பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் கடந்து விட்டன. மீதமிருக்கும் கற்கள், இன்றும் குறியீடாக மாறாமல், பாதையில் முளைத்த முட்செடிகளாய் ஆங்காங்கே பார்வைக்காக நிற்கிறது. Check Point Charlie என்ற கண்ணுக்குத் தெரியாத சீலையே உண்மையான சுவர். கைகளில் ஒன்றுமில்லாவிட்டாலும், லட்சியம் நிறைந்த வாழ்வை கனவு கண்ட கிழக்குப் பகுதி. அங்கிருந்து தப்ப நினைத்தவர்களின் நிலை பல டெர்ரா பைட்டுகள் நிரம்பும் அவலக் கதை. பொருளாதாரம், உறவு, எதிர்கால திட்டம் என அனைவரும் ஒரே வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். அந்தந்த நொடிக்கு வாழ்வை அனுபவிக்கும் மேற்குப்பகுதி; செழிப்பான வியாபார உலகம். அதை அடைய முற்பட்ட கிழக்குப் பகுதி மக்கள் ஐம்பது ஆண்டுகளாய் சொந்த வாழ்வை இழந்த சோகம், அடுத்த தலைமுறையினருக்கேனும் கிடைக்கப்போகும் செழிப்பான வாழ்வை கனவில் மட்டும் கண்ட திணிக்கப்பட்ட வாழ்வுமுறை.
இன்று, கண்ணுக்குத் தெரியாத வகையில் U2 குழுவினர் , MTV குழுவுடன் எழுப்பிய சுவர் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது (1989இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போது Leonard Bernstein பீத்தோவனின் Ode to Joy இசையை Ode to Freedom என மாற்றி அமைத்தார்).ஒரு விதத்தில் இது சரிதான். வரலாற்றுக்கு தனி அர்த்தத்தைத் தேடிக் கொடுக்கும் செயல். reversal என்ற வகையில், பெர்லின் சுவர் இருந்த Brandenburg வாசலை பரிகாசம் செய்ய வேண்டிய தருணம். இதுவரை பெர்லின் சுவர் என்ற வஸ்து கொடுத்த அர்த்தத்தை புரட்டிப் பார்க்க முடியும். பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டதால் எழுச்சி கொண்ட கருப்பின மக்கள், கருப்பின் அர்த்தத்தை மாற்றிய கதை - இதற்கு ஒரு வழிகாட்டி.
இந்த இருபது வருடங்களாய் சுவருடன் வீழ்ந்தது கம்யூனிசம் என கூப்பாடு போட்டவர்களை என்ன என்று சொல்வது? கண்ணகி சிலையை மீண்டும் நிறுவியதின் மூலம் தமிழ்ப்பற்றை பறைசாற்றியதாய் அறிவித்தவர்களின் நிலையுடன் இதை ஒப்பிடலாம். தத்துவங்களின் செயல்பாடுகள் தோற்கலாம்; தத்துவம் அர்த்தமிழக்குமா? தத்துவத்திற்காகவே வாழ்வைத் தியாகம் செய்தவர்களின் நிலை என்ன? அவற்றின் அர்த்தம் என்ன?
இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் தேட முயன்றிருக்கிறார் ஜெயமோகன்.
இதற்காகவே ‘பின் தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை மீண்டும் படித்தேன். கம்யூனிஸம் என்ற வார்த்தைக்கு பதில் வேறெந்த தத்துவத்தையும் இதில் நிரப்பலாம். அப்போதும் இந்த புத்தகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.
*
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரென்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
இவ்விரண்டு குறள்களும் தியான மந்திரங்களாக மாறி வரலாறு, அரசியல் கொண்ட புனைவை பின் தொடரும் நிழலின் குரலாக சித்தரிப்பதாய் ஜெயமோகன் கூறுகிறார்.இது ரஷ்ய கம்யூனிஸ வரலாற்றின் பின்னணியில் தியாகத்தின் அர்த்தத்தைத் தேட முயலும் ஒரு படைப்பாகும். பின் தொடரும் நிழலை மறுபடி படித்தவும் எனக்குத் தோன்றியவை இவை.
