நாவல் என்றால் என்ன? வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகளில் வடிக்க முற்படுவது எனச் சொல்லலாம். மணல் கடிகாரம் போல் மேல் பகுதியில் வாழ்க்கை நுழைந்து கீழ் பகுதியில் நாவலாக மாறுமா? போலவே வார்த்தைகளைக் கொண்டு வாழ்க்கையை விளக்க முற்படுவதும் வைக்கோலில் தேடும் ஊசிதான்.
வாழ்வின் அடிப்படைகளை ஆராய்வது நாவலின் நோக்கம் என்பது ஜெயமோகனின் தரப்பு. இவர் முன்வைத்த நாவல் கோட்பாடும் அடிப்படை தரவுகளை வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே பெற்றுக்கொண்டது. நாவல் வழியே வாழ்க்கை. வாழ்க்கை வழியே நாவல் என்பது பா.ராவின் கருத்து.
(மேலுள்ள படத்தை சொடுக்கி கிழக்கு பதிப்பகத்தில் வாங்கலாம்)
பா.ராகவனின் `பின் கதைச் சுருக்கம்` விளக்கமாக கோட்பாடுகளை விவரிக்கும் நூல் அல்ல. தனக்கு பிடித்த 17 நாவல்கள் பற்றி அடுத்த நிமிடமே நம்மை படிக்கத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறார். சிறுவயது முதற்கொண்டே நாவல் பின்னால் அலைந்ததை சுவாரஸ்யமாக விவரிக்கும் முன்னுரையில் இப்புத்தகங்கள் ரசனை சார்ந்த தேர்வு மட்டுமே என்கிறார். கோட்பாடு, தற்கால இஸம் என்ற வலையிலெல்லாம் சிக்கிக்கொள்ளாமல் `எனக்குப் பிடித்தது.ரசிக்கத் தகுந்த புத்தகங்கள் இவை` என தான் ரசித்ததை மட்டுமே முன்னிறுத்தும் எழுத்தாளர். இதனாலேயே பா.ரா அறிமுகம் செய்யும் நூல்களை கண்டிப்பாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தாமல் வாங்கிவிடலாம்.
பின் கதைச் சுருக்கம் 17 நாவல்களைப் பற்றியும் அவை உருவான கதையையும் சொல்கிறது. இக்கால நாவல், வேற்று மொழி நாவல் என்ற எந்த பாகுபாடும் கொள்ளாமல் தனக்குப் பிடித்த நாவல்கள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
நாவலென்பதும் வாழ்க்கையென்பதும் அனுபவங்களே என்பதில் `அலை உறங்கும் கடல்` காலத்திலிருந்தே பா.ரா உறுதியாக இருந்திருக்கிறார். பிறந்த குழந்தை போல் சத்தமேயில்லாமல் கிடக்கும் ராமேஸ்வரக் கடலலையில் மயங்கி, கிறங்கி, வாழ்ந்து அலை உறங்கும் கடலை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். அற்புதமும், அன்றாட நிகழ்வுகளும் ஒருசேர நடக்குமிடமாக ராமேஸ்வரத்தை விவரிக்கிறார். கடலுக்கு நடுவே தெரியும் ராமர் மண் திட்டு, தக்கையைப் போல் மிதக்கும் கனமாக பாறாங்கற்கள் என அவர் சென்ற இடமெல்லாம் மாய உலகம் போல ராமேஸ்வரம் அவரை கட்டுண்ணப்பண்ணியிருக்கிறது. மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்க்கவே அவை அலை உறங்கும் கடலாக மாறியிருக்கிறது. இந்நாவலை நினைக்கும்போதெல்லாம் இன்றும் பிரத்தியேகமான இளம் சூடு அணங்கு போல் பரவுவதாக குறிப்பிடுகிறார்.
அசோகமித்திரன் அமெரிக்காவின் அயோவா நகருக்கு சென்ற அனுபவமான `ஒற்றன்` குறிப்பிடத்தக்க புத்தகம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடும் மாநாட்டை நாம் நேரில் பார்ப்பது போல் விவரித்திருப்பார். அசோகமித்திரன் கதைகளைப் படிக்கும்போது ஆர்.கே.லக்ஷ்மணின் பொதுஜனம் ஞாபகத்துக்கு வரும். தாமரை இலை தண்ணீர் போல எதிலும் ஒட்டாமல், சாராமல் ஒரு பார்வையாளனாக தன்னை சுற்றி நடப்பவை குறித்த உலகத்தை சில பக்கங்களில் படைத்துவிடுவார். கவிதையில் வைப்புமுறை போல் கதைகளிலும் வார்த்தை பிரயோகங்கள், வரிகளின் வரிசைச் சங்கிலி படிக்கும் நமக்கு ஒரு எண்ண ஓட்டத்தை உருவாக்கும். கச்சிதமாக அமையும் பத்திகள் தானாகவே நம்முள் அமர்ந்துகொள்ளும் என குறிப்பிடுகிறார். ஒற்றன் அதற்கு சரியான உதாரணம். அப்புத்தகத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.
