வார்த்தை இதழில் வெளியான தமிழாக்கச் சிறுகதை.
மூலம்:
இந்த சிறுகதை மே தெல்மிசானி (May Telmissany) அவர்கள் எழுதிய 'துன்யாசத்' (1997) என்ற கதையின் தமிழாக்கம். மே தெல்மிசானி கெய்ரோ நகரில் பிறந்து , பிரென்சு இலக்கியம் பயின்று, கனடா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். பதினைந்து மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட கதை இது.
*
சாப்பாட்டு மேஜையில் எதிர் எதிரில் நாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.வலது மூலையில் அவன் வரைந்து கொண்டிருக்க நான் மற்றொரு மூலையில் எழுதிக் கொண்டிருந்தேன்.
திடீரென நிமிர்ந்து 'அம்மா! நான் இன்னிக்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன்' என மெதுவாகச் சொன்னான்.அவன் சிரிப்பில் ஒரு முதிர்ச்சி தெரிந்தாலும் சற்றே வெட்கப்பட்டான்.
ஷெபாப்!?நான்கு வயதான ஷெபாபா? சுயநினைவிழந்து பேனா என் கையிலிருந்து நழுவியது.'அவள் பெயர் என்ன?' கண்கள் பளிச்சிட அவனிடம் கேட்டேன்.
அவன் பதிலேதும் சொல்லவில்லை.மறுபடியும் எழுததொடங்கினாலும் ஒரு இருப்பின்மை அரித்துக் கொண்டிருந்தது. அவன் தன்னையே வரைந்து வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான்.ஒரு பெரிய வட்டம் , அதன் நடுவில் வாய் மற்றும் கண்களுக்கு சிறிய வட்டம் இட்டு, அதனினும் பெரிய வட்டத்தை பெருத்த உடம்பிற்கு போட்டான்.உடம்பிலிருந்து இரு வட்ட கால்கள் தொங்கிக் கொண்டிருந்தது.
'அவள் பெயர் சல்மா' - சிறு இடைவேளிக்குப் பிறகு சொன்னான்.ஒரு மென்மையான புன்முறுவல் ,எங்கள் எண்ணங்களிலுள்ள சல்மாவின் முகத்தைப் போல, இருவரிடமும் வெளிப்பட்டு இடம்மாறின.
'சல்மா ?' ( அந்தப் பெயரில் எனக்கு ஒரு நண்பி இருக்கிறாள்)
'ஆமாம். இப்போது தான் ஞாபகம் வந்தது' -( ஒருவேளை அவன் மறக்க முடியாததாகவும் இருந்திருக்கலாம் )
'அவளிடம் பேசினாயா ?'
ஆதிகால பல்லியையும் ஒரு டைனோசரையும் வரைந்து கொண்டே 'இல்லை' என சாதாரணமாகச் சொன்னான்.
அவன் மேற்கொண்டு சொல்லும்வரை பொறுப்பது என எனக்குள்ளிருந்த கேள்வி கேட்கும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டேன். இறுக்கமான அந்த அறையில் எங்கள் நெருக்கம் பல கேள்விகளாக தொக்கி நின்றது.
இவனுடைய வகுப்பாக இருப்பாளோ? எப்போது முதலில் கவனித்திருப்பான்? என்ன உடை அணிந்திருந்தாள்? என்னைப் போல கறுப்பு தலைமுடி இருக்குமோ? ஏன் அவளிடம் பேசாமல் இருந்தான்? அவள் நல்லவளா கெட்டவளா?
'நான் முழித்துக் கொண்டபோது என் முன்னே நின்று கொண்டிருந்தாள்' (தூக்க இடைவேளையில் பார்த்திருக்கிறான்)
கண்டதும் காதல். ஏதாவது கனவில் பார்த்திருப்பான் அல்லது அவளது முகத்தையே கனவாகக் கற்பனை கொண்டிருப்பான். ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஷெபாப்-அல்-தின் தன் உணர்வில்லாமலே சல்மாமேல் காதல் கொண்டிருக்கிறான்.
'அம்மா! நான் சல்மாவை காதலிக்கிறேன்'
ஆக அவனுக்கும் புரிந்திருக்கிறது.மேஜை மூலையிலிருந்து மறு மூலைக்கு ஓடிச்சென்று அவனை இறுக்கித் தழுவிக் கொண்டேன். இந்த விளையாட்டை கடைசிவரை தொடர முடிவு செய்தேன். அந்த சிறுவனின் இதயம் சோர்வடைந்திருக்கிறது; சல்மாவை பார்ப்பதர்க்கு இன்னும் இரண்டு நாட்கள் அவன் காத்திருக்க வேண்டும். அவனை அடையும் என் கடைசி முயற்சியாக அவனை இறுக அணைத்துக் கொண்டேன்.என் பிடியிலிருந்து நழுவ போராடி கடைசியில் வெற்றியும் கொண்டான். சல்மாவின் அழகிய உருவத்தால் இதயம் கனத்த நான்கு வயது சிறுவன்.