வரலாற்று ஆவணங்கள் நாம் நிற்கும் திசையில் நம்மைக் கடந்து செல்லும் ஆறின் பகுதி மட்டுமே. சில சம்பவங்களின் தொகுப்பைக் கொண்டு வரலாற்றின் பாய்ச்சலை நிறுவும் வீர செயலைத்தான் எல்லா வரலாற்றாசிரியனும் செய்து வருகின்றான். தர்க்க அடிப்படையில் மனிதர்களுக்கான அறம் இதுதான் என பேச முற்படுகையில் வரலாற்றின் காலகட்டத்தையும் பொருட்படுத்த வேண்டியிருக்கிறது.
புகாரின் ஸ்டாலினின் வலது கரமாக செயல்பட்டு 1920 களில் லெனினுக்குப் பிறகு கம்யூனிஸக் கொள்கைகளை நிறுவனமாக மாற்ற செயல்படுகிறார். ஸ்டாலினின் ஆடுபுலி ஆட்டத்தைத் தெரிந்துகொண்டே ஒரு பகடைக்காயாக மாறுகிறார். தனக்கும் செக்மேட் வைக்கப்படும் எனத் தெரிந்தும் ட்ராட்ஸ்கியை நாடு கடத்துகிறார். தன் அறம், பிறர் அறம் என பொலிட்பியூரோவிற்குள் பேசுகிறார். அப்போதைய வழக்கப்படி பொய் வழக்குகளில் சிறை தண்டனைப் பெற்று தன் கடைசி தினங்களை வதை முகாமில் கழிக்கிறார். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு கோர்பசேவின் அரசு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. புகாரின் சொன்ன வாக்குமூலத்தை ஐம்பது வருடங்களாக தினமும் முணுமுணுத்து வந்த அவர் மனைவி அன்னா, கூண்டிலேறி உண்மையை நிறுவுகிறார்.
ரஷ்ய 1917 அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த புகாரினுக்கு நடந்த கதை இது.
வரலாற்றின் திரிபுகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதோர் இருந்த பழைய கம்யூனிஸ்டுகள் காலமது.ஜெயமோகனின் கதைகளத்தில் புகாரினின் பொய் வழக்கு, வீரபத்ரபிள்ளை என்ற இந்திய கம்யூனிஸ்டுக்கு கடிதமாக வந்து சேர்கிறது. அவரும் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த கதையைத் தொடரத் தொடங்க மற்றொரு புகாரினாக மாறுகிறார். இவர் கதையை பல வருடங்களுக்குப் பிறகு தொடரும் அருணாசலம் என்ற ஸ்டாலினிஸ்ட் வழியாக ஜெயமோகன் சொல்கிறார்.
பலவிதங்களில் இந்த நாவல் தமிழின் முக்கியமான படைப்பாகிறது.
மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட கதைகளம். நம் நாட்டில் வரலாறு, அரசியல் பற்றி பலவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன. அரசியல் என்றாலே சாக்கடை என்ற க்ளீஷேக்களிலிருந்து, அதன் பன்முகத்தை வரையறுக்கும் விமர்சனங்கள் வரை இந்த கண்ணோட்டங்கள் மாறுபடும்.இதைப் போலவே இந்த நாவலில் வரும் பாத்திரங்களும் பலவிதமானவை. தீர்க்கமான சில அடிப்படை கற்பிதங்களை உடைய பல சித்தாந்தவாதிகள், அருணாச்சலம் போல் செயல்வீரனாகவும் சித்தாந்தியாகவும் உள்ள சில பாத்திரங்கள் என முரண்பாடுகள் கடைசி வரைத் தொடர்கிறது.
