பொதுவாகப் பாடல்களைக் கேட்கும்போது தோன்றும் பிம்பங்கள் நம் நினைவிலிருந்தே எடுக்கப்படுகின்றன. நம் அனுபவங்களை இசை வடிவில் சந்திக்கிறோம். நாம் பார்க்கும் விஷயங்கள் ஞாபகத்தில் தங்கிவிடுவது போல், இவை தனிப்பட்ட கூறுகளாக நம் நினைவுகளுடன் புது நட்புகொள்கிறது என நினைக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களாக இருப்பதால், இசை நம்முள் நிறைக்கும் ரகசியங்கள் பிடிபடாமலேயே இருக்கின்றன.
பாறைகளுக்கிடையே வழுக்கி ஓடும் ஆறு, தெளிவான பிம்பங்களாய் தெரியும் அதன் படுகை, மெல்லிய நீரோடையின் சத்தம், எப்போதோ நம் நாசியை நிறைத்த வாசனை போன்ற வெளிப்புறச் சம்பவங்கள் நினைவுகளாக நம்மிடையே தங்கிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஆழ்நினைவுகளை வார்த்தைகள், இசை போன்ற ஊடகங்கள் வழியாக கலை நமக்கு மீட்டித் தருகிறது. இதில் இசையின் பங்கு அதிகம். இதனாலேயே ஒரு நாட்டில் உருவாகும் இசை உலகின் வேறொரு மூலையில் இருப்பவரையும் ஆட்கொள்கிறது போலும்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் Between Heaven and Earth என்ற சீன மொழிப்படத்துக்கான பின்னணி இசையை மிகவும் ரசித்திருக்கிறேன்.பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த இரு வாரங்களாக மீண்டும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரகுமானின் முத்திரை இருந்தாலும், இது அவர் இசையமைத்த திரைப்பட பாடல்களை விட வித்தியாசமாக இருக்கிறது.
நான் இந்த திரைப்படத்தைப் பார்த்ததில்லை. கதை என்ன என்று கூடத் தெரியாது.ஆனால், இப்படத்தின் இசையைக் கேட்கும்போது `போரும் அமைதியும்` என்ற ஆல்பத்தின் நினைவு வந்ததை தவிர்க்க முடியவில்லை. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை, ஒபரா வடிவில் செர்கி பிரொகோஃபீவ் (Sergei Prokofiev) என்ற ரஷ்ய இசையமைப்பாளர் உருவாக்கினார். முழு ஒபரா ரஷ்ய மொழியில் இருந்ததால், மொழிச்சிக்கலால் இத்தொகுப்பு கவனம் பெறவில்லை.பல வருடங்களுக்குப் பிறகு, அதன் பின்னணி இசை மட்டும் தனியாக வெளியாகி உலகெங்கிலும் பிரபலமானது.
செர்கியின் பாடல்களில் பல தாள வாத்தியக் கருவிகள், பலநூறு மக்களின் வீர முழக்கம், சண்டையின் உக்கிரமான பேரிரைச்சல் வழியே போருக்கான பிரம்மாண்ட இசை வடிவங்களை அமைத்திருப்பார். அதே போல் மெல்லிய ஓலங்கள், ஊழிக்காற்றின் ஒலி, ஒற்றை குழலிசை, சோகமான வயலின் போன்றவை போருக்கு பின் வரும் அமைதியை உணர்த்தும் விதத்தில் கச்சிதமாக ஒன்றுசேர்த்திருப்பார்.
அப்படிப்பட்ட அனுபவங்களும், இசையின் பிரம்மாண்ட கட்டமைப்புகளும் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ஆல்பத்திலும் நமக்குக் கிடைக்கின்றன.
சொர்கத்துக்கும் உலகத்துக்கும் இடைப்பட்ட இடமென்றவுடன் எனக்கு மலைகளே ஞாபகத்துக்கு வந்தன. வானையும் கிழித்துக்கொண்டு பிரம்மாண்டமாக நிற்கும் இவை உலகின் மிகத் தனிமையான இடங்கள். குறிப்பாக இந்திய-சீன எல்லைப் பகுதியில் இருக்கும் நந்தா தேவி, தேவதுங்கா எனப்படும் எவரெஸ்ட் சிகரங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
மலைகள் தரையிலிருந்து செங்குத்தாக வானளக்கும் ஒற்றை வடிவமல்ல;பல மேட்டுப்பகுதிகள் அடுக்கடுக்காக பிரம்மாண்ட சிகரங்களின் தொகுப்பை உருவாக்குகின்றன. நில அமைப்புகள் மோதிக்கொள்வதால் பல நூற்றாண்டுகளாக உயரும் இப்பகுதிகள் ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் வளர்ந்துகொண்டேயிருப்பவை.
அதேபோல், சின்னச் சின்ன ஒலித்துண்டுகளைச் சேர்ப்பதால் இசை உருவாகிறது. சரியான முறையில் கோர்க்கப்படும் ஒலித்துண்டுகள் கம்பி போல கலைஞனின் மகா குறிக்கோள்களைச் சாத்தியமாக்குகிறது. இப்படிப்பட்ட ஒலித்துண்டுகள் ஒன்றாக பெருகுவதால் இசையின் பெரிய கட்டுமானத்தை இசைக்கலைஞர்களால் அடைய முடிகிறது.
