கடந்த சில வாரங்களாக விமலாதித்த மாமல்லனின் கதைகள் தொகுப்பைப் படித்துகொண்டிருக்கிறேன். தொகுப்பை வாங்கியவுடன் முதலில் பரபரவென 'முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்' கதையைப் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் சட்டென இக்கதையின் மையம் பிடிபடவில்லை. எனக்குத் தோன்றியதைத் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. அடுத்த சில நாட்களில் இரண்டு, மூன்று முறை படித்துவிட்டேன். இக்கதையைப் பற்றி முதலில் ஜெயமோகன் தன் சிறுகதைத் தொகுப்பில் எழுதியிருந்தார். நவீன சிறுகதை வடிவம் சுரா, அசோகமித்திரன் போன்றவர்கள் எடுத்தாண்ட கச்சிதமான வடிவத்திலிருந்து, விளையாட்டாக சிதைத்துப் பார்க்கும் ஒருவகைக் கூறுமுறையும் உருவாக்கி வந்ததாக தெரிவித்திருப்பார். அதற்கு 'முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்' கதை முக்கிய உதாரணம் என்று எழுதியிருந்தார்.
பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்கும் இக்கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
தனி மனிதனுக்கும் இயக்கங்களுக்கும் இருக்கும் தொடர்பை இந்த இரு கதைகளும் கையாளுகின்றன. கதையில் முடவன் வளர்க்கும் புறாக்கள் அவனது வளர்ப்புப் பிராணிகள் அல்ல. அவை அவனது ஜீவ நாடி. அன்றாட சாப்பாடுக்கு அவற்றை நம்பி இருப்பவன். மாவோ ஆட்சியின் போது பயிர்களை நாசமாக்குவதால் ஊரில் இருந்த பல லட்சம் புறாக்களை ஒரே மாதத்தில் சீன அரசு அழித்தது. புறாக்களை நம்பி இருந்த மற்ற பூச்சிகளின் சுழற்சி இதனால் பெரிய அளவு பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இக்கதையை புரிந்து கொள்ளலாம்.
அரசு விழாவுக்காக பறக்கவிட புறாக்களை தேடக் கிளம்பும் ஆசிரியர் முதலில் பணிவாக விஷயத்தை எடுத்து சொன்னாலும் பின்னர் முடவனை மிரட்டி புறாக்களை பறிக்கிறார். வேறு வழியில்லாமல் அவனும் கொடுத்து விடுகிறான். அடுத்த நாள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி தன புறாக்கள் திரும்ப வருமா எனப் பார்த்துக்கொண்டிருப்பதாக கதையின் ஒரு பகுதி முடிகிறது.
எல்லா காலத்திலும் தனி மனித தியாகங்கள் மைய இயக்கங்களுக்கு மூலாதாரமாக இருக்கின்றன. பல நேரங்களில் மனித உயிர்களை உரமாகக் கொண்டு, மைய அதிகாரங்கள் வளர்ந்து வருகின்றன. இவை இரண்டுக்கும் இருக்கும் முரணியக்கம் கலை, அரசியல் எனப் பல முக்கிய நிகழ்வுகளுக்கு, உரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த சிறுகதையும் இவற்றைப் பற்றிய விசாரமாக அமைந்திருக்கிறது.
முடவன் கதையை எழுதும் நம்பிக்கைவாதியும் இப்படிப்பட்ட இயக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்து காலப்போக்கில் அதை இழந்தவர். இயக்கம் மேல் வைத்த நம்பிக்கை திசை மாறும் போது, மனிதன் குரங்காட்டம் போட்டு புது நம்பிக்கைகளை கையகப்படுத்தப் பார்க்கிறான். இயக்கத்தின் மேல் நம்பிக்கை இழக்கும் இக்கதை ஆசிரியர் - முன்னாள் அரசு நம்பிக்கையாளர் - போதைக்கு அடிமையாகிறார். அவர் இயக்கத்தின் மேல் நம்பிக்கை இழக்கும் சமயத்தில் முடவனின் கதையை எழுதுகிறார் என நினைக்கிறேன். ஒருவிதத்தில் அவரது அவநம்பிக்கையை தொகுத்துக் கொள்ளவே, ஊர்ஜிதம் செய்யவே இக்கதையை எழுதுகிறார் எனத் தோன்றுகிறது.
