ஜப்பான் நாட்டு சமூக அமைப்பு நம் நாட்டைப் போல் குடும்ப அடையாளங்களில் வேரூன்றியவை. பாம்பு சட்டையை உரிப்பது போல், குடும்ப அமைப்பு சிதைவதன் மூலம் அதன் நவீன அடையாளத்தை அடைய முற்படுகிறது.
ஒரு பெரிய குழுவாய் தழைத்த எல்லா சமூகங்களும்,பல தனிக்குழுக்களாய் பிரிந்து அன்னியப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அன்னியப்படும் சமூகம் அதன் அடையாளங்களை பல வழிகளில் பதிவு செய்கிறது. ஐரோப்பாவில் இலக்கியம், இசை, சமூக பழக்கங்கள், பிராந்திய வாழ்வு முறை, நாட்டார் இடம்பெயர்தல் என அன்னியப்படும் முகங்கள் பல வழிகளைத் தேர்ந்தெடுக்கிறது.
தனித் தீவுகளாக மாறிய மனிதனின் எல்லா உறவுகளும் காலாவதி நேரத்தை கணித்த படி தொடங்குகிறது. இது முகம் தெரியாத மனிதனை வெறுக்கச் செய்கிறது. பெயர் தெரியாமல் கூட அவனால் உறவாட முடிகிறது. அறிமுகம் இல்லாத மனிதரிடம் முதலில் பெயரைக் கேட்பதில்லை. அவன் அடையாளங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன - இந்து,முஸ்லிம், கறுப்பு, வடக்கத்தியன், மெக்ஸிகன், கத்தோலிக், செர்பியன், ஓரினசேர்கையாளன், கணினி தொழில் செய்யாதவன் - என கண்ணுக்குத் தெரியாத பல உருவாகி வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு புது அடையாளம் உருவாகிறது - வந்தே மாதரத்தை மதிக்கும் முஸ்லிம், வந்தே மாதரத்தை மதிக்க மறுக்கும் முஸ்லிம். கணந்தோரும் ஒரு அடையாளத்துக்காக குறைந்தது ஒரு உயிர் பலி கொடுக்கப்படுகிறது.
இந்த அன்னியப்படுத்துதல் உருவாக்கும் அடையாளக் குழுக்கள் மிக முக்கியமான முரண்நகை. தனித்தீவுகளாய் மாறிய சமூகம், ஏதேனும் ஒரு அடையாளத்தைக் கொண்டு குழுக்களாய் பிரிக்கிறது. இப்படி ஆய்வு செய்தால், ஆதாம்,ஏவாள் என்ற பகுப்பில் இந்த அடையாள பிரிகை நம்மை கொண்டு சேர்க்கும். தொடர்ந்து புது அடையாளங்கள் பகுக்கப்படுகின்றன, குழுக்களாய் பிரிக்கப்படுகின்றன. இப்படிபட்ட சமுதாய மாற்றத்தை பதியும் ஆவணங்களாக கோட்பாடுகள் மற்றும் இலக்கியம் பார்க்கலாம்.
இந்த பின்ணனியில், ஹிடோமி கனஹாரா (Hitomi Kanehara) என்ற 21 வயது பெண் ஜப்பானிய எழுத்தாளர் 2003 ஆம் ஆண்டு எழுதிய `பாம்புகளும் காதணிகளும்` புத்தகத்தைப் பார்க்கலாம். 2004 ஆண்டுக்கான ஜப்பான் நாட்டின் உயரிய விருதான அகுடகாவா (Akutakawa) 118 பக்கமுள்ள இந்நாவலுக்கு வழங்கப்பட்டது.
மொத்தம் மூன்று பாத்திரங்கள். யாருமே இருபது வயதைத் தாண்டவில்லை. லூயி என்ற பத்தொன்பது வயது பெண் கூறுவதைப் போல் அமைந்த கதை.
லூயி அழகானவள்.ஆனால், இவளுக்கு வாழ்க்கை சலிப்பூட்டுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு கிளப்புக்குச் செல்கிறாள்.அங்கு அமா என்ற பதினெட்டு வயது இளைஞனை சந்திக்கிறாள். அவனுக்கு அழகான,ஒல்லியான நாக்கு. அதை இருதலை பாம்பு போல் கொஞ்சம் பிளந்திருக்கிறான். இந்த பிளவு நாக்கில் மதிமயங்கிய லூயி அவனுடன் வாழத் தொடங்குகிறாள். தன் நாக்கிலும் சிறு துளை போட்டுக்கொள்கிறாள்.சின்ன வளையங்களை அதில் மாட்டிக்கொள்கிறாள். வலி குறையக் குறைய பெரிய வளையங்களை அதில் மாட்டலாம்; இதனால் மெதுவாக உன் நாக்கும் பிளக்கும் என அமா அறிவுரை கூறுகிறான்.
