2010ஆம் ஆண்டு எனக்குப் பெரிய சவாலாக இருக்குமென நினைக்கிறேன். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
அங்கொன்று இங்கொன்றாக மரத்தடி, திண்ணை என எழுதிக்கொண்டிருந்த நான் கடந்த சில ஆண்டுகளை விட 2009இல் அதிகமாக எழுதினேன். தொடர்ந்து எழுதுவேண்டும் என்ற முடிவுடன் இத்தளத்திற்கு சந்தா கட்டி எழுதத் தொடங்கினேன். இசை, இலக்கியம், மொக்கை என நினைத்ததையெல்லாம் ஏப்ரல் மாதத்திலிருந்து முடிந்தவரை தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆனாலும் சில பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.
முதல் சவால் - இன்னும் அதிக வீரியத்துடன் இதை அடுத்த ஆண்டும் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ? ஆழத்தில் ஒரு திரைமறைவு திட்டமும் (அதாங்க hidden agenda) இருக்கிறது. அதுதான் மொழிப்பயிற்சி.
எழுதுவதன் மூலம், மொழியை மேலும் கூர்மையாக, லாகவமாகக் கையாள வேண்டும்; சொல்ல வேண்டியதை எளிமையாகவும் அதே நேரத்தில் நேரடியாகவும் சொல்ல வேண்டுமென்ற தெளிவுடன் தொடங்கினேன். ஆனால் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
நான் எழுத நினைத்த விஷயங்களில் தெளிவுடன் எழுத முடியாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணங்களாக - குறையுள்ள என் மொழி அறிவு, வாக்கியம் அமைப்பதில் நான் சந்தித்த சிக்கல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இணையத்தில் செறிவான எழுத்தைப் படிக்கும்போதெல்லாம் பொறாமையாக இருக்கிறது. ஆனால், எனக்கு வந்து விழும் வார்த்தைகளும் , வாக்கியமும் சரிவர அமையாமல் பல இரவுகள் திண்டாடியுள்ளேன்; தொடந்து குட்டிக்கரணம் அடித்தும் வருகிறேன்.
உலகத்திலேயே பெரிய அவஸ்தை என்ன தெரியுமா? மிக எளிமையான எண்ணங்களைக் கூட சரிவர எழுத்தில் கொண்டு வர முடியாதது தான். நாம் சொல்ல நினைப்பது, படிப்பவர்களுக்கு உடனடியாகப் போய் சேர்வது நெம்ப கடினம். கட்டுரைகள் எழுதும் போது பல முறை படித்து திருத்தம் செய்தாலும், சுலபமான வாக்கிய பிரயோகங்கள் கூட அடிசெருக்கும். நகைச்சுவையாக எழுதுவது, வீரியமான வாக்கியங்கள், கூர்மையான மொழிநடை கொண்ட கட்டுரைகளை உருவாக்க என் மொழி அறிவு பத்தாது என்ற முடிவுக்கு வர இப்பகுதி மிக உபயோகமாக இருந்தது.
சரியான வாக்கியங்கள் மட்டும் போதாது. கட்டுரை, கதைகளில் அடுத்ததடுத்து வரும் வாக்கியங்கள் படிப்பவரை நம் உலகத்துள் மெதுவாக இழுக்க வேண்டும். சிந்தனையில் பாய்ச்சல் இருக்கலாம்; சம்பந்தமில்லாத பல எண்ணங்கள் தொடர்ந்து வரலாம். ஆனால், எழுத்தில் அவற்றை தெளிவாக வரிசைப்படுத்தத் தெரிய வேண்டும். ஓரிரு வார்த்தைகளில், ஒரு வாக்கியத்துக்கான தாக்கத்தை நிறுவவேண்டும். கதையின் சூழலை நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும். இது எதுவுமே எனக்கு இன்னும் கைக்கூடவில்லை.
இப்படிப்பட்ட வரைமுறைகளை எழுத்து பயிற்சி மூலமே அடைய முடியும் எனத் தெரிந்தாலும், சோம்பேறித்தனத்தால் இப்பயிற்சி தடைபட்டு வந்திருக்கிறது. ஆக, எழுத்துப் பயிற்சி மூலம் என் மொழி அறிவை வளர்த்துக்கொள்வதை மிக இன்றியமையாததாக கருதுகிறேன். வீணான காலங்களுக்கு நொந்துகொள்ளாமல், அடுத்த வருடத்திலாவது இப்பயிற்சியின் பல கட்டங்களை அடைய முயலவேண்டும். இது அடுத்த வருடத்துக்கான மிகப் பெரிய சவாலாக என்முன் காளிங்க நடனமாடுகிறது.