அவரது சித்தாந்த நம்பிக்கை மேல் பிற நம்பிக்கைகளை தளமாக அமைக்கப் பார்க்கிறார். பின்னர் இக்கதையை ஒரு குப்பையில் கண்டெடுக்கும் குமாஸ்தா இச்சிறுகதையின் முக்கிய கதாபாத்திரமாக உருவெடுத்து கதையை ஆரம்பத்திலிருந்து நகர்த்தி செல்கிறார். . இப்படி, கதை சொல்லும் முறையே ஒரு விளையாட்டு போல் கதைக்குள் கதையாக சுழன்று வருகிறது.
ஒரு விதத்தில் பார்த்தால் அதிகார அமைப்பு கோரும் தியாகம் மற்றும் அதன் மேல் இருக்கும் அவநம்பிக்கை ஒரு தொடர்ச்சி போல் குமாஸ்தா, பழைய நம்பிக்கையாளன் என எல்லாரையும் பாதிக்கிறது. இதனாலேயே கதையைக் கூறும் குமாஸ்தா தன் அடையாளத்தைஇருப்பை தெளிவுபடுத்துகிறார் - குடிமகனா, குமாஸ்தாவா,எழுத்தாளனா எனக் குழம்பி, தான் ஒரு குமாஸ்தாவே என ஊர்ஜிதப்படுத்துகிறார். இக்கதையில் இந்த குமாஸ்தாவும் அரசு இயந்திர அதிகாரத்தில் சிக்கியிருப்பவரே.
தியாகத்தின் அர்த்தத்தை, எதிர்ப்பார்பில்லாத சேவையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசிரியர் எடுக்கும் முயற்சியாகத் இக்கதையில் வரும் இட்லிக்காரக் கிழவிக் கதையும் அமைந்திருக்கிறது.
பி.தொ.நிழலின் குரல் கதையும் தியாகத்தின் அர்த்தத்தைத் தேடும் பயணமே. பலரின் தியாகத்தில் விளையும் சமூகத்தில் அதன் மதிப்பு என்ன? தியாகிகள் போற்றப்பட வேண்டாம். குறைந்த பட்சம் அவர்களது நம்பிக்கைகள் தொடர் ஓட்டப் போட்டிப் போல் பலர் கை மாறுகிறதா? பழைய தியாகங்கள், மைய அதிகாரங்களின் சொத்தல்லவா? ஆனால் அத்தியாகங்களின் பயன் என்ன? தனி மனிதத தியாகங்கள் மைய அதிகார தரிசனத்துக்கு தேவையாக இருக்கிறது. ஆனால் அவன் வைக்கும் நம்பிக்கைக்கு முரண்பாடாக பெரும் வீழ்ச்சியை மைய அதிகாரங்கள் சந்திக்கின்றன. மேலும் அவை நிலை நாட்டும் அதிகாரம் அவனை அழித்தும் விடுகிறது.
காந்தியின் உண்மைத் தேடல், டால்ஸ்டாயின் ஆன்மிகத் தேடல், தாஸ்தாவேஸ்கியின் மனித கீழ்மை பற்றிய விசாரணை, பொதுவுடைமை சிந்தாந்தத்தின் தீவிர விசாரகரான வீரபத்திர பிள்ளை, இன்றைய கால கட்டத்தில் பொதுவுடைமை அரசியலின் உண்மை நிலைமையைப் பரிசீலிக்கும் அருணாச்சலம் என பல கதாப்பாத்திரங்கள் வரும் இந்நாவலின் மையம் - தியாகத்தின் அர்த்தமின்மை, இயக்கத்துக்கும் தனி மனிதனுக்கும் இருக்கும் உறவு என இரு கருக்களை விரிவாக அலசுகிறது. அதற்கு பின்புலமாக இன்றைய அரசியல் நிலவரங்களைக் கையாள்கிறது.
இந்த கதைக்கும் நாவலுக்கும் இக்கருக்கள் பொதுவாக உள்ளன. பல விதத்தில் இந்நாவல் முடவன் கதையின் விரிவான பார்வையை முன்வைக்கிறது என்றே தோன்றுகிறது. (இது தொடர்பான தனிப் பதிவில் சில விளக்கங்கள்)
கொஞ்சம் பழைய பாணிக் கதையாக இருந்தாலும் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மிக நல்ல வாசிப்பனுவமாக இருக்கிறது.
Recent Comments