ஐரோப்பா செவ்வியல் இசை இரண்டு கட்டங்களில் வளர்ந்து வந்த மரபைக் கொண்டது. பரோக், ரஃபைலுக்கு முன் (pre-raphaelite) அமைந்த இறை இசை. பின் ரொமாண்டிஸிஸத்தை கொண்ட ஹைடன் (Hayden), மோசார்ட் (Mozart), பீத்தாவெனின் (Beethoven) இசை. இதன் அடித்தளத்திலேயே பிற்கால இசைஅமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த உருவகத்தையும், முறையையும் கடன் வாங்கும் வழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரைத் தொடர்ந்தது.
இசையின் பலவித மாற்றங்களையும், முறைகளையும் அறிமுகப்படுத்தும் பழக்கம் ஒரு பக்கம் இசை அமைப்பாளர்களால் வளர்க்கப்பட்டது என்றாலும், இசை அழகியல் சம்பந்தமான மொழியை பிற்காலத்திலேயே முறைப்படுத்தினர். இதனால், இசை கேட்பது, புரிந்து ரசிப்பது என இரு வெவ்வேரு செயல்கள் தோன்றின. இசையை இப்படித்தான் கேட்கவேண்டும், ஒவ்வொறு இசை அலங்காரத்துக்கும் புரிதல்கள் மாறுபடவேண்டுமென்ற கோட்பாடுகளை இசை விமர்சகர்கள் உருவாக்கத் தொடங்கினர்.
கோட்பாடுகள் உருவாவதே பின்னர் உடைக்கப்படுவதற்காகவே. இந்த பதினெட்டாம் நூற்றாண்டின் புது இசை விமர்சகர்களின் கோட்பாடுகளை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிராகரித்தனர். இதுவே ஒரு இசை விமர்சன வடிவம் எனத் தொடர்ந்தவர்கள் கட்டுப்பான கோட்பாடுகளை உடைப்பதே வேலையாகத் தொடங்கினர்.ராபெர்ட் ஷூமான் (Robert Schumann) என்ற இசையமைப்பாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இசை விமர்சகரும் ஆவார்.ரொமாண்டிஸிஸம் என்ற பாணியை இசை, நாடகம், புதினம் என கலைகள் அனைத்திலும் வீசிய கோட்பாடுகளை உருவாக்கிய காலகட்டத்தில் உருவானவர்.ரொமாண்டிஸிஸம் பற்றிய புரிதல்கள் மெள்ள கலை விமர்சகர்களிடம் பரவத் தொடங்கின. குறிப்பாக, எதிர்காலத்தை வசீகரமாக, உன்னதமாக தங்கள் காலங்களை விட சொர்க்கலோகமாய் உருவாக்கும் கலைகளை ரொமாண்டிஸிஸம் எனக் குறிப்பிட்டர்.
எதிர்காலம் குறித்த நம்பிக்கை, அதில் நிகழும் அற்புத தரிசனங்களை குறிப்பதே கலையின் நோக்கம் என்றனர். குறிக்கோள்கள் எதுவாகவேனும் இருக்கலாம், ஆனால் காலத்தை தாண்டி நிற்கும் படைப்புகள் அந்த உன்னத நிலையில் நிற்க முடியாது. கலை என்பதே வரையறுக்கத் தேவையான கோட்பாடுகளும், விமர்சனப் பார்வையும் உருவாவதில் ரொமான்டிஸிஸம் முதன்மையாக இருந்தது. கலை மனித சந்தோஷத்துக்கே என்பதே இதன் அடிப்படைப் பாடம்.
இதன் இரண்டாம் கட்டத்தில், பிரெஞ்சுப் புரட்சியினால் கலை பற்றி கற்பிதங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு விமர்சகர்கள் ஆளானார்கள். கலை மக்களைச் சந்தோஷப்படுத்தவே என்றால், அதன் பிரதிவடிவமான மக்கள் வாழ்வுகதை ஏன் இவ்வளவு சோகமாக இருக்க வேண்டும்? பிரெஞ்சுப் புரட்சியில் வறுமை, எதிர்காலத்தில் உழைக்கும் மக்களே நாட்டை ஆள்பவர்கள் - போன்ற கோஷங்கள் இசை ரசனையின் மாற்றத்திற்கு வழிவகுத்தது. இசை முக்கியமாக ஆபெரா (Opera) போன்ற நாடக கருக்களுக்கே அமைக்கப்பட்டிருந்தது. மோசார்ட், பீத்தோவேன் போன்றோர் ரசனை மேல் தட்டு ரசனையாகவே இருந்தது. சாதாரண உழைப்பாளிகளுக்கோ இந்த இசை போய்ச் சேரவில்லை. அவர்கள் கிராமிய இசை வடிவங்களில் தங்கள் இன்பத்தை பார்த்து வந்தனர். நாடகங்களும், இசை கோர்வைகளும் தேவையான அளவு இந்த அடித்தள மக்களைச் சென்றடையவில்லை.
