எந்நேரத்திலும் பிரசவம் என்ற நிலையில் முட்டிக்கொண்டு பிதுங்கிய நிலையில் சில வருடங்களுக்கு முன் பல ஹார்ட் டிஸ்குகள் என்னிடம் சேர்ந்திருந்தன. பெங்களூரில் இருந்த சமயம். வகைதொகையில்லாமல் கிடைத்த எல்லா பாடல்களையும் mp3 வடிவத்துக்கு மாற்றி சேகரித்துக்கொள்வேன். வீட்டுப்பிராணிகள் போல் சமர்த்தாக பகுப்புக்குள் அடங்கும் திரையிசைப் பாடல்களைத் தவிர ஆங்கில பாப் ஆல்பங்கள், மைக்கேல் ஜாக்ஸனின் மேடையாட்டங்கள், ABBA , பீட்டில்ஸ், பிரின்ஸ் என கட்டுக்குள் அடங்காதவையும் அதில் அடக்கம். வீடு மாறும்போதெல்லாம் ஹார்ட் டிஸ்குகளை வைத்துக்கொள்வதா வேண்டாமா எனப் பரிசீலனை எழும். இன்று அனேகமாக இத்தொகுப்புகள் தேவையில்லை. எல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. தேவையானதை தரவிறக்கிக்கொள்ளலாம். போன மாதம் வீடு மாறியபின்னர் கையடக்கமாக 1TB ஹார்ட் டிஸ்க் வாங்கி இவற்றையெல்லாம் கூட்டுக்குடும்பமாக ஒரு டப்பாவுக்குள் அடக்கியாயிற்று.
ஆனால் மறுபடியும் பழைய பிரச்சனை தலைதூக்கியது. தொகுப்புக்குள் அடங்காத தமிழ் ஆல்பங்களை என்ன செய்வது? இன்று அனேகமாக தமிழ் பாப் ஆல்பம் வருவதில்லை என்றே நினைக்கிறேன். முன்னர் மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ், பீட் ரவி, கானாஸ் போன்றவர்கள் தமிழ் பாப்பின் பெரிய தலைகளாக இருந்த காலகட்டம். இப்போது முழுவதும் poop ஆகிவிட்ட நிலை. அனேகமாக இவை இன்று கேட்க சகிக்காது என்ற எண்ணத்தில் மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ் ஆல்பங்களை தூசி தட்டி எடுத்தேன்.
நேற்று சுரேஷ் பீட்டர்ஸின் மின்னல் ஆல்பத்தை பல வருடங்களுக்குப் பின் மீண்டும் கேட்டேன். மொத்தம் 30 நிமிடங்கள் கூட இல்லை. ஆனால் பாப் இசை வடிவத்தை கச்சிதமாக பின்பற்றி வெற்றிகரமான ஆல்பத்தை அந்நாளில் அவரால் வெளியிட முடிந்திருக்கிறது. ஆறு மாதம் ஊறவைத்தால் கேட்க முடியாமல் போகும் திரையிசைப்பாடல்கள், பெரும்பான்மையான பாப் ஆல்பங்களுக்கிடையே காலத்தைத் தாண்டி மின்னல் பளிச்சென வெட்டு வெட்டியிருக்கிறது. இன்றும் முழு ஆல்பத்தை எந்தவித சலிப்புமில்லாமல் கேட்க முடிவதே மின்னலின் வெற்றி. மனதில் தங்கக்கூடிய பாடல் வரிகள், சுரேஷ் பீட்டர்ஸின் வசீகரக் குரல், அற்புதமான இசை என எல்லா கட்டங்களையும் டிக் அடித்துவிடுகிறது.
இது வானம் சிந்தும் -
முகிலென -
மின்னல் ஆல்பத்துக்குப் பிறகு இரண்டொரு தனி ஆல்பங்கள் வெளிவந்திருந்தாலும், சுரேஷ் பீட்டர்ஸுக்கு அவை வெற்றியாக அமையவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானிடம் சில பாடல்கள் பாடினார், ஓரிரு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அத்துடன் சரி. பலதரப்பட்ட திறமைகளை வெளிப்படுத்திய மின்னல் போல் வேறொன்றும் அவருக்கு அமையவில்லை என நினைக்கிறேன் .
குறிப்பாக ’இது வானம் சிந்தும் ஆனந்த கண்ணீர்’, ’முகிலென’ (ஜாஸ் போல் அற்புதமான சாக்ஸபோன் தேன்!) போன்ற பாடல்களின் தந்தியிசை மிகவும் உருக்கமாக அமைந்திருக்கிறது. மழைக்கு முன் வரும் மின்னலின் துள்ளலைவிட, அடித்துவிட்ட மழைக்கு பின் சிந்தும் ஓரிரு துளிகளின் அமைதி இப்பாடல்களில் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய டேக் இட் ஈஸி, முஸ்தபா முஸ்தபா பாடல்களின் வேர் ’உன்னைப் பார்த்ததும்’, ’அ ஆ ரோஜா’ போன்ற பாடல்களில் இருக்கிறது. ஒரு குழுவில் இருந்ததால் ஒரே போன்ற இசை போக்குகள், ரசனைகள் என தங்கள் தனித்தன்மைகளாக சுரேஷ் பீட்டர்ஸும், ஏ.ஆர்.ரஹ்மானும் உணர்ந்திருப்பார்கள்.
இன்று தனிக்குழுக்கள் பல ஆல்பங்களை வெளியிட்டாலும், அவை பல வருடங்களாக சரியான சந்தர்பத்துக்காக காத்திருப்பது போல் தெரிகிறது. கிதார் பிரசன்னா, ரவிகிரண், நீலாத்ரி குமார் போன்றோர் தனி இசை ஆல்பங்கள் வெளியிட்டு பிரபலடைந்திருந்தாலும், தமிழ் பாப் எனும் வகை மின்னல் போல் தோன்றி மறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
கிரிதரன்,
பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள். அப்போதெல்லாம் திரும்பத்திரும்ப கேட்ட பாடல் சுரேஷ் பீட்டர்ஸ் உடையது. இப்போது சுத்தமாய் மறந்து போயிருந்தேன். இசையில் லயித்து அமைதி காணச் செய்தவற்றில் சுரேஷ் உடையதும் ஒன்று,
இன்றைய இரவு இந்தப் பாடல்களோடுதான். மீள்நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை கொடுத்தாலும், ஆன்மாவின் சுகத்தை மீட்டுகின்ற பாடல்களை அளித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்பு.
இரு தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பற்றிய உங்கள் பதிவை வாசிக்கும்போது மற்ற பதிவுகளையும் இரவு 2 மணி வரை வாசித்தேன். பிரமிக்க செய்கிறீர்கள்.
இது வெற்றுப்புகழ்ச்சியல்ல, என் இதயத்திலிருந்து..
அன்பும், நன்றியும்...
பொன்.வாசுதேவன்
Posted by: அகநாழிகை | 03/01/2011 at 03:31 PM
ரொம்ப நன்றி வாசு :)
பாடல்கள் மூலம் பழசை கிளறி விடுவதும் மிகவும் சுகமாகவே இருக்கும்.இந்த ஆல்பத்தை கேட்டபோது எனக்கும் என் கல்லூரி நாடகள் ஞாபகம் வந்தது. ஒரு விதத்தில் இப்பாடல்களின் வெற்றியும் அது தான்னு தோணுது. வருகைக்கு நன்றி.
Posted by: ரா.கிரிதரன் | 03/01/2011 at 10:10 PM