எந்த நிமிடமும் பேப்பரை விட்டு தாவி குதித்தோடிவிடுமோ என்ற பயம் என் சிறுவயது நண்பன் கோகுலின் ஓவியங்களைப் பார்த்தால் தோன்றும். பத்து வயதிலேயே புராணக் கதைகள், விளையாட்டு காட்சிகள் போன்ற ஓவியங்களை நுணுக்கமான நேர்த்தியுடன் தத்துரூபமாக வரைவான். தேரோட்டி அர்ஜுனன், மானைத் தேடும் ராமன், மைதானத்தில் நடக்கும் கிரிகெட் போட்டியில் பார்வையாளர்களின் ஆரவாரம், ஸ்பைடர்மேன், மாண்ட்ரேக் மாயாவி என விதவிதமாகப் `படம்` போடுவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். வண்ணங்களை குறைவாக உபயோகித்தாலும், காட்சிகளில் ஒரு தேஜஸ் காணப்படும். பென்சிலால் அவன் வரைந்த புதுச்சேரி புனித மேரி ஆலயம் பல வருடங்கள் கடந்து இன்றும் துள்ளி்யமாக என் நினைவில் உள்ளது. ஒரு விதத்தில் பார்த்தால் நல்ல கலைக்கு இதுவே அளவுகோல். என் போன்ற அரைகுறை ஞாபகக்காரர்களுக்குக்கூட தேவையான நினைவுமீட்டலை எக்காலத்திலும் கலையால் கொண்டுவர முடியும்.
(மேலும் பல வண்ணப்படங்களுக்கு படத்தை சொடுக்கவும்)
பழைய ஞாபகங்களை கொண்டுவருவதில் ஓவியங்களின் பங்களிப்பு என்ன? அவற்றிலிருந்து பண்டைய சமூக வரைபடத்தை தீட்டமுடியுமா?
வான்கோ, மோனே, பிகாஸோ போனறோரின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. அடிப்படையில் இவை ஐரோப்பிய பாணி ஓவியங்கள். அருங்காட்சியகங்கள், நூல்கள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற ஐரோப்பிய ஓவியங்கள் பல நூற்றாண்டுகால மரபுத் தொடர்ச்சி பெற்றவை. எல்லா நாட்டு ஓவிய பாணி போல, குகை ஓவியங்களில் ஆரம்பித்த மரபு மெதுவாக இறையியல், நடைமுறை வாழ்வியல் முறைகள், போர் என நீட்சி கொண்டு வளர்ந்தது. ஆனாலும், ஐரோப்பிய பாணி என்ற வகை விமர்சகர்களால் உருவாக்கப்பட்ட கலை. தொடர்ச்சியான பாரம்பரியம் இருந்ததால் பலகோணங்களில் விமர்சனம் உருப்பெற்று வளர்ந்தது. இவ்வளர்ச்சி இன்று நவீன ஓவியங்கள்,கொலாஜ், அன்றாட பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படும் பிளாஸ்டிக் ஓவியங்கள் என பல புது வகை ஓவிய/கலை பாணிக்கு வழிவகுத்துள்ளது.
இந்திய ஓவியப் பாரம்பரியத்தை இப்படிப்பட்ட எளிமையான தொடர்புறுத்தல் மூலம் நிலைநாட்ட முடியாது. அது சாத்தியமும் அல்ல. பல சமூகங்களில் தோன்றி, உருப்பெற்று, புது சமூக பாணியுடன் கலந்து தேக்க நிலை அடைந்துள்ள பல பாணிகளே இங்குள்ளன. பல கலாசாரங்கள் ஒன்றாக வளர்ந்த சூழலில் ஒரு குறிப்பிட்ட பாணியை இந்திய பாணி என வரையறுக்கவும் முடியாது. வெளித் தெரியாத சமூக பழக்கவழக்கங்கள் ஒரு தடையாக இருந்ததென்றால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பலமொழிச் சிக்கல்களும் ஒரு பொதுவான விமர்சன தளம் உருவாகவிடாமல் தடுத்தது. தஞ்சாவூர் ஓவியங்கள் பிற மாநிலங்களுக்கு பரவாமல் இருந்தது ஒரு உதாரணம். அதேபோல் ராஜஸ்தானி ஓவிய பாணி தென்பகுதியை வந்து சேர பல நூற்றாண்டுகள் ஆனது.