இசை நாடகங்கள் மேல் தட்ட மக்களுக்காக மட்டுமே என்ற கோட்பாட்டை டொனால்ட் டோவொய் (Donald Francis Trovay) என்ற இசை விமர்சகரும், இசையமைப்பாளரும் ஆன இவர் உடைத்தெறிந்தார். இவரே பிற்காலத்தில் இசை வடிவங்களைப் பற்றிய புத்தகத்தை , Essays in Musical Anaysis, எழுதினார். ராபர்ட்டும், டொனால்டும் சேர்ந்து உருவாக்கிய இசை விமர்சனப் பார்வையை ஐரோப்பா முழுவதும் மற்ற விமர்சகர்கள் பின்பற்றினர்.
மோசார்ட்டின் கான்செர்ட்டோக்களை (Concerto) ஒத்திசைவின் உச்ச கட்ட சாதனையென புகழ்ந்த பதினெட்டாம் காலகட்டத்தில், அவர் இயற்றிய இசைக் கோர்வைகளை Amazing grace என வர்ணித்தனர்.ஆனால் பிற்காலத்தில், The Classical Style, என்ற புத்தகத்தை எழுதி ஹைடன்,மோசார்ட்,பீத்தாவென் பற்றிய் ஆய்வுகளை மேற்கொண்ட Charles Rosen என்ற விமர்சகர் இதே மோசார்ட்டின் இசையை - உருக்கமாக, அதேசமயம் வன்முறை மிகுந்த இசைக் கோர்வைகளாகக் கண்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு, G Minor ஒத்திசைவு எண் 40. பொதுவாகவே minor ஒத்திசைவுகளின் கட்டுமானம், பெரிய சுரக்கோர்வைகளையோ, வலியச் சொல்லும் கருத்துகளையோ கொண்டதல்ல. பாலுக்காக சத்தமிடும் பூனைப் போலவே ஈனஸ்வரத்தில் ஒலிக்கும். சோகமான கருக்களை இதன் மூலம் உணர்வுகளாய் மாற்ற முடியும். Major ஸ்கேலில் வரும் இசையே ராஜாங்க பவனியோடு ஆரம்பித்து, நமக்கும் அந்த குதூகலம் ஒட்டிக்கொள்ளும். G Minor என்ற சுரக்கோர்வை அடி நாதமாகும்(home), எங்கு பயணித்தாலும் இறுதியும் எனத டோனல்(tonal) ஒத்திசையும் இதற்குத் திரும்பிவிடும்.
எல்லா ஒத்திசைவுகளைப் போலவே இதற்கும் நான்கு பகுதிகள் உண்டு.
1. அலெக்ரோ (Allegro- Molto)
2. அண்டாண்டே (Andante)
3. மெனுட்டோ (Menuetto)
4. அலெக்ரோ (Allegro - Assai)
Molto, Assai வகைகள் வேகத்தை குறிப்பன. மோல்டோ வேகமென்றால் , அஸாய் படு வேகம். அண்டாண்டே நிதானமான அன்ன நடை, மெனுட்டோ அதை விட கொஞ்சம் வேகம்.
இப்படி வேகத்தைப் பற்றி குறிக்கும் இசைக்கூறு Tempo, Rhythm என வழங்கப்படும். பல இசைக் கருவிகளை வாசிப்பதால், இந்த கால மாற்றங்கள் ஒவ்வொறு கருவிக்கும் மாறுபடும்.
அலெக்ரோ - வேகமான ஆரம்பம். ஆனாலும் சில கேள்விகளை எழுப்பும் இசைக்கோர்வை. இசையால் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? கேள்வி என்பதே விடை தெரியாமல் இருக்கும் அழுத்தம் நிறைந்த பகுதி. கேள்விகள் எப்போதும் நெருக்கடியை உண்டு பண்ணும். இப்படிப்பட்ட நெருக்கடிகளை இசை நுணுக்கங்கள் மூலம் உருவாக்க முடியும். அதற்கு சுர அமைப்பின் ஆழங்களுக்கு பயணிக்க வேண்டுமென்பதால், சுலபமாகப் பார்த்தால், தீர்வு கிடைக்காத கேள்விகளே நெருக்கடியை உண்டு பண்ணும். அதே பொல், அடி நாதத்துக்கு திரும்பாத இசைக் கூறுகள் கேட்பவரை தீண்டக் கூடியது. இசைப்பவர்க்கும், கேட்பவருக்குமான விளையாட்டாகவே இது உருவாகும். அடுத்தடுத்த பகுதிகளில் இது மாறி, சமன்பாட்டுக்குத் திரும்பிவிடும்.
நம் கர்நாடக இசையிலும், ராக ஆலாபனையில் கேட்பவர்களை ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவார்கள். ஒரு ராகத்தின் ஆரோகனத்தில் உயரச் சென்று நிறுத்தி ஆலாபனை செய்வர். அந்த சுர சஞ்சாரங்களிலிர்ந்து கீழே இறங்காமல் கேட்பவரை நெருக்கடிக்கு உள்ளாக்குவர். பின் அழகான அவரோகணத்தில் சமதளத்திற்கு வந்து சேர்வர்.
Recent Comments