற விழுமியங்களே சாத்தியம். அதற்கு உசீதரன் போல, பிற மனங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது சரியானத் தொடக்கமாக இருக்கலாம்.
ஒருவிதத்தில் சமூகத்தில் அறத்தின் பயணத்தை எம்.வி.வி உருவகப்படுத்தியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. கைக்கு சிக்காத முப்பரிமாணப் படப் பொருட்கள் போல, தொடமுடியாத அறச் சமூகத்தைத் தான் நித்தியகன்னி என எம்.வி.வி உருவகப்படுத்துகிராரோ? இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நூற்றாண்டு காலத் தமிழ் சமூகத்தின் மேல் வைக்கப்படும் தீவிர விமர்சனமாக நாவல் எனக்குத் தெரிகிறது. ஆதி காலச் சமூக ஆர்கிடைப்புகளிலிருந்து, தற்கால அணுகுண்டு மனிதன் வரை எம்.வி.வி அலசியிருக்கிறார் போலத்தோன்றுகிறது.
அருமையான பதிவு. சமூக வரலாற்று பார்வை இல்லாததால் மித்திலன் இதை எழுதத் தவறி விட்டார் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல, நித்ய கன்னியின் ஆதார ஸ்ருதியையே அவர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் macrocosmic levelல் பார்த்ததை அவர் microcosmic levelல் பார்த்திருக்க வாய்ப்பிருந்தும் அதைத் தவற விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. இந்த மாதிரி பார்த்திருந்தால் இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்து ஒரு முழுமையான வாசிப்பு கிடைத்திருக்கும். :(
இந்தக் கதையின் துவக்கத்தில், மாதவி காலவனைப் பார்க்கிறாள், அவளது புலன்கள் அவனைத் தொட முனைகின்றன- எம்விவி எவ்வளவு அழகாக எழுதுகிறார் பாருங்கள்:
"இமையா நாட்டத்தினால் நெஞ்சம் அமைதி இழப்பதை உணர்ந்தாள் மாதவி. "யாரென விளங்காத ஒரு புது ஆடவனைப் பார்ப்பது பிசகு" என அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். திக்குத் தெரியாத வெளியில் பாய்ச்சல் போடும் மனமானை வசப்படுத்த விரும்பி, அந்த மனிதன் மீதிருந்த விழிகளை வாங்கித் திரும்பினாள். ஆயினும், புற ஒலி நின்ற பிறகும் மனதிற்கு கேட்கும் மணி ஓசை போன்று, அவனுடைய தோற்றம் அவளுடைய உடலின் நரம்பு ஒவ்வொன்றிலும் ரீங்காரம் செய்தது. வண்டு முரலுவதைக் கேட்டு காற்றில் நடமிடும் ரோஜாச் செடியினதைப் போன்ற ஓர் உணர்ச்சி அவளுக்குள் எழுந்தது. "ஏதாவது செய்ய வேண்டும்," என்னும் ஒரு குறுகுறுப்பு உண்டாயிற்று அவளுக்கு.
"எதிரில் நின்ற மான்குட்டியின் மருங்கில் சென்று, அதனுடைய கழுத்தைத் தடவிக் கொண்டாள். ஐம்புலன்களும் அந்தப் புதியவனை - அவளுக்குப் புதுமையானவனாய்த் தோன்றினான் அவன் - நாடி ஓடுவதை வேறு பக்கம் திருப்பிவிட எத்தனித்த அவள், அந்த மான்கன்றின் முகத்தைப் பலமுறை முத்தமிட்டாள்"
கட்டுரையில் மாதவிக்கு passive role இருப்பதாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டிருஆக்கிறது, இது ஒரு பெரும் பிழை, பாவம், அவர் இதை ஒரு ஆண்மைய பிரதியாக மட்டும் வாசித்திருக்கிறார் போல. உண்மையில் இந்த நாவல் ஆண் பெண் உறவைப் பற்றி முழுமையாகப் பேசுகிறது. அழகு புலன் நாட்டத்தில் தன் மனதை செலுத்துகிறது, அதன் விளைவுகள் என்ன, அதிலிருந்து மீட்சி எப்படி என்பன நம்முன் நிற்கும் கேள்விகள்.
