சொல்வனத்தில் வெளியான இக்கட்டுரையில் திருத்தங்கள் - Ode to Joy அமைத்தது பீத்தோவன், பீத்தோவனின் ஐந்தாம் பியானோ கன்சர்ட்டோ (சிம்பனி அல்ல). நண்பர்கள் யஷ்வந்த்குமார் மற்றும் ஜெயகுமார் ஸ்ரீனிவாசனுக்கும் நன்றிகள்.
*
ஜூலை,1936 - காடோலினா நாட்டுத் தேர்தல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயம் ஐரோப்பாவின் கம்பளிப்பூச்சி என வர்ணிக்கப்பட்ட ஹிட்லரின் மீசை துடித்துக்கொண்டிருந்தது. அவர் தங்கியிருந்த பங்களாவில் நல்லிரவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியிருந்தன. தனக்கு ஒரு தட்டில் பச்சை காய்கறிகளும், தன் உயிரினும் மேலான நாய்க்கு இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகளும் பரிமாறப்பட்டன. துரிதமாகச் சாப்பிட்டு முடித்தாயிற்று. உறங்கப்போவதற்கு முன் குறைந்தது ஒரு மணிநேரமாவது இசை கேட்காமல் ஹிட்லரால் தூங்க முடியாது. தன் சேகரிப்பிலிருந்த ரிச்சர்ட் வாக்னரின் இசையை கிராமஃபோனில் சுழலவிட்டபடி சிந்தனையில் ஆழ்ந்தார்.
ஆட்டுமந்தைகளென சொல்வதைக் கேட்கும் ஜெர்மனியின் படைகள், தினமும் குவிந்து வரும் ரசிகைகளின் கடிதங்கள், மனதுக்கு இனிமையான இசை - இதைவிட சிந்தனைக்கு என்ன தூண்டுதல் அமைய வேண்டும்?
சில மாதங்களாகவே ஐரோப்பா முழுவதும் பதற்ற நிலை நீடித்து வந்தது. அகசாய சூரர்களைக் கொண்ட ஜெர்மன் மற்றும் இத்தாலியப்படைகள் புது சக்தியாக மீண்டெழுந்ததே இதற்குக் காரணம். பட்டர்பிளை எஃபக்ட் போல் ஒரு சரித்திர நிகழ்வு காரண காரியமில்லாத இடங்களில் எரிமலையாக வெடிக்கும் அபாயத்தை இருபதாம் நூற்றாண்டின் முதல் போர் கற்றுக்கொடுத்திருந்தது. அண்டைநாடுகள் மேல் நம்பிக்கை இல்லாமல் அதீத முன்னெச்சரிக்கைகளும், குழப்பங்களும் நிறைந்த காலகட்டம். அதன் வீச்சை முழுவதும் பயன்படுத்த ஹிட்லர் முடிவெடுத்திருந்தார். பல ராஜ்ய அரசாங்கங்கள் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தன. மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் அரசில் ராணுவத்தின் பங்கு குறித்து மக்களுக்குக் கொஞ்சம் தெளிவு பிறந்தாலும், முதல் உலகப்போர் கற்றுக்கொடுத்த பாடங்களையும் அவர்கள் மறக்கவில்லை.
ஹிட்லரின் சிந்தனை முழுவதும் ஐரோப்பாவை ஆக்கிரமிப்பதில் முனைந்திருந்தது. முதல் உலகப்போரில் ஜெர்மனியை நிர்கதியாக்கிய நாடுகளுக்குத் தன் கூரிய கரங்களால் பாசக்கரங்களை நீட்ட வேண்டிய நேரமல்லவா? ஜெர்மனியின் புஜபல பராக்கிரமத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டிய சமயம். எல்லைகளை விரித்து அண்டை நாடுகளுடன் கூட்டணி இல்லை சரண் என அன்புக்கட்டளை இடவேண்டும் எனப் பலவாறு ஹிட்லர் வியூகம் வகுத்துக்கொண்டிருந்தார்.
