ஈவா ஹோஃப்மான் (Eva Hoffman) எழுதிய Illuminations நாவலைப் படித்து முடித்தேன். இசை சம்பந்தமாக சில நாவல்கள் படித்திருந்தாலும் அவை இந்தளவு விவாதபூர்வமாக இருந்ததில்லை. மேலும் அக்கதைகளில் கலை விவாதங்கள் கதையின் ஆழத்தில் சில உவமைகளாக வெளிப்படுவதோடு சரி. கதைக்குள் பெரிய அளவில் சலனத்தை ஏற்படுத்துவதில்லை.
மோகமுள்ளில் பாபு யமுனா கதாபாத்திரங்களின் மனச் சிக்கலை பாபுவின் இசை நோக்கில் தி.ஜா விரித்தெடுத்திருப்பார். நண்பர் ராஜன்னுடன் நடக்கும் விவாதங்களும் பாபுவின் உளச்சிக்கலை பிரதிப்பலிப்பதாகத் தோன்றும். கதை ஆரம்பிக்கும்போது ஈச்வரி என்பவரின் வீணையில் லயிக்கும் போது, பாபுவால் இசையில் முழு ஈடுபாட்டோடு இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கமே பெரிதாக வெளிப்படும். தி.ஜாவின் எழுத்திலும் இசை லயம் இருப்பதால், பாபுவின் எண்ண ஓட்டங்களை அழகாக இசை உறுபுகளாக அவரால் எடுத்துக்காட்ட முடிந்தது. ஆனால், இந்நாவலில் இசை விவாதங்கள் கதை ஓட்டத்தை பாதிக்கவில்லை.
டாக்டர் ஃபாஸ்டஸ் (Doctor Faustus) என்ற நாவலில் தாமஸ் மன் ஒரு ஜீனியஸ் இசைக்கலைஞரின் மனக்குழப்பங்களை கையாண்டிருப்பார். ஒரு மிகப்பெரிய லட்சியவாதியாக வளர்க்கப்படும் அந்த இசைக்கலைஞர் இசையின் நுண்மையிலும், ஜெர்மன் தேசியவாத மீட்புறுவாக்கத்திலும் தீவிரமாக ஈடுபாடுள்ளவர். மெல்ல, தூய்மையான கலைக்குத் தேவையான அழகியல் கோட்பாடுகளில் தன் முயற்சியைத் தொடங்குவார். அதாவது, ஜெர்மனின் கலை தேய்ந்து வருவதாக அவருக்குத் தோன்றும். ஜெர்மன் தேசியவாதத்தை முன்னிருத்தும் அதே வேளையில் கலைப் பொக்கிஷங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருள் வலுக்க ஆரம்பிக்கும். ஒரு ஜீனியஸ் மெல்ல தனக்குள் குலைந்துபோவதை தாமஸ் மன் மிகத் தத்ரூபமாக நாவலில் விவரித்திருப்பார். இந்நாவலிலும் இசையின் விவரணைகள் ஜெர்மன் நாட்டின் அழிவை படம்பிடித்துக் காட்டுவது போலிருக்கும். ஓரளவு கலை விவாதங்கள் கதையின் போக்கைப் பிரதிபலிக்கும்.
Illuminations நாவல் இவ்வகை முயற்சிகளைத் தாண்டி கலையின் கீழ்மைகளை முன்னிறுத்தும் நாவல். ஒரு விதத்தில் கலை என்ற வஸ்து தேவையில்லை என வாழ்வை அதன் போக்கில் கொண்டாடும் நாவல்.
இஸபெல் மெர்டன் அமெரிக்காவில் வாழும் ஒரு பியானோ கலைஞர். பல இசைக்கலைஞர்களைப் போல் ரிக்கார்டிங்கில் ஈடுபாடு இல்லாதவர். இவரது இசையை மேடை கச்சேரிகளில் மட்டுமே கேட்க முடியும் ( கர்நாடக இசையுலகில் மாமேதையான ப்ருந்தா அம்மாவும் இப்படிப்பட்ட கொள்கை உடையவரே. எம்.எஸ், பட்டம்மாள் போல் மேதையான ப்ருந்தாவின் இசை அதிகம் பதிவு செய்யப்படவில்லை).