இதனாலேயே `இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்` என்ற தலைப்பில் ஓவியர் அரவக்கோன் எழுதிய கட்டுரை தொகுப்பை `இந்திய பாணி` என ஒட்டுமொத்தமாக வரையறுத்துக் கூறுவது கடினம்.
இந்தியாவின் பல வளர்ச்சிகளைப் போல், ஓவியமும் பல கிளைகளாக வளர்ந்து ஆங்காங்கே பரந்து விரிந்து நிற்கிறது. ஆனாலும் இவை அனைத்தும் ஒரே விதையிலிருந்து தோன்றியவை அல்ல. இந்தியா என்ற குடைக்குக் கீழே பல சிறு குழுகளாக வளர்ந்தவை. இப்பாணிகளை பக்தி சார்ந்த ஓவியங்கள், சமூக நிகழ்வுகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் என ஒரு பொதுவான தளத்தில் மட்டுமே ஒன்றாக கொண்டு வர முடியும்.
இப்படிப்பட்ட புரிதலை அடிப்படையாகக்கொண்டு பல குழுக்களின் ஓவிய பாணிகளைப் பற்றி அரவக்கோன் விரிவாக எழுதியுள்ளார்.
பண்டைய இந்தியாவில் ஓவியக்கலை உச்சாணிக்கொம்பில் இருந்த சாட்சிகள் இருந்தாலும், அதிலிருந்து கிளைத்த ஒற்றை மரபு என எதுவும் இல்லை.இது இந்திய ஓவிய பாணிக்கு பெரிய இழப்பாகும். குறிப்பிடத்தக்க இந்திய ஓவிய பாணி என்பது பெளத்த பிக்குகள் வரைந்த அஜந்தா,எல்லோரா ஓவியங்களில் தொடங்குவதாக குறிப்பிடுகிறார். மூன்று நூற்றாண்டுகளாக கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வரையப்பட்ட இந்த ஓவியங்கள் பண்டைய இந்தியாவின் வாழ்வு முறைகளைப் பற்றி கூறாவிட்டாலும்,நம் பண்டைய கலை மரபின் அளவுகோலை நிர்ணயிக்கிறது.
ஓவிய வரலாற்றுடன் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்கள், அவற்றின் வகைகள், அவை உருவாக்கப்பட்ட முறைகள் என தெளிவாக இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.பசுக்களின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்திய மஞ்சள், நாணலிலிருந்து பெறப்பட்ட கருநீலம், மரத்திலிருந்து கிடைக்கும் பச்சை, கோந்து போன்றவை இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பெர்சிய நாட்டு ஓவியர்கள் இத்தயாரிப்பு முறையிலிருந்து பெரிதும் பயன்பெற்றிருக்கிறார்கள். பண்டைய இந்தியா உலகுக்கு அளித்த கொடையாகவே இது கருதப்படுகிறது.
இந்தியாவின் கையடக்க கோட்டோவியங்கள் பற்றிய கட்டுரை மிகத் தெளிவாக அமைந்திருக்கிறது. ஜகதீஷ் மிட்டல் போன்ற ஓவியர்களில் பாணியாக அமைந்த கோட்டோவியங்கள் பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கியவை. இதன் தொடர்ச்சியாக கும்பினி பாணி ஓவியங்கள் அமைந்தன.மேலும் முகலாய பாணி ஓவியங்கள் என நாம் இன்று பார்க்கும் ஓவியங்களின் பிறப்பிடமாக கையடக்க ஓவியங்கள் இருந்திருக்கின்றன. இவை அளவில் சிறிதாக இருந்தாலும், கையால் தயாரிக்கப்பட்ட தாளில் வரையப்படுவதால் சிக்கலான முறையாக அமைந்திருக்கிறது.
ராஜஸ்தான், நேபாளம், வங்காளப் பகுதிகளில் இறை வடிவ ஓவியங்கள் பிரதானமாக வரையப்பட்டன. பல நூற்றாண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்கள் இப்பாணியை பின்பற்றியுள்ளனர்.விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், புத்தரின் அருள் மொழிகள், தாந்திரிக வழிபாட்டு முறை ஓவியங்கள் என மக்களுக்கான நல்லொழுக்க விதிகளைத் தாங்கிய ஓவியங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வரையப்பட்டன.