தொடர்ந்து எழுதுகிறார் எம்விவி,
"இந்த இளமானின் சருமம் போல்தானே அவனுடைய வதனமும் மிருதுவாக இருக்கும்?"
இங்கு அந்த மான் புலன்கள் நிறைவு காணும் இடமாக இருக்கிறது. மானின் பெயர் கல்யாணி.
மாதவியை குதிரை பேரம் செய்வது என்று முடிவாகி, காலவன் அவளைத் தேரில் அழைத்துச் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்தோடி வந்த கல்யாணி அப்போது காட்டில் ஒரு இடத்தில் அவர்களுடைய தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு செத்து விடுகிறது. நெருப்பு மூட்டி அதற்கு காரியம் செய்கிறாள் மாதவி, "என் கல்யாணி சாம்பலாகி விட்டாள்," என்கிறாள் அவள்.
"பெண்ணின் கல்யாணியே மறைந்துவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது," என்கிறார் எம்விவி.
மாதவியின் புலன் நாட்டம் மரணமடையத் தொடங்குகிற இடம் இது என்று நினைக்கிறேன்.
அப்புறம் இன்னொரு கல்யாணி வருகிறாள்.
மாதவி கற்பில்லாதவள் என்று விசுவாமித்திரரைச் சுற்றி உள்ள ரிஷி பத்தினிகளால் அவமானப்படுத்தப்பட்டு, மனமுடைந்து சுரம் மிகுந்து மூர்ச்சையடைகிறாள். அப்போது அவளைத் தெளிவிக்க காலவன் ஒரு சிறுமியை அழைத்து வருகிறான். அவள் பெயர் கல்யாணி.
"அந்த விலங்கின் மருட்சி நிறைந்த விழிகளுக்கும் அச்சிறுமியின் விழிகளுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாக அவள் (மாதவி) கற்பனை செய்தாள். சூதுவாது அறியாத இச்சிறுமிக்கு எதிர்காலம் எவ்வளவு இன்னல்களை மூடி வைத்துள்ளதோ?" என்று நினைக்கிறாள் மாதவி.
இங்கு சுத்திகரிக்கப்பட்ட புலனின் அன்பு நிலை உணர்த்தப்படுகிறது என்று நினைக்கிறேன். "அவள் காலவனைக் கண்டது எந்தக் கெட்ட வேளையோ, தெரியவில்லை; அப்போதிலிருந்து அவளுக்கு அமைதி இல்லை," என்று தொடர்கின்றன மாதவியின் நினைவுகள்.
கதையின் இறுதியில், மனம் பேதலித்த நிலையில் ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த மாதவி, எழில் பித்தன் உசீநரனின் மரணத்தைத் தொடர்ந்து காட்டுக்குள் ஓடுகிறாள்-
"மரம், செடி, கொடிகளை எல்லாம் தாண்டி, வேடுவனால் துரத்தப்படும் மானைப் போல், தரையில் கால் பாவாமல் ஓடிக் கொண்டிருந்தாள் அவள்; அவளுடைய கூச்சசலாலும் காலவனுடைய குரலாலும் பீதி கொண்டு மருண்ட மான்கள் அவளுக்குப் பின்னால் பாய்ந்து ஓடத் துவங்கின"
காலவன் அவளைத் துரத்திக் கொண்டு ஓடி மயங்கி விழுகிறான். கதை இப்படி முடிகிறது-
"பிரக்ஞை பெற்று அவன் எழுந்தபோது, அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன; குரல் ஒலியும் எதிரொலியும் அடங்கி விட்டன. காட்டுக்குள் சென்ற மாதவியின் சுவடே புரியவில்லை...