`பெனிட்டோ முசோலினி இத்தாலியில் ஒரு மாபெரும் சக்தியாக மாறி வருவதும் நமக்குத் தேவையான ஒன்றுதான். சமயத்தில் கைகோர்த்துக்கொள்ளலாம். அதேசமயம், சக்தி இருந்தும் யுத்தத்தில் பங்கு பெற முடியாது என அறிவிக்கும் கோழை நாடுகளை ஒரு கை பார்க்கவேண்டும். வழக்கமாகக் கையாளும் வன்முறை இம்முறை பயன்படாது. சூழ்ச்சியால் மட்டுமே தன் பக்கம் பலத்தைச் சேர்க்க முடியும்,’என ஹிட்லர் முடிவுக்கு வந்தார். தன் சிந்தனைகளுக்கு உரமாக வாக்னரின் இசையும் சொற்பொழிவும் இருக்குமென அவருக்குத் தெரியும். கை தன்னிச்சையாக வாக்னரின் `ஜெர்மன் இனத்தைத் தேடி’ என்ற புத்தகத்தை நாடியது.
ஹிட்லரின் சிந்தனைகள் ஜூலை 16ஆம் தேதி செயலுருவம் கொண்டன. அன்று பாப்லோ கஸல்ஸ் பார்சிலோனாவின் இசைக்கூடத்தில் பீத்தாவனின் Ode to Joy இசையை வாசித்துக்கொண்டிருந்தார். அரங்கத்தில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம். இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடங்கும்போது காடலோனியா அமைச்சரிடமிருந்து கசல்ஸுக்கு செய்தி வந்தது. பார்சிலோனாவில் ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்த பிரான்கோ எனும் சர்வாதிகாரி திட்டமிட்டுள்ளதாகவும் அவன் முதல் இலக்காக கலைக்கூடங்களை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளதாகவும் அச்செய்தி அச்சுறுத்தியது. ஹிட்லர் மற்றும் முசோலினி பிரான்கோவுக்கு பணம் மற்றும் ஆயுதம் தந்து உதவியதோடு மட்டுமல்லாது அவர்களது படைகளையும் பார்சிலோனா நகருக்கு ஊருடுவ அனுப்பி வைத்திருந்தனர். சிறிதும் கலங்காத கசல்ஸ் முழுக் கச்சேரியையும் முடித்த பின்னரே அரங்கத்தை விட்டு வெளியேறினார். கடற்கரை அருகே அவர் கட்டியிருந்த பங்களாவையும் ராணுவம் ஆக்கிரமித்திருந்தது. இதனால் கசல்ஸுக்கு பார்சிலோனாவில் போக்கிடம் இல்லாமல் ஆனது. இசையின் அறியமுடியாத ஆழங்களுக்குள் பயணிக்க நினைத்த கனவு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்தது. அதேசமயம் இசைக்காகத் தன் நாட்டை விட்டு வெளியேற அவர் தயாராக இல்லை. ஆனால் முக்கியமான நண்பர்களை ஊருக்கு வெளியே சிறிது காலம் தங்கியிருக்கச் சொல்லி ராஜா உத்தரவிட்டிருந்தார். ராஜாவின் வற்புறுத்தலின் பேரில் கசல்ஸ் இதற்குச் சம்மதித்தார்.
ஸ்பெயினை விட்டு வெளியே எங்காவது செல்லவேண்டும். ஆனால் எங்கு போவது?
தப்பிக்க இருந்த சாத்தியங்கள் என்னென்ன என அவர் யோசித்தார். ரஷ்யாவில் போல்ஷ்விக் அரசின் கட்டளைக்கு ஆட்டுமந்தைகளாக சில இசைக்கலைஞர்கள் மாறியிருந்த சமயம். அவர்களில் ஒருவராகக் கரைந்து மறையலாம். ஜெர்மனியில் ஹிட்லரின் இசை ரசனை எல்லோருக்கும் தெரிந்ததே. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளைத் தன் சொந்த நூலகத்தில் வைத்திருந்ததோடு மட்டுமல்லாமல் தினமும் பல மணிநேரங்கள் இசையிலேயே திளைக்கத் தெரிந்த சர்வாதிகாரி. அவர் அவையில் ஆஸ்தான இசைக்கலைஞராக இணைந்து வாழ்நாள் விருதாக நாஜி மெடல் வாங்கலாம். கலை ரசனையே இல்லாவிட்டாலும் ஐரோப்பாவின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்காக ஏனோ தானோவென கலைக்கழகங்களை ஏற்படுத்தியிருந்த முசோலினியின் சேனையுடன் ஒதுங்கலாம். ஐரோப்பாவில் ஏற்கனவே புகழ் பெற்ற இசைக்கலைஞராக இருந்த கசல்ஸுக்கு இப்பாதைகள் அனைத்தும் ரத்தினக்கம்பளம் விரித்துக் காத்துக்கிடந்தன. ஆனால் சர்வாதிகார ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டுக்குப் போகக்கூடாது எனத் தீர்மானித்திருந்ததால் இப்படிப்பட்ட இடங்களுக்குப் போக கசல்ஸின் மனம் ஒப்பவில்லை.
