பா.ராகவன் (சித்தார்த் ராமானுஜன் என்ற பெயரில்) எழுதிய `யானி -ஒரு கனவின் கதை` படித்தேன். நான் படித்த பா.ராகவனின் புத்தகங்களில் இந்த (அ)புனைவு என்னை மிகவும் ஏமாற்றியது. காரணத்தைக் கடைசியில் விளக்குகிறேன்.
மூன்று வருடங்களுக்கு முன் கென்னிஜி , யானி இருவரின் இசையை முதல் முறை கேட்டேன். வழுக்கும் சாக்ஸபோன் இசை ஈர்த்த அளவுக்கு யானியின் நவயுக இசை என்னை வசியம் செய்யவில்லை. ஜாஸின் இயல்பான அமைப்பில் சர்க்கரையில் அமிழ்ந்த பிரதமனாக சாக்ஸபோன் ஒலித்ததில் டிரம்ஸ் வயலின் பல்லிசை அவ்வளவாக எடுபடவில்லை என நினைக்கிறேன். ஒரு கனவின் கதை படித்தபிறகு மறுபடியும் யானியின் சில இசைத் தொகுப்புகளைக் கேட்டுப்பார்த்தேன். எதுவும் மாறவில்லை.
யானியின் இசை நவீன-செவ்வியல் பாணி இசையாக சாதனை படைத்தது.முக்கியமாக, மோசார்ட்,பீத்தாவன் போன்றோரின் இசை வடிவங்களான கான்சர்ட்டோ, சிம்பொனி போன்ற அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு எலெக்ட்ரிக் வாத்தியக்கருவிகளால் வளர்த்தெடுக்கும் பாணி. கால்செண்டர் இணைப்புக்காக காத்திருக்கும்போது நம் துடிக்கும் நரம்பை சாந்தப்படுத்த, லிஃப்ட், விமானம் போன்ற பல இடங்களில் இதை நாம் கேட்டிருக்கலாம் .இவ்வகை இசை சிம்பொனி போல் தெளிவான இலக்கணத்தோடு இருக்காது. இது இயற்கை ஒலிகள், பிற நாகரிக இசை என கலந்துகட்டிய இசை வடிவம். இப்பாடல்களில் நிலத்தடி நீர் போல் கிளாஸிகள் இசை அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும். இதனால் ஒரு பாப் இசைக்கும், கச்சிதமான கிளாஸிக்குகளுக்கும் இடைப்பட்ட வடிவமாக இருக்கும். சரியான கலவையில் அமைந்தால் மட்டுமே இவ்வகை இசை வெற்றியடையும்.
பட்டர்பிளை நடனம் இசை -
அக்ரோபொலிஸில் நடந்த யானியின் அரங்கேற்றத்தை மையமாக கொண்டது யானி - ஒரு கனவின் கதை.
எந்த ஒரு முதலீடும் இல்லாமல் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த முடியுமா? டிசம்பர் சீசனில் சென்னையின் நவீன இசை அரங்கில் அதிகாலை ஸ்லாட் கிடைக்கக்கூடும். ஆனால் தாஜ் மஹல், சீனாவின் Forbidden City, அக்ரோபொலிஸ் போன்ற புராதனமான கட்டிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது சாதாரண காரியமல்ல. எல்லோருக்கும் சவுகரியமான நேரம் கிடைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புதல் தந்தாலும் மக்கள் கூட்டம் வரவேண்டும். அதுவும் பிரபலமில்லாத கலைஞன் என்றால் கஷ்டம். கூடுதலாக தம்படி கூட இல்லையென்றால் மேற்சொன்ன எதுவுமே நடக்காது. கனவு மட்டுமே காண முடியும். பகல் கனவு.
அக்ரோபொலிஸில் அரங்கேற்றம் என்பது யானியைத் தவிர யாருக்குமே தோன்றாத ஒன்று. கிரேக்க மக்களுக்கு செவ்வியல் இசை பழக்கம் உண்டு. ஆனாலும் நவீன இசை பாணியைப் பரிசோதனை செய்து பார்க்க அது சரியான களமாக இருக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் யானிக்கு அக்கனவு சாத்தியம் என்றே தோன்றியது. ஒரு கார் காரேஜில் தன் இசையை மெருகேற்றிக் கொண்டிருந்தாலும், அவர் கனவெல்லாம் இப்பிரம்மாண்ட நிகழ்வை நடத்திக்காட்டுவதிலேயே இருந்தது.
அதற்காக இக்கிரேக்க மாவீரன் மேற்கொண்ட போராட்டங்களே இக்கதை.