அமா தன் உடம்பு முழுவதும் டிராகன் உருவில் பச்சை குத்தியிருக்கிறான். பார்க்க முரடன் போல் இருந்தாலும், இருவருக்கும் மத்தியில் நிபந்தனையற்ற ஈர்ப்பு உருவாகிறது. அமா லூயியை பார்பி பொம்மையைப் போல் குழந்தைத் தனமாக இருப்பதாய் கூறுகிறான். அந்த குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாக் எண்ணி, லூயி மேல் அதீத உரிமையுடன் பழகுகிறான். ஒரு நாள், தெருவில் நடந்துசெல்லும்போது லூயியிடம் ஒருவன் தவறாக நடக்க முற்படுகிறான். அவனை வெறிகொண்டு தாக்கும் அமா, அவன் இரு பற்களை பிடுங்கிவிடுகிறான். அமா, லூயி இருவரும் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இருவரும் அளவுக்கதிகமாக குடிக்கிறார்கள்.உடலுறவு கொள்வதிலும் மென்மையான உணர்வுகள் வெளிப்படுவதில்லை. இவர்களின் வெளிப்பாடுகள் S&M (Sadism and Masochism) ஒத்திருக்கிறது. தங்களையே துன்புறுத்தி மகிழ்ந்துகொள்கிறார்கள். மரபான ஜப்பானிய சமூகத்தை முற்றிலும் வெறுக்கிறார்கள்.
இதற்கிடையே அமாவின் நண்பனாக ஷீபா அறிமுகமாகிறான். ஷீபா பச்சை குத்துவதில் நிபுணன். இதற்கென தனியாக ஒரு கடை நடத்துகிறான். முதல் முறை போகும்போது, லூயியிடன் ஒரு படத்தைக் காட்டுகிறான். அது ஜப்பான் நாட்டு டிராகன் மற்றும் கிர்மின் என்ற விலங்கு முறுக்கிக்கொண்டிருக்கும் படம். அதை தனக்கும் பச்சை குத்துமாறு ஷீபாவிடம் கூறுகிறாள். அவன் சம்மதிக்கிறான்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு,லூயி தனியாக ஷீபாவின் கடைக்கு வருகிறாள். அந்தப் படத்தை இலவசமாக அவள் முதுகில் பச்சை குத்துவதாக ஷீபா சொல்கிறான்.பதிலுக்கு அவளுடன் ஒரு முறை உடலுறவு கொள்ள அழைக்கிறான். லூயியும் சம்மதிக்கிறாள்.உடலுறவின் போது, மிதமிஞ்சிய அளவுக்கு லூயியை துன்புறுத்துகிறான். சங்கிலியால் இருக்குகிறான், பல் பதியும்வரை கடிக்கிறான். இருவரும் சந்தோஷமாக இதை அனுபவிக்கிறார்கள்.
பல அமர்வுகளில் முழு படத்தையும் வரைந்து முடிக்கிறான். ஒவ்வொரு அமர்விலும் ஷீபா பற்றி லூயி அதிகமாகத் தெரிந்துகொள்கிறாள். ஒவ்வொரு முறையும் அவனுடன் உறவு கொள்கிறாள். ஷீபா மற்றவர்களை வலுக்கட்டாயமாக துன்புறுத்துவதிலும் திருப்தி கொள்ளும் சாடிஸ்ட் எனப் புரிந்துகொள்கிறாள். இயல்பாக இவன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது.
இதற்கிடையே நடுத்தெருவில் அமாவிடம் அடிபட்டவன் இறந்துபோகிறான். அமா உருவ அமைப்பில் இருப்பவர்களை போலீஸ் தேடுகிறது. லூயி மட்டும் இந்த விளம்பரத்தைப் பார்த்து, அமா உடம்பிலுள்ள பச்சை, சிகப்பான அவன் தலைமுடி நிறம் ஆகியவற்றை மாற்றிவிடுகிறாள். அமாவிடம் உண்மையை மறைக்கிறாள்.
வேலைக்கு போய் திரும்பும் அமாவுடன் தினமும் லூயி அளவுக்கதிகமாக குடிக்கிறாள். நாளடைவில் குடிக்கு அடிமையாகிறாள். அமா அவளை குடிப்பதை குறைக்க மன்றாடுகிறான். ஒவ்வொரு நிகழ்விலும், லூயி மேல் அமா கொண்டிருக்கும் அன்பு அதிகமாகிறது.
இதற்கிடையே லூயி தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென ஷீபா வற்புறுத்துகிறான். ஒரு நாள் அவளுக்காக வாங்கியிருக்கும் மோதிரத்தைக் காட்டுகிறான். லூயி தனக்கு யோசிக்க அவகாசம் வேண்டுமென வீட்டுக்கு திரும்புகிறாள்.
அன்றிரவு அமா வீடு திரும்பவில்லை. தொடர்ந்து ஒரு வாரமாய் வராததால், லூயி ஷீபாவுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கிறாள். இரு வாரங்களுக்குப் பிறகு, அமாவின் உடல் கிடைக்கிறது. அமாவை கொன்றவன் அவனை பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அவன் பிறப்புறுப்புகளை சிதைத்து, ஊதுபத்தியால் சொருகியுள்ளான்.
