எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கோடுகள் இல்லாத வரைபடம்’ லட்சிய மனம் கொண்ட பயணிகளைப் பற்றிய சிறு தொகுப்பு. தெளிவாகப் புரியாத ஓலைச்சுவடுக்கு விளக்கம் சொல்வது போல், எடுத்தார் கைப்பிள்ளையாக வரலாறுக்கு இக்காலகட்டத்தில் பல கோணங்களில் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. வென்றவர்களின் சரித்திரம், அரசாட்சிகளின் எழுச்சி/வீழ்ச்சிக் கதைகள், புராணங்கள் வழி பக்தி கூடாரங்களின் கதைகள், சாதாரண மக்களின் கதை, சமூக/கலாச்சார மாற்றங்களின் ஆவணம், வர்க்கப் போராட்டத்தின் கதை என வரலாறுக்குப் பல முகங்கள்.
பண்டைய இந்திய சரித்திரத்தின் திறவுகோள்கள் நமக்கு பல புத்தகங்கள் வழியாகக் கிடைக்கின்றன. வரலாறாக நாம் முன்வைப்பது - ஒரு சிலப்பதிகாரம் போல் சில சமூகங்களின் கதைகளாக இருக்கலாம், ‘என் சரித்திரம்’ போல் ஒரு குடும்பக் கதையாக இருக்கலாம். புத்தகங்களின் நோக்கம் எதுவானாலும் அவை பழைய வாழ்க்கையின் நிழலுருவமாய் நிற்பதையே பிரதானமாகக் கொண்டுள்ளன. அக்காலகட்டத்து நாகரிகம், பொருளாதாரம், குல நம்பிக்கைகள், மொழி அமைப்புகள் என நாம் அறியாத பல செய்திகளை அளிக்கின்றன.
கோடுகள் இல்லாத வரைபடம் - பண்டைய இந்தியாவுக்கு வந்த யாத்ரீகர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. இடுக்கிய கண்கள், சிறு குடுமி, கையில் காகிதச் சுருளுடன் ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்த புகைப்படம் போல் நிழல்ருவமாக யுவான் சுவாங்கை நாம் பள்ளி சரித்திர புத்தகத்தில் பார்த்திருப்போம். அவர் எழுதிய நாட்குறிப்புகள் பற்றி ஓரிரு குறிப்புகள் படித்திருப்போம். கடலில் அடித்த புயலில் அட்ரெஸ் இல்லாமல் கரை ஒதுங்கிய ஒரு சீன பயணி என்ற அளவில் மட்டுமே நான் அக்குறிப்புகளைப் புரிந்துகொண்டேன். அதன் முக்கியத்துவத்தை சரியாக உள்வாங்காமல் போனதால் சரித்திரம் எனக்கு கசந்திருக்கலாம். அதைக் களையும் விதத்தில் இப்புத்தகக் கட்டுரைகள் இருக்கின்றன. இப்புத்தகத்தில் இந்தியாவுக்கு வந்த பல பயணிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; பயணிகளாக இருப்பதால் மட்டுமல்ல. இந்தியாவைப் பற்றி பல செய்திகளை தங்கள் நாட்குறிப்பில் எழுதியதால் மட்டுமே இப்பயணிகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.
பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்க்கோ போலோ, ராபர்ட் ப்யரி, இபின் பதூதா என பல பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் இந்தியாவைத் தெரிந்துகொள்ள வந்தவர்கள் இல்லை. அரச தூது, வணிகம், ஒற்றனாக, இந்திய மெய்யியல் கற்பதற்கு என ஒவ்வொருவருக்கும் தனித்தனி திட்டங்கள். எதிலும் இந்தியாவை வளப்படுத்தும் நோக்கம் துளியும் கிடையாது. சுமூக நல்லுறவுக்காக பயணம் செய்யும் இக்கால சமாதானத் தூதுவர்கள் இல்லை இவர்கள். ஆனால் அவர்கள் முன் அனுபவங்களாகக் குவிந்த இந்தியா எனும் கருதுகோளை பதிவுசெய்தார்கள்;விவாதித்தார்கள். கற்பனை என பலது விலக்கப்பட்டாலும், இந்தியாவை ஆச்சர்யமாகப் பார்த்தது இப்பயணிகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை. .
