இது Daniel Barenboim மற்றும் Edward Said எழுதிய Parallels and Paradoxes - Explorations in Music and Society என்ற புத்தகத்தைப் பற்றிய பதிவு.
இது இரு கலைஞர்களின் உரையாடல் தொகுப்பு. இருவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை, கருத்துவேறுபாடு, ஆர்வம் என உரையாடல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது போல் இருக்கிறது. அரசியல், இசை, ஆளுமைகள் என இவர்களின் உரையாடல் தொட்டுச் செல்லாத திசைகளே இல்லை.
யார் இவர்கள்?
ஒருவர் - சிகாகோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பெர்லின் ஒபரா அமைப்புகளின் இசை ஒருங்கிணைப்பாளரான டேனியல் பாரென்பாய்ம் (Daniel Barenboim) .இவர் 1942ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் பிறந்த யூதர். ரஷ்யாவிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் வளர்ந்த டேனியலின் தந்தை, இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் நடந்த யூத எதிர்ப்பு காரணமாக இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார்.
மற்றொருவர், எட்வார்ட் செய்ட்(Edward Said). கொலம்பியா பல்கலைக்கழக ஆங்கில பேராசியர். இலக்கியம் மற்றும் சமூகவியல் துறையின் பிரபலமானச் சிந்தனைவாதி. அரபு-இஸ்ரேல் நாட்டின் சர்ச்சைகளைப் பற்றி வெளிப்படையாக பேசி வந்தவர். இவர் 2003 ஆண்டு அமெரிக்காவில் காலமானார்.
சாஸ்த்ரீய இசை மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன அரசியல் நிலவரங்கள் இவர்கள் இருவரையும் இணைக்கும் புள்ளியாகிறது. பல வருடங்களாக இசை மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி தங்கள் கருத்துக்களை இவர்கள் இருவரும் தனித்தனியாக முன்வைத்து வந்திருக்கின்றனர்.
இரண்டு வருடங்களாக பல நாடுகளில் இவர்கள் சந்திக்கும்போதெல்லாம் நடந்த உரையாடலின் தொகுப்பு இது.
பீத்தோவன், ஷோன்பெர்க் போன்ற இசை மேதைகளின் இசையை டேனியல் பல வருடங்களாக ஒருங்கிணைத்து வருகிறார். இதிலென்ன பெரிய விஷயம்? பீத்தோவன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதிய இசை இப்போது நோட்ஸ்களாகக் கிடைக்கிறது. எந்தெந்த வாத்தியக்கருவி எங்கெங்கே ஒலிக்க வேண்டும் என அதில் இருக்கும். இக்கோப்புக்கள் கிடைக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் இதை நிகழ்த்தி விடலாமே? டேனியல் செய்ததில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?
இசை ஒருங்கிணைப்பாளர்களின் பணி இங்கு மிக முக்கியமாகிறது.
இசையை தங்கள் வாழ்விலிருந்து இசைக்கலைஞர்கள் கோர்க்கிறார்கள். தங்கள் வாழ்வில் இழையும் காதல், கோபம், வெறுப்பு, அரசியல் சார்பு போன்ற அனைத்தையும் படைப்பில் நிரப்புகிறார்கள். எழுத்துகளாக எழுத்தாளர்கள், வண்ணம் வடிவமாக ஓவியர்கள், நோட்ஸாக இசையமைப்பாளர் தங்கள் எண்ணங்களை வடிக்கின்றனர்.
கலைஞர்களின் வாழ்விலிருந்து அவர்களின் படைப்பில் தாவி, படைப்புகளிலிருந்து மற்றவர் வாழ்வுக்குள்ளும் தாவியபடி இந்த உணர்வு பரிமாற்றம் நடந்துகொண்டேயிருக்கிறது.
இலக்கிய உலகில் விமர்சகர்கள் படைப்புகளை விரிவாக ஆராய்ந்து புது அர்த்தங்களை வெளிக்கொண்டு வருவதைப் போல், ஒருங்கிணைப்பாளர்கள் (Conductors) சங்கீத விற்பன்னர்களின் இசைக்கு புது விளக்கங்கள் கொடுக்க முற்படுகிறார்கள். இதனாலேயே ஒரே இசையை நாம் பலவிதங்களில் கேட்க முடியும். இப்படி பலவிதங்களில் கேட்க தகுதியுள்ள இசை, பல உணர்வுகளைத் தன்னுள் அடக்கியிருக்கும். இப்படியாக காலத்தைத் தாண்டி ஜீவிக்கக்கூடிய தகுதியை உண்டாக்கும்.
