அரபு இலக்கியம் - அரசியலும், அகவெளியும் - சொல்வனம்
‘பூதங்கள்,மாயம்,மிருகங்கள் போன்றவை இன்றிரவுக் கதையில் இருக்கக்கூடாது’
ஆயிரத்தொரு இரவுகளின் ஓர் இரவில் பேரரசர் ஷாஹிரார் ஷரசாத்திடம் தன் நிபந்தனையைக் கூறினார். வழக்கமாக கதை சொல்லும் நேரம் வரும்போது மிருகங்கள், மந்திர மாயக் கதைகளைச் சொல்லி தன் உயிரைக் காத்து வந்த ஷரசாத்துக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கதை கூறாமல் ஒரே ஒரு இரவைக் கடத்தினாலும் தனக்கு மரணம் நிச்சயம் என்பதால், வழக்கமாக அவள் மட்டுமே நிபந்தனை விதிப்பாள். ஆனால், பலதரப்பட்ட வினோதக் கதைகளைக் கூறியே நாட்களைக் கடத்தி விடுவாள் எனத் தெரிந்ததால் தொடங்குமுன் இந்த நிபந்தனையைப் பேரரசர் கூறினார்.
இதைக் கேட்ட ஷரசாத் மனம் தளராமல் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து கதைகளைச் சொல்லத் தொடங்கினாள் என ஆயிரத்தொரு இரவுகளைப் பற்றி செவி வழிக்கதை உண்டு.
நம் பஞ்சதந்திரக் கதைகள் போல, பெர்ஷியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைத் தொகுப்பு மாய மந்திரக் கதைகளின் தொடக்கம் மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கையிலிருந்த சந்தோஷம், சோகம், அபத்தம் போன்ற அடிப்படை உணர்வுகளைப் பிரதிபலித்த கதைகளுக்கும் முன்னோடியாக அமைந்தன.
இன்றளவும் உலகின் பல மூலையிலுள்ள இலக்கியத்தின் மரபார்ந்த வேரைத் தொடர்ந்தால் இப்படிப்பட்ட நாட்டுப்புற/மாயக் கதைகளைச் சென்றடையலாம். ஆனாலும் இப்படிப் பல நூற்றாண்டுகளாக தழைத்து வரும் கதைகளின் பரிணாம வளர்ச்சி குறைவே. நூற்றாண்டுகள் கடந்தும் நாம் மனிதர்களின் பழக்க வழக்கங்கள், நண்பர்கள், பகைவர்கள், காதலி, மகிழ்ச்சி, சோகம் போன்ற சங்கதிகளையே மாற்றாமல் வெவ்வேறு பாணியில் கூறி வருகிறோம். சிறுகதை, நாவல் சொல்லும் கதையும் இதை நோக்கியே வளர்ந்து வந்துள்ளன. இப்படிப் பயணிக்கும் கதையின் நோக்கம் என்ன? கதைகள் கால இயந்திரமாக மாறி நம்மை கால தேச வர்த்தமானங்களைக் கடக்க வைக்கிறது. பல மனிதர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை நமக்கு அளிக்கின்றன. இதனால் கதைகள் சித்தரிக்கும் சமூக குறிப்புகள் நம் புரிதலுக்கு முக்கியமாகின்றன. நாமறியாத அந்நிய உலகம் இக்கதைகள் மூலம் நம் முன்னே விரிவடைந்து, புதிய சமூகங்கள் நம்மிடையே உறவு கொள்கின்றன.
Recent Comments