சரியாக எழுபது வருடங்களுக்கு முன் இதே நாளில் ஆலிவர் மெஸ்ஸையன் சிறைக்குள் (Concentration camp) `காலத்தில் முடிவுக்காக நால்வரின் இசை` எனும் இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்தார்.
இந்நிகழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது இச்சிறுகதை (மீள்பிரசுரம்).
*
சிறுகதை: காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை.
*
இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26.
1942 ஜனவரி மாத இரவு.
அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் மாறி மாறி மக்கள் மேல் படர்ந்து, மீதமிருந்த இரவை இருள் வென்றுகொண்டிருந்தது. வெளியே பனிக்காற்றைத்தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அந்த ஊளையும் சீராக இயங்காமல், திடீர் திடீரென கடும் சத்தத்துடன் ஜன்னல்களில் மோதிக்கொண்டிருந்தது. நிசப்தமான அந்த இரவில், அறையிலிருந்த மனிதர்களுக்கு பனியின் ஊளை தான் பயத்தைப் போக்கும் துணை.அறையின் இடது மூலையில் நெருப்புக்கான இடத்தில் கடைசி சில மரத்துண்டுகள் மிச்சமிருந்த உயிர்ப்புடன் எரிந்துகொண்டிருந்தன. அங்கிருந்த கரித்துண்டுகளும் சிறிது நேரத்தில் அணைந்து விடும். பின்னர் மாயாஜாலம் போல அறையின் எல்லா பொருட்களும் உறையத்தொடங்கும்.
பாதியாய் மடங்கிய நிலையில் கிழவி ஒருத்தி அந்த கணப்புக்கு அருகே சென்றாள். நான் இருந்த இடத்திலிருந்து அவள் யாரென்பது தெரியவில்லை. அந்த கணப்பிலிருந்த சிறு கரியை ஊதினாள். மஞ்சள் சிகப்பு நிறம் அவள் முகத்தின் சுருங்கிய கோடுகளில் பட்டு மங்கியது. அது மரியானா. பூனை மரியானா என நாங்கள் கூப்பிடுவோம். அவள் வாய் இடதோரத்திலிருந்த மச்சத்தில் பூனை மயிர் இருப்பதால் இந்தப் பெயர். ஒவ்வொரு முறை ஊதிய பின்னும் கரித்துண்டு முனகியபடி அணைந்தது. மரியானா விடுவதாய்த் தெரியவில்லை.
"கொஞ்சம் மூச்சை மிச்சம் வெச்சிக்கோ கிழவி" - அறை மூலையிலிருந்து முனகல் சத்தம் கேட்டது. தடிப்பான மேலாடையை போர்வையாய் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தது அந்த உருவம்.
"உனக்கென்னடா..சும்மா வாயை மூடிகிட்டு படு. உன்ன மாதிரி தடித் தோலா எனக்கு" - யாரெனத் தெரியாமல் பொதுவான திசையில் கத்தினாள் கிழவி.
அவன் ஏதோ சொல்லும் போது, திடுமென வந்த ஊளை சத்தம் அனைவரையும் அடக்கியது. தங்கள் மேலிருந்தவற்றை சுருட்டிக்கொண்டு இன்னும் அடக்கமாகப் படுத்துக்கொண்டனர். போர்வையின் நீளம் பத்தாது ஒரு உருவத்தின் கால்கள் மடங்கின; கையிலிருந்த சிலுவை வெளியே தெரிய, சடக்கென அது உள்ளே இழுக்கப்பட்டது. கால்கள் மீண்டும் வெளியே வந்து நடுங்கத்தொடங்கியது.
எனக்கு இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் மனநிலை இல்லை. இன்னும் சில நேரங்களில் இளவெயில் வந்துவிடும். ஆனாலும் ஜனவரி மாதக்குளிர் நடுப்பகல் வரை இழுக்கும். பின்னர் அடுத்த நாளுக்கான பனி பொழியத்தொடங்கும். இந்த சிறையில் இருக்கும் எல்லோருக்கும் அந்த பனிப் பாதையை சரிசெய்வதே தினவேலை. பாக்கியசாலிகளுக்கு சமையலறையிலும், காப்பாளர் அறையின் கதகதப்பிலும் வேலை கிடைக்கும். அங்கும் பரம சவுகரியமெனச் சொல்லமுடியாது.
