இங்கு முன்னர் சூடம் காட்டாமல் சத்தியம் செய்தது போல, மகாபாரத கதைகளைக் கொண்ட ஜெயமோகனின் புனைவுகளை, குறிப்பாக வடக்கு முகம் பற்றி, இந்த பதிவில் எழுதலாமென்று தொடங்கினேன். ஆனால் இரண்டு நாட்களாய் வடக்கு முகம்(நாடகத் தொகுப்பு), பத்மவியூகம் (பெரிய சிறுகதை), நதிக்கரையில் (சிறுகதை) என மீண்டும் படித்ததால் எழுத முடியாமல் போய்விட்டது. இதை மீள்வாசிப்பு என கூறமுடியாது. மீள்வாசிப்பு என்ற வார்த்தை மீண்டும் வாசிப்பது என்ற அர்த்தத்திலேயே இன்று உபயோகப்படுத்தப்படுகிறது. நல்ல மொழி ஞானம் உள்ளவர்கள் உபயோகித்து கேட்டவரை மீள்வாசிப்பு என்பது - புது அர்த்தத்துடன் வாசிக்கப்படும் பிரதி/படைப்பு - எனும் அலங்காரத்திலேயே கூறப்படுகிறது.
இந்த கதைகளை மீண்டும் வாசிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு, ஜெயமோகன் என்ற கதையாசிரியர் வழியே மகாபாரதத்தை சென்றடைகிறது. அதுமட்டுமல்லாது, பழம்பாடல், பாணர்கள் போன்ற கதைசொல்லிகளால் உருவாக்கப்பட்ட கதைகள் நமக்கு மாய புனைவுகளாகவும், அவர்களுக்கு வேறொரு வகையில் நிகழ்வுகளாகத் தெரிந்ததும் வியப்பிலாழ்த்துகிறது.
`கதாபாத்திரங்களை உச்சநிலைக்கு கொண்டுசென்று மோதவிடும் மகாபாரதம் மாபெரும் நாடகவெளி`
எனத் தொடங்கும் வடக்கு் முகம்,மகாபாரதக் கதைகளை பலதரப்பட்ட வடிவங்களில் சித்தரிக்க முயலும் படைப்பாகும். எல்லா செவ்வியல் படைப்புகளைப் போல மகாபாரதமும் போரை ஆதாரமாகக் கொண்டு, மனிதர்களின் அறச்சிக்கல்களைக் கூறும் கதை. இது எல்லாவிதமான நாகரிகத்துக்கும் பொருந்தக்கூடிய இயல்பாகும். போரையும், வீரத்தையும் கொண்டாடிய வம்ச வழி வந்தவர்கள் நாம். அதனாலேயே இந்த காலகட்டத்திலும் போரையும், அரக்கத்தனத்தையும் கைவிடமுடியாமலிருக்கிறோம்.
இக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பின்யுத்த விளைவினால் சிதைந்து போனவர்கள். இதிலும் இருவகை உண்டு ;கண்ணனின் தங்கை சுபத்திரைப் போல், திரெளபதி, குந்தியென யுத்தத்தில் ரத்த பந்தங்களை இழந்து சூன்யத்தில் தங்களைத் தொலைப்பவர்கள். இன்னொரு அணியில் - விதிக்கு உட்பட்டு யுத்தம் கபளீபரம் செய்தது அறம் மற்றும் நியாய தர்மங்கள் என வேதாந்தம் பேசும் பீஷ்மர், கண்ணன், வியாசர், தர்மர் போன்றவர்கள். தர்மர் கூட்டணியில் உள்ளவர்கள் வேதாந்திகள்.மகாபாரத்தின் தொடக்கத்திலிருந்து இந்தக் கூட்டணி தங்கள் உயிரைவிட தத்துவத்தை மேலானதாக கருதினார்கள். இந்த மெய்யியல் காரணங்களினால் இவர்களுக்கு ரத்த பாசம்,உயிர் பலி போன்றவை மிக அற்பமான விஷயங்களாகத் தோன்றியிருக்கலாம். தத்துவ தரிசனங்களுக்கு மனித விரயம் ஒரு காரணி.