இருபது வயதுக்குள் கிரீஸில் தேசிய நீச்சல் சாம்பியனானார் யானி. ஆனால் தொடர்ந்து நீச்சலில் அவர் ஆர்வம் நிலைக்கவில்லை. அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பியானோ இசைக்கத் தொடங்கினார். ஒரு சமயம் இசையைத் தாண்டி தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார். காதல் கசந்து விரக்தியில் முடிந்த போது இசை இவரை மீட்டது. புது காதலைத் தந்தது. புயல்போல் தீவிரமாகக் காதலித்தார்.மீண்டும் காதல் தாரைவார்த்து இசைக்குத் தத்துத்தந்தது. இசையை உடும்பெனப் பிடித்துக்கொண்டார். இதுதான் யானி. தீவிரம், ஆழம், ஒருமுகத்தின் மறு அவதாரம்.ஆனால் பலவற்றில் வெற்றியின் உச்சம் போன பிறகு ஆர்வம் தணிந்து போவதை அவர் பெற்றோர் கவலையோடு பார்த்தார்கள்.
அமெரிக்காவில் Chameleon என்ற குழுவோடு இணைந்த பின்னர் யானிக்கு புகழோடு பணமும் வந்தது. ஒரு பியானோ கலைஞனாக அமெரிக்க முழுவதும் சுற்றினார். காதலித்தார்.போதைப் பழக்கத்தின் தீவிரம் இசையை மூழ்கடிக்குமுன் விழித்துக்கொண்டார். பியானோ இசைக் கலைஞராக அமெரிக்காவில் கொஞ்சம் புகழ் பெற்றிருந்தாலும் போதுமான பணத்தை அது கொடுக்கவில்லை. இசையை பணத்தேவைவெல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் இசையின் ஆழத்துள் நுழைந்து களித்தார்.
தனக்கு இசை மட்டும் போதும். ஆனால் அதுவல்ல லட்சியம். தனக்குப் பிடித்த இசை மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பதே லட்சியம். இசையின் தீவிரத்தில் மீண்டும் மீண்டும் தன்னையே தேடிய யானிக்கு இசையின் உச்சத்தை உலகுகுக்கு காட்டவேண்டியிருந்தது. அதுக்காக ஒரு ஆல்பத்துக்கான இசையை உருவாக்கினார். அதை வெளியிடத் தேவையான பணம் இல்லாமல் திண்டாடினார்.
அந்நேரத்தில் லிண்டாவின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அமெரிக்கத் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தாலும் இரு இசை ரசிகையாகவே யானிக்கு லிண்டா அறிமுகமானார். மெல்ல நட்பு காதலின் எல்லையைத் தொட்ட போது, யானியின் மற்றொரு காதலைப் பற்றி லிண்டா முழுவதாகப் புரிந்துகொண்டுவிட்டார். தன் ஆல்பம் காதலைவிட உயர்ந்ததல்ல என யானி நினைத்தாலும் அவர் வெற்றிபெறவேண்டுமென லிண்டா மனதார விரும்பினார்.
பல இடங்களில் அலைந்து அக்ரோபொலிஸில் ஏற்பாடுகளைச் செய்தது லிண்டா. அதுவரை கவலைப்படாமல் தன் இசையை மெருகேற்றிக்கொண்டிருந்த யானிக்கு லிண்டா செய்து முடித்த காரியங்கள் பிரமிப்பேற்படுத்தின. பணம், சரிகட்ட வேண்டிய ஆக்ரோபொலிஸ் அதிகாரிகள் என சகலமும் தயார். அதற்காக லிண்டா சந்தித்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
யானி இசையால் இக்கஷ்டங்களெல்லாம் நீரில் நிலா பிம்பம் போலச் சிதறிப்போனது. இப்படிப்பட்ட இசை நிகழ்ச்சி கிரீஸில் நடந்ததேயில்லையென எல்லோரும் பேசிக்கொண்டனர். யானியின் ஆக்ரோபொலிஸ் ஆல்பம் உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்தது. யானிக்கு வற்றாத நதியாக பணம் கொட்டத் தொடங்கியது. அவரது நீண்ட சிலையலங்காரமும், கம்பீரமான மீசையும் ஒரு புது அடையாளமாகவே மாறியது.இசை உலகின் உண்மையான `முடிசூடா` மீசை வைத்த சக்கரவர்த்தியாக யானி உலகப் புகழ் பெற்றார்.