கசல்ஸின் கனவோ வேறொன்றாக இருந்தது. தேவை: எந்தொரு குறுக்கீடுமில்லாத ஒரு இசையரங்கம். யுத்தச்சத்தம் உட்புகாத அரங்கத்தில் பாக்கின் செல்லோ இசையைப் பதிவு செய்ய ஆசைப்பட்டார். பிரான்கோ ஆட்சியில் ஸ்பெயினின் எந்த மூலையிலும் இசைக்க மாட்டேனென சபதமிட்டுள்ளதால் தன் மண்ணில் இதை பதிவு செய்ய முடியாது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஓரளவு நிலையான அரசாட்சி நடந்து கொண்டிருந்த இங்கிலாந்தை அவர் தேர்ந்தெடுத்தார்.
துளிக்கின்ற வான் இந்நிலம்; அதில் பாக்கின் இசை ஒரு பிரவாகமென உணர்ந்த கசல்ஸ் பாக்கின் செல்லோ பகுதிகளைப் பதிவு செய்து பிரபலப்படுத்தியாக வேண்டுமென லண்டனுக்குப் புறப்பட்டார். அங்கிருந்த EMI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
ஆனால், பாக்கின் செல்லோ பகுதிகளை ஏன் பதிவு செய்யவேண்டும்? கசல்ஸ் அமைத்த பல பாடல்களையே இன்னும் பதிவு செய்யாத நேரத்தில் பாக்கின் இசைக்கு இவ்வளவு முக்கியத்துவம் எதற்கு?
பாக் இயற்றிய ஆறு செல்லோ தொகுப்புகளும் (Cello Suites என்பது இத்தொகுப்புப் பெயர்) நடன இசை வகையைச் சார்ந்தவை. இசையை மையமாகக் கொண்ட படங்களில் பிரபலமாக இருந்த பால் ரூம் நடனத்துக்கு நெருக்கனமானவை. கசல்ஸ் அறிமுகம் செய்யும் வரை இவை மேடையில் இசைக்கப்படாமல், சில தனிப்பட்ட இசைக்கலைஞர்களின் ஞாபகத்தில் தேங்கி இருந்தன. மேலும் முழு இசை குறிப்புகளும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக யாருக்கும் கிடைக்கவில்லை. ஒருசிலர் இசைத்த துணுக்குகள் பிரம்ம ரகஸியம் போல பாதுகாக்கப்பட்டன. இந்த இசை கேட்டவரை உன்னதமாக இருந்தது. இதனால் பல காலமாக இசை விமர்சகர்களுக்கு இத்தொகுப்பு பெரும் வியப்பாக இருந்தது. தன் இசைத்தொகுப்பை விட இந்த வைரச் சுரங்கத்தை வெளிக்கொண்டு வரவேண்டுமென்பது கசல்ஸின் கனவு.