உதாரணத்துக்கு, பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனி எடுத்துக்கொள்வோம்.
ஐரோப்பாவை ராஜ குல சாம்ராஜ்ஜியங்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்க உஜ்ஜீவித்த வீரனாக நெப்போலியனை உருவகப்படுத்தும் இசை. நெப்போலியன் சாமானிய மக்களைக் அடிமை நிலையிலிருந்து காப்பதற்காக பல நாடுகளை வெல்லத் தொடங்கினான். மக்களும் அவனை நம்பினார்கள். மெல்ல கொடுங்கோல் ஆட்சிகளைக் காணாமலாக்கினான். அவன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த நாடுகளில் சுதந்திரம், சுபிட்சமும் கரைபுரண்டு ஓடும் என மக்கள் நம்பி நெப்போலியனை ஆதரித்து வந்தனர்.
மெல்ல அந்த பிம்பம் கலைந்து,நாடுகளைப் வெல்லும் விளையாட்டு மட்டுமே இவனுக்குப் பிடித்தமானது என்பதை மக்கள் உணர்ந்தனர். அடுத்த நாட்டைப் படையெடுக்கும் வேட்கையில், தான் வென்று கைவிட்ட நாட்டைப் பற்றிய அக்கறை இவனுக்கில்லை.
ஐந்தாவது சிம்பொனியை நெப்போலியனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் பீத்தோவன். நெப்போலியனின் போர் வெறியால் மனம் வெறுத்தார். அரங்கேற்றத்துக்கு முன்னால் நெப்போலியனின் பெயரை கோப்புகளிலிருந்து அழித்து விட்டார்.
இதனால்,இன்றும் இச்சிம்பொனியின் உள் அர்த்தங்களை பலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தொடக்கத்தில் ஒலிக்கும் நான்கு நோட்கள் நெப்போலியனின் வருகையைக் குறிப்பதாக அர்த்தம் கொடுக்கப்பட்டது. இன்றளவும் இத்தொடக்கத்தை மிஞ்சக் கூடிய சிம்பொனி இல்லை. மெல்ல சக்திவாய்ந்த ஆளுமையின் பின்னணியாக இது மாறியது.
இப்படியாக இசையின் ஒவ்வொரு நோட்டில் பல அர்த்தங்களைக் காண முடியும். இது இசை விமர்சகர்களுக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு. மிகவும் அகவயமான நிலைப்பாடுகளால் மட்டுமே இப்படிப்பட்ட அர்த்தங்களை உருவாக்க முடியும் என்பதால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அர்த்தங்கள் மாறுபடும்.
இதனால் இன்றைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் இப்படிப்பட்ட புது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு இசையை மேடையேறுகிறார்கள்.
பீத்தோவன் அன்றைக்கிருந்த அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்து எழுதிய இசை இன்றைக்கு எப்படி அர்த்தப்படுத்த முடியும்?
இசை உருவாக்குவது , இசையை நிகழ்த்திக் காட்டுவது - எழுதுவது, படிப்பது போன்ற செயல்களா? இசை உருவாக்குவது, புத்தகம் எழுதுவதும் ஒரேவிதமான செயல்முறையாக இருக்கலாம். ஆனால், மேடையில் நிகழ்த்திக்காட்டும் இசை வடிவங்களுக்கு ஒப்பான நிகழ்வு மற்ற இயல்களில் உள்ளதா?
இப்படிப்பட்ட கேள்விகளைத் தவிர, இசையைக் கேட்கும் மக்கள் மனநிலை, இசை வரலாறு போன்ற பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிய இந்நூலாசிரியர்கள் பேசிக்கொள்கிறார்கள். நாம் புரிந்து கொள்ளும் இசை, அதன் சிக்கல்கள், இசைக்கும் மெளனத்துக்கும் உண்டான தொடர்பு போன்ற பதிலில்லாத பல கேள்விகளும் இந்த உரையாடலில் இடம்பெறுகிறது.
இவ்வுரையாடல்கள் மூலம் இசை காட்டும் மற்ற பரிமாணங்கள் நம்முள் கேள்வியாக தொக்கி நிற்கின்றன.
இப்புத்தகத்தின் மற்றுமொரு முக்கிய விவாதம் அரசியல் தொடர்பானது. இஸ்ரேல் நாடு யூதர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. ஆனால், அங்கு தடை செய்யப்பட்ட பல விஷயங்களில் வாக்னரின் இசையும் ஒன்று என்பது நம்மில் பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.