இக்கொலையைச் செய்தது ஷீபா என லூயி கண்டுபிடிக்கிறாள். கடைசியாக அவனை போலீஸிடம் ஒப்படைக்கிறாள் என முடித்தால் ஒரு சராசரி தமிழ் சினிமா போலாகிவிடும். பிறகு என்னதான் செய்தாள்?
நூறே பக்கங்கள் தானே.படித்து தெரிந்துகொள்ளுங்கள் ! ஒரு அற்புதமான நாவலைப் படித்த திருப்தியைப் பெறுங்கள் !
ஏனோ, முரகாமியின் எழுத்துகள் போல் தனிமை, நவீனமயமாதலின் எதிவிளைவு, குடும்ப உறவுமுறைகளின் சிதிலங்கள், இளைஞர்களின் பொறுப்பின்மையைச் சுற்றியே ஜப்பான் நாட்டு நவீன இலக்கியம் வலம் வருகிறது. நவீன ஐரோப்பா சந்திக்காத பல சிக்கல்களை ஜப்பானிய நாவல்கள் விரித்தாய்க்கின்றன.
மிக நல்ல அறிமுகம் கிரி. நன்றி, இதை படிக்க வேண்டும்.ஏனோ தெரியவில்லை, இதை படிக்கும் போது norwegian wood இல் வரும் மூன்று பிரதான பத்திரங்கள் ஞாபகம் வந்தார்கள். I thought there was a common self destructive streak between the characters in both works. Superficially speaking of course.
//ஏனோ, முரகாமியின் எழுத்துகள் போல் தனிமை, நவீனமயமாதலின் எதிவிளைவு, குடும்ப உறவுமுறைகளின் சிதிலங்கள், இளைஞர்களின் பொறுப்பின்மையைச் சுற்றியே ஜப்பான் நாட்டு நவீன இலக்கியம் வலம் வருகிறது.//
ஜப்பானிய நவீன சமூகம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது (புத்தகங்களில் படிப்பது மட்டும் தான்), இருந்தாலும் இப்படி தோன்றுகின்றது. யாசுரி கவபட்டா போன்றவர்களின் எழுத்துக்கள் யுத்தம் முடிந்த ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கின்றன, பழமையின் மீதான ஒரு மோகம், nostalgia . அவற்றிலும் ஒரு இறுக்கமான சமூக அமைப்பை தான் காண முடிகின்றது (strict social heirarchy , clear cut class டிவிடி, honour etc ) . Kazuo Ishiguro's 'Pale View Of hills ' also gives the same impression. முரகாமியின் எழுத்துக்கள் இதற்கான ஒரு reactionaryஆக பார்க்கலாம்.They had a great connect with the people as can be seen by what we read about the popularity of Norwegian Wood. அந்த நாவலிலும் கூட பார்த்தால் தற்கொலை என்பதை ஒரு கௌரவமான, மதிக்கத்தக்க செயலாக கருதுவதை மாற்றி அதன் கோர முகத்தை, அது தற்கொலை செய்தவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் இவர்களை எப்படி பதிப்பது என்று இருக்கும் அல்லவா. முரகாமையின் பாதிப்பு மற்றும் அவருக்கு இருக்கும் புகழ் காரணமாக மற்றவர்களும் இதை பின்பற்றலாம். Murakami represents the break from traditional Japanese writing after the war and the others seem to follow him.
//Sadism and Masochism //
இந்த களத்தில் Natsuo Kirino என்ற பெண் thriller genreஇல் நவீன ஜப்பானிய சமூகத்தை பற்றி எழுதி இருக்கின்றார். //தனிமை, நவீனமயமாதலின் எதிவிளைவு, குடும்ப உறவுமுறைகளின் சிதிலங்கள்,// இவற்றை genre fiction மூலம் எதிர் கொள்கிறார். (Shades of Ian Rankin, Henning Mankell etc)
Ajay
Posted by: Ajay | 05/12/2011 at 05:14 AM
Nice intro
Posted by: Anujanya | 05/12/2011 at 07:18 AM
நன்றி அஜய். வன்முறையை முன்வைப்பது நவீன சமூகத்தில் தேவையான ஒன்றாக இவர்கள் பார்க்கிறார்களோன்னு தோணுது. மரபை எதிர்க்கிறார்கள் என்பதோடு, கண்டுகொள்ளாமல் இருப்பதை அசோகமித்திரன், சு.ரா,யு.எஸ்.அனந்தமூர்த்தி என நம் நாட்டிலும் இருந்திருக்கிறார்களே! நீங்கள் சொல்வது போல் தற்கொலை, வன்முறை போன்றவை யுத்த பின்விளைவுகளாக இருக்கலாம். சரியாகச் சொல்லியிருக்கீங்க.
Natsuo Kirino - படித்துப் பார்க்கிறேன்.ஏனோ, வன்முறையை மட்டுமே முன்வைக்கும் எழுத்துகளை ரசித்துப் படிக்க முடியவில்லை. விட்டு விலகவும் முடியவில்லை :)
நன்றி அஜய். தொடர்ந்து படித்து வருவதுக்கு நன்றி.
நன்றி அனுஜன்யா! உங்க வருகைக்கு நன்றி.
Posted by: ரா.கிரிதரன் | 05/12/2011 at 07:44 AM