பனி பூட்ஸ் காலில் நசுக்கப்படும் சத்தம் கேட்டுத் வாசலில் பார்த்தேன். காவலாளி ஜேகப். இந்த யுத்த சிறைப் பகுதிக்கான தலைமை அதிகாரி.
"என்ன சத்தம்? தூங்காம என்ன பண்றீங்க?" - ஜெர்மன் மொழியில் மேலும் சிறிது நேரம் வசை பாடிவிட்டு, கணப்பின் மேல் தண்ணீரை ஊற்றிச் சென்றான். மிச்சமிருந்தவை புஸ்ஸென அணைந்தது.என் அறையில் இருக்கும் அனைவரும் எந்தவிதமான வசவுகளையும் புரிந்து கொள்ள முடியாத பிரெஞ்சு மக்கள். நேற்றுடன் கணக்கு நூறைத் தாண்டி விட்டதென ஜெர்மன் காவலாளி சொன்னான். இங்கு கூட்டம் அதிகமாவது எல்லோருக்குமே அசெளகரியம். இதில் ஜெர்மன் அதிகாரிகளை குற்றம் சொல்ல முடியாது. இந்த ஸ்டாலாக்-8 சிறைச் சுவற்றுக்குள் இருக்கும் அனைவரும் கைதிகளே. ஜெர்மன் நாட்டில் இருக்கும் இந்த சிறையில் ஜெர்மன் அதிகாரிகளும் கைதிகளே. எல்லோரும் முடிவில்லாத காலத்தின் நகர்வை சுயநினைவற்று பார்த்துக்கொண்டிருப்பவர்களே.
இன்று, நாளை என பொறுமையுடன் மூன்று வருடங்களாய் காத்துக்கொண்டிருக்கிறோம்.பத்து நாட்களுக்கு முன், 1941 ஆம் ஆண்டு கழிந்த புத்தாண்டன்று நடந்த கேளிக்கையில் சில ஜெர்மன் அதிகாரிகள் - இந்த வருடம் நிச்சயம் நமக்கு விடுதலை தான். இந்த இரவு நீண்டு கொண்டேசெல்லட்டும்; முடியும்போது போரை வெல்வோம், நாம் சுதந்திரம் பெற்றுவிடுவோம். - என பித்து பிடித்தது போல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது என் முன்னே இருக்கும் ஜன்னல் வழி தெரிந்த திடலில் நடந்த நாடகம் அது. அடுத்த நாள் அதே அதிகாரி யார் மீதோ கொண்ட எரிச்சலில் என்னை பூட்ஸ் காலால் உதைத்தான். இரண்டுமே கனவில் நடந்தது போல் இருக்கிறது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்.
வெளியே பனியின் ஊளை சற்று குறைந்திருந்தது. மெல்ல அறைக்கதவைத் திறந்து அடுத்த அறையில் நடப்பவற்றை நோட்டமிட்டேன். இரண்டு அறைக்கும் இடைவெளியின் வழியே பனி ஊடுருவியது. என்னைப் போல் பலரும் தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தனர். சிறு பெண் ஒருத்தி, கையில் குழந்தையுடன் ‘தண்ணீர், தண்ணீர்’ என பிதற்றிக்கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியபடி நடுத்தரவயது பெண் ஒருத்தியும், அவளைப்போலவே இருந்த இளைஞனும் தோளில் கைவைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். குழந்தை எதன் மீதும் பார்வை ஒட்டாது எல்லோரையும் மையமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.
திடீரென கிளாரினெட்டின் குழலோசை. பனியின் ஊளையையும் மீறிக்கேட்டது. எல்லோரும் ஸ்தம்பித்து ஒரு கணம் அடுத்த அறைக்கதவை உடைப்பது போல் பார்த்தார்கள்.