ஒவ்வொரு கச்சேரியையும் தன வாழ்வின் உச்ச கட்ட சாதனையாக மாற்ற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் இஸபெல். இதனாலேயே கச்சேரியின் போது வேறொரு உலகில் சஞ்சாரிப்பது போல் தீவிரமாக வாசிப்பார். மிகவும் உண்ர்ச்சிவயமான அனுபவமாக அவருக்குள் அது நிலைத்திருக்கும். அதன் பாதிப்பு கச்சேரி முடிந்த பின்னும் அவருள் இருப்பதால் அதை வெளியேற்ற வழியில்லாமல் இரவெல்லாம் தவிப்பவர். இதனால் ஒவ்வொரு கச்சேரி முடிந்த பின்னும் அவருக்குள் சந்னதம் கொள்ளும் இத்தவிப்பு அடங்க பல நாட்களாகும். அந்நாட்கள் பித்து பிடித்தது போல் தவிப்புடன் கழியும்.
மேலும் ஐரோப்பா முழுவதும் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதால் அவருக்கு கால மயக்கம் அடிக்கடி உண்டாகும். திடீரென எந்த நாட்டில், எந்த ஊரில், எங்கு இருக்கிறோம் என்ற நினைப்பே அவருக்கு இருக்காது. ஒவ்வொரு வாரமும் புது ஹோட்டல், விமானம், ரயில் எனப் பலவித பிரயாணங்கள் அவரது வாழ்வையே சிதறுண்ட சித்திரமாக மாற்றிவிடுகிறது. பல வேளைகளில் எதற்காக இந்த ஓட்டம், இசையை உஜ்ஜீவிக்க வந்த மேதையா நாம் - இல்லை வெறும் மேடை நிகழ்வுகள் செய்பவள் தானே- ஏதோ ஒரு காலத்தில் ஒரு மேதை அமைத்த இசைக்கு தான் ஒலி கொடுப்பவள் மட்டும்தானே எனப் பலவித எண்ணங்கள் அவரைக் குழப்புகின்றன.
இப்பயணங்களில் வழித்துணையாக அவரது பியானோ குரு கொடுத்த நாட்குறிப்பைக் கொண்டுசெல்கிறார். அது இன்னும் வெளியிடப்படாத நாட்குறிப்பு. இவரது குருவுக்கு இருந்த சிஷ்யர்களுக்கு இது தரப்பட்டுள்ளது - அவர்களது விமர்சனங்களைத் தொகுப்பதற்காக. இஸபெல் பியானோ வாசிக்க கற்றுகொண்டிருந்த நாட்களை இந்நாட்குறிப்பில் விவரித்திருப்பார் - அது தாமஸ் மன்னின் இசைக்கலைஞரைப் போல் நாட்டின் தேசியவாதத்தை முன் வைக்கும் விவாதங்களே. அதே போல் இஸபெல்லின் வாசிப்பு மேல் அவருக்கு இருந்த ஆர்வம், இளமையான இஸபெல் மேல் அவருக்கு துளிர்த்த மோகம் என நாட்குறிப்பு இஸபெல்லுக்கே புது உலகை திறப்பதாக இருக்கிறது.
மெல்ல மூன்று விதமான உலகங்களுக்குள் இஸபெல் பயணம் செய்கிறார். நாட்குறிப்பு வழியே தன் இளம் நாட்களையும், இசை நிகழ்வுகள் வழியே நிகழ்கால அலைச்சல்களையும், அதீத இசை உணர்வால் உந்தப்பட்டு தனக்குள் நிகழ்த்தும் உரையாடலாகவும் ஒரு இசைக்கலைஞரின் உலகம் நமக்கு விரிகிறது. மெல்ல புறச்சூழலை மறந்து தன் எண்ணங்களுக்குள் சிறு உலகை அமைத்துக்கொள்கிறாள் - போலியான வார்த்தைகளிலும், ஒட்டாத நட்புறவு சஞ்சாரங்களிலும் தன் சுயத்தை மறக்கிறார். இசை தரும் அயர்ச்சியினால் அது தரும் பின்விளைவுகளையும், கோரமான மன சிதைவுகளையும் வெறுக்கத் துவங்குகிறார்.
ஒரு சாதாரண வாழ்வில் இருக்கும் அழகியல் அவரை காந்தம் போல் இழுக்கிறது.