இவ்வெற்றிக்கு பின் எல்லா இசைக்குழுவைப் போல யானியின் கவனமும் சிதறிவிடும் எனப் பலர் நினைத்தனர். சிலர் இது நடக்கவேண்டுமென ஆத்மார்த்தமாக நம்பினார்கள். யானியின் இயல்பும் அதற்கேற்றார்போல இருந்ததால் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் கொஞ்சம் பயம் இருந்தது. லிண்டாவுக்கும் அந்த பயம் இருந்தது.ஆனால், இசையில் ஆழ ஆழ முத்தெடுத்தாலும் தரை தட்டாது என யானிக்குத் தெரியும். தன் இமாலைய வெற்றியை தான் சாதிக்க வேண்டியவற்றுக்கு முதல் படியாக நினைத்தது யானியின் வெற்றிக்குக் காரணம்.
லிண்டாவால் சுலபமாக யானியை விட்டுப் பிரியமுடியவில்லை. ஆனால் மக்களுக்குப் பிடித்த இசையை வழங்குவதற்கு யானி தயாராக இருந்தாலும் அவர்களது காதல் அதற்குத் தடையாக இருக்குமென நினைத்த லிண்டா யானியைப் பிரிந்தார். யானி இன்றும் உலகம் முழுவதும் தன் இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
பா.ராகவனின் எழுத்துகளில் இருக்கும் வசீகரம் இப்புத்தகம் எங்கிலும் தெரிகிறது. இரண்டு மணிநேரத்தில் முடிக்க முடிந்த இந்த 120 பக்கங்களில் அக்ரோபொலிஸின் பின்னணி சம்பவங்கள் பறக்கின்றன.
ஆனாலும், பாக் ஒரு புதிரின் சரித்திரம், பின் கதைச் சுருக்கம், இரண்டு நாவல் போன்ற புத்தகங்களை மிகவும் ரசித்த எனக்கு இப்புத்தகம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.
படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் பல விதங்களில் இப்புத்தகம் பெரும் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே படித்த உணர்வைத் தருகிறது. அதற்கு பல காரணங்கள் முக்கியமாக, சம்பவங்கள் மட்டும் தொகுத்து ஒரு வாழ்க்கை குறிப்பாக மாறியிருப்பது. அரசியல் தலைவரைப் பற்றிய வாழ்க்கைக் கதையை தேர்தல் நிகழ்வுகளை மட்டுமே கொண்டு சொல்வதைப் போல். கண்டிப்பாக ஒரு அபுனைவு நூலுக்கு சம்பவங்கள் மிக இன்றியமையாத ஒன்று. ஆனால், சம்பவங்கள் நாடகத்தன்மை அடையும்போது உணர்வுகளின் மோதல் மட்டுமே முக்கியமாகிறது.சம்பவங்களைத் தாண்டி வரலாறும், தகவல்களும் அபுனைவின் தூண்கள். இப்புத்தகத்தில் அவை இல்லை.
யானியின் இசை பாப்புலர் இசை வகைகளுக்கு ஒரு புத்தொளியைத் தோற்றுவித்தது. இது பல இசைக்கலைஞர்களின் இசையை பாதித்தது. பலர் யானியின் பாணியை பின்பற்றி தோற்றார்கள். சிலர் புது பாணியைத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட கலைஞர்களைப் பற்றி செய்தி இந்நூலில் கிடையாது.
அதேபோல், பல இசைக்கலைஞர்கள் அக்ரோபொலிஸ் நிகழ்வில் பங்குபெற்றார்கள். அப்படிப்பட்ட கலைஞர்களைப் பற்றிய குறிப்பு அதிகமாகக் கிடைக்கவில்லை. இதனால் இந்நிகழ்வு உண்மைத் தோற்றத்தைக் கொடுக்கத் தவறுகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் வெற்றியாக இது வெளிப்பட்டாலும், பின்னால் இருக்கும் கலைஞர்களின் பங்கை சரிவர இப்புத்தகம் விவரிக்கவில்லை.