இப்புத்தகத்தின் வெற்றி பா.ராவின் மொழி வீச்சில் குடிகொண்டுள்ளது. கடினமான மொழியோ, நாம் கேள்விப்பட்டிராத வார்த்தைகளோ இவர் கட்டுரைகளில் இருக்காது. சொல்ல வேண்டிய கருத்தில் தெளிவு. வாசகனை அடைய வேண்டிய செய்தியின் முக்கியத்துவம். இதனாலேயே நமக்கும் பா.ராவின் எழுத்துக்கும் இடைவெளி மிகக் குறைவாக உள்ளது. அட, நாமும் இதைப் போல் எழுதலாம் போலவே என பொய்த்தோற்றத்தைக் கொடுக்கும்.
மேற்கூறியதுக்கு `நூறு வருடத் தனிமை` கட்டுரை நல்ல உதாரணம். பாரீஸ் நகரில் செய்வதறியாது சுற்றித்திரிந்துகொண்டிருந்த மார்குவேஸ் ஹெமிங்வேவைச் சந்தித்தது, நூறு வருடத் தனிமை புத்தகம் எழுதத் தொடங்குவதில் சந்தித்த சிக்கல், அதை நீக்கிய பயணம் என அதிரடி வேகத்தில் அறிமுகம் நடந்தேறுகிறது. நடுவே எவ்வளவோ விஷயங்கள் விட்டுப்போயிருக்கலாம். ஆர்வமிருப்பவர்கள் மேலும் விரிவாக படிக்க முற்படுவர். ஆனால், மார்குவேஸ் பற்றியும் அவர் எழுதிய நூறு வருடத் தனிமை பற்றியும் ஒரு குறுக்குவெட்டு தோற்றம் இந்த எட்டே பக்கங்களில் கச்சிதமாக நமக்குக் கிடைக்கிறது. இதற்கு மேல் அள்ள அள்ள விஷயங்களைத் தேடிச் செல்ல ஆயிரம் புத்தகங்கள் உண்டு. ஆனால்,ஒரு நாவலுக்கான பின் கதைச் சுருக்கத்தை எழுத்தாளர் அறிமுகத்துடன் தொடங்கி, அட மார்குவேஸை எனக்கு நல்லா தெரியுமே என சொல்லும்படி நானும் உனக்கு பழவடியேன் என்றாக்கியது இக்கட்டுரை.
அதேபோல் நண்பர்கள் ஆர்.வெங்கடேஷ், பா.ராவும் சேர்ந்து நாவல் எழுதுவதற்காக கன்னியாகுமரி சென்ற அனுபவம் மிகச் சுவாரஸ்யமானது. எது செய்ய நினைத்தாலும் அதில் குழந்தையின் குறுகுறுப்பு மிக அவசியம் என உணர வைத்தது. ஒரு வாரம் விடுமுறையில் இரு நண்பர்களும் கன்னியாகுமரி சென்று தங்கள் கனவு நாவலை எழுத முற்படுகிறார்கள். `இரண்டு` மூலம் ஆர்.வெங்கடேஷ் சாத்தியமாக்குகிறார். இந்நாவலின் Craftmanshipபை பா.ரா மிக சுவாரஸ்யமாகக் கூறுகிறார். அனுபவமே வாழ்க்கை. அது முதல் படி. அவ்வனுபவம் வார்த்தைகளாகும் கட்டமும் சுவையானதே என இக்கட்டுரை முடியும்போது புரிகிறது.
`புதியதோர் உலகம்` கட்டுரை மூலம் விஷ்ணுபுரத்தை இப்பட்டியலில் சேர்த்தது எனக்குக் கூடுதல் சந்தோஷம். விஷ்ணுபுரம் வெளியான நாள் முதல் இன்றுவரை வசைபாடப்பட்டு வந்திருக்கிறது என்பதே ஒரு முக்கியமான விளம்பரமாகக் கருதலாம். மெல்ல சுவைக்கும் இனிப்பு வகைபோல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்நாவலில் சில பக்கங்களைப் படிப்பேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைந்த கதைகளம். இத்தனை தத்ரூபமாக நம்முன் நிறுத்த எவ்வளவு தகவல்களை ஜெயமோகன் திரட்டியிருக்க வேண்டும் என நினைத்தாலே ஆச்சர்யமூட்டுகிறது. ஜெயமோகனின் மொழியாளுமை தமிழுக்குக் கிடைத்த புதுப்பாய்ச்சல் என்றே கருதவைக்கும் ஆக்கம். இவ்வளவு கடினமாக நாவலையும் சுலபமாக உள்வாங்க முடியும்; தேவை திறந்த மனம் மட்டுமே என பா.ரா எழுதியிருப்பதன் உண்மை இந்நாவலை படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
`எங்கே என் அடையாளம்` ருஷ்டி எழுதிய நடுநிசிக் குழந்தைகளின் (Midnights Childen) பின்கதை.இந்நாவல் மூலம் அழியா அடையாளத்தைத் தேடிக்கொண்ட ருஷ்டியின் எழுத்துநடை மிக வித்தியாசமானது. மின்னல் வேக திரைக்கதை போல ஒரே வரியில் பலவற்றை கோர்த்தபடி செல்லும். அற்புத எதார்த்த வகை எழுத்துகளாக இருந்தாலும் மிக எளிமையாக புரியக்கூடியது. இந்நாவலின் சொற்றொடர்கள் ஆரம்பத்தில் சற்று கடினம் போலத்தெரிந்தாலும், முதல் சில பக்கங்களில் பிடிபட்டுவிட்டால் ஒரு உன்னத உலகுக்குள் சலீம் சினாய் இழுத்துச் செல்வான். இதனாலேயே புக்கர் ஆஃப் புக்கர் பரிசுக்கும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. அடையாளத்தை இழப்பது, அதை மீட்ப நடக்கும் தேடல் கதையின் ஆதாரம். ஒரு வகையில் இது ருஷ்டியில் சுயசரிதையும் கூட என பா.ரா கூறுகிறார்.