சில பிரத்யேக இசைக்கருவிகளின் தனித்துவத்தை வெளிப்படுத்த பாக்கின் காலத்தில் இப்படிப்பட்ட தொகுதிகளைக் வெளியிடுவார்கள். உதாரணத்துக்கு பீத்தோவனின் கன்சர்ட்டோ. கூட்ஸ் வண்டி போல் நிதானமாக இருந்த பாரம்பரிய இசையை பீத்தாவனின் ஐந்தாம் பியானோ கன்சர்ட்டோ ஜெட் வேகத்துக்கு அழைத்துச் சென்றது (கர்நாடக சங்கீதத்தின் பாடல் வேகத்தைக் கூட்டியதில் ஜி.என்.பி பாணிக்கு இருந்த பங்கைப் போன்றது.) முக்கியமாக பியானோவில் இசைக்கக் கடுமையான விசை சேர்க்கைகளும், அதிவேக ‘கிராஸ் ஹேண்ட்’ அமைப்புகளும் இச்சிம்பனியில் உள்ளன. அதனாலேயே இது பியானோவின் முழு சாத்தியங்களைக் கோரும் படைப்பாக அமைகிறது. மேலும் அக்காலத்தில் இருந்த பிரபலமான பியானோ கலைஞர்களை விட பீத்தோவன் திறமைசாலி என்பதைப் புரியவைக்க இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கர்நாடக சங்கீத மேடைக் கச்சேரி பாணியை உருவாக்கியது போல், பாக் காலத்துக்கு முன் மற்றும் பின் என மேற்கிசை அடைந்த வடிவமாற்றத்தைப் பிரிக்கலாம். பாக் வயலன்செல்லோ என்ற வாத்தியத்துக்கு அமைத்த இச்செல்லோ தொகுப்பை கசல்ஸ் செல்லோவில் ஏற்றிவிட்டு அழகுபார்த்தார். அக்காலத்தில் பெரும்பான்மையான வழிபாட்டுப் பாடல்கள், நாடகம் மற்றும் நடனம் போன்றவற்றுக்கு மட்டுமே இசை பின்னணியாக இருந்தது. மெல்ல நாடகம் மற்றும் நாட்டியத்துக்காக மட்டுமே இசை என்பது மாறி இசையை மட்டும் மேடையில் தனியாக இசைக்க முடியும் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு செல்லோ தொகுப்பின் பாதிப்பினால் பிற்காலத்தில் இசையின் வரைபடம் மாறியது. இக்கட்டமைப்பைக் கொண்டே தனித்துவ இசை வகைகளாக மேற்கிசையின் சிம்பனி மற்றும் சொனாட்டா வகைகள் உருவாயின என்பதும் ஒரு காரணம். செல்லோ தொகுதியின் அமைப்பைத் தெரிந்து கொண்டால் இம்மாற்றத்தை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டு ஜெர்மனியில் பிரபலமாக இருந்த நடன இசை வகையை சேர்ந்தது இத்தொகுப்பு. இத்தொகுப்பின் ஒவ்வொரு பாடலும் Allemande, Courante, Sarabande, Gigue என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நான்கும் பிரபலமான நடன வகைகளாகும். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட நடன இசை வகைகளென்பதால் வெவ்வேறு வேகத்தில் அமைந்திருக்கும். இவற்றை ஒன்றாக இணைக்க Prelude எனும் முன்னுரை இசை உள்ளது. ஒவ்வொரு தொகுதியின் கருவை இம்முன்னுரைக்குள் பாக் ஒளித்துவைத்துள்ளார். அடுத்தப் பகுதியான Allemande பால் ரூம் நடனத்தைப் போல் மிதமான வேகத்தில் அமைந்த நடன இசை. மூன்றாவது பகுதியான Courante டாப் டான்ஸ் வகையைச் சார்ந்த வேகமான இசை. ஒவ்வொரு செல்லோ பகுதியில் வரும் Sarabande தொகுப்பின் ஆன்மா போன்றது. எடுத்துக்கொண்ட கரு இப்பகுதியில் முழுவதாக விரிவடைகிறது. செறிவான உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இப்பகுதி மிதமான வேகத்தில் அமைந்திருக்கும். அதே சமயம் மிக நீளமான பகுதியும் இதுதான். அடுத்தப் பகுதியான Minuet கால்விரல் நுனியில் துள்ளி குதித்தோடும் பாலே நடனம் போன்ற நடனத்துக்கான இசையாகும். அதிவேக ரயில் போல வேகத்துடன் அமைந்தாலும் சுருக்கமாக முடிந்துவிடும். அடுத்த நாளென்று ஒன்றில்லையோ என நினைக்குமளவு கடைசிப் பகுதியான Gigue மற்ற பகுதிகளைவிட அதிவேகத்தில் முடிவில்லாமல் நீண்டுகொண்டேயிருக்கும்.
