மனிதர்களின் உலகின் சிறிய அலகுகளையும் வாழ்வானுபவமாக காட்டுவது நாவலின் பணி என நிரூபித்துள்ள புத்தகம். வாழ்வின் அபத்தங்களாக தேடலின் குழப்பங்களையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்ட மனிதர்களின் கதை. நம் நாட்டில் இருக்கும் குடும்ப அமைப்பு தலைமுறைகள் என்ற பகுப்புக்குள் அடக்கிவிட முடியாது. நூற்றாண்டின் தனிமை கதையின் உர்சுலா போல் குடும்ப அமைப்பில் சில உறவுகள் மரபணுவாக மீண்டும் மீண்டும் பிடிப்புகளாக எழும்பி வரும் . அப்படிப்பட்ட குடும்பங்களில் தலைமுறை எனும் நெடிய ஆலமரத்தின் கிளைகளில் கூச்சலிடும் பறவைகளாக பல மனிதர்கள் இருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு.இது உண்டியல்காரத் தெரு குடும்பக் கதை.
தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த தென்கலை அய்யங்கார் குடும்பக் கதை.மூன்று தலைமுறைகளுக்கு மேலாய் சாபம் வாட்டி வருவதாய் பயப்படும் குடும்பம். சிறுவர்களின் வயதையும் யயாதி போல் விழுங்கி காலத்தைத் தாண்டி வாழும் தாத்தாக்கள் தழைக்கும் குடும்பம். கொள்கைப் பிடிப்பு,வைணவம், மார்க்ஸிஸம், காந்தி பக்தி, காந்தி எதிர்ப்பு, இந்திய ராடிகள் அமைப்பு, தமிழக அரசியல் ஏட்டுப்படிப்பு, ஆங்கில கவிதை மோகம் என தேடலுக்கு பல பெயர்கள் கொண்டு புழங்கும் இளைஞர்களின் கதை.
இக்குடும்பத்தை விடாமல் துரத்தும் சாபம் சர்க்கஸ் கோமாளி போல பலவேடங்கள் அணிந்துகொள்கிறது.இச்சாபங்களைக் கொண்டே இந்நாவலைப் புரிந்துகொள்ளலாம்.
நாவலின் பொன்னம்மாள் என்கிற பொன்னா பெரிய பாட்டியுடன் தொடங்குகிறது. தன் பேரன்கள், காணாமல் போன பிள்ளை நம்மாழ்வார் , மூளைக் கலங்கி இறந்த பெண் என பலரின் நினைப்பு மொய்க்கும் எறும்பைப் போல பாட்டியை வாட்டுகிறது. பல துர்மரணங்களைப் பார்க்கும் குடும்பம். முதலில், ஆறு வயது ஆண்டாளின் கணவன் ஏரியில் மூழ்கி இறக்கிறான். சாபம் தொடங்கும் இடமாக மெல்ல இந்த இழப்பு பொன்னாவின் குடும்பத்தைப் பாதிக்கத் தொடங்குகிறது.
நாவல் முழுவதும் இந்திய அரசியல் நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது கதை. ஒரு விதத்தில் இந்திய அரசியல் நிகழ்வுகள் குடும்பத்தையும் காவு வாங்குகிறது என்றே அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
துர்மரணம் எனும் சாபத்தைவிட இக்குடும்பத்து ஆண்களின் இந்திய அரசியல் பாடாய்படுத்துகிறது. ஆங்கிலேயரை எதிர்க்கும் போராட்டங்களில் நம்மாழ்வார் பங்குபெறுகிறான். ஆஷ் துறையைக் கொல்ல பாண்டிச்சேரியில் சதித்திட்டம் தீட்டும் போது, ஐயருடன் துணை இருக்கிறான். ஐயரைத் தவிர எல்லோரும் அரசிடம் மாட்டிக்கொள்ள, கைது செய்யப்படுவோம் என்ற பயத்தால் நம்மாழ்வார் வீட்டில் முடங்குகிறான். ஆங்கிலேயரைப் போரில் வெல்ல முடியாது என முடிவு செய்து, அடை மழை நங்குனேரியை மூழ்கடித்துக்கொண்டிருந்து ஓர் இரவில் வீட்டை விட்டு வெளியே செல்கிறான்.
தொடர்ந்து அரசியல் சாபம் இக்குடும்பத்தை விடுவதாகத் தெரியவில்லை. நம்மாழ்வாரின் வாரிசுகளும், பொன்னாவின் மற்றொரு மகன் பட்சியின் வாரிசுகளும் அரசியல் புதைமணலுக்குள் மெல்ல இழுக்கப்படுகிறார்கள். காலப்போக்கில் பட்சியின் பேரன்கள் கண்ணன்,நம்பி இருவரும் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் சிக்கிகொள்கிறார்கள்.