நான் சந்தோசமாக சிரிப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டான். அவனை கிண்டல் செய்வதாக நினைத்து சிறிது கூச்சப்பட்டான்.
' அம்மா நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன்' . முதிரா வயதில் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியை நல்ல முறையில்தான் சமாளிக்கிறான். மற்றொரு பெண்ணிற்காக இப்போதே என்னைவிட்டு போக மாட்டான்.
'செல்லகண்ணா! நான் ஏற்கனவே அப்பாவை கல்யாணம் செய்துவிட்டேனே'.
அவன் முகபாவத்தில் ஒரு சந்தோஷமான நிம்மதி தெரிந்தது.கடும் மழை காலத்தில் சிதறி ஓடும் மேகங்கள் போல எங்கள் இறுக்கம் தளர்ந்தது.
நான் முடிவெடுத்துவிட்டேன்: அடுத்த ஞாயிற்றுக்கிழமை பாலர்பள்ளியிலிருந்து அவனை அழைத்து வரும்பொழுது அவளை காட்டச்சொல்லப் போகிறேன்.
என் எண்ணத்தை படித்தவன் போல் - 'என் வகுப்பில் இரண்டு சல்மாக்கள் உண்டு' என்றான்.
'இருவரா?'
'ஆம், அழகு மற்றும் அவலட்சண சல்மா'
' நீ யாரை காதலிக்கிறாய்?'
' அழகு சல்மா'
' அவளிடம் பேசிப்பாரேன்'
' தெரியவில்லை...' என கூசினான்.
அப்பா போலவே பிள்ளை.என்னை காதலிப்பதாக ஒத்துக்கொள்ள ஆறு மாதமும் , அதன் பிறகு வீட்டிற்கு வந்து பேச ஆறு மாதங்களும் ஆனது நினைவிற்கு வந்தது. தொண்ணூறுகளின் காதலர்கள் பொம்மை சித்திரங்களின் மேல் கொண்ட மோகம் போல , அவன் முதல் முறை பரிசாகக் கொண்டுவந்த பொம்மையும் ஞாபகம் வந்தது.
' நீ அவளுக்கு ஒரு பொம்மை தேர்ந்தெடுத்துக் கொடு'
அவன் படம் வரைவதை நிறுத்திவிட்டான். இந்த விஷயம் அவனது ஆர்வத்தை தூண்டியது. அவன் நாற்காலியிலிருந்து குதித்து என் கையை பிடித்து தன் அறைக்குள் அவசரமாக இழுத்துச் சென்றான். அவனுடைய பொம்மைகளெல்லாம் படுக்கையிலும் அலமாரியிலும் சிதறிக் கிடந்தது. பியானோவை தேர்ந்தெடுத்தான் - அது ஒரு விலைமிகுந்த பொம்மை. இந்த பிள்ளை சரியான மன்மதன் தான்..அப்பாவைப்போல இல்லை!! அந்த பியானோ அவனுக்கு பிடிக்காதது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
'செல்லம், அது பெரிய பொம்மைப்பா!'
அதை ப்டுக்கையில் எறிந்து என்னை அதிரவைத்தான்.
'நான் எதைதான் தேர்ந்தெடுப்பது?'
ஷெபாப் ஒரு மிதுன ராசிக்காரன் என்பதை மறந்த என்னை மெலிதாக கடிந்துக் கொண்டேன். இப்போது நேரம் கடந்துவிட்டது; முடிந்தது-முடியாதது என்ற ரெட்டை நிலையில், இரண்டிலும் தெளிவாக உள்ளோம்.ஏற்றுக்கொள்ளாத பொம்மைகளெல்லாம் படுக்கையில் எறியப்பட்டது;இது பெரியது;சின்னது;இது எனக்கு பிடித்தது;இது மாமா கொடுத்த பரிசு;சிறுமிகளுக்கு இது பிடிக்காது...
'அம்மா, சிறுமிகள் எதை வைத்து விளையாடுவார்கள்?'
என்னையே கேட்டுக்கொள்ளாத சுலபமான கேள்வி.துன்யாசதுக்கு பிறகு எனக்கு வேறு சிறுமிகளைப் பற்றி நினைப்பு வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு வாங்கிக்கொடுக்க நினைத்ததில்லை.