பீத்தோவனின் இசையில் மலையென பெருக்கும் கட்டுமானங்கள் உள்ளன என இசை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே இவர் இசையை பெரும் சிகரங்களுடன் ஒப்பிடுவர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இத்தொகுப்பிலும் இவ்வகை ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இத்தொகுப்பு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் கதையைச் சொல்வது போலிருக்கிறது. சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம், அந்த நிலப்பகுதியுடன் இயற்கையின் உறவு, சாம்ராஜ்ஜியத்தின் இறையாண்மை, எதிரிகள், போரின் தீவிரம், பிரெளயம் போல் போர் முடிந்து அமைதி என எல்லா கருக்களையும் இப்பாடல்கள் நினைவூட்டுகின்றன. இவ்வகையில் இது ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வரலாறாக நம்மிடம் பேசுகிறது.
இப்பாடல்களை கேட்கும்போது எனக்குத் தோன்றிய சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். இவை எனக்குத் தோன்றிய அர்த்தங்களே. நீங்கள் இத்தொகுப்பைக் கேட்கும்போது வேறொரு அனுபவம் நேரிடலாம். உதாரணத்துக்கு, இத்தொகுப்பில் பவுத்த மதத்தின் மரபிசை வடிவங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது தப்பாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட அகவயமான அனுபவங்களைப் பொதுப்படுத்த முடியாது !
குறிப்பாக, தண்ணீர்(Water), குதிரைகள் (Horses), மலைகள் (Mountains) என்ற மூன்று பாடல்களும் பெரும் மலைப்பகுதிகள் கொண்ட சீனாவின் மரபார்ந்த ஒலிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.ஏனோ Lower Octave புல்லாங்குழல் கேட்கும்போது மலைகளுக்கிடையே அமைதியாக ஓடும் ஏரியை நினைவூட்டியது. இதைத் தொடர்ந்து பெரும் டிரம்ஸ் ஒலிகளுடன் அமைந்த வயலின் பகுதி, அந்த நிலப்பகுதியில் நிகழக்கூடிய அபாயத்தை அறிவிப்பது போல் மெளன அழுகையாக இருக்கிறது.
அடிப்படையில், இப்பாடல்கள் அனைத்தும் பெளத்த சோகத்தை உருவகப்படுத்துவது போல் எனக்குத் தோன்றுகிறது. பல பாடல்களில் புத்தமத மந்திரங்களும், பிட்சுக்களின் சங்கு/மணி சத்தம் பின்னணியில் உறுத்தாமல் ஒலிக்கின்றன. இவை சீன மரபிசைக்கான தொடர்பை நிலைநாட்டுகின்றன. திரைப்படத்துடன் பார்க்கும்போது இசை மேலும் நன்றாக அனுபவிக்கலாமென நினைக்கிறேன். (அதாவது திரைக்கதை நன்றாக இருந்தால்!!)
எனக்கு Buddha's Remains,Desert Storm மற்றும் Warriors of Heaven and Earth மிகவும் பிடிந்திருந்தன. உக்கிரமான போர் நிகழ்வை கொண்டு அமைத்த பிரம்மாண்ட டிரம்ஸ் மற்றும் வயலின் இசை, அதன் பின்னணியில் மெல்ல ஒலிக்கும் புல்லாங்குழல் மற்றும் ஜபங்கள் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ரஹ்மான் உபயோகப்படுத்தும் தொழில்நுட்ப உத்திகளான - இசை வரிசையை (Scale) திடீரென மாற்றுவது, ஒரே பாடலில் பலவித தாள ஆராய்ச்சிகள் - போன்றவை அதிகமாகத் தென்படவில்லை. பல புது ஒலிகளை உபயோகப்படுத்தி உள்ளார். பொதுவாக நவீன இசைமுறைகளைப் பயன்படுத்தும் ரகுமான், இதில் மிகத் தீவிரமான மேற்கிசை கிளாஸிகல் வடிவத்தைக் கையாண்டுள்ளார். திரைப்படத்தின் கரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.
பழைய இசை முறையாக இருந்தாலும், நவீன பாணியில் புது ஒலிகள்/குரல்களையும் மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார்.இத்தொகுப்பு வெளிவந்த புதிதில் இந்திய விமர்சகர்களின் கவனத்தை கவரவில்லை. என்றாலும், இத்தொகுப்பு ரஹ்மானின் திரையிசை பாணியை விட தேர்ந்த இசை அமைப்புகளுடன் மிக வித்தியாசமான முறையில் உருவாகியிருக்கிறது.
இறையாண்மையுடன் இயைந்த ஆசிய மண்ணின் மரபை தெளிவாக வெளிப்படுத்திய இசையாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.
அறிமுகத்திற்கு நன்றி! அதிகம் அறியப்படாததாகவே இருந்திருக்கின்றது.
Posted by: இராதாகிருஷ்ணன் | 02/15/2010 at 10:00 PM
நன்றி இராதாகிருஷ்ணன். ஏ.ஆர்.ரஹ்மானின் நல்ல இசைத்தொகுப்பு.
Posted by: ரா.கிரிதரன் | 02/16/2010 at 10:34 AM