கதையில் வரும் பெண்கள் மட்டுமே ஸ்திரமான புத்தியுடன் உலவுகிறார்கள். குழப்பங்கள் இவர்களை அண்டவில்லை.ஒருவிதத்தில் இப்பெண்களே இக்கதையின் சட்டகத்து மறைவானத் தூண்கள். ஆண்கள் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் அரசியல் சித்தாந்தங்களில் குழப்பமடைந்து மனம் தெளிவில்லாமல் கரை சேர்கிறார்கள்.
நாவல் முழுவதும் உரையாடலால் நிரம்பி வழிகிறது. தங்கள் தனிப்பட்ட எண்ணங்கள், குழப்பங்கள், அரசியல் சார்புகளை எல்லோரும் பேசித் தள்ளுகிறார்கள். இவ்வகையில் பெண்கள் உரையாடல் கம்மிதான். ஆனாலும், மெளனமாக அவர்களின் இருப்பு ஆண்களின் எண்ணங்களின் வெளிப்படுவது ஆசிரியரின் திறமை. ஆண்கள் பேசாமல் தவிர்க்கும் உண்மைகளை பெண்கள் ஓரிரு வார்த்தைகளில் உணர்த்திச் செல்கிறார்கள். இது இந்நாவலின் மிகப் பெரிய வெற்றி.
நாவல் உரையாடல்களில் வெளிப்படும் கிண்டல், அங்கதம் மிகக் கூராக இயங்கியிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறகு இந்திய அரசியலை இந்த அளவு நையாண்டி செய்த தமிழ் புனைவு இன்னும் வெளியாகவில்லை. பி.ஏ.கிருஷ்ணனின் உரையாடலில் கிண்டல் மிக யதார்த்தமாக வெளிப்படுகிறது. பல இடங்களில் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
உதாரணத்திற்கு:
ராஜாஜிக்கு உடனே லெட்டர் எழுதினேன் ‘ ஐயா, உங்களுடைய இந்திய அணு குண்டு சோதனைக் கவிதைப் படித்தேன். என்னைப் பொறுத்தவரை உங்கள் கவிதையை விட குண்டே பரவாயில்லை என்று தோன்றுகிறது.’
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கிறோம். என்னடா இது? வருத்தப்படுகிறோம்னு சொல்லு. சொந்த பிள்ளைகளையே கண்டிக்க முடியல, அமெரிக்காவை கண்டிக்க கிளம்பிட்டாரு.
பெரியாரை எதிர்ப்பது எப்படி என்பதில் கருத்து வேறுபாடு உண்டானது. கடைசியில் பிராமணர்கள் எவ்வாறு முடிவு செய்வார்களோ அதன் படி ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இப்படியே ஈர ட்ராயரோட தினம் சுத்தினா என்ன ஆகும் தெரியுமா? உன் காலுக்கிடுக்கில இருக்கில்லையா ரெண்டு கோலிக்காய். அது முதல்ல எலுமிச்சம் பழம் ஆகும். அப்புறம் டென்னிஸ் பந்து மாதிரி ஆயிடும். நடக்கும்போது தொடைல இடிச்சிக்கும்.
ஐயங்கார்களின் உலகம் மிக நுணுக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வாயில் புழங்கும் வார்த்தைகள், மொழி அலங்காரங்கள் இந்நாவலில் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.
எல்லாப் பாத்திரங்களும் அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், பிரதானமாக நம்பி, கண்ணன், ரோஸா, பொன்னா, கோபாலப் பிள்ளை என ஐவரைச் சொல்லலாம். நம்பி கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் எடுக்கும் திடமான முடிவுகள், கண்ணனுக்கு செய்யும் அறிவுறைகள் என மிக முதிர்ச்சியான கதாப்பாத்திரமாக நம்பி வெளிப்பட்டிருக்கிறான்.
கண்ணன் கலியுகக் கண்ணனாக குழப்பத்திலேயே வாழ்கிறான். அரசியல் நிலைபாடுகள், காதல், காந்தி அபிமானம், கல்லூரி வேலை என அவன் உலகம் நிலையாக இருப்பதில்லை. முடிவு எடுக்கத் தெரியாத குழப்பவாதியாக கடைசி வரை வாழ்க்கிறான். உலக நியதியின் முரணாக, கண்ணன் மட்டுமே ஒரு நல்ல அரசாங்க வேலையில் நிலைத்து, உயிரோடு வாழ்க்கிறான்!