"தரையில் விழுந்து, தலையில் அடித்துக் கொண்டு, சிறு குழந்தை போல், தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான் காலவன்."
எப்படி இருக்கு கதை?
காவலன்தான் காலவன் என்று நினைக்கிறேன். மாதவி ஒரு free spirit. புலன் நாட்டம் சிறையாகிறது; பின், அது இறந்து, சூதுவாதறியா குழந்தைமையில் திரும்ப அறியப்படுகிறது- முடிவில், இருமைகள் நிறைந்த உலகில் புலன்கள் நிறைவு காண முடியாமல் "மான்களோடு மானாக" காட்டில் ஒருமையடைகின்றன.
ஓஷோ போன்றவர்கள் புலன்களை வெற்றி கொள்வது எப்படி என்ன என்பது பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தால், நித்ய கன்னிமை எப்படி அடையப்படுகிறது, அந்த பேராற்றல் சாபமாக இல்லாமல் எப்போது வரமாக மனிதர்களால் உணரப்படுகிறது என்பனவற்றையும் இந்தக் கதை பேசுகிறது என்று சொல்ல வழியிருக்கிறது, இல்லையா?
"தொழில் நுணுக்கம், வானவெளி வெற்றி எல்லாம் கைகூடி வரும் இந்தக் காலத்திலும் இன்னும் அந்தப் பழைய வெற்றி கிட்டிய பாடில்லை; அதுதான் உள் வான வெற்றி. அதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே செய்துதான் ஆக வேண்டும்," என்று எழுதுகிறார் தி ஜானகிராமன் தன் முன்னுரையில்.
நடைமுறை வாழ்வில் பெண்ணின் அழகு அவளை வெவ்வேறு வகைகளில் அடிமைப்படுத்துவதாகவே இருக்கிறது. புலன்களின் விழைவுக்கு நிறைவு கண்டு இன்புறுவதாக பெரும்பாலான பெண்களின் இல்லற வாழ்வு துவங்குகிறது; காலப்போக்கில் அது திரும்பத் திரும்ப அடி வாங்கி, முடிவில் அவளது தூய அன்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது- அவளது புலனுலகம் மரித்து மறைகிறது. இழப்பு பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒரு உயர்ந்த வாழ்வுக்கான சாத்தியங்களை இழக்கும் ஆணுக்கும்தான்.
புலன்களின் சுத்திகரிப்பைத் தன்னில் ஒவ்வொரு ஆணும் நிகழ்த்திக் கொள்வதே இந்த சிக்கலுக்குத் தீர்வாக இருக்க முடியும் (உசீனரனின் எழில் பார்வை போல). அவனைப் பிரியும்போது மட்டுமே மாதவியின் மனம் சஞ்சலப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு நல்ல படைப்பு தீர்வுகளைத் தருவதாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதற்கில்லை- அறச் சிக்கலில் வாசகனை ஆழ்த்தி அதற்கு விடை தேடும் உந்துதல் தருவதாக அது இருக்கிறது என்றால் அந்த அளவில் அது வெற்றி பெற்ற படைப்புதான் என்று சொல்ல வேண்டும்.
ஆண்-பெண் உறவு, உரிமை-விடுதலை என்று பல ஆதார சிக்கல்களைப் பேசும் நித்ய கன்னி நம்மை இந்த திசையில் பற்பல தீர்வுகளை சிந்திக்கச் சொல்லி நிர்பந்திக்கிறது- ஏதோ கதைதான் என்று விட்டுவிட்டுப் போக முடிவதில்லை, இதற்கு என்ன பொருள், என்னதான் முடிவு என்ற கேள்விகளை நம்முன் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இதுவே நித்யகன்னியின் வெற்றி என்று நினைக்கிறேன்.
அருமையான நாவல், அது எழுப்பும் அடிப்படை கேள்விகளை சமூக, வரலாற்று பார்வையுடன் சிறப்பாக அணுகியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
Posted by: Account Deleted | 10/11/2011 at 02:12 PM