நாவல் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி - கம்யூனிஸம் அழிந்து விட்டது. ஆனால் பல மனிதர்களின் தியாகங்களில் கட்டப்பட்ட இந்த தர்க்க சித்தாந்தம் இன்று எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது? சோஷலிஸ உலகம் என்ற கனவு உடைபட்டு விட்டது. ஆனால், இதைத் தொடர்ந்த மனிதர்களின் தியாகங்களுக்கு பதில் என்ன?
மிக ஆழமான, விரிவான பதில்களுக்கு தயாராகும் அதே நேரத்தில், இவை அனைத்தும் நேர விரயம் என்பதும் தோன்றாமலில்லை. இந்த இரு முடிவுகளும் மாறி மாறி நமக்குத் தோன்றிக்கொண்டிருக்கின்றன. யேசுவைப் போல் தியாகம் செய்தாலும் மூன்று நாட்களில் மறுபடி உதயமாகி உண்மையை உலகுக்கு உணர்த்தலாம். இது தான் தியாகத்தின் உச்சகட்ட பதிலா?
அறம், தியாகம் போன்றவை திசைக்கொன்று போல் மாறிக்கொண்டிருக்கும் பறவை. உயர பறக்கும் கொடியைப் போல் திசை மாறினால், இதன் புத்தியும் மாறிவிடுமா? நிகழ் காலத்து தராசைக் கொண்டு, கடந்த காலத்து நிகழ்வுகளை எடை பார்க்க முடியுமா? இவை எவ்விதமான அபத்தமான விளைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்? இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கையில் நாம் சுலபமாக அறம்,தியாகம் போன்றவற்றை புறம் தள்ள முடியும். தேவையில்லாத கனம் போல் தோன்றினாலும், வரலாற்றை கணிக்கும் கருவியாக இவை நமக்கு இருக்குமா? அப்படிபட்ட தராசே தேவையில்லை என்றால் வரலாறு என்ற ஒரு வஸ்து எதற்கு?
வெற்றியாளர்களால் பிண்ணப்படும் போர்வை என வரலாற்றை ஒதுக்க முடியாது. பல ஆவணங்களிலும், தொகுப்புகளிலும் நமக்கு கிடைக்கும் கண்ணோட்டங்களை வரையறுக்கலாம். மனிதர்களாக நாம் இவற்றை பார்வையாளனாகவோ, நிகழ்த்தும் கருவிகளாகவோ மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவு சரியாக இருக்குமா?
எந்த காலகட்டத்திலும் அரசியல் சகுனிகளும், தலைவர்களும் தங்களின் கூர்மையான தந்திர மூளையால் வரலாற்றை ஏமாற்ற புதுப்புது யுத்திகளைக் கண்டு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டாலின் புகைப்படக் கலையை சாதகமாகப் பயன்படுத்தி, பல தலைவர்களை ரஷ்யாவில் இல்லாமல் செய்திருக்கிறார். தன் வாழ்நாளில் இவை வெளிவராமலிருக்க ஜப்பானைப் போல் மாய உலகைச் சித்தரித்தார்.ட்ராட்ஸ்கி, புகாரின் போன்ற மென்ஷ்விக்குகள் பலரை நாடு கடத்தியிருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டனர்.
1989ல் பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட போது இந்த கற்பனை உலகமும் பலருள் சிதறியது. இந்த வருடம் கம்யூனிஸம் வீழ்ந்து இருபது வருடங்களாகிறது. இப்படித்தான் ஊடகங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் பதியப்படும். இது சரியானதா?
கம்யூனிஸம் என்ற அரசியல்/வாழ்வு முறையை பின்பற்றிய நாடு வீழ்ந்தால், கம்யூனிஸம் என்ற சித்தாந்தமே வீழ்ந்ததுபோலாகுமா? சித்தாந்தம் என்பது கடவுள்,உண்மை என்பவைப் போல் நிதர்சனமான ஒன்றில்லையா? கம்யூனிஸம் என்பது மார்க்ஸ்,ஏங்கள்ஸின் சித்தாந்தமல்லவா; ரஷ்யா அதை நடைமுறைபடுத்தப்பட்ட முயன்ற நாடு; ஸ்டாலின்,லெனின் போன்றோர் அதன் கருவியல்லவா? இவர்கள் உபயோகித்த வழிமுறைகளில் தவறிருக்கலாம். அதனால் சித்தாந்தம் ஆட்டம் காணுமா?