"நிறுத்துங்கள். எங்கள் காதுகளில் ரத்தம் வருவதுபோலிருக்கிறது." - என அந்த இளைஞன் கத்தினான்.
"உங்களுக்கெல்லாம் இரக்கமேயில்லையா? எனக்கு முடிந்தால் ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள்" - நடுங்கும் குரலுடன் நடுத்தர வயது பெண்மணி அந்த கதவைப் பார்த்து கத்தினாள்.
இது எதுவுமே நடக்காததுபோல் மீதியிருந்தோர் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தனர். இல்லை, எனக்குத் தான் பைத்தியமாக இருக்கவேண்டும். இந்த சிறையில் யார் உறங்க முடியும்? போர்வைக்குள்ளே பலர் இறந்திருக்கக்கூடும். மீதமுள்ளோர் சுரணை, பிரக்ஞை, வெறுப்பு என எதையும் உணரக்கூடிய, உணர்ந்தாலும் செயல்படக் கூடிய, நிலையில் இல்லை. நான் இங்கு வந்த இரண்டு மாதங்களில் இதைப் புரிந்து கொண்டேன். மெள்ள நகர்ந்து அடுத்த அறையின் கதவைத் திறந்து பார்த்தேன்.
நான்கு நடு வயதுக்காரர்கள். கைகளில் ஆளுக்கொரு வாத்தியக் கருவியுடன், அந்த அறையின் மூலையில் கூடியிருந்தனர். அவர்கள் தலைகள் தரையில் கிடந்த தாள்களின் மேல் குழுமியிருந்தது. கதவு திறந்தது கூட அவர்கள் கவனத்தை திசை திருப்பவில்லை.
"இங்கு ஒரு பெண் தண்ணீரில்லாமல் செத்துக்கொண்டிருக்கிறாள். இருந்த தண்ணீரெல்லாம் பனிக்கட்டிகளாய் மாறிவிட்டன. மரியாதைக்கு கூத்தடிக்காமலாவது இருக்கலாமில்லையா?"
மூவர் திரும்பிப் பார்த்தனர். நடுவில் இருந்தவர் இவனை நோக்கி காதுகளை மடக்கி "ஆலிவர், இவன் என்ன சொல்கிறான்?" என்றார்.
அந்தக் கூட்டத்திலேயே வயதானவரான ஆலிவர் அவன் முன்னே வந்தார். "நானும் இசைக்காமலிருந்தால் செத்து விடுவேன்" எனச் சொல்லி திரும்பவும் அறை மூலைக்குச் சென்று தன் குழுவுடன் இணைந்தார்.
எனக்கு குபுக்கென வியர்த்து விட்டது. கிடு கிடுவென அந்த பெண், குழந்தையைத் தாண்டி அடுத்த அறையின் வழியே என் இடத்திற்குச் சென்று போர்வைக்குள் இடுங்கிக் கொண்டேன். என முகத்தில் வியர்வை நிற்கவில்லை. ஆனாலும், என் தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
**
அடுத்த நாள் குளியளுக்காக நாங்கள் காத்துக்கொண்டுருந்தபோது மீண்டும் அந்த ஆலிவரைப் பார்த்தேன்.அவ்ரைப் பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டாலும், அவர் என் முதுகை துளையிடுவதுபோல் இருந்ததால் திரும்பினேன். என்னருகே வந்து நின்றார்.சோப்பு வாசனை மணக்க சிவந்த கைகளால் என்னைத் தொட்டார்.
"அந்த பெஞ்சுக்குப் போய் பேசுவோமா?" என்றார்.
"இந்த சிறைக்கு புதிதாக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இன்னமும் கண்ணீர் விட்டு அழுகிறீர்களே? "
"என் அப்பா கூறிய அதே வார்த்தையை நேற்று நீங்களும் கூறினீர்கள். என் பதட்டத்தை அது அதிகரித்துவிட்டது என நினைக்கிறேன்" - நிதானமாக கூறினேன்.
"இப்போது அவர் எங்கிருக்கிறார்?"
மெளனமானேன். எனக்குப் பேசத் தெரியும் என்பதே மறந்துவிட்டது.