சீக், மதுபானி, காளிகாட் ஓவியங்கள் என சிதறுண்ட ஓவியப்பாணியே இந்தியாவில் பல மூலைகளிலிருந்து நமக்கு கிடைத்துள்ளன.ஓவியங்கள் மட்டுமல்லாது,வானளாவிய கோபுரங்கள், கோயில் சிலைகள் என பல கலைகளின் முறைகள் செழிப்பாக இருந்திருந்தாலும் அவை உருவான முறை பற்றி நமக்குத் தெளிவில்லாத சித்திரமே மிஞ்சுகிறது.
ஒரு உத்தமனின் கைபெருவிரல் ஒரு அளவெனக் கொண்டால், அப்படிப்பட்ட இருபத்து நான்கு விரல்கள் ஒரு கோலாகும். இப்படியாக ஏழு கோல் நீளம், அதே அளவு உயரம் போன்ற நுணுக்கமான அளவுகோள்களால் மாதவியின் நாட்டிய மேடை அமைக்கப்பட்டிருந்தது என சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதை செய்யுள் கூறுகிறது. இப்படி மிக விரிவாக கட்டிடக்கலையைப் பற்றி தொகுத்த நம் பாடல்கள்,கண்டிப்பாக ஓவிய பாணியையும் தொகுத்திருக்கும். இன்று அவை நமக்குக் கிடைக்காமல் இருப்பது வருத்தமான விஷயமாகும்.
இந்தியாவின் பல ஓவிய பாணியைப் பற்றித் தெரிந்து கொள்ள தகுந்த ஆரம்ப நிலை புத்தகமாக இது அமைந்துள்ளது. அதே சமயம் புத்தகத்தின் நோக்கம் பல இடங்களில் தடம் புரண்டிருக்கிறது. தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றிய கட்டுரை மேலும் விரிவாக இருந்திருக்கலாம். பல கட்டுரைகள் ஆங்கிலக் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. ஓவியக்கண்காட்சிகளின் விமர்சனமாக இருக்கும் மூல கட்டுரைகளை தமிழாக்குபோது அதிக விவரணைகளைச் சேர்த்திருக்கலாம். இதனாலேயே சில கட்டுரைகள் (பாட்னா கலம்,சுவடி ஓவியங்கள்) சொல்லவரும் விஷயங்கள் பிடிபடவில்லை.
இந்தியவில் நவீன ஓவிய பாணி எழுச்சி கொண்டு முதன்முறையாக வங்காளத்தில் உருவானது.Indian Society of Oriental Art போன்ற குழுக்கள் மூலம் Cubism,Impressionism போன்ற பாணிகள் வங்கத்தில் அடியெடுத்து வைத்தன. இவற்றைப்பற்றியும் முழுமையாக சொல்லாமல்,மேலோட்டமான செய்திக்கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.
தங்குதடையில்லாமல் சுவாரஸ்யமாகப் படிக்க இக்குறைகளை அடுத்த பதிப்பில் கண்டிப்பாக நீக்க முயல வேண்டும்.
முன்னுரையில் அரவக்கோன் எழுதியிருப்பதுபோல், இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி புத்தகங்களாக ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. தமிழில் இத்தொகுப்பு முதல் முயற்சி மட்டுமல்லாது நல்லதொரு ஆரம்ப நிலை புத்தகமாகவும் அமைந்துள்ளது. செழுமையான முயற்சிக்காக அரவக்கோனுக்கும், இப்புத்தகத்தை வெளியிட்ட எனி இந்தியன் பதிப்பகத்துக்கும் நன்றி.
பல புகைப்படங்கள் கருப்பு-வெள்ளையில் இருப்பதால், எனி இந்தியன் தளத்தில் பல ஓவியங்களை வண்ணத்தில் தொகுத்துள்ளனர்.
இக்கட்டுரைகளைத் தாண்டி இந்திய ஓவிய மரபைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு ஆங்கில மூலத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
Recent Comments