பதுமை
--------------------
வடக்கு முகம் புத்தகத்தில் இருக்கும் முதல் நாடகம் ‘பதுமை’. தந்தைக்கு மகனே சத்ரு. விநாச காலே விபரித புத்தி என்பது காலத்துக்கு மட்டுமல்ல, தந்தை மகனின் மேல் காட்டும் அபிரிதமான அன்பும் காரணம். தந்தை மகனுக்கான உறவு சொர்க்கம்,நரகத்தைப் போன்றவை என கண்ணன் முடிவில் கூறுகிறான். இதுவே இந்த நாடகத்தின் சாரம். துரியோதனன் இறந்த பின் பாண்டவர்கள் திருதராஷ்டிரரைப் பார்க்க வருகிறார்கள். பீமனை தன் பக்கம் அழைத்து பாசத்துடன் கடோஜ்கனைப் பற்றி விசாரிக்கும் சாக்கில், அவனை தன் கைகளால் நொறுக்கப் பார்க்கிறார். திருதராஷ்டிரர் தன் மகனை இழந்த சோகத்தில் செய்ய முற்பட்ட செயலானாலும், இது ஒரு விதத்தில் தன்னையே அழித்துக் கொள்ளக்கூடிய உந்துதல் என கண்ணன் விளக்குகிறார்.
இந்த கதையைப் படிக்கும்போது எனக்கு omer எழுதிய The Iliad புத்தகம் நினைவிற்கு வந்தது. கண் தெரியாத திருதராஷ்டிரரின் சோகத்தைப் போல் அந்த கதையில் வரும் ராஜா ப்ரியம் (King Priam) தன் புத்திரன் ஹெக்டரை (Hector) இழந்திருப்பார். Achilles இடம் தோற்று மாண்டுபோகும் வீரன் ஹெக்டர். தன் மகனின் உடலை மரியாதைக் குறைவாய் இழுத்துச் சென்ற Achilles இடம் சென்று, தனக்கு வந்த தெய்வ உத்தரவின் படி Hectorக்கு ஈமக்கடன் செய்ய வேண்டுமென மன்றாடுகிறார். Achilles அந்த ராஜா ப்ரீதம் மேலிருந்த மரியாதையால் உடலைக்கொடுத்து விடுவான். கதையும் ஹெக்டரின் ஈமக் கடனுடன் முடியும்.
இப்படிப்பட்ட கதையில் அறம் சம்பந்தப்பட்ட உச்ச நிகழ்வுகள் கிடையாது. இயல்பிலேயே ஹெக்டர் நல்லவன்.Achilles தன் ராஜா அகமென்னான் (Agamemnon) தரப்பிற்கு விசுவாசமாக இருக்கும் வீரன். வீரர்களுக்குள் நடக்கும் போரும், அதனால் அழிந்துபோகும் ட்ராய் (Troy) மட்டுமே The Illiad என்ற காவியத்தில் வரும் முடிச்சு.
இப்படிப்பட்ட கதையை மகாபாரத்த்துடன் ஒப்பிடு செய்வது பல கோணங்களில் சம்பந்தமில்லாமலேயே இருக்கும்.இதில் வரும் காவிய புருஷர்களை ஒப்பீடு செய்யலாம். குறிப்பாக, ராஜா ப்ரியம் (King Priam) மற்றும் திரதராஷ்டிரரின் சோகம், இழப்பு.
ஆனால், ஜெயமோகன் இந்த புத்தகத்தில் கூறியுள்ளதுபோல் மாறும் அறங்களைப் பற்றி பேசும்போது மகாபாரதம் அளிக்கும் சாத்தியக்கூறுகள் இன்றியமையாதது.
