ஒரு வார்த்தை, ஒரு வரி மாறினால் கூட சிறுகதையின் இயல்பே மாறிவிடும் கச்சிதமான கட்டுக்கோப்புடைய சு.ரா, அசோகமித்திரன் எழுத்துகளுடன் இவரது கதைகளைக் கம்பேர் செய்யக் கூடாது என்பது முதல் விதி. அவர்கள் எழுதிய கதைகள் சீட்டுக்கட்டு கோபுரம் போலக் கட்டப்பட்டவை. பல சமயங்களில் ஒரே ஒரு வரி கதையையே திருப்பிப் போட்டுவிடும் - மீண்டும் படிக்கத் தூண்டும். அவர்கள் எழுதிய கதைகள் கச்சிதமான (நவீனமான) கதை சொல்லல் முறையில் எழுதப்பட்டவை. ஓரளவுக்கு சிறுகதையின் இயல்பு இப்படி இருக்கவேண்டும் என்றாலும், இதை எல்லாருடைய பாணியிலும் பொருத்திப் பார்க்க முடியாது.
எஸ்.ரா எழுதிய ஆரம்பகாலகட்ட சிறுகதைகள் சாதாரண சம்பவங்களை முன்வைக்கும் இயல்பான கதைகள். கிட்டத்தட்ட முதல் இருபது முப்பது கதைகள் அப்படித்தான் இருந்தன. பின்னர் மெல்ல பின்நவீனத்துவ பாணிப் படிமங்களை, கருக்களை உள்புகுத்தத் தொடங்கினார். ஆனால் பின்நவீனத்துவ பாணியில் விளையாட்டாக சிதைத்துப் பார்ப்பது என மொழி அளவில் மட்டும் அம்முயற்சிகள் நின்றுவிட்டன. வடிவ சோதனை, கதைக் கூறும் பாணியை சிதைத்துப் பார்ப்பது மட்டுமே பின்நவினத்துவம் எனப் பலர் சொன்னதைக் கொண்டு அவரது கதைகளைப் படிக்கலாம். ஆனால், அவை சரியான பின்நவீனத்துவ பாணியா என்பது கேள்விக்குரியதே.
பின்நவீன அல்லது நவீனதத்துவ பாணியில் கதைகள் எழுதலாம் - அவற்றை சொல்லவரும் கதைக்கரு , அல்லது உபயோகப்படுத்து படிம மொழி தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறேன். அவ்விதத்தில் அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் எனக்குச் சிக்கலில்லாத பின்நவீனத்துவக் கதையாகத் தெரிந்தது.
எஸ்.ராவின் எழுத்தில் எனக்கு பெரிய தடைகளாக இருப்பவை:-
1. சிறுகதையின் ஆதி விதியான - சொல்லாதே, காட்டு.
இதை மிக மிக குறைந்த கதைகளில் மட்டுமே செய்துள்ளார். அவரது கதைகள் பெரும்பாலும் சொல்லப்படுவை. எதையும் புற நிகழ்வுகளில் உணர்த்துவதில்லை. இது ஒரு தப்பா? கட்டாயம் இல்லை. கி.ரா, யுவன் எல்லாருமே கதை சொல்லிகளாகவே அட்டகாசமான கதைகளை உருவாக்கியவர்கள். ஆனால், அவர்களது கதை சொல்லி உபயோகிக்கும் மொழி பேச்சு பாணியில் இருக்கும். சரளமாக பலதரப்பட்ட பேச்சு வழக்குகள், சொல்லாடல்கள், பெரிய தத்துவங்கள் வந்து விழும். எஸ்.ராவின் கதைகளில் ஒரே போன்ற மொழி பயன்படுத்துவதால், கதை சொல்லலாக மிக பலவீனமாக இருக்கும். இதைத் தான் நாம் மிக தட்டையான ஒரே போன்ற மொழி எனக் குறிப்பிடுகிறோம் என நினைக்கிறேன்.
2. அவரது மொழி மிகச் சாதாரணமானது.
இது தப்பா? கிட்டத்தட்ட, அசோகமித்திரனின் எல்லா கதைகளும் மிக எளிமையான மொழியில் எழுதப்பட்டவையே. பின்னர் என்ன சிக்கல்? எஸ்.ராவின் மொழி ஆழமில்லாமல் இருப்பது சிக்கலில்லை. அவரது சொற்றொடர்கள் கதைக்குத் தேவையான உணர்வுகளை எனக்கு வழங்கவில்லை என்பது தான் சிக்கல். ஒன்று - கட்டுக்கோப்பான சொற்றொடர்கள் மூலம் சரளமாகச் சொல்வதில்லை. மேலும், மிக உதிரியான சொற்றொடர் வரிசையாக மாறி, அவற்றில் ஒன்றே ஒன்று மட்டும் கவித்துவ ரீதியாக நின்றுவிடும். அந்த கவித்துவ வரி சொல்வதையே பல வரிகளில் நீட்டி எழுதியிருப்பார். அவை ஒரு பத்தியாகப் படிக்கும்போது, எனக்கு ஒட்டாமல் இருக்கிறது. இதனால், அவரது சொற்றொடர் வரிசை பல சமயங்களில் ஏமாற்றமளிக்கும். பல சமயங்களில், வாய்விட்டு சரளமாக படிக்க முடியாத கதைகளாக இருக்கும். ஏனோ, எனக்குச் சிறுகதைகள் வாய்விட்டு சத்தமாகப் படிப்பது பிடிக்கும். பல நல்ல கதைகளின் லயமே மிக ஈர்ப்பாக இருக்கும். நல்ல அனுபவமாக இருக்கும். அது எனக்கு இங்கு மிஸ்ஸிங்.