சரி, செய்யவேண்டியவற்றை சில பாயிண்ட்ஸாக எழுதிக்கொள்ளலாமா?
- பலவகையான கதை, கட்டுரை எழுதிப்பார்த்தல். நிதானமாக ஒருசில எண்ணங்களை எழுதி, பல முறை படித்துப் பார்த்து திருத்தம் செய்தல். அவசரம் கூடாது; ஆனாலும் தொடர்ந்து தினமும் எழுத வேண்டும்.
- இதுவரை எழுதுவதைவிட படிப்பதையே அதிகமாகச் செய்து வருகிறேன். இதை மாற்றிச் செய்யவேண்டுமென முடிவு செய்திருக்கிறேன்.
- டி.வி, சினிமா பார்ப்பது மிகவும் குறைந்திருந்தாலும், தினப்படி ஒரு மணிநேரமாவது இசை கேட்காமல் இருந்ததில்லை. இதை குறைக்க முடியுமா எனத் தெரியவில்லை.
- அடுத்த வருட இறுதியில் சென்னைக்கு திரும்பும் எண்ணமிருப்பதால், ஊர் சுற்றுவதை அதிகப்படுத்த வேண்டும். இவவருடத்தில் இரண்டு பெரிய பயணங்கள் மேற்கொள்ளலாம் என்ற திட்டம் இருக்கிறது. தங்கமணியும் சரியென்றால், நார்வே மற்றும் ரஷ்யா செல்லும் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
- படிக்க வேண்டிய புத்தகங்களை மாதந்தோறும் முடித்தல் அவசியம். தற்போதைய லிஸ்ட் (தண்ணீர், காவல்கோட்டம், எஸ் ராமகிருஷ்ணனின் இரு நாவல்கள், David Attenborough biography)
இவற்றைத் தவிர, ஒரு வயதை தொட இருக்கும் ஆதிரையுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். இப்போதே நான் மடிக்கணிணியுடன் உட்கார்ந்தால், `டப்` என மூடத் தொடங்கிவிட்டாள்.
ஸ்ரீசுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள், சிவாஜி ரஜினியைப் போல், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதுவார். வலது கையில் கிருஷ்ண வியாக்கியானங்கள் தமிழில் எழுதும்போது, இடது கையால் ராம சரிதையை சமஸ்கிருதத்தில் எழுதுவார். ரொம்ப நாட்களுக்கு முன்னர் இல்லை. அவர் வாழ்ந்தது இருபதாம் நூற்றாண்டில் தான். இதனாலேயே பல பத்திரிக்கைகளும், எண்ணிலடங்கா புத்தகங்களும் தன் வாழ்நாளில் இவரால் எழுத முடிந்திருக்கிறது.
எனக்கு அவ்வளவு பேராசையெல்லாம் இல்லை. தவிரவும், பயிற்சி மட்டும் இப்படிப்பட்ட பாண்டித்தியத்தைக் கொடுத்துவிட முடியாது என்றும் தெரியும். ஏதோ, எழுதியதை நானே படித்துப் பார்த்து ஆசுவாசப்படுத்தும் விதமாகவேனும் மொழி வளையவேண்டும்.
எழுத வேண்டுமென்ற உந்துதல் இருந்தாலும், மொழி கைக்கூடாமலேயே இருப்பதாலேயே இந்தப் பிரார்த்தனை. சோம்பேறித்தனத்தைப் போக்க, ஸ்ரீசுவாமி பிரதிவாதி பயங்கரம் அவர்களிடமே விண்ணப்பிக்க வேண்டியதுதான். சரிதானே?
//மிக எளிமையான எண்ணங்களைக் கூட சரிவர எழுத்தில் கொண்டு வர முடியாதது தான். நாம் சொல்ல நினைப்பது, படிப்பவர்களுக்கு உடனடியாகப் போய் சேர்வது நெம்ப கடினம். கட்டுரைகள் எழுதும் போது பல முறை படித்து திருத்தம் செய்தாலும், சுலபமான வாக்கிய பிரயோகங்கள் கூட அடிசெருக்கும். நகைச்சுவையாக எழுதுவது, வீரியமான வாக்கியங்கள், கூர்மையான மொழிநடை கொண்ட கட்டுரைகளை உருவாக்க என் மொழி அறிவு பத்தாது //
எனக்குள்ளும் எழுந்த இந்த உணர்வுகள் சரிதான்! என்ற முடிவுக்கு வரவும் இந்த வரிகள் உபயோகமாக இருந்தது ! :)
Posted by: ஆயில்யன் | 12/30/2009 at 03:22 PM
கிரிதரன்!