ஒரு நாள் ரஷ்யாவிலிருந்து பிரிந்த செச்சென்யா நாட்டின் ரசிகர் அன்சரின் அறிமுகம் கிடைக்கிறது. அன்சர் இஸபெல்லின் தீவிர ரசிகர். அதே சமயம் செச்சென்யாவின் சுதந்தரத்துக்காக ஐரோப்பாவில் ஆதரவு தேடும் போராளி. இசை விவாதங்கள் மூலம் இவர்களுக்குள் மெல்ல நட்பு ஆழமாகிறது.
செச்சென்யா பற்றி அன்வரும், தன் பழைய போலாந்து வாழ்வைப் பற்றி இஸபெல்லும் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களது இளமை வாழ்வின் பொதுத்தன்மை அறிமுகமாகிறது. போலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் இஸபெல் வணிகமயமாக்கப்பட்ட இசை உலகை முதன் முறை சந்திப்பதால் கொஞ்சம் மனச்சிக்கலுக்கு ஆளாகிறார். செச்சென்யாவில் தன் இன மக்களை ரஷ்ய அரசாங்கம் அடிமைபடுத்தி வைத்திருப்பதை அன்சர் வேதனையுடன் விவரிக்கும்போது இஸபெலுக்கு இசையைத் தவிர வெளி உலகம் பரிச்சயமாகிறது.
கலை, இசை போன்றவற்றை ஆதாரமாகப் பிடித்து வாழ்க்கையை தீவிரமாக ரசிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர் இஸபெல்.வன்முறையை வாழ்வு முறையாகவும், சின்னச் சின்ன சுதந்திரங்களை வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய உண்மைகள் இஸபெல்லின் அடிப்படை கருதுகோள்களை உலுக்கிவிடுகிறது. இத்தனைக்கும் செச்சென்ய/ரஷ்ய மக்களின் கலை ஆர்வத்தை அன்சர் சொல்லும்போது இவர்களுக்குள் வன்முறை எப்படி முளைக்கிறது எனக் குழப்பம் அவருக்குள் எழும்புகிறது.
ஆனால், சில மாதங்களில் அன்சரும் செச்சென்யா விடுதலைக்காக ஐரோப்பாவில் வன்முறையைத் தூண்டிவிடும் கும்பலுக்கு துணைபோகிறார். பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டு சில நாட்களில் காணாமலே போகிறார்.
இஸபெல்லின் வாழ்வில் பெரிய வெற்றிடம் உண்டாகிறது. இசையால் நிரப்பப்பட்ட நாட்களை களைத்துப்போட்டு நுழைந்த அன்சர் இவ்வளவு சீக்கிரம் விடை பெற்றுவிடுவான் என அவர் நினைக்கவில்லை. மெல்ல அன்சரின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சி செய்கிறார். அவரது குரு சில இசை தொகுப்புகளை வெளியிட முயன்றது அவருக்கு ஞாபகம் வந்தது. அதைத் தொடரலாம் என மெல்ல தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற முயற்சிக்கிறார். ஆனாலும், குருவின் நாட்குறிப்பு மற்றும் செச்சென்யா மக்களின் நிலை மூலம் மனிதனின் உள்ளார்ந்த விடுதலையை கேள்விக்குள்ளாக்கிய கருத்துருவங்களுக்குள் நுழைகிறார். தனது வாழ்வை இசை குதூகலமாக மாற்ற முடியுமா எனக் தன்னையே கேள்வி கேட்கிறார்.
வாழ்வை மீண்டும் மனத்தடைகளிலிருந்து மீட்க முடியுமா - அதற்கு தனது இசை எப்படி உபயோகப்படும் என மீதி நாவல் நகர்கிறது.
இது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்த நாவல். ஆனால் நாவல் எந்தளவு இலக்கிய படைப்பாக வெற்றிபெற்றிருக்கிறது?
நாவலின் நம்பகத்தன்மை குறைவே. முற்றிலும் இயல்பான நிகழ்வு என இஸபெல் -அன்சர் காதலை மட்டுமே சொல்லலாம். இசையைப் பற்றி நுணுக்கமான விவரணைகள் நாவலை பல தளங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், இசை பற்றிய விவரணைகள், கவித்துவமான வர்ணனைகள், இடம்-பொருட்களைப் பற்றிய பார்வைக் கோணங்கள் ஒரு நாவலை வெற்றியடையச் செய்யாதே! வாழ்க்கை இல்லாத ஒரு உயிரற்ற படைப்பாக இருப்பதே இந்நாவலின் பலகீனம். அன்றாட வாழ்வை புதிய கோணத்தில் முன்வைக்கக்கூடிய தரிசனத்தை ஈவா வெளிப்படுத்தவில்லை. அதே போல் கதாபாத்திரங்களும் தெளிவாக பட்டவர்த்தமாக வெளிப்படவில்லை. பாத்திரங்களுடன் ஒன்றிப்போக முடியவில்லை - முதன்மை பாத்திரமான இஸபெல்,அன்சர் கூட தனித்துவமாக நிறுவப்படவில்லை. கதையும் தரையிலிருந்து அரை அடி மேலே பறந்துகொண்டிருப்பதால் படித்து முடித்ததும் ஒரு முழு சித்திரம் கிடைக்கவில்லை.