பண்டைய இந்தியா ஒருங்கிணைந்து ஆட்சி செய்யப்பட்ட நிலப்பகுதி கிடையாது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர். ஒன்றாகக் கட்டுப்படுத்தும் அரசியல் பிணைப்பு இல்லாத பல குழுக்கள். இவர்கள் அனைவரையும் இணைத்தது எது? அரசாட்சி மாறி புது அதிகார வரவை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்? கலாச்சார மாற்றங்களை கொண்டு சமூக வீழ்ச்சி/வளர்ச்சி கணக்கெடுக்க முடியுமா?
இப்புத்தகத்தின் கட்டுரைகளில் பயணிகளைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக அவர்கள் எதற்காக இந்தியா வந்தனர், என்னென்ன நிலக்காட்சிகளைப் பதிவுசெய்தனர், மக்கள் மனதில் எப்படிப்பட்ட பிம்பத்தை அவர்கள் உருவாக்கினார்கள் போன்ற பல் சுவாரஸ்யமானத் தகவல்கள் கிடைக்கின்றன.
பண்டைய இந்தியா பற்றி மட்டுமல்லாது, தற்கால பயணிகளைப் குறித்தும் சில கட்டுரைகள் இருக்கின்றன. குறிப்பாக ‘நடையால் உலகை வென்றவர்’ கட்டுரை. சதீஷ்குமார் என்ற இளைஞர் உணவு, செலவு பற்றிக் கவலைப்படாது இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை நடந்தே பயணம் செய்தது பற்றிய இக்கட்டுரை மிகச் சுவாரஸ்யமானது. சக மனிதர்கள் மேல் நம்பிக்கை வைத்து இப்பயணத்தைத் தொடங்கிய சதீஷ்குமாருக்கு நினைத்ததை விட அதிக வரவேற்பு பல இடங்களிலும் கிடைத்தாக குறிப்பிடுகிறார். அவர் செல்லும் வழியிலெல்லாம் பலர் அன்பளிப்புகள் தந்ததை அன்போடு நினைவு கூர்கிறார்.
எவரெஸ்ட் ஏறிய டென்சிங் சந்தித்த சோதனைகள், அவரது சாகஸங்கள் போன்றவற்றை விவரித்து ஒரு கட்டுரை உள்ளது. பொதுவாக அக்கால பயணிகள் என்றாலே கடினமான சூழலை தங்களுக்கு சாதமாக மாற்றியவர்களைக் குறிப்பிடுவோம். அதுவும், மலை ஏறுவது, ஆழ்கடல் ஆராய்ச்சிகள் போன்றவை அதிக மன உறுதி மற்றும் உடல் உறுதி கொண்டவர்களால் மட்டுமே நிறைவேற்றக் கூடியது என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கடுமையான மலையேற்றத்தைச் செய்த டென்சிங் சந்தித்த சிக்கல்கள் பற்றியும், எவரெஸ்ட் பற்றிய பல குறிப்புகளும் இக்கட்டுரையை முக்கியமானதாக்குகிறது.
இவர்கள் அனைவரும் யாரும் முடியாததை சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள் அல்ல. மனிதனின் சாதனை எல்லையை சிறிது சிறிதாக தள்ளி வைத்தபடி முன்னேறுபவர்கள். இக்குறிப்புகளைப் படிக்கும்போது, மனித சக்தியின் ஆற்றல் எல்லையைத் தாண்டி, மனித மனதின் லட்சிய செயல்பாடுகள் மிகுந்த ஆச்சர்யமூட்டுவதாக தோன்றுகிறது.
இக்கட்டுரைகள் பல இணையத்தில் வெளியாகியிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது இப்பயணங்களின் இயல்பு கச்சிதமாக விளங்குகிறது. கோள்களைப் போல் இலக்கற்று பல திசைகளிலும் செல்வதைப் போல் தோன்றினாலும், மனித முன்னேற்றப் பாதையின் ஒவ்வொரு படிக்கட்டிலும் இப்பயணங்கள் திடமாக கால் வைத்தது புரிகிறது. எப்படிப்பட்ட இலக்காக இருந்தாலும், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி இழுப்பது அந்த அறுபடாத மனித முன்னேற்றச் சரடை மட்டுமே.
Recent Comments