இரண்டாம் உலகப் போரில் நடந்த யூதப் படுகொலைகள் போதுமென்ற அளவிற்கு தொகுக்கப்பட்டுள்ளன.
திரைப்படம், நாடகம், புனைவு/அபுனைவு போன்றவைத் தவிர, இச்சரித்திரத்தின் இருண்ட பகுதியிலிருந்து தப்பியவர்களும் தங்கள் தரப்பு நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனாலும், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இக்கோரச் சம்பவங்கள் தொடர்பானத் தொகுப்புகள் புதிதாக வெளியாகிக்கொண்டிருக்கிறன.
இதற்கு என்ன காரணம்?
இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றுலாவுக்காக பெர்லின் சென்றிருந்தேன். Downfall என்ற படத்தில் ஹிட்லர் பங்கரில் பதுங்கியிருந்த கடைசி சில தினங்களை அற்புதமாக காட்சிபடுத்தியிருந்தார்கள். அதனால், பெர்லினை சுற்றிப்பார்க்கும் போது ஹிட்லரின் பங்கருக்கு முதலில் செல்லத் தோன்றியது. திரைப்படம் போலவே, தரைக்கடியே பல அறைகளைக் கொண்ட பங்கரைப் பார்க்கப் போகிறோம் என நினைத்திருந்தேன்.
ஆனால், கிழக்கு பெர்லினில், ’பிராண்டன்பெர்க் கேட்’ அருகே, ஹிட்லர் கடைசி சில தினங்கள் தங்கியிருந்த ‘பங்கரை’ மூடிவிட்டு, அதன் மேல் வாகன நிறுத்துமிடத்தைக் கட்டிவிட்டார்கள்.
எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக இம்மாதிரி சுற்றுலாத்தளங்களுக்கு வெளியே கம்பி போட்ட அறையில் நம்மிடம் விடாக்கொண்டனாய் பணம் பறிக்கும் டிக்கட் செண்டர்கள், சுற்றுலா தளத்தின் அளவை விட விஸ்தாரமாக ஹாட் டாக், பஞ்சு மிட்டாய், ஹிட்லர் மீசை வைத்த பொம்மை போன்ற கடைகள் என ஜோராக வியாபாரம் செய்வதற்காக வணிகமயமாக மாற்றப்பட்டிருக்கும் என எதிர்பார்த்தேன்.
ஆனால், அப்படி ஒரு இடமே இல்லாதது போல், பங்கரை மூடி வைத்ததோடு மட்டுமல்லாது அதன் மேல் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடமே அடையாளம் தெரியாத அளவு முக்கியத்துவமில்லாத மூலையாக இருந்தது. ஹிட்லர் மற்று ஈவாவின் உடலை அவர்கள் மெய்க்காப்பாளன் எரித்த இடம் இந்த இடத்திலிருந்து இருநூறு மீட்டர் தொலைவில் இருந்தது. அந்த இடம் இன்னும் மோசம். போக்குவரத்து அதிகமாயிருந்த தெருவுக்கு அருகே ஒரு முட்டுச் சந்தில் இருந்தது. இதைப் பற்றித் தெரியாமல் கடந்து செல்லும் மக்கள் அந்த இடத்தை குப்பைக் கொட்டும் இடமாக மாற்றியிருந்தார்கள். பொது இடத்தில் சிறுநீர் கழிக்கத் தடையுள்ளதால் மட்டுமே இந்த இடம் தப்பித்தது என நினைக்கிறேன்.
ஹிட்லரின் நினைவுகள் இன்றும் அவமானச் சின்னங்களாகவும், குற்ற உணர்வுடனேயே பார்க்கப் படுவதால் இம்மாதிரியான இடங்களை அடையாளமற்றதாக இருக்கிறது என எங்களுடன் வந்த கைடு கூறினார். வரலாற்று நிகழ்வுகளின் மேல் மண் தூவுவதால் அவை மறக்கப்படுமா என கேட்க நினைத்து, அவன் கை முட்டியை மடக்கி ஏதோ சொல்ல வந்ததால் கேட்காமல் விட்டேன்.