3. கதை மாந்தர்களின் உணர்வுகள் வாசகர்களுக்குக் கடத்தப் படுவதில்லை - கதைச் சொல்லி, பேசிக்கொண்டே இருப்பதால் வரும் சிக்கல்.
அவரவர் மொழியில் இயல்பாகப் பேசினால், ஒருசில வார்த்தைகள் கொண்டே கதை மாந்தர்களின் உணர்வுக்குள் நம்மால் நுழையமுடியும். எனக்குக் கோபம் வருகிறது, எரிச்சலாக இருக்கு - என மாந்தர்கள் பேசுகிறார்கள் - அவர்களது செயல்கள் மூலம் பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. இதனால் காட்சிப்படுத்துதல் அமையவில்லை, கதாப்பாத்திரங்கள் என்னைப் பாதிக்கவில்லை.
மேற்கூறிய குறைகள் சிலவகைக் கதைகளுக்குக் கச்சிதமாக ஒத்துப்போகும். பத்திரிகை பாணியில் செய்தியறிக்கையாகப் படிக்கும்போது, மிக இயந்திரத்தன்மையான மொழி கைகொடுக்கும். அவரது 'புத்தனின் குளம்', 'நயனம்', 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை', 'கற்மண்டபம்' போன்றவை. அவை கதையாக நமக்குப் பிடித்துவிடும்.
இதனாலேயே ஓர் எல்லை வரை,சுஜாதா கதைகள் மிக மேலோட்டமாக இருந்தாலும் அதில் இருக்கும் கட்டுக்கோப்பு, அனுபவம் எஸ்.ராவின் சிறுகதைகளில் கிடைப்பதில்லை எனச் சொன்னேன் (சுஜாதா திரியில்). எந்தவிதமானக் கதையாக இருந்தாலும், சிறுகதையில் கட்டுக்கோப்பு அவசியம் என நினைக்கிறேன். அதனாலேயே , கதைக் கருவுக்கு ஏற்றார்போல மிக ஆழமான அர்த்தம் பொதிந்த மொழி அமையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
நாவலிலும் இப்படிப்பட்ட குறைகள் உண்டு. ஆனால், யாமம் (வரலாறு நோக்கு), நெடுங்குருதி போன்ற படைப்புகளுக்கு அவை இயல்பாகப் பொருந்தி விடுகின்றன. நீண்ட கால இடைவெளிக்கதைகளாக இருப்பதால், படிக்கப் படிக்க அவரது நாவலில் புழங்கும் பாத்திரங்களுடன் ஒத்துப் போக முடிந்தது.
எஸ் ராவின் எழுத்துக்கு அருமையான அறிமுகம். அவரது சிறுகதைகளைப் படித்துப் பார்க்கும் ஆர்வத்தை உங்கள் கட்டுரை அளிக்கிறது. மிக்க நன்றி.
Posted by: Account Deleted | 08/06/2011 at 01:32 PM
என்ன கொடுமை களிமண் ?
கிரி எழுதியிருப்பது எஸ்ராவை படிக்கமுடியாதது ஏன் அல்லது ஏன் பிடிக்கவில்லை என விளக்கம் , நீங்க சொல்லியிருப்பது கட்டுரையை படிக்காமலேயே பதில் :(
Posted by: aravin | 08/10/2011 at 02:34 PM
@aravin சார், நான் இத்தனை நாளா எஸ்ரா ரொம்ப நல்லா எழுதுவார்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.
//இதனாலேயே ஓர் எல்லை வரை சுஜாதா கதைகள் மிக மேலோட்டமாக இருந்தாலும் அதில் இருக்கும் கட்டுக்கோப்பு, அனுபவம் எஸ்.ராவின் சிறுகதைகளில் கிடைப்பதில்லை எனச் சொன்னேன்//
சுஜாதாவைவிட மோசமா ஒரு இலக்கியவாதி எழுதறார் என்பது எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது. எஸ்ராவை அந்த மாதிரி படிச்சுப் பாக்க ஆசையா இருக்கு என்பதைதான் "அவரது சிறுகதைகளைப் படித்துப் பார்க்கும் ஆர்வத்தை உங்கள் கட்டுரை அளிக்கிறது," என்று சொன்னேன்.
நான் கேள்விப்பட்ட எஸ்ரா இவரில்லீங்க. அதைத்தான் "எஸ் ராவின் எழுத்துக்கு அருமையான அறிமுகம்." அப்படின்னு சொன்னேன்.
மிக்க நன்றி என்று ஏன் சொன்னேன் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
தங்களை அடுத்த பதிவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
நன்றி சார். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Posted by: Account Deleted | 08/20/2011 at 03:49 PM