என் ஊர்க்காரரான பிரபஞ்சனின் `மகாநதி` பற்றிய கட்டுரை மேலும் கூடுதல் தகவல்களுடன் அமைந்திருக்கலாம். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் பிரபஞ்சன் டிவியில் கூட விளம்பரங்களைப் பார்க்க மாட்டார். அந்த அளவு விளம்பர அபிரியர்.மிக எளிமையான சொற்றொடர்கள் மூலம் `மானுடம் வெல்லும்`, `மகாநதி` போன்ற கோட்டைகளைக் கட்டியிருக்கிறார்.
டால்ஸ்டாய், பஷீர், சமுத்திரம் போன்றோரின் கட்டுரைகள் ரத்தின சுருக்கமாக தெளிந்த நீரோடை போல் அமைந்திருக்கிறது. குறிப்பாக சமுத்திரம் பற்றிய கட்டுரையில் பா.ரா சந்தித்த போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். மிகக் கொண்டாட்டமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரராக சமுத்திரத்தை முன்வைக்கிறார். இவர் எழுதியவற்றை படித்தே தீரவேண்டிய அவசிய உணர்வை இக்கட்டுரை தருகிறது.
இந்த 112 பக்கம் புத்தகத்தை இதுவரை பத்து முறைகளுக்கு மேல் படித்திருக்கிறேன். சோர்வு ஏற்படும் நேரத்திலெல்லாம் ஒரு டானிக் போல இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. மேம்போக்காகப் பார்க்கும்போது இக்கட்டுரைகள் சுலபமாக எழுதப்பட்டது போலத்தோன்றும். ஆனால் எழுத வேண்டிய விஷயங்களைப் பற்றிய பார்வை மிகத் தெளிவாக இருந்தால் மட்டுமே இவ்வளவு எளிமையாகவும், கச்சிதமாகவும் கட்டுரை எழுதமுடியும். மொழி ஒரு தடையேயல்ல. எழுத்தாளரின் சிந்தனை ஓட்டம்; எண்ண வரிசை சீராக இருந்தால் எழுத்தும் பெரும்பாலும் சீராக அமையும் என்றே தோன்றுகிறது. பல்துறை புரிதல்கள் தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட புத்தகங்கள் சாத்தியம்.
ஒரு நாவலைப் பற்றி மட்டுமல்லாது அதை எழுதிய எழுத்தாளர், அவர் எழுத்து பாணி, அவர் வாழ்ந்த காலகட்டம், சூழ்நிலை என பலதரப்பட்ட தகவல்களை சரியான கலவையில் தருவது சாதாரண காரியமாகத் தோன்றவில்லை. அதற்கு மொழி கைகொடுக்க வேண்டும். படிக்கும் நமக்கு `போர்` அடிக்காத வகையில் அனுபவங்களைத் தொகுக்க வேண்டும். இவற்றைத் தாண்டி எழுத்து, படிப்பு, புத்தகம் மேல் மெய்யான காதல் இருக்க வேண்டும். சரியான புரிதல் அமைய வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கினால் கட்டுரை வந்துவிடாதே! வாசகனிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற தீராத காதல் மற்றும் உழைப்பும் கூடியிருக்கிறதே! பா.ராவின் எழுத்தும் விமர்சனமும் அவர் தனிப்பட்ட ரசனை சார்ந்தவையாக அமைந்திருக்கிறது. அவர் ரசிக்காத எதையும் தன் வாசகர்களுக்கு பரிந்துரைப்பதே கிடையாது. இதே தரத்தை தன் இணைய எழுத்திலும் கொண்டிருப்பது மிக அபூர்வமான ஒன்று.
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி நம்முள் புகுவான் என இக்கட்டுரைகள் நம்முள் நுழைகின்றன; சம்மனிட்டு அமர்கின்றன. இது புத்தக காதலர்களுக்கான புத்தகம்.
Recent Comments