வடக்கு முகம்
------------------------------
வடக்கு முகம் நாடகம் பீஷ்மர் என்ற மகாபுருஷரைப் பற்றியது.பீஷ்மருக்கு தெரியாதது ஒன்றுமல்ல. மகாபாரத்த்தில் தத்துவார்த்தியான இவர், நியாய தர்மங்களைப் போற்றுபவர். ஆனால்,இவராலும் போர் எனும் நாச காரியத்துக்கு அறம்/தர்மம் என்ற காரணிகளைத் தவிர வேறேதும் கொடுக்க முடியவில்லை.
இந்த நாடகம் நடப்பது யுத்த பூமியில். யுத்தம் முடிவடைந்துவிட்டது.பீஷ்மரும் ஓலங்கள், பிணங்களுக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் முன் தோன்றும் வினோத பிணங்களுடன் சம்பாஷனை நடத்துகிறார்.அந்த பிணங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மெளனத்தை மட்டுமே அவரால் தரமுடியும். தத்துவத்தினால் சாமானியனுக்கு என்ன பயன் இருக்க முடியும்?
கால நிர்மாணங்களுக்கு பதில் சொல்லி வாயை மூட முடியும். ஆனால், இந்த ஜென்மமே கருமமாய் சின்ன சின்ன இச்சைகளை உடைய மானுடனுக்கு தத்துவத்தில் பதில் கிடையாது. மீண்டும் மீண்டும் ஜெயமோகனின் கதைகளில் வரும் கட்டம் இது.இந்த நாடகத்தில் துரியோதனன், கர்ணர், கடோஜ்கதன் - புனைவின் உச்சமாக மரண தேவியும் பீஷ்மர் முன் தோன்றி பலதரப்பட்ட கேள்விகளை முன் வைக்கின்றனர்.
வலி தாங்க முடியவில்லை என பீஷ்மர் மரணதேவியிடம் கூறும் போது அவள் - ‘உனக்கு இன்னும் கேள்விகள் பாக்கி இருக்கின்றன. வலி உன் துணைவி’
துரியோதணன் - ‘ஏன் தாத்தா, நான் ஏன் தோற்க வேண்டும்’ எனக் கேட்பதற்கு பீஷ்மர் ‘விதியின் முன் தோற்பது மட்டுமே மகத்தான தோல்வி’
தத்துவங்களினால் சரிபடுமோ துரியோதணன் மனது. ‘என்னை நீங்கள் எப்போதுமே ஏன் வாழ்த்தியதில்லை என இப்போது புரிகிறது’
இந்த நாடகத்தில் பீஷ்மரின் நிலைமை இன்னொரு அரசருக்கும் வந்திருக்கிறது. அவர் அசோகர்.
போருக்குப் பின் யுத்தகளத்தில் பார்த்த அவலங்கள், அது தன் எதிரி நாட்டுடையதாக இருப்பினும், மாறிய மனித மனம் அவருடையது. தத்துவங்கள்,அறங்கள் அவர் கண்ணை மறைக்கவில்லை.மாறாக மனித அரக்ககுணம் உணர்த்திய வலி,கொடுமை மட்டுமே அவர் கண்களுக்குத் தெரிந்தது.
மகத்தான தோல்விகளுக்கு தயாரானது அசோகரின் மனது.
ஆனால்,அந்த தோல்விகளின் அரியணையில் இருந்தது பராக்கிரம சக்தியல்ல, தன் முடிவின் மேல் கொண்ட நம்பிக்கை. அந்த முடிவில் இருந்தது - அரசருக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத குணமான பொறுப்பு (செங்கோல்).
Spiderman படத்தில் வரும் With Power comes responsibility என்ற வசனம் ஞாபகம் வருகிறது.