சிறு பின்குறிப்பு:
இந்நாவல் ரொம்பவே அப்ஸ்ட்ராக்டாக இருந்தது. படிப்பவர் கோணத்துக்குத் தகுந்தாற்போல் புரிந்துகொள்ளலாம் என சாய்ஸுக்காக எழுதப்பட்டிருக்கலாம். ஏன் அரசியல் கதைக்கு இசையைத் தேர்ந்தெடுத்தார் என எனக்குப் புரிந்ததைக் கீழே எழுதியிருக்கிறேன் -
ஈவா போலாந்து நாட்டிலிருந்து அமெரிக்கா சென்றவர். அவருக்கு யூத மக்களின் துயரம் தான் பிரதான களம். . அதனால் இயல்பிலேயே அரசியலை மையமாக எழுத முடிந்திருக்கிறது.அடிப்படையில் ஒரு பியானோ கலைஞரும் கூட. கீழிருக்கும் சுட்டியில் ஈவாவின் பேட்டி கொஞ்சம் போல் இசை - அரசியல் பிணைப்பை விளக்குகிறது.
http://www.independent.co.uk/arts-entertainment/books/features/eva-hoffman-the-first--impulse-was-to-write-about-music-854748.html
//Does Hoffman envy musicians (not unusual among writers) for the way they use a language which can speak straight to the heart, across cultures? "Universality is a fantastic bonus," she replies, "but the key point is the convergence of form and content – you have a medium in which what you are expressing is expressed completely directly... the medium is the message."
Isabel's almost religious devotion to music plays itself out amid the dislocation, arbitrary encounters and soulless hotels of life on the international concert circuit. She is mocked by Americans committed to hedonism or the kind of detached, ironic post-modernism which takes nothing seriously. But the real challenge to her values comes from her fellow-romantic, Anzor, a Chechnyan political exile who devotes his life to the national cause.//
form and content - இதிலிருந்துதான் தன் இசை-அரசியல் குதிரைகளில் சவாரி செய்கிறார். இப்புத்தகத்தில் form இசை தொடர்பாக இருக்கும். இசையின் பல பகுதிகளை மொழி அலங்காரமாக உபயோகிக்கிறார். சோகமோ, சந்தோஷமோ - இசை வழியாக சொல்லியிருக்கிறார். ஆனால் அடிப்படையில் பெரும்பாலும் இது அரசியல், தனி மனித சுதந்திரம் பற்றிய கதையாகவே தெரிகிறது - content அங்கிருந்துதான் எடுத்தாள்கிறார்.
இசை தரும் கற்பனை உலகிலிருப்பவர் இஸபெல். அன்சர் வருகைக்குப்பின் பியானோவிலிருந்து கண்ணெடுத்து வாழ்க்கையே முதல் முறையாகப் பார்ப்பது போல் பார்க்கிறார். வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல், அதுவரை அவருக்கிருந்த சுதந்திரம் அப்போதுதான் புரிகிறது. சந்தோஷமாக இருக்கும்போதே இசையால் உணர்ச்சிக்குவியலாக ஒருவித hyper, restless syndrome வருகிறதே - சுதந்திரம் இல்லைன்னா எப்ப்டி இருக்கும்? இசை இப்படி நம் உணர்வுகளை mask பண்ணிவிட்டதேன்னு ஏக்கம். அதனால் இசையின் அழகியலை வெறுக்கப்பார்க்கிறார் - முடிவதில்லை - திரும்ப இசைக்கே செல்கிறார்.
ஒரே நாவல் எப்படி இருவேறு முரண்பட்ட வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. உங்க விமர்சனம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி.
Posted by: Account Deleted | 03/18/2011 at 02:28 PM