தன் நான்காவது சிம்பொனி (ஒத்திசைவு) இசையை முடித்த கையோடு ஆறாவதை தொடங்கினார் மாஹ்லர். அவரின் ஐந்தாவது ஒத்திசைவில் வீழத்தொடங்கிய அவர் நாயகன் ஐந்தாவதில் தன்னையே தொலைக்கத்தொடங்கினான். மாஹ்லெரின் ஒத்திசைவில் வரும் கதாநாயகன் மனிதனே. மனிதத்துவத்தின் மேல் நம்பிக்கை இழக்கும் போது தோற்கத் தொடங்கும் மனிதன் எழுந்து கொள்ளவில்லை. நடந்த மகா யுத்தங்களில் தன் சுயத்தை இழந்தான். பின்னால் பல அடிகள் எடுத்து தன்னுடைய செயலால வந்த வினைகளை பார்க்கத்தொடங்கினான்.
இது ஒன்றும் புதிதானதல்ல. அசோகர் ஆயுதங்களைப் கீழே போட்ட நாட்களிலுருந்து இந்த நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. யாரைப் பார்த்து அவன் வாள் கீழே விழுந்தது? அவன் சரணடைந்தது தன் சேனையின் சேதாரத்தினால் அல்ல; மனித மனத்தின் வக்கிரத்திற்கு வெட்கப்பட்டே கீழே விழுந்தான். நினைத்துப் பார்க்க முடியாத வக்கிரம் பிடித்த குணங்களை பல நூற்றாண்டுகளாக நிரூபித்த படியே வளர்ந்துள்ளான்.
ஜெயமோகன் ’நதிக்கரையில்’ என்ற சிறுகதையில் - ஆழத்தில் இருண்ட பிரம்மாண்டங்கள் விரிந்து கிடக்கின்றன. மானுடரின் கூறப்படாத வலியில் உறைகின்றனர்.அவர்களின் வக்கிரத்தின் ஆழங்களை எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. அது மின்மினிகூட வழிதவறி செல்ல முடியாத பேரிருள் - (சரியான வார்த்தைகள் இல்லை. ஆனால் அர்த்தம் இதுதான்) - என வியாசர் தன் காவயத்தின் கதாபாத்திரங்களைப் பற்றி கூறுவது போல் வரும். எத்தனை சத்தியமான வாக்கியம்! மகாபாரத கதைகள்,குறிப்பாக பின்பாரதயுத்த விளைவுகளைப் பற்றியே ஜெயமோகன் பல சிறுகதைகள், ஒரு நாடகம் மற்றும் ஒரு நீண்ட கதையும் எழுதியுள்ளார். அவரின் எந்த எழுத்தையும் படிக்காதவர்கள், இதை மட்டுமாவது படிக்க வேண்டும்.
மனிதன் தீமைகளை வென்றவன், எல்லாமே நன்றாகப் போகிறதே என இருமாப்பு கொள்ளும்போதெல்லாம் ஊழ் போல பல வில்லன்கள் தோன்றியுள்ளனர். அதற்கு மக்களும் வரவேற்று ஆதரவு தந்துள்ளனர். ஹிடலர், முசோலினி, சதாம், ராஜபக்ஷே எனத் தொடர்கிறது அதன் பயணம். ஆழத்தின் எல்லை என்னதான் எனப் பார்த்துவிடலாம் என்ற எண்ணம் தான்!
மாஹ்லரின் ஒத்திசைவுகள் எல்லாமே இந்த ஆழத்தின் சோதனையே. Tragic என வர்ணிக்கப்பட்ட இந்த ஆறாவது ஒத்திசைவு, பலதரப்பட்ட கருவிகளால் அமைக்கப்பட்டது. இரண்டு வருடத்தில் எழுதியிருந்தாலும் இதை பெரிய சிம்போனி என்றே குறிப்பிடுகிறார்கள். Allegro என்ற ஆரம்ப பகுதியில் ஒரு வடிவத்தினுள் அடங்கினாலும், கிராமிய பாடல்களிலிருந்து பல இசைத் தொகுதிகளை எடுத்து சிம்போனிக்கேற்றார்போல மாற்றி அமைத்துள்ளார். பல இடங்களில் அடங்கி எழும் ஒலித் தொடர்கள் விம்மலை நினைவூட்டும். திடீரென வரும் தாள வாத்தியக் கருவிகள் அச்சத்தை வரவழைக்கும் - ராணுவ அணிவகுப்பு போன்றதொரு அமைப்பால். இதனாலேயே இந்த இசை கோப்பு துக்கத்தின் சாரமாக கருதப்படுகிறது. இதற்கான உத்வேகம் Oscar Wilde இன் `The Picture of Dorian Gray` மற்றும் டால்ஸ்டாயின் Confessions படிக்கும்போதும் ஏற்பட்டதாக மாஹ்லர் குறிப்பிடுகிறார்.
இதில் நான்கு பகுதிகளை இசையமைத்துள்ளார்.
Allegro - ராணுவ அணிவகுப்பு போன்ற வேகம்
Scherzo - சற்று வேகமான ஆனால் அழுத்தமான அமைப்பு. பல இசைக் கருவிகள் வருமிடம். இதுவே ஒத்திசைவின் தூண் போன்றது. இதற்கு முன்னும் பின்னும் இந்த இசை அனுபவத்தை நம்பியே இருக்கிறது.
Andante - நிதானமாக கட்டிஅமைக்கக்கூடிய இசை அமைப்பு. நம் ராக ஆலாபனை போல் ராக அடுக்கின் வளைவுகளுக்குள் பயணிக்கும் ஒரு பாணி.
Finale - மெதுவான இசை. முடிவு பெற்று ஆதார சுரக் கோர்வை திரும்ப இசைக்கப்படும். (Base note).
Final bar எனப்படும் கடைசி சில நிமிடங்கள் அழுகையை வரவழைக்கக்கூடிய இசையாக பாவிக்கப்படுகிறது. பல கருவிகளும் ஒரே நேரத்தில், அதன் உச்சகட்ட அலைவரிசையில் இசைக்கத் தொடங்கும்போது `கிரீச்` போன்ற கூர்மையான ஒலி வெளிப்படும். இது அழுகைக்கு ஒப்பான உணர்வான சோகத்தை வெளிப்படுத்தும் ஒரு பாணி. இதைக் கேட்கும்போது நம் கால்கள் தாளம் போடுவதை நிறுத்திவிடும். தலையை இசையின் தாளாட்டுக்கேற்ப அசைக்க மாட்டோம்.
ஒரு முடிவற்ற வெறுமையை எதிர்நோக்கி தனிமையாக காத்திருக்கத் தொடங்குவோம், மாஹ்லர் போல.
நன்றி
Posted by: Balaji | 06/12/2009 at 09:08 PM