ரகசியம் சொல்வதுபோல் குனிந்து அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.முணுமுணுக்கும் அவள் உதடுகளுக்கு பத்து வயதாகியிருக்கும்.
`இந்த இடத்துடன் கடல் முடிந்து போக வேண்டும்` - உலர்ந்து போன உதடுகளால் சொன்னதையே திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.மணலில் தங்கியிருந்த நுரைகள் சின்ன கற்களுக்குள் மறையும்வரை உற்றுப் பார்த்தாள்.பின்னர், கண்களை உயர்த்தி என்னைப் பார்த்த போது அவள் கண்ணீர் காற்றில் அடித்துச் சென்றது. திட்டு திட்டாய் மணற் துகல்கள் கைகளில் பரவியிருந்தன.
`பறவைகளைப் பார்க்க என் அப்பாவுடன் தினமும் இங்கு வந்துவிடுவேன்` - கைகளைத் தட்டி மணலை அதன் வீடுசேர்த்தாள்.
`இங்கயா?`
தலையை மேலும் கீழும் ஆட்டியபடி -`இங்கன்னா, அதோ அந்த பாறகிட்ட படுத்துக்குவோம்.நிலா முழுசா இருந்தா எல்லா பறவையும் தண்ணி மேல பறந்துகிட்டேயிருக்கும்`.
`என்னென்ன பறவையெல்லாம் உனக்குத் தெரியும்?`
`பேரெல்லாம் எனக்குத் தெரியாது.மூக்கு ஷார்ப்பா, கண்ணு பெரிசா, றெக்கை பல கலர்ல, கழுத்து நீளமா இருக்கிற பறவைங்க தான் இங்க வரும்.புது பறவையைப் பார்த்தா எங்க அப்பா கண்டுபிடிச்சிடுவாரு.அவருக்குத் தெரியாததே இல்ல` - யாரிடமோ சொல்வதுபோல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு உதட்டை ஈரப்படுத்தினாள்.
`அதுமட்டுமில்ல. இத மாதிரி இருந்ததுன்னு சொன்னா, என்ன பறவைன்னு சொல்லிவிடுவாரு.சில சமயம் எனக்குத் தெரிந்த கலரைச் சொல்லி என்ன பறவைன்னு கேட்டா, நான் பொய