"என் பெயர் ஆலிவர் மெஸ்ஸையன்"
மெஸ்ஸையன் என்ற பெயரைக்கேட்டதும் என் நாடித்துடிப்பு நின்றுவிட்டது. பிரெஞ்சு உலக இசை மேதையை இப்படி சந்திப்பேனென நினைக்கவேயில்லை. அண்மைக்காலங்களில் ஆலிவர் மெஸ்ஸையன் பெயர் அடிபடாத இசை நிகழ்ச்சிகளே இல்லை. இசையிலிருந்து எவ்வளவு விலகியிருந்தாலும், இவர் மேதமைத்தனத்தை உணராமலிருக்க முடியாது. திடீரென, என்னையும் அறியாமல் அழத் தொடங்கினேன்.
"உங்களை பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில் மகிழ்ச்சி" - தெளிவாகப் பேசியதாக என்னை ஏமாற்றிக்கொண்டேன். சில சமயம் நம் தாழ்வுமனப்பான்மையை மறைக்க இறுமாப்புடன் பேசுவதைப் போல பேசியிருப்பதாய் நினைத்தேன்.
"நேற்று இரவு நடந்தது ஏன் உங்களை இவ்வளவு பாதிக்கவேண்டும்? இன்று இருபது பேர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். எதுவும் நடக்காதது போல, நீங்களோ அழுக்கைச் சுத்தம் செய்ய குளிக்க வந்துள்ளீர்கள் " - என ஆலிவர் கேலித்தொனியுடன் கேட்டதும் எனக்குச் சட்டென கோபம் வந்தது.
பின்னர் அவரே சாந்தமானதுபோல் "நீங்கள் நினைப்பது புரிகிறது தோழரே. இம்சையும் வலியும் தோற்கும் இடத்தில் என்ன நடக்கும்? நீங்கள் வலியோடு அடுத்த கட்டத்தை யோசிக்கிறீர்கள். இங்குள்ள பலரோ சோர்வை தங்கள் இரண்டாம் இயல்பாக மாற்றி ஒவ்வொரு நிமிடம் கடப்பதை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்."
"நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை" - என் நெஞ்சில் நேரடியாக பாய்ச்சிய கத்தியெனத் தெரிந்தாலும், அவர் மூக்கை உடைப்பதற்காக கூறிய பதிலாகவே இது எனக்குத் தோன்றியது. இந்த சிறையில் இவ்வளவு தீர்க்கமாக யோசிக்க முடியுமா? உண்மையில் இரவு நடந்த செயலுக்கு என்ன காரணம் என யோசிக்க முடியவில்லை.
"ஐயா, சாவின் விளிம்பில் நிற்பவர்களை இசை மூலம் மகிழ்விக்க முடியுமென நினைக்கிறீர்களா? அவர்களுக்கு இதைக் கேட்க மனமிருக்குமா ? அல்லது உலக நடப்பைத் தெரிந்தும் தெரியாதவர் போல இருக்கும் மேற்தட்டு வாசியா நீங்கள்?" - கோர்வையாக தோன்றாவிட்டாலும், நேற்றிரவு என் நடத்தையின் காரணம் இதுவே எனக் கேட்டவுடன் தோன்றியது.
என் கேள்வியைக் கேட்காதது போல் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். "இன்றிரவு இசை நிகழ்ச்சி. குளிர் கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும்" - என தனக்குள் சொல்லிக்கொண்டார்.
என்னை ஆட்கொண்டது எதுவெனத் தெரியவில்லை. சடாரென ஆலிவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு சிறையிலிருந்த மருத்துவமனையை அடைந்தேன். கை கால்களை இழந்து, உலர்ந்து போல சருமத்துடன் கிழிந்த ஆடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள், வயிறு முதுகை ஒட்டியபடி பலரும் குறுகிக் கிடந்தனர். சாப்பிட்டு பல நாட்களான குழந்தைகள் அழக்கூட முடியாமல் உள் நுழைந்த இருவரையும் விட்டேற்றித்தனமாய் பார்த்தன.