ஜெர்மன் எழுத்தாளர் பெர்னார்ட் ஷிலிங்க்(Bernhard Schlink) எழுதிய The Reader என்ற நாவலும் இப்படிப்பட்ட கேள்விகளை நம் முன் வைக்கிறது.
இத்தலைமுறையினருக்கு யூதப் படுகொலை பற்றிய அவலக் கதைகள் எதற்கு? வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு எனச் சுலபமாகப் பாடப் புத்தக பதிலைச் சொல்லி விடலாம். ஆனால், இப்படிப்பட்ட தொகுப்புகளைத் தொடர்வதினால் நாம் அடைவது என்ன? ஜெர்மனியர்களுக்குக் குற்ற உணர்ச்சி, யூதர்களுக்கு துவேஷம் மற்றும் அவமானம் ஏற்படலாம். ஆனால் மற்றவர்களுக்கு? வன்னி முகாம்கள், காஸா முகாம்கள் என நம்மைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளைப் போல் இதுவும் ஒன்று அவ்வளவுதானே?
திரைப்படங்கள், புத்தகங்கள், ஆவணப்படங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாக திரும்பத் திரும்ப இச்சம்பவங்களைப் தொகுப்பதினால் இவை சாதாரணத்துவத்தை அடைகிறது. இதனால், வரலாற்றுக் கொடுமைகள் இருகிய தேய்வழக்குகளாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் நம் தலைமுறையினர் இக்கொடுமைகளைப் பார்த்து, சட்டையில் படிந்த தூசியைத் தட்டுவது போல கடந்து செல்வார்கள்.
அதே நேரம், இவற்றைத் தொகுக்காமல் இழப்பதினால் வரலாற்று உண்மைகள் மறைந்து , மீண்டும் நடப்பதற்கு நாமே காரணமாகிவிடுவோம் அல்லவா?
இந்த இரு நிலைகளுக்கிடையே இக்கதை ஊசலாடுகிறது.
நாவலில், ஹன்னா என்ற ஜெர்மன் பெண்மணிக்கு ரயிலில் டிக்கட் கண்டக்டர் வேலை. ஹெபாடிடிஸ் வியாதியால் ரயிலில் வாந்தி எடுக்கும் மைக்கேல் என்ற பதினைந்து வயது சிறுவனை அவன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
பல மாதங்களுக்கு பின், நன்றி சொல்ல மைக்கேல் அவள் வீட்டுக்குப் போகிறான். சந்தப்பவசத்தால், அவள் உடல் இவனை ஈர்க்கிறது. அவளும் ஒத்துழைக்க, முப்பத்து ஆறு வயது பெண்ணும், பதினைந்து வயது சிறுவனும் உறவு கொள்கிறார்கள். இச்சம்பவத்துக்குப் பிறகு அவள் உடலை மைக்கேல் பூஜிக்கத் துவங்குகிறான்.
தினமும் பள்ளி முடிந்த பின் அவள் வீட்டுக்குச்சென்று ஒன்றாய் குளியல், பின்னர் உடலுறவு என்ற பழக்கத்துக்கு ஆளாகிறான். ஆனாலும், ஒவ்வொரு முறையும் அவள் அங்க அசைவும், உடல் பரிமாணங்களும் இவனை பித்தாக்குகிறது. அவள் உடல் லாவன்யத்துக்கு அடிமையாகிறான். பல மணிநேரங்கள் அவள் வீட்டில் கழிக்கத் துவங்குகிறான். தினமும் அவன் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் படித்துக்காட்டச்சொல்கிறாள். வேண்டாவெறுப்போடு படிக்கத் தொடங்கினாலும், இதுவே பழக்கமானதும் உடலுறவின் இன்பத்தை புத்தகங்கள் படித்துக்காட்டுவதில் அடைகிறான்.
