காலையிலே வித்தியாசமான தினத்தை சந்திக்கப்போவது அர்விந்தனுக்கு புரிந்தது. வினாடிகள் தொகுத்து நிமிடமாவதுபோல் ஒரு நாளாவது தன் வாழ்க்கையில் சாதாரண நிகழ்வுகள் அடுக்காக வராதா என கடந்த இருபது வருடங்களாக ஏமாறிக்கொண்டிருக்கிறான்.போலீஸாக தனக்கு அது எப்போதும் கிடைக்கப்போவதில்லை என்று மனதில் தெரியும்.வழக்கமாக செல்லும் கடற்கரைச் சாலை வழியாக செல்லாமல் ஒரு மாறுதலுக்காக லப்போர்த் வீதி வழியே ஸ்டேஷனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.ஸ்டீரியோவில் ஓ.ஸ்.அருணின் மீரா பஜன்.இசை அவனை சாந்தப்படுத்த முதல் முயற்சியாக நாம் எடுக்கலாம். பாண்டிச்சேரி அப்படி ஒன்றும் பெரிய ஊர் அல்ல. அவன் தாத்தா,அப்பா எல்லோரும் சைக்கிளிலேயே பாண்டியை அளந்துவிடுவார்கள்.முன்னேயெல்லாம் அப்படித்தான்.1940 என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.2000 ங்களில் கூட சைக்கிளில் செல்பவர்கள் அதிகமாக இருக்கும் டவுன்ஷிப் இந்த ஊர் தான். அதனாலேயே ஊரே மந்தமாக உள்ளதோ என்று தோன்றும்.இந்தியன் காபி ஹாவுஸின் வாசலில் உட்கார்ந்து கொண்டு பராக்கு பார்த்தால் இந்த ஊர் மக்களின் வாழ்வு முறை புரியும். பத்திற்கு எட்டு வண்டி இரண்டு சக்கரம்,மீதி ஒன்று பஸ் மற்றும் டெம்போ.டெம்போ ஒரு பெரிய சைஸ் மீன் வண்டி.பத்து பேர் வரை செல்ல முடியும்.உள்ளே உட்காராமல் ட்ரைவர் அருகில் உட்கார்ந்தால் ஒரு மினி வயரிங் பாக்ஸே இருக்கும்.பிரேக்,ஆக்ஸிலரேட்டர்,கியர் எல்லாமே பல தந்திகளாலேயே இழுக்கப்படும்.எப்போதும் முன்னால் செல்லும் சைக்கிளை இடிக்கும் தோரணை.அதுவும் பெண்கள் சைக்கிளென்றால் தனி குஷி தான். இதனாலேயே பல விபத்து கேஸ்கள் அவன் ஸ்டேஷனுக்கு வரும். இதோ லபோர்த்து வீதியில் வலது திரும்பி காந்தி வீதியில் நுழைந்தால் இரண்டாவது இடது நேரு வீதிதான்.காந்தியும் நேருவும் சேரும் இடத்தில் தான் விதி விளையாடியிருக்கிறது - இரண்டு செருப்பு ,ஒரு திருட்டு சி.டி
கடை மற்றும் காணாமல் போன வண்டிகள் இருக்கும்.நேரு வீதி செஞ்சி சாலையை தொட எத்தனிப்பதற்குள் அவன் ஸ்டேஷன் வந்துவிடும்.
தபால்களை மேம்போக்காக பார்த்துக்கொண்டிருந்தபோது கைத்தொலைபேசி அழைத்தது.
Chief commissioner நாகேஷ்.
'அர்விந்த், உங்க டோசியர்ல ஒரு புது பேப்பர் வெச்சிருப்பேன்.இப்பொவே பாத்திடுங்க.'
மெதுவாக எடுத்துப்பார்த்து குழப்பத்துடன் 'கொலையே பண்ணிட்டானா ஸார்??!'
'அதுக்குள்ள அவன்னு முடிவுபண்ணிட்டீங்களா? ஒரு முக்கியமான இசைக் கலைஞர கொலை பண்ண ஸ்ட்ராங் மோட்டிவ் வேணும்.ம்..நீங்க உடனே என்னோட ஆபீஸுக்கு வாங்க'
அவன் படிக்கெட்டுகளில் இறங்கும் போது கலைஅரசு கேட்டான் - 'இன்னிக்கும் கூப்பிட்டாரா சார்?'. கலைக்கு என் வயதானாலும் ,பப்ளிக் ரிலேஷன்ஷிப் பிரிவு.பென்சு தேய்க்கும் பணி.பதில் சொல்ல தோணாமல் டோசியருடன் ஓடிக்கொண்டிருந்தான்.
அனந்தனின் FIR கூட மை கலைந்திருக்காது.இந்த நேரத்தில் காணாமல் போன அந்த பெண்ணை பற்றிக் கூட அர்விந்தனுக்கு தெரியாதது ஆச்சர்யமில்லை.
-----------------------
அதே நாள் மத்தியானம் -
அன்புள்ள உமேஷ்,
இந்த கடிதம் கிடைக்கும் நேரத்தில் தங்களுக்கே விஷயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும்படி இக்கடிதத்தை 'நீதிபதியிடம்' கொடுத்துவிடவும்.
ரிப்பேர் செய்ய வருபவனிடம் 'பறவையை பறக்க வைக்க வேண்டாம்' என்று தெரியப்படுத்தவும்.
நன்றி,
இமானுவேல்.
தேதி - 12-03-'80.
இந்த கடிதத்தை பார்த்த நொடியில் செய்ய வேண்டியதை அரவிந்தின் மூளை உணர்த்தியது.எதிர்வரும் சர்வரை பொருட்படுத்தாது லே காஃபே ஹோட்டல் கதைவை தள்ளிவிட்டு தன் காரை நோக்கி ஓடி , ரியூ பால் வீதிக்குத் திருப்பினான்.
Recent Comments