வாக்னர் என்ன செய்தார் ?
வாக்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மனி நாட்டு இசைக்கலைஞர். ஒபெராக்களின் தந்தை என அழைக்கப்படுபவர். இசை ஜீனியஸ். இதையெல்லாம் தாண்டி - ஒரு யூத எதிர்ப்பாளர். இவர் யூத வன்மத்தை உமிழ்ந்த புத்தகங்கள், ஹிட்லரின் சோசியலிஸ்ட் கழகத்தின் தாரக மந்திரமானது. SS அமைப்பின் யூத எதிர்ப்புக் கோட்பாடுகளை இவர் எழுத்துக்கள் உருவாக்கின என்றும் வாக்னர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
அதுமட்டுமல்லாது, இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, ஜெர்மன் நாட்டு வதை முகாம்களில் பல அப்பாவி யூதர்கள் விஷவாயு அறைகளில் கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் முகாமில் வாக்னரின் இசை ஒலிபெருக்கியில் ஒலிக்கும். இதைக் கேட்டுக்கொண்டே செத்துப் போ என சாபமிட்டது போல நடந்த சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
இதனால் வாக்னரின் இசையை இஸ்ரேல் நாட்டில் நிகழ்த்த முடியாமல் இருந்தது.
டேனியலும், எட்வர்ட்டும் இத்தடையை உடைத்தெறிந்தனர். வாக்னரின் இசையை இசையின் இயல்புகளுக்காகக் கேட்க வேண்டுமென்றும், அவர் அரசியல் நிலைப்பாடுகளால் இப்படிப்பட்ட அற்புதமான இசையை புறக்கணிக்கக்கூடாது என்றும் வாதிட்டனர். இதன் விளைவுகள் பற்றிய பல விவாதங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. அரசியல் பேச்சுவார்த்தைகளை மீறி மக்களை இணைக்கும் சக்தியாக இசையை இவர்கள் கையாள்கிறார்கள்.
இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு இணைந்துத் தொடங்கிய West-East Diwan என்ற குழு இஸ்ரேல், பாலஸ்தீனம்,காஸா போன்ற நாடுகளிலிருக்கும் இசைக்கலைஞர்களை சேர்த்து ஒரு குழுவாக உருவாக்கியுள்ளது. பிரச்சனை மிகுந்த பல நாடுகளுக்கு சென்று இவர்கள் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது எனத் தெரிந்தாலும், இசை மூலம் மக்களை இணைக்கும் பாலம் உருவாக்க முடியும் என்பதில் தீவிரமான நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டுப் பிறப்பு , நான்கு நாடுகளின் குடியுரிமை, பெர்லின் இசைக்குழுவின் தலைவர் என் பல அடையாளங்களோடு டேனியல் செயல்பட்டு வருகிறார். இவர் சுமக்கும் ஒவ்வொரு அடையாளமும் தனித்தன்மை வாய்ந்தது. மற்ற அடையாளத்துடன் ஒரே பந்தியில் அமராதது.
இருந்தாலும், ஒரு நடமாடும் சமாதான மையமாக டேனியல் செயல்பட்டு வருகிறார். இசையில் தொடங்கிய வாழ்க்கை பல தளங்களுக்கு இவரை எடுத்துச் சென்றுள்ளது. இன்று ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அமைதிக்கு குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.
சமூக பிரச்சனைகளையும், Orientalism என்ற மத்திய கிழக்கு நாடுகளின் சமூக அடையாளகளைப் பற்றி எட்வர்ட் செய்ட் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்தவர். இசையில் தேர்ச்சி பெற்றவர். மக்களை இணைக்கும் ஊடகமாக சமூகத்தில் இசை ஊடுருவ முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர்.
தங்கள் வாழ்வின் வெற்றிகளையும், இருண்ட மூலைகளையும் வெளிப்படையாக இருவரும் பகிர்த்து கொள்கிறார்கள். பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இசை மற்றும் உலகச் சமாதானத்தில் ஆயுதத்தின் தேவையின்மை பற்றி ஒரேவிதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.
மிகச் சிறப்பான கேள்விகள், இயல்பான உரையாடல் என இப்புத்தகம் நமக்கு உலகத்தை புது கோணத்தில் காட்டுகிறது.
டேனியல் எழுதிய Everything is Connected என்ற புத்தகத்தைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்.
Recent Comments