இப்பருவத்தைத் தாண்டும் மைக்கேல் மெல்ல தன் கட்டுப்பாட்டுக்குள் வந்து தன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவு செய்யத் தொடங்குகிறான். இதைப் பார்த்து வெறுத்த ஹன்னா, அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் வேறொரு ஊருக்குச் சென்றுவிடுகிறாள். தன் நடவடிக்கைகளினால் சென்றுவிட்டதாக எண்ணி மைக்கேல் குற்ற உணர்வில் தவிப்பதோடு முதல் பாகம் முடிந்தது.
நாவலின் இரண்டாம் பகுதியில் ஹன்னா ஒரு யுத்தக் குற்றவாளியென்ற விவரம் மைக்கேலுக்குத் தெரிய வருகிறது. இப்போது மைக்கேல் ஒரு வழக்கறிஞன். அவன் பயிற்சிக்காக வேலை செய்யும் நீதிமன்றத்தில் ஹன்னாவின் வழக்கு நடத்தப்படுகிறது. ஒரு பார்வையாளனாக மைக்கேல் வழக்கை கவனிக்கத் தொடங்குகிறான்.
மைக்கேலின் ஊருக்கு வருவதற்கு முன்னர் ஹன்னா ஆவுஸ்விச் (Auschwitz) எனப்படும் யூத வதை முகாமில் பெண் காவலாளியாக வேலை செய்திருக்கிறாள். இது SS எனப்படும் ஹிட்லரின் ஜெர்மன் சோஸலிஸ்ட் கட்சியின் ஆணையில் செயல்படும் வதைமுகாம்.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம். ஒரு நாள், அந்த முகாம் மேல் குண்டு வீசப்படுகிறது. இதனால் ஹன்னா பெண் கைதிகளை அருகே இருந்த தேவாலயத்தில் தங்க வைக்கிறாள். வெளியே பூட்டிவிட்டு முகாமுக்குச் செல்லத் தொடங்கும்போது, தேவாலயத்தின் மேல் குண்டுகள் விழுகின்றன. ஒரு பத்து வயது சிறுமி மற்றும் அவள் தாய் தவிர அனைவரையும் தேவாலய நெருப்பு கொன்றுவிடுகிறது.
பல வருடங்களுக்குப் பிறகு இச்சம்பவத்தில் தப்பிய சிறுமி ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தைக் கொண்டு ஹன்னாவின் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காவலாளியாக தன் பொறுப்பிலிருந்து தவறியதால் ஹன்னா பிரதானக் குற்றவாளி.
The Reader என்ற தலைப்பு சில சமயம் படிப்பவர்களுக்காக கொடுக்கப்பட்டதோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால், இப்பகுதியில் பல தத்துவார்த்தக் கேள்விகள் வருகின்றன. எந்தக் கேள்விக்கு ஆசிரியர் பதில் சொல்வதில்லை. பதில்கள் நம் யூகத்திற்கே விடப்பட்டுள்ளன.
நாவலில் வரும் சில கேள்விகள்:-
இந்த தலைமுறை மக்கள் யூதப் படுகொலையை எவ்விதத்தில் எதிர் கொள்ள வேண்டும்? மறக்க வேண்டுமா அல்லது மனிதனுக்கு எதிராக நடந்த இந்த வன்முறையில் குற்ற உணர்வு சொண்டு சீர்த்திருத்தப் பணிகள் செய்ய வேண்டுமா?
பல ஊடகங்கள் வழியாக இக்கொடூர நினைவுகள் தேய்வழக்குகளாக மாறிவிட்டனவா?