உதாரணத்துக்கு, Kind of Blue என்ற ஆல்பத்தைப் பற்றி குறைந்தது ஐந்து புத்தகங்களாவது வெளியாகியுள்ளன. ஒவ்வொன்றிலும் ஆல்பத்தை உருவாக்கியவர்களின் பங்கு தெளிவாக வெளிப்படும். ஒலி அமைப்பாளர்கள், இசைக்குழு, பதிவு செயதவர்கள் என எல்லோருடைய நேர்முகமும் அமைந்த மிக விரிவான தொகுப்பு புத்தமாக இருக்கும்.இதனால் இசைக் கலைஞர்களைப் பற்றி மிக ஆழமான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
புனைவு மொழி வழியே அபுனைவை விவரிப்பது சுவாரஸ்யத்தை கூட்டுவதாக இருந்தாலும், அபுனைவுக்குத் தேவையான தகவல்கள் அதிகமாக இப்புத்தகத்தில் தொகுக்கப்படவில்லை. அதிக தகவல்கள் வாசக கவனத்தை குலைத்துவிடும் என்றாலும் ஒரு அபுனைவு நூலாக உணர்ச்சி, நாடகத்தனம் தாண்டி வாசக அறிவை மேம்படுத்தத் தேவையான விஷயங்களும் அதி முக்கியமானவை. அபுனைவை படித்து முடித்தவுடன் எனக்கு தகவல்கள் மட்டுமே நினைவில் தங்கும். மொழியலங்காரங்கள், நிகழ்வுகள் தகவல்களை மேம்படுத்தத் தேவையானது தான் என்றாலும் கூட வாசகர்களுக்கு விஷய விருத்தியே அபுனைவின் நோக்கம்.இத்தகவல்கள் இசைத் தொடர்பாக இருக்கத் தேவையில்லை. யானியின் சமகாலத்தில் உச்சத்தில் இருந்த கலைஞர்கள், அவரை பாதித்த/வழிகாட்டிய கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் கண்டிப்பாகத் தேவை. இசைக்கலைஞரைப் பற்றிய புனைவு எனபதால்,ஓர் எல்லைவரை ,அப்போதைய இசை பாணிகளைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்திருக்கலாம். இது யானி வெற்றி அடைந்த காலகட்டத்தை தெளிவாக வரையறுக்கும்.
உதாரணத்துக்கு, கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை தி.மு.க தவிர்த்துப் பார்க்க முடியுமா? பெரியார், அண்ணா பற்றிய தகவல் இல்லாமல் வாழ்க்கைக் குறிப்பை எழுத முடியுமா? தனி மனிதத் தோற்றம், வளர்ச்சி, மறைவில் பலரின் கூட்டணி உள்ளது.புனைவு/அபுனைவு வரலாறும் அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டியே அமைந்திருக்கிறது. தனிப்பட்ட கதையாக யானி-லிண்டாவின் காதல் முழுவதும் தெளிவாக வெளிப்படாததும் ஒரு குறையே.
வாசக கவனத்தை மட்டும் கணக்கில் கொண்டால் சுவாரஸ்யமாக இருந்தாலும், யானி என்ற இசையாளுமைப் பற்றிய முக்கியமான புத்தமாக இதை வரையறுக்க முடியாது.மேலும் சம்பவங்களின் தொகுப்பாக இருப்பதால், யானியின் முழு வாழ்க்கைக் குறிப்பும் இதில் வெளிப்படவில்லை.யானியைப் பற்றிய ஒரு மேலோட்டமான அறிமுகத்தை மட்டுமே இப்புத்தம நமக்கு அளிக்கிறது என்பது வருத்தத்துக்குரியது.
இசை பற்றி எனக்கு தெரியாது, இருந்தும் ஒரு சந்தேகம், 'சண்டோரினி' முன்பு சன் டிவி (அல்லது வேறா?) செய்திகளின் முன் ஒளிபரப்பப்படும் என்று நினைக்கின்றேன். இந்த இசையை ஏதோ இந்திய தொலைகாட்சியில் கேட்ட ஞாபகம். yanni தாஜ் மகாலில் கூட ஒரு முறை இசை நிகழ்ச்சி நடத்தினார் போல ஞாபகம்.
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் ஒரு அறிமுக புத்தகங்கள் தான். இசையில் என்னை மாதிரி ஆசாமிக்கு சரியாக இருக்கும் போல :)
அஜய்
Posted by: Ajay | 01/16/2011 at 02:18 AM
அஜய் - நன்றி. ஆம்,தாஜ்மஹலில் மெகா ஹிட் நிகழ்ச்சி நடத்தினார் யானி. அதைத் தொடர்ந்து பல இசைக்கச்சேரிகள் அங்கு நடந்திருக்கின்றன. எல்லா கிழக்கு புத்தகங்களும் அறிமுக புத்தகங்கள் அல்ல.நான் படித்த வரை, கிழக்கு வெளியீடாக வந்த அரசியல் புத்தகங்கள் மிக ஆழமாகவே எழுதப்பட்டிருக்கின்றன.இப்புத்தகம் ஏனோ மேலோட்டமாகவே இருக்கு.
வருகைக்கு நன்றி.
Posted by: ரா.கிரிதரன் | 01/16/2011 at 08:35 AM
super.....
http://www.tamils.com/videos/videos/262/ooraana-oorukkulla-onna-pola-yarum-ella-video-song-manam-kothi-paravai
Posted by: Tamils_com | 11/05/2012 at 08:21 AM