லண்டனில் பாக்கின் இரண்டு மற்றும் மூன்றாவது செல்லோ இசையை பதிவு செய்யும்போது மேட்ரிடில் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிரான்கோ தாக்குதலைத் தாங்க முடியாமல் ஸ்பானிய அரசு தவித்தது. உள்நாட்டுக் கலவரத்தில் பலத்த இழப்பை அடைந்த இங்கிலாந்தும் ஸ்பானிய அரசுக்கு அளித்து வந்த படைகளையும் ஆயுதங்களையும் நிறுத்தியது. லண்டனில் தஞ்சம் புகுந்திருந்த கசல்ஸை இச்செய்தி மேலும் கலவரமூட்டியது. `பிரான்கோவிடம் படைபலம், ஆயுதபலத்தைத் தாண்டி மனோதைரியம் இருக்கிறது. இதனாலேயே அவனுடைய வெறித்தனமானத் தாக்குதலைத் தொடர பாஸிஸ்ட் அமைப்புகளான ஜெர்மனி மற்றும் இத்தாலி உதவுகின்றன. இச்சக்திகளை முடக்கவேண்டிய இச்சமயத்தில் இங்கிலாந்து பின்வாங்குவது வருத்தத்துக்குரிய செயல்.’ என ஸ்பானிய பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். வீராவேசத்துடன் மீதமிருந்த மூன்று செல்லோ பகுதிகளையும் பதிவு செய்யத் தொடங்கினார். ஒரு இசைக்கலைஞனால் இதைத் தவிர வேறென்ன செய்துவிடமுடியும்?
பிரான்கோ வெளியேறி காடலோனியாவில் அமைதி திரும்பும்வரை திரும்ப மாட்டேனென சபதம் எடுத்திருந்த கசஸுக்கு அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்தினால் சோதனைக்காலம் நீண்டுகொண்டேபோனது. பார்சிலோனா, காடலோனியா பகுதிகளில் சர்வாதிகார ஆட்சியால் எங்கெங்கும் பஞ்சம், பட்டினிச்சாவுகள். ஹிட்லரின் ராணுவம் பார்சிலோனா முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அவ்வூரிலிருந்து வெளியேறிய ஆறு லட்சம் மக்கள் போக்கிடம் இல்லாமல் தவித்தனர். எல்லா ஐரோப்பிய நாடுகளும் தங்களைக் காத்துக்கொள்ளும் பணியில் இருந்ததால் இதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
லண்டனில் செல்லோ பகுதிகளைப் பதிவு செய்தபோது போரில் தன் நாடு கொஞ்சம் கொஞ்சமாகத் தோல்வியில் மூழ்கி வருகிறது என்ற செய்தி கசல்ஸை உலுக்கியது. தொலைந்து போன பல்லாயிரக்கணக்கான காடலோனிய மக்களின் அடையாளத்தைத் தன் இசையில் இட்டு நிரப்பினார். இசை உலகினுள் புரட்சிகரமாக நுழைந்த அவருக்கு நாட்டுப்பற்று புதுப்புரட்சியைக் கோரியது. மிகுந்த மன உளைச்சலுக்கான கசல்ஸ் பாரீஸில் உள்ள தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்றார். அங்கு சென்றபோது, காடலோனியா அரசு முழுவதும் சரணடைந்துவிட்ட செய்தி கேட்டு தனக்குள்ளே உடைந்து போனார். இரண்டு வாரங்கள் அறைக்குள் தனிமையில் முடங்கினார். பலவித எண்ணங்கள் அவரை அலைகழித்தன. நாட்டுக்குத் திரும்பினால் தன் மக்களுடன் விதியை பங்குபோட்டுக்கொள்ளலாம். ஆனால் தன் வாழ்விலிருந்து இசை வெளியேறிவிடும். இது வாயைத் தைத்த பிறகு பாடச்சொல்வற்கு ஒப்பாகும். அதனால், ஊருக்குத் திரும்பாமல் ஐரோப்பா முதல் கிரேக்கம், எகிப்து போன்ற பல நாடுகளுக்கு பயணம் செய்து பிரான்கோ ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆதரவு தரும்படி கோரினார். எல்லா இடங்களிலும் போர் அபாயம் இருந்ததால் அவர் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை.
மனம் துவண்ட கசல்ஸ் லண்டனுக்குத் திரும்பப் பயணம் செய்தார். பாக்கின் எல்லா செல்லோ தொகுதிகளையும் வெளியிட கடைசிகட்ட நடவடிக்கைகளை EMI நிறுவனம் செய்துகொண்டிருந்தது. வெளியான உடனே பெரிய அளவில் தன் பக்கம் கவனம் திரும்பும். அது காடலோனியாவுக்கு ஆதரவு திரட்ட உபயோகமாக இருக்குமென நினைத்தார். வாழ்வில் அனைத்தையும் இழந்து கடைசியாக எஞ்சியிருந்த சிறு நம்பிக்கையுடன் இசையைக் கூர்ந்து மெருகேற்றினார்.