ரோஸா நம்பியின் மனைவி. இருவரும் நேரெதிர் சமூகத்திலிருந்து வந்திருந்தாலும், பொதுவுடைமை சித்தாந்தத்தால் இணைந்திருக்கிறார்கள். மக்கள் சேவை செய்து வந்தாலும், ரோஸா பாத்திரமே நம்பியை முழுமைப்படுத்துகிறது. சாகும் தறுவாயில் நம்பி தன் கொள்கை மேல் கொண்டிருக்கும் குழப்பம் ரோஸாவுக்கு நேராது என்பது நிச்சயம். நம்பியின் சாவைப் படித்தால் தூக்கம் வருவது கடினம். நமக்கு நெருக்கமாகக் வாழ்ந்த ஒருவனின் மரணம் போல் நம்மை உலுக்குகிறது.
அதுவரை சாபத்தின் கருவிளையாட்டு வேறு யாருக்கோ நடப்பது போல் இருந்தாலும், இந்நிகழ்வின் குரூரம் நம் மனதின் வெறுப்பைக் கூட்டுகிறது. ஆசிரியரின் விளையாட்டும், நையாண்டியும் குறைந்து, மிக உக்கிரமான திசையில் சம்பவங்கள் திரும்புகின்றன.
சில குறைகள் எனத் தேடிப்பார்த்தால் தெரிபவை -
பெரிய சம்பவங்கள் இல்லாதது நாவலின் குறை . கிட்டத்தட்ட இந்திய சுதந்திரம், அரசியல் வாழ்வை ஒட்டிச் சென்றாலும், இக்குடும்பத்திற்கென தனி பெரும் சம்பவங்கள் நடப்பதில்லை. பாலுணர்வு சார்ந்து ஆண்டாள்+பொன்னா அடையும் குழப்பங்கள், கண்ணன் - உமா காதல் , நம்மாழ்வாரின் துறவு என சம்பவங்கள் புள்ளிகளாக இருந்தாலும், இந்நாடகங்கள் விரிவடையவில்லை. பொன்னாவுக்கு பாலுணர்வு சார்ந்த பிரச்சனைகளில் அக ஆழத்தில் நாடகத்தை நகர்த்தியிருக்கக்கூடும். ஆனால், அது நடக்கவில்லை.
பெண்களின் நிறைவேறாத ஆசைகள், எப்போதும் வீட்டை விட்டு ஏதோ ஒரு தேடலுக்காக செல்லும் ஆண்கள் என மனிதர்களின் மறுபக்கம் தெளிவாக இந்நாவலில் சித்திரக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட உரையாடல்களால் கட்டப்பட்ட கோபுரம் போல் நம்முன்னே நாங்குனேரி குடும்பம் நிற்கிறது. நாவல் முடியும்போது, அவரவர் கொள்கை, ஆசை, குரல்கள் கூட நமக்கு நினைவில் நிற்கிறது. கிட்டத்தட்ட கதாபாத்திரங்கள் பேசும் வார்த்தைகளிலேயே அவர்களின் ஆளுமை நம்முன் விரிகிறது. அவ்வார்த்தைகளுக்கிடையே இருக்கும் மெளனத்தை பெண்கள் நிரப்புகிறார்கள். வீரியமிக்க பெண் கதாபாத்திரங்கள் இக்கதையின் தூண்கள்.
பொதுவாகவே இந்திய நாவல்களின் பின்புலமாக இருக்கும் சமூக அக்கறைகள் இக்கதையில் வெளிப்படாதது மற்றொரு குறை. அரசியல் கனவு, சித்தாந்தக் கனவு சமூக அக்கறையாக மாறாததும் ஒரு குறையாகத் தெரிந்தது. இந்தி எதிர்ர்பு, பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் மட்டுமே திமுகவின் அரசியல் நடவடிக்கை வெளிப்படுவதும் முழுமையாக நம்முன் நிற்பதில்லை. அரசியல் கழகங்கள் சமூக இடைவெளியை நிரப்பும் பொருட்டு உருவானவை என்ற நிலைப்பாடு எங்குமே காணவில்லை.இதனாலேயே பெரிய சம்பவங்களிடையே கோர்க்கப்பட்ட குடும்பக் கதையாக மட்டும் நிற்கிறது.
படித்து முடிக்கும்போது, ஒரு கச்சிதமான நாவல் படித்த முழுமை கிடைக்கிறது. முக்கியமாக, உரையாடல்களின் சரளம் நம்மை அசரவைக்கிறது. உரையாடல்கள் வழியே கதாப்பாத்திரங்கள் தங்கள் கனவை வாழ்ந்து முடிக்கிறார்கள்.
’புலிநகக் கொன்றை’ தலைப்பை நினைவூட்டும்படி, இவ்வுரையாடல்கள் காட்டும் கனவுலகம் நம்மைச் சுற்றி ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கிறது.
Recent Comments