'பொம்மைகள்,சின்ன மிருகங்கள், சத்தம் செய்யும் விளையாட்டுப் பொருட்கள்'
அவன் சுலபமாகத் தேர்ந்தெடுக்க எல்லா பொம்மைகளையும் ஒரு நோட்டம் விட்டேன். அது சுலபமான காரியமாக எனக்குத் தெரியவில்லை. கரீம் என்ற ஒரு சிறிய பொம்மையை முதலில் தேர்ந்தெடுத்தான். தன் முடிவை மாற்றிக்கொண்டு ஒரு பச்சை வண்ண எஸ்கிமோ பொம்மையை தேர்ந்தெடுத்தான்.பிறகு ஒரு மர பொம்மை;போலீஸ் வண்டி,ரயில் வண்டி;மரக் கட்டிகள் - கடைசியில் ஒன்றும் தேர்ந்தெடுக்கவில்லை.
' முதலில் அவளிடம் பேசிப்பாரேன்.உனக்கு பிடித்திருந்தால் பரிசு வாங்கிக் கொடுக்கலாம்'
' அவள் நல்லவளில்லை என்று சொல்கிறாயா அம்மா? ' என அழ ஆரம்பித்தான்.
தப்பான ஆட்டத்தை ஆடிவிட்டேன். ' நான் அப்படிச் சொல்லவில்லைமா செல்லம்' என மெலிதாகச் சொன்னேன்.
' நீ அப்படித்தான் சொன்னே'
மற்ற சிக்கலான பிரச்சனைகளுக்குள் அடியெடுத்து வைக்கவும் பரிசுப் பொருட்கள் தேர்ந்தெடுக்கும் அணிவகுப்பை நிறுத்தவும் சரியான வழியாத் தெரிந்தது.
'நான் நண்பர்களுடன் விளையாடப் போகிறேன்'
இந்தப் பிரச்சனைக்கு முடிவு கொடுக்க இது மூன்றாவது வழியாக எனக்குப் பட்டது. ஆனாலும் அவனுக்கு ஒரு சிக்கலான வழியை கூறியதாக அவனை அணைக்கும் போது தோன்றியது. அவன் கோபமாக என்னை விட்டு விலகியது எனக்கு குற்றவுணர்ச்சியை தூண்டியது.
சல்மாவிற்கு பொம்மை தேட பாதி இரவையும் , அவள் அழகிய பிம்பத்தை என் மகனின் மூளையிலிருந்து கலைக்க மீதி இரவையும் செலவு செய்தேன்.உபயோகமற்ற பல முயற்சிகளில் அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றுகொண்டிருந்த போது அவன் வீட்டை சுத்தி வந்துகொண்டிருந்தான்.சில நேரம் நல்லவள் , பிறகு கெட்டவள், சில நேரம் அவன் அவளுக்கு கேக் வாங்கிக் கொடுப்பான், மறு நிமிடம் அவள் பரம வைரியாகவும் வகுப்பில் பாராமுகத்துடன் இருப்பான்.
இதற்குள் சல்மா தன் சிறு படுக்கையில் தூங்கியிருப்பாள். அவள் சிரிக்கும்போது பற்கள் நேர் வரிசையில் இல்லாமலிருக்கலாம்; அவள் சிரிக்கும்போது பார்க்கும் ஷெபாப் தன் மனதை மாற்றிக்கொள்ளக்கூடும். வகுப்பில் அவளே அழகானவளென நினைப்பு அவனுக்கு தோன்றாது. சுடு நீரில் ஒர் அற்புதமான குளியல் கொடுத்தால் நிதானமடைந்துவிடுவான். அதன் பிறகு ஜமீல் என்ற யானை மற்றும் அப்தெல் ஃபதா என்ற முதலைக் கதையயை கூறுவேன். சல்மாவின் உருவத்துடன் அவன் தூங்க கண்களை மூடும்போது , நாளைக்கு நாங்கள் செல்லும் மிருக காட்சி சாலையும் அதிலுள்ள ஒட்டகம் , குதிரை மற்றும் யானைகளையும் ஞாபகப்படுத்த வேண்டும். நாளைக்கு செல்லப்போவதும் அவன் கனவின் நினைப்பை முற்றிலும் அழிக்காது.சிறிய பியானோவை நினைத்து அவன் நடு இரவில் நிலையில்லாமல் தவித்ததை நான் உணர்ந்தேன். அவனை சற்றே உலுக்க என்னை மிதமாக அணைத்துக்கொண்டான்.
அந்த மேன்மையான மயக்க நிலையில் , எங்கள் மத்தியில் முதல் காதலின் உருவம் தைக்கப்பட்டிருந்தது.
Recent Comments