ஒரு சமூக இயக்கத்தை வழி நடத்த பல முறைகள் இருந்து வந்திருக்கின்றன. எந்த இயக்கமானாலும் மாற்று கருத்துக்கும், மக்கள் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும். அப்படி இருக்கும் இயக்கங்கள் மட்டுமே கொஞ்சமாவது உயிரோடு இருந்திருக்கின்றன. குடியரசு முறையில் தேர்தல் feedback forum. அப்படிபட்ட கருத்து சுதந்திரமில்லாதது கம்யூனிஸத்தின் அடிப்படை பிரச்சனையாக இருந்திருக்கிறது. மையத்தை தகர்க்கும் இயக்கத்தில் மையத்துக்கே முக்கியத்துவம் அதிகமானது கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய முரண்.
இந்த இருபது வருடங்களில் இப்படிப்பட்ட பல கருத்துகள் ஊடகங்களிலும், புத்தகங்களிலும் வெளி வந்திருக்கின்றன. சித்தாந்தத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும், கூட்டாட்சி என்ற இயக்க முறை கையோங்கியே இருக்கிறது.
ஒரு புனைவு வாசகர்களை சிந்திக்க வைப்பதோடு பல சாத்தியக்கூறுகளுக்குள்ளும் இட்டுச் செல்லவேண்டும். இப்படிபட்ட பல முக்கியமான கேள்விகளை முன்வைக்கும் மிக அற்புதமான அரசியல், வாழ்வு சம்பந்தமான அனுபவமாக இந்த புத்தகத்தை ரசிக்கலாம்.
மிக நல்ல பதிவு கிரிதரன். நாவலையும் தாண்டி கம்யூனிஸ இயக்கம் மற்றும் ஆட்சிமுறைகள் குறித்த உங்களது கருத்துக்கள் சிந்தனைக்கு உரியவை.
எனக்கு இந்த நாவலின் மையக்கேள்வியாக ஒன்று தான் மீண்டும் மீண்டும் தோன்றியது. இதன் சைபீரிய கவிதைகளில், சிறுகதைகளில் எல்லாம் முன்வைக்கப்படும் கேள்வி இது தான் : சமூகத்தை நோக்கி பேசும் இயக்கங்களில் தனிமனிதனின் இடம் என்ன? சென்ற வருடம் இந்த நாவலை மீண்டும் வாசித்தேன். முதல் வாசிப்பின் உணர்வெழுச்சி அப்படியே இருந்தது....
கிரிதரன்... காடு நாவலின் மையக்கதாப்பாத்திரத்தின் பெயர். :)
Posted by: சித்தார்த் | 01/10/2010 at 10:38 AM
Dear Sir,
I didn't read this book, but i read what is it all about? I have a doubt sir, cann't we see the future from the present situation?
2day's pain - 2morrow's gain.
"Tharumathin Valvu thani soothu kowum, tharumam marupadi vellum enumiyarakkai, marumathai nammale ievulagam ariyum.."
It is my opinion. Forgive me if i am indesent.
BR,
Thedal
Posted by: Thedal | 07/21/2010 at 02:06 PM
ஜெ படைப்புகளிலேயே எனக்கு மிக மிக பிடித்த திரும்பி வாசிக்கும்தோறும் புதியவற்றை திறக்கும் புத்தகம் , நிறைய விமர்சனங்கள் வரவில்லை அல்லது சரியாக வாசகர்களிடையே போகவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு ,
மிக ஆழமாக படித்திருக்கிறீர்கள் , அருமை
Posted by: அரங்கசாமி | 09/26/2010 at 03:41 PM