நன்றி: அகநாழிகை
1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுபின் ஐரோப்பா பயணத்தைத் தொடங்கினார். பல துறைமுகங்களைக் கடந்து இரு வாரங்களில் ஜெனோவா வந்து சேர்ந்தார். நீண்ட கடற்பயணம் புது அனுபவமாக இருந்தாலும், களங்கரை விளக்கு போல் சுபினின் மனது மும்பாயிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. தன் அப்பா மெஹ்லி மேத்தா அமெரிக்காவிலும், தாய் மும்பாயிலும் பிரிந்திருந்தது மேலும் வருத்தத்தை அதிகப்படுத்தியது. மருத்துவப் படிப்பைத் தொடராமல் இசைப் படிப்புக்காக வியன்னா செல்ல எடுத்த முடிவு சரிதானா? மெஹ்லி மேத்தா தன் கடிதத்தைப் பார்த்ததும் மறு சொல் கூறாமல் அதில் எழுதியிருந்த முடிவுக்குக் கட்டுப்பட்டது எதனால்? ஜெனோவா வரை சுபினின் எண்ணம் கடலில் அலைகழியும் தோணியாக சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.
தன் கடிதத்தில் மிகத் தெளிவாக தன் திட்டங்கள் இருந்தாலும், அளவு கடந்த பேராவலால் உந்தப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் சுபினுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. இசையில் தனக்கிருந்த ஆர்வத்தை வார்த்தைகளில் விவரிக்க முடிந்த ஆனந்தம் ஒரு பக்கம். மொழி தெரியாத ஊர், வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட புற உலகம், தன்னை வழிநடத்தக் கூடிய அப்பா தன் அருகாமையில் இல்லாதது என எதற்கு வருத்தப்படுவது எனத் தெரியாமல் சுபின் திணறினார். ஒரு நொடியில் திசை மாறிய தன் வாழ்க்கைக் குறித்த பயத்தினால் பயணம் முழுவதும் தன் எதிர்கால திட்டங்களில் மூழ்கினார்.
சுபின் மேல் படிப்புக்காக வியன்னாவைத் தேர்ந்தெடுத்ததன் முடிவிற்கு டேடி என்ற சொந்தக்காரர் அவ்வூரில் இருந்ததும் ஒரு காரணம். டேடி சுபினை விட ஐந்து வயது பெரியவர். சில வருடங்கள் பாரீஸ் நகரில் பியானோ படித்த அவர்,வியன்னாவில் மேற்படிப்பைத் தொடர்ந்ததுடன் மட்டுமல்லாது ஒரு நல்ல ஆர்கெஸ்ட்ராவில் பியானோ கலைஞராக பணிபுரிந்து கொண்டிருந்தார். சுபின் வியன்னா வந்த ஆரம்பம் முதல் தங்குவதற்கான இடம், பணத் தேவை என சவுகரியங்களைச் செய்து கொடுத்தார். பதினெட்டு வயதான சுபினுக்கு இவை பேருதவிகளாக இருந்தன
ஜெனோவாவிலிருந்து வியன்னாவிற்கு ரயிலில் வந்து சேர்ந்தார் சுபின். ரயில் நிலையத்தில் இறங்கிய நொடியிலிருந்து சுபினுக்கு வியன்னா கண்கட்டு வித்தைப் போல காட்சியளித்தது. தனக்குத் தெரியாத ஜெர்மன் மொழி வாசகங்கள் அச்சுறுத்தின. மொழியையும் தாண்டி வியன்னா ரயில் நிலையத்தின் பிரம்மாண்டம் இளம் சுபினை மூச்சிரைக்க வைத்தது. அதுவரை, மும்பாய் நகரத்தின் சுகமான சௌகர்யங்களில் வாழ்ந்த சுபினுக்கு வியன்னாவின் அமைதி கூட ஆரம்பத்தில் பயத்தை உண்டாக்கியது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவேறியிருந்தது. போரில் மிக சேதம் நடந்த நகரங்களில் வியன்னாவும் ஒன்று. நகரின் பல இடங்களில் இடிபாடுகளும், மிகக் குறைந்த இடங்களில் கட்டிட சீரமைப்புகளும் நடந்து கொண்டிருந்தன.
சுபின் வந்திருங்கியபோது வியன்னா கனத்த மெளனத்தின் நடுவே வரலாற்றின் பெரிய சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டார். இழப்புகளைச் சரிசெய்ய அரசு தவித்துக்கொண்டிருந்தது.இயல்பு நாட்கள் மறுபடியும் வராதா என்ற ஏங்கி தவிப்பதை விட, ஆகச் சிறந்த சமூக காரியங்களில் மூழ்குவதே உசிதம் என எல்லா மக்களும் உணர்ந்திருந்தனர். இமாலைய நம்பிக்கையை கைவிடாது சீரமைப்பு பணிகள் நகரம் முழுவதும் நடைபெற்று கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட நேரத்தில் இசையின் அகண்ட நிகழ்வுகளில் தன்னை மூழ்கடித்துக்கொள்ள சுபின் முதல் காலடியை எடுத்து வைத்தார்.ஆனாலும், மக்களின் சோகத்துக்கு நடுவே இசை நிகழ்வுகள் நடக்குமா? தான் கற்றுக்கொள்ள இது சரியான சூழல் தானா போன்ற கேள்விகளும் சுபினுக்கு எழாமல் இல்லை.
வைனர்வால்ட் என்ற பகுதியில் சிறு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டார். மெஹ்லியின் தந்தைவழி சொத்து இருந்தாலும், அது இந்தியாவில் சுபிட்சமாக வாழும் அளவிற்கு மட்டுமே இருந்தது. சுபின் வியன்னாவிலும், சரீன் லண்டனிலும் மேற்படிப்புக்காக தங்கி இருந்ததால் இந்தியாவிலிருந்து மாதா மாதம் வந்த பணம் போதுமான அளவிற்கு இல்லை. ஆனால், இரண்டு வருடங்களில் படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்கும் என்பதால் தந்தைக்கு பாரமாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணமே சுபினுக்கு பெரிய ஊட்டமாக இருந்தது.
அதே நேரத்தில், சுபின் நினைத்த காரியமும் நடந்தது.
மியூசிக் அகாடமி (Musickakademie) என்ற வியன்னாவின் இசைப் பள்ளி ஐரோப்பாவில் முதல் தரமான இசைப்பள்ளி. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல மூலைகளிலிருந்து இசை மாணவர்கள் மியூசிக் அகாடமிக்கு படையெடுப்பார்கள். மிகத் தேர்ந்த ஆசிரியர்கள் குழு, இசையில் தினந்தோறும் திளைக்கும் வியன்னா சூழல், பல சிம்பொனிகளின் அரங்கேற்றம் என வி்யன்னா ஐரோப்பாவின் இசைத் தலைநகரமாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட பெருமைகள் நிரம்பிய பள்ளியில் இசையைக் கற்றுக்கொள்ள இடம் கிடைத்ததில் சுபினுக்கு அளவில்லாத ஆனந்தம்.
நதியின் பிரம்மாண்டத்தில் திளைத்தவனை நதி மூலம் வசீகரிப்பதுபோல், சுபின் தன் இசை ஆர்வத்தை மீட்டி வளர்ப்பதற்காக ஐரோப்பாவின் இசைமூலத்தை அடைந்துவிட்டார்!
இதுவரை வாழ்வின் அற்புதமான கணங்களை மட்டுமே நிறைத்த இசை, சுபினின் அன்றாட சுவாசமானது.
(தொடரும்)
Recent Comments