//லாவகமாக// லாகவகமாக! (இலகு --> லாகவம்! நன்றி: ரவிசங்கர்)
மற்றபடி உங்கள் எழுத்தை நான் இந்த ஆண்டு அவ்வப்போது வாசித்திருக்கிறேன்.(வார்த்தை, வலைப்பதிவு, சொல்வனம்,...) ஒரு சுவாரசியமான, அதே சமயம் விஷயச்செறிவுள்ள நடை என்றே சொல்வேன். (நீங்கள் உதாரணம் காட்டிய சொக்கனை விடவும்! தேசிகன் கிட்டத்தட்ட அருகில் வந்தார்! குறிப்பாக உங்கள் இசைக் கட்டுரைகள் அற்புதம்! பாஸ்டன் பாலா கூட ஒருமுறை ஏதோ சங்கிலித்தொடர் பதிவுகளுக்கு உங்களை அழைத்த ஞாபகம்!)
ஜெமோவிடம் ஏதோ ஒரு கடிதத்தில் சுவாரசியமான எழுத்தாக இருந்தால் உபயோகமாயில்லையே (& vice-versa) என்று கேட்கப்பட்டதற்கு, உண்மையான அறிவாளிகள் (ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்தவர்கள்), அதை சுவாரசியாமாக எழுதுவதுதான் இந்த சிக்கல் தீர ஒரே வழி என்றார்! எனக்கு தங்கள் ஞாபகம்தான் வந்தது!
நிச்சயம் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
வெங்கட்ரமணன்
Posted by: venkatramanan | 12/31/2009 at 01:20 PM
//லாகவம்// - நன்றி. தப்பாகச் சொல்லிச் சொல்லி அதே நிலைத்து விட்டது.
இசைக் கட்டுரைகளை ரசித்துப் படிப்பதற்கு நன்றிகள். சிக்கல் தீர, தொடர்ந்து எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி
ரா.கிரிதரன்
Posted by: ரா.கிரிதரன் | 12/31/2009 at 01:28 PM
'How to name it-இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி'-ஐ சொல்வனத்தில் வாசித்தேன். கருத்தும்,எழுத்துநடையும் நன்றாயுள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்.
ஆதிரை, நல்ல பெயர்.
Posted by: இராதாகிருஷ்ணன் | 12/31/2009 at 09:45 PM
அன்புள்ள ரா.கிரிதரன்,
மொழியை கையாளும் விதத்தில் நான் இயங்கும் முறை குறித்து எனக்கே பலத்த அதிருப்தி உண்டு. சில நாட்கள் கழித்து நான் எழுதினதை நானே வாசிக்கும் போது, நான் சமைத்த உப்புமாவை நானே சாப்பிட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய அனுபவமே நினைவுக்கு வரும். மற்றவர்கள் எழுதின நேர்த்தியான மொழிக் கட்டுரைகளை வாசிக்கும் போது கொஞ்சமாவது என்னைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்று தோன்றும். ஆனால் எழுத உட்காரும் போது எல்லாமே நினைவிலிருந்து கழன்று எண்ணக் குதிரை செக்குமாட்டுப் பாதையில் செல்லும்.
என்னைக் குறித்து நானே இவ்வாறு ரகசியமாகப் புலம்பிக் கொண்டிருக்க, நீங்கள் செறிவான எழுத்து என்று என் சுட்டியைக் குறித்திருந்த போது அதிர்ச்சி கலந்த ஆனந்தமாக இருந்தது. (ஆனால் இணையத்தில் என்கிற வார்த்தையின் மீது மாத்திரம்தான் என்னுடைய வலைப்பக்கத்தின் இணைப்பு தரப்பட்டிருந்தது. செறிவான மற்றும் எழுத்து ஆகியவைகளில் நண்பர்கள் சொக்கன் மற்றும் தேசிகனின் இணைப்பு தரப்பட்டிருந்ததில் ஏதும் நுண்ணரசியலோ பகடியோ மறைந்திருக்காது என்று நம்புகிறேன்.) :-)))
எதுவாக இருந்தாலும் உங்களின் பாராட்டிற்கு நன்றி. அதற்குரிய தகுதிக்காக இனியாவது உழைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டிருக்கிறது. அதற்காகவும் நன்றி.
Posted by: sureshkannan | 01/02/2010 at 08:06 AM
அன்புள்ள சுரேஷ் - என் உப்புமாவை விட உங்கள் உப்புமா நன்றாக வெந்திருக்கும் :) பகடியெல்லாம் இல்லீங்கோ!
மிக்க நன்றி!
Posted by: ரா.கிரிதரன் | 01/03/2010 at 06:18 PM