ஒவ்வொரு முறையும் தன் பகடைக்காய்களே ஜெயிக்கும் என நினைக்க கசல்ஸ் சகுனி அல்லவே! அவர் நினைத்ததுக்கு மாறாக அம்மாதம் ஹிட்லர் படைகள் போலந்துக்குள் நுழைந்தன. கட்டிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளையை விடுவித்தது போல் ஐரோப்பா முழுவதும் இரண்டாம் உலகப்போர் அக்கணத்தில் தொடங்கியது.
அன்புள்ள கிரி,
வாக்னர் ஒரு இனவாதி என்றும் அவர் படைப்புகளில் அது வெளிப்பட்டுள்ளது என்றும் படித்துள்ளேன். இப்போது நீங்களும், ஹிட்லர் அவர் படைப்புகளை விரும்பினார் என்று கூறி உள்ளீர்கள். அவர் ஒரு இனவாத உணர்வு கொண்டவரா, அல்லது ஹிட்லரின் விருப்பம் முற்றிலும் கலை சார்ந்ததா. அவர் இசை எதுவும் நான் கேட்டதில்லை, அதனால் தான்.
அஜய்
Posted by: Ajay | 02/09/2011 at 03:46 AM
அன்புள்ள அஜய்,
வருகைக்கு நன்றி. நான் வாக்னரின் இசையில் ஒன்றேஒன்று தான் கேட்டிருக்கிறேன்.அதனால் இசையில் இனவாதம் வெளிப்பட்டதா என தெரியவில்லை.
நான் படித்தவரை அவரது இசையில், ஓபராவில் இனவாதம் அவ்வளவாக வெளிப்படுவதில்லையாம். வாக்னர் தேசியவாதத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் தான் யூதர்கள் பற்றியும், ஜெர்மன் தேசியவாத மீட்புறுவாக்கம், ஆர்யன் என்பவன் யார்? எனப் பல கோணங்களில் இனவாதத்தைப் பற்றி எழுதியுள்ளார். ஒரு வகையில் நாஜிக்களின் தத்துவத்திற்கு வாக்னரின் எழுத்து அடித்தளமாக அமைந்தது என்பது உண்மைதான். அவரது இசையை பல கான்சண்ட்ரேஷன் கேம்ப்புகளில் ஒலிக்கவிடுவதும் அந்த வெறுப்பை வெளிப்படுத்தவே.இதனாலேயே இஸ்ரேலில் இன்றும் வாக்னரின் இசை நிகழ்ச்சி நடத்த முடியாது. அவரது இசையில் அது வெளிப்படவில்லை என்றாலும், வாக்னரின் புத்தகங்களை காரணம் காட்டி இசையையும் ஒதுக்குகிறார்கள். டானியல் போரம்பாய்ம், சுபின் மேத்தா போன்றோர் அப்போக்கை மாற்றி வருகிறார்கள்.
ஹிட்லரின் விருப்பம் கலை சார்ந்ததாகவே இருந்தது பல விமர்சகர்கள் கருதுகிறார்கள். வாக்னர் தவிர பல யூத இசைக் கலைஞர்களின் இசையும் அவருக்கு விருப்பமான ஒன்றாக இருந்திருக்கிறது. அவரிடம் இசை தொகுப்புகள் பல லட்சம் இருந்தனவாம்.அர்னால்ட் ஷோன்பர்க்கின் Rites of Spring அரங்கேற்றத்தில் அவர் பார்வையாளராக ஆரவாரம் செய்தார் என்பது அவரது கலை ஈடுபாட்டுக்கு சான்றாக இருக்கு. ஆனாலும், ஜெர்மன் தேசியவாதம் என்பதை கதே, நீட்ஷே உட்பட பலர் கோடிட்டு காட்டினாலும், இவர்களைக் கொண்டு தேசிய உணர்வை ஒருங்கிணைத்ததில் ஹிட்லருக்கு வாக்னரின் எழுத்துக்கள் உபயோகமாக இருந்திருக்கலாம் என விமர்சகர்கள் கருதுகிறார்கள். Reference - Modris Eksteins 'Rites of Spring', Alex Ross 'Rest is Noise'
நன்றி.
Posted by: ரா.கிரிதரன் | 02/09/2011 at 10:30 PM