இரண்டாம் போருக்குப் பின் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்ற யூதர்கள், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்திய பல வன்முறைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
வழக்கின் முடிவில் மைக்கேல் ஒரு முக்கியமாக திருப்பத்தை எதிர்கொள்கிறான். ஹன்னாவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. அவனுக்குத் தெரிந்த ரகசியம் மூலம், மைக்கேல் நினைத்திருந்தால் இத்தண்டனையை குறைத்திருக்க முடியும். ஆனால், கடைசி வரை ஒரு பார்வையாளனாகவே இருந்துவிடுகிறான்.
நாவலின் இரண்டாம் பகுதி முழுவதும் மைக்கேலின் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. அவளைக் காப்பாற்றாமல் விட்டதற்கு மைக்கேலில் குற்ற உணர்ச்சி ஒரு காரணம். ஹன்னா மறைக்க நினைக்கும் ரகசியத்தை வெளிக்கொண்டுவர மைக்கேலால் முடியும் - அதன் மூலம் அவளைக் காப்பாற்ற முடியும். ஆனால், அந்த ரகசியத்தை வெளிப்படுத்துவதைவிட ஆயுள் தண்டனை பரவாயில்லை என நினைக்கிறாள் ஹன்னா. அதனாலேயே அதை நீதிமன்றத்தில் சொல்லாமல், தண்டனையை ஏற்றுக்கொள்கிறாள்.
கைக்கேல் தன் குற்ற உணர்வை சரிசெய்வதற்காக இந்த ரகசியத்தை வெளிப்படுத்தினால் ஹன்னா மன்னிக்கவே மாட்டாள் என உணர்கிறான். இது தான் The Reader நாவலின் உச்ச கட்ட நாடகம்.
எந்த பக்கம் போனாலும் தனக்குச் சாதகமாக இருக்காது என்பதால் கைக்கேல் வெறும் பார்வையாளனாக இருக்கிறான். பின்னர், ஹன்னாவுக்கு பல புத்தகங்களைப் படித்து கேஸட்டாக சிறைச்சாலைக்கு அனுப்புகிறான். அவர்கள் உறவு மீண்டும் கேஸட் வழியாகத் தொடர்கிறது.
தகர டப்பா (Tin Drum), குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) போன்ற கிளாசிக்களுக்கு இணையாக இப்புத்தகத்தை விமர்சகர்கள் கருதுகிறார்கள். அடிப்படையில், இப்புத்தகத்தின் கரு இவ்விரு கிளாஸிக்குகளுடன் ஒத்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனாலும், தகர டப்பா மற்றும் குற்றமும் தண்டனையும் நாவல்களை இதனுடன் ஒப்பிட முடியாது என நினைக்கிறேன். முதலில், இவ்விரு கிளாஸிக்குகளும் முழுமையான சம்பவங்களால் தொகுக்கப்பட்டவை. குற்ற உணர்வு பற்றிப் பிரதானமாகப் பேசினாலும், குற்றமும் தண்டனையும் நாவல் பல தளங்களுக்கு இதை விரித்தெடுக்கிறது. The Reader ஒற்றை நிகழ்வை இரு பாத்திரங்கள் வழியே சித்தரிக்கும் ஒரு நாவல்.
தகர டப்பா மற்றும் குற்றமும் தண்டனையும் நாவல்கள் பல பரிமாணங்களைத் தொட்டுச் சென்று, மானிட பிரச்சனையாக குற்றத்தை சித்தரிக்கின்றன. இவ்விரு கிளாஸிக்குகளும் மனிதர்களின் அன்றாட நிகழ்விலிருந்து பல தளங்களுக்கு எம்பி மானிட உண்மைகளுக்குச் செல்லக்கூடிய கூறுகளைக் கொண்டவை.
The Reader நாவலில் இரு பாத்திரங்களின் மையச் சிக்கலாக மட்டுமே இப்பிரச்சனை நின்றுவிடுகிறது. இதனாலேயே மானிட வாழ்வின் அவலத்தைச் சித்தரிக்கத் தவறிய படைப்பாகிறது.
Recent Comments