நல்ல பதிவு.. பீஷ்மரின் மௌனத்துக்குச் சமமான பல இடங்கள் விஷ்ணுபுரத்திலும், பின் தொடரும் குரலிலும் உண்டு. ஜெயமோகனின் பலதரப்பட்ட படைப்புகளுள் ஒரு மையச் சரடை கண்டடைய முடியும் என்றால் அது அம்மௌனத்திலேயே வந்து முடியும். தருக்கமும், தத்துவமும் தார்மீகத்தின் முன் தோற்து, கைகட்டி, தலைகுனிந்து நிற்கும் இடம். பின் தொடரும் குரலில் ஏசு காட்சியளிக்கும் இடம். அதே போல், வேறு ஒரு சிறு கதாபாத்திரமும் - பேனாக் கத்தியால் அசுர வேகத்தில் பச்சை மிளகாயை நறுக்கும் ஒரு கிழவர். கம்யூனிட் கட்சி கூட்டத்தின் போது சமையல் வேலைகளை கவனித்துக் கொள்பவர். சாமான்யர். தத்துவத் தேவைகள் எதுவும் இல்லாதவர். அவர் பிள்ளையை காப்பாற்றும் இடம் ஒன்று வரும். அதைப் பற்றி வெகு சாதாரணமாக ஜெமோ குறிப்பிட்டிருப்பார். மிகவும் சூட்டசமமான ஒரு இடம்.
விஷ்ணுபுரத்திலும் அப்படி பல இடங்களில். குறிப்பாக, வென்றடைந்த பின், அஜிதன் தியானத்தில் மூழ்கும் இடம். எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள் அதில் உண்டு..
“ஆயிரம் காகத் திரையை
செவ்வலகால் கிழித்து வந்து
என் முன் அமர்ந்து நொடுக்கும்
இவ்வெண் பறவையின் முன்
செயலற்று அமர்ந்திருக்கிறேன்.
எண்ணங்கள் மீது
கவிகிறது வெண்மை.
சஞ்சலங்கள் மீது
கவிகிறது வெண்மை.
இருத்தல் மீது
கவிகிறது முடிவற்ற வெண்மை..."
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்,
அர்விந்த்
Posted by: அரவிந்த் | 07/22/2009 at 07:16 PM
//இது ஒரு விதத்தில் தன்னையே அழித்துக் கொள்ளக்கூடிய உந்துதல் என கண்ணன் விளக்குகிறார்.//
அதில் இன்னும் நிறைய இருக்கிறதே. அந்த பதுமை பீமனோடு போரிடுவதற்காக துரியோதனன் தயார் செய்து பயிற்சி செய்வது. ஆனால் அதன் அளவுகளைப் பார்த்தால் அது திருதராஷ்டிரனை ஒத்திருக்கும். மேலும் திருதராஷ்டிரனும் பீமனும் சேர்ந்து போகும்போது இருவரும் ஒரே உயரம், அகலம் என்று இருப்பதையும் மற்றவர் பார்வை வழியாக கதைசொல்லி நமக்கு சொல்கிறார்.
அதே போல் வடக்குமுகத்திலும் பீஷ்மர், அம்பையின் இருவருக்குமிடையே சிகண்டி என்னும் பாத்திரம் ஊசலாடுகிறது. மகாபாரத கதைகளின் புதிர்தன்மையினால் இது போன்ற பல திறப்புகள் சாத்தியமே.
விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
Posted by: ஸ்ரீதர் நாராயணன் | 06/11/2010 at 07:17 PM
நன்றி ஸ்ரீதர் நாராயணன். நீங்க சொல்வது சரிதான். மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் இருக்கும் புதிர்தன்மைகளுக்கு அளவே இல்லை. வில்லுப்பாட்டு பாடல்களில் வரும் பாரதக்கதைகளில் இன்னும் அதிகமான வாய்வழிக்கதைகள் இருக்குமாம்.யயாதி,சிகண்டி விதுரர் என எவ்வளவு வித்தியாசமான பாத்திரங்கள்!
உங்கள் வருகைக்கு நன்றி!
Posted by: ரா.கிரிதரன் | 06/13/2010 at 01:41 PM