"உங்கள் இசையால் இவர்களை காப்பாற்ற முடியுமா? ஒவ்வொரு நிமிடமும் பசி, வலி, நரகம் என்ற ஒலிகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. போர் எப்போது முடியுமென காத்திருப்பு ஒரு பக்கம், ஏன் இங்கே இருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இங்கேயே பிறந்து, வளரும் கூட்டம் ஒரு பக்கமென இது நரகமய்யா. இந்த மண்ணில் உள்ளது நரகம்.ஒன்று மட்டும் புரிகிறது. எல்லோரையும் கைவிட்ட தேவதூதர் வானத்தை நோக்கி கை நீட்டும்போதெல்லாம், ஆண்டவனிடம் சேதி சொல்ல என நினைத்தேன். இப்போது நிரந்தரமாக உங்களைக் கைவிடுகிறேன் என்ற உண்மையை உணர்த்துவதற்காகத்தான் எனப் புரிகிறது. இச்சந்தர்ப்பத்தில் இந்த குதூகலம் தேவையா? கை தட்டி மகிழ எங்களுக்கு சக்தி இல்லை ஐயா. அய்யோ! அவரிடம் இசையால் எங்களுக்காக மன்றாடிப்பாருங்கள். நம் பூரண சுதந்திரத்திற்காக அல்ல, இங்கு அழும் குழந்தைகளுக்கு நிம்மதியான ஒரு இரவைத் தருவதற்காக."
படபடவென பொரிந்து தள்ளிய பின்னர் வறண்ட அழுகை, சோர்வுடன் சேர்ந்து மயக்கம் வரக் கீழேவிழுந்தேன்.
**
சிறையின் மைதானம் முழுதும் பனியால் நிறைந்திருந்தது. கடுங்குளிரைப் பொருட்படுத்தாது ஐநூறு கைதிகளும், சிறை அலுவலகர்களும் கூடியிருந்தனர். கிழிந்த ஆடைகளுடன், கையில் வாத்தியக்கருவிகளுடன் நால்வரை சுற்றி எல்லோரும் காற்று கூட புக முடியாதபடி நெருக்கமாய் அமர்ந்திருந்தனர். இந்த நெருக்கத்தின் கதகதப்புக்காகவே பலரும் வந்திருந்தனர். முதல் வரிசையில் நான் உட்கார்ந்திருந்தேன். ஆலிவர் மெஸ்ஸையன் சம்பிரதாய வணக்கங்களுடன் இசையைத் தொடங்கவில்லை. தன் பியானோவை திறந்தவுடன் அவசரமாக இசைக்கத் தொடங்கினார். இதை எதிர்பார்க்காத மற்ற மூவரும் தங்கள் செல்லோ, கிளாரினெட் மற்றும் வயலினை தயார்ப்படுத்தினர்.
மிகக் குழப்பமான இசை. பாதி நேரம் கைதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்ன நடக்கிறது? எனக்கும் புரியவில்லை. தாளங்கள் காலத்தைப் பொருட்படுத்தாது கரடுமுரடான பாதையில் செல்லும் வண்டி போல புரண்டுக்கொண்டிருந்தது. நடுவே வந்த பறவையின் சத்தம் என் மனதை என்னமோ செய்தது. சக்கரத்தில் சிக்கிக்கொண்ட பறவை போல், இரைச்சலுடன் மிகக்கூராக ஒலித்தது. திடுமென நுழைந்த செல்லோ, சிறையின் நேரத்தை போல் மெதுவான ஊர்ந்தது. வயலின் அதன் எதிர் திசையில் பனி ஊளையில் சிக்கிய இலையைப் போல் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது. கேட்பவை எதுவுமே ஒன்றுக்கொன்று கோர்வையாக ஒலிக்கவில்லை. கூட்டத்தில் சலசலப்பு ஆரம்பித்தாலும், கலைஞர்களுக்கான மரியாதை கருதி பொறுமையுடன் உட்கார்ந்திருந்தனர்.
அடுத்தடுத்து வந்த பகுதிகளில் கிளாரினெட் இசை ஆத்மாவை துளைத்தது என்றே கூறவேண்டும். கரிய நிழல் படிந்த முகங்களில் அவரவர் கேட்ட இசையின் ஞாபகங்களின் நினைவு பிரகாசத்தைக் கொடுத்தது. அடிபட்ட பறவை தேறிக்கொண்டு வருவதைப் போன்ற உணர்வு. பனி ஊளையும் நின்றிருந்தது. இசைக் கலைஞர்களின் முன்னிருந்த விளக்குகள் முதலிரண்டு வரிசைகளிலிருந்தவர்களின் முகத்தில் எதிரொலித்தது. அவர்களுக்குப் பின்னர் எல்லாமே கருமையாக இருந்தது. மீண்டும் பியானோ, செல்லோ இசை நிதானமிழந்த தாளத்துடன் சோகமாக ஒலித்தது சோர்வைத்தந்தது. ஆங்காங்கே முணுமுணுப்பொலி கேட்டது.
மெஸ்ஸையன் முகத்தில் ஏககால தீவிரம். எனக்கோ படபடப்பாக இருந்தது. காலையில் நடந்ததை எண்ணும் போது பதட்டமும், குற்ற உணர்வும் மனதை அழுத்தியது. ஏன் அப்படி நடந்துகொண்டேனெனப் புரியவில்லை.கடைசிப் பகுதியும் வந்துவிட்டது. இதுவரை இருந்த குழப்பங்கள் தீர்வது போன்ற பிரமை. எல்லா வாத்தியங்களும் ஒன்றாக இசைக்கத் தொடங்கின. இதுவரை கட்டிய கோட்டையில் கரிய மேகங்கள் விலக, ஆங்காங்கே தனித்து இயங்கிய ஒலிகள் அனைத்தும் ஆதி பிரம்மமாய் ஒன்றாயின. பலரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். என் அருகே இருந்த காவலாளிகள் முகத்தில் தெளிவு ஏற்பட்டது.
காலமும் நேரமும் முடிவில்லாமல் விரிந்து கொண்டே போவது போலிருந்தது. கண்ணுக்குத் தெரியாத பலதும் என்னுள் ஒடுங்கியது போலத் தோன்றியது. பனியில் உறையும் சமயங்களில் ஏற்படும் அசைவற்றத் தன்மை போல் இப்போதும் ஏற்பட்டது. முடிவில்லாதது போல் தெரிந்த நேரம் திடுமென முடிந்தது போல இருந்தது. மெல்ல இறுக்கம் குறைந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது இசை காற்றோடு கரைந்திருந்தது.
தன் பியானோவை மூடி வைத்துவிட்டு, ஆலிவர் மெஸ்ஸையன் தன் நாற்காலியிலிருந்து பேசத் தொடங்கினார்.
"நண்பர்களே. நன்றி. இதுவரை இசையில் பேசாததை இப்போது பேசப்போவதில்லை. பேசவும் முடியாது.அதனால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.துரதிஷ்டவசமான சமயம் இது. சோர்வு, அவநம்பிக்கை சொற்கள் மட்டுமே நம் உதட்டில் இருப்பவை. இப்போதைக்கு இந்த பனியும் அதன் சத்தமும் மட்டுமே நம் துணை. இப்படிப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி தேவையா? சாதாரண எங்கள் நால்வரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. இசை அனுபவத்தை மகிழ்ச்சியான நிலையில் மட்டுமே உணர முடியும் என்பதை நம் காலம் மாற்விட்டது. எதை நம்பி இங்கு நாம் வாழ்வது? ஆயிரம் அடி வாங்கினால், பத்தாயிரம் மடங்கு மனது சோர்ந்து போகிறது. இந்த குளிரைத் தவிர நம்மை இணைப்பது எது என யோசித்து கடந்த எட்டு மாதங்களாய் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதியதை இங்கு கேட்டீர்கள். "
கழுத்தில் சுற்றியிருந்த துணியை மேலும் இறுக்கினார். பின்னால் இருந்த இசைக் கலைஞர்களைப் பார்த்தபடி தொடர்ந்தார்.
"நாங்கள் பயிற்சி செய்யும் போது ஆத்திரப்பட்டவர்களுக்கு எப்படி வார்த்தையால் பதில்சொல்வது எனத் தெரியாமல் தவித்தேன். இந்த இசையின் ஒவ்வொரு ஒலியும் நம் உயிரோட்டத்தை உருக்கிச் செய்திருக்கிறேன். நாம் யாருமே இல்லாமல் போனால் இந்த இசையின் என்னவாகும் என எனக்குத் தெரியாது. இந்த நிமிடம் நம் உறைந்த கைகளில் இருப்பதினால், அது நம்மை ஏமாற்றுவதற்குள் இதை முடிக்க வேண்டுமென வேகவேகமாக இசைக்கத் தொடங்கினேன். இதனாலேயே இந்த இசையை ’காலத்தின் முடிவிற்காக நால்வரின் இசை’ எனப் பெயரிட்டிருந்தேன். இதை நால்வர் மட்டும் எனச் சுருக்கியது ஒரு வசதிக்காக மட்டுமே. உண்மையில் இது கணக்கிடமுடியாத, எண்ணிலடங்கா மனிதத்துவத்தின் ஒவ்வொரு துளியிலிருந்து பெறப்பட்ட இசை. அதனாலேயே இந்த இசையை நேற்றிரவு முடிக்கும் போது, இதோ முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறாரே இவரால், நம்மை இணைக்கும் பாலம் எதுவெனப் புரிந்தது. அதனாலேயே நான் இன்று முதல் தெளிவு பெற்றிருக்கிறேன். "
"பைபிளின் வாசகமான - இக்கணம் முதல் நேரம் என்ற வஸ்துவே கிடையாது - என சொர்க்கத்தை நோக்கி பிரகடனப்படுத்திய நம் அழிவின் தூதர் வார்த்தையை தூக்கி எறிவோம். இதை மன தைரியமுடன் என்னால் கூற முடியும். ஏனென்றால், இந்த சிறையில் முதல் நாளிலிருந்து என்னைக் குழப்பிய கேள்விக்கு காலத்திலிருந்துதான் விடை கிடைத்தது. நீங்கள் இப்போது கேட்ட இசை மூலம் கிடைத்த பதில். இந்த இசை, சரித்திரத்தில் இடம் பெறத் தகுதியானதா என எனக்குத் தெரியாது. ஆனால் இது உணர்ச்சிபூர்வமான நிலையில் இருக்கும் ஒரு ஆன்மாவின் ஒலம் என்பதை மட்டும் எந்த காலத்திலும் நிச்சயமாகச் சொல்ல முடியும். நம்மை மட்டுமல்லாது, இசை, அண்டம், பூமி, நம் மனம் என அனைத்தையும் ஒன்றாக இணைப்பது உயிர்ப்பிடிப்பு என்ற வஸ்து மட்டுமே. நாம் இங்கிருப்பதற்கும் அதுவே காரணம். இசை உணர்த்தும் உயிர்த்துடிப்பே இந்த காலத்திற்கான பதில். நம்மை முழுமைப்படுத்துவதும் அதுவே. அதற்கு என் நன்றிகள்."
வானத்தைப் பிளப்பது போல கரகொலிகேட்டது. அது முடியும்வரை பனி ஊளையின் சத்தம் கேட்கவேயில்லை.
பிடித்திருந்தது கிரி. ஒரு சந்தேகம்.
// கையிலிருந்த சிலுவை வெளியே தெரிய, சடக்கென அது உள்ளே இழுக்கப்பட்டது.//
யூதர்கள் சிலுவை? ஜிப்சிகளும் இதை உபயோகிக்க மாட்டார்களே? நான் சிறை என்பதை கதை ஒரு concentration காம்பில் நடப்பதாக புரிந்து கொண்டேன், அது தான் தவறோ?
Olivier Messiaen வேறு யூதர் இல்லை போலுள்ளது.
Ajay
Posted by: Ajay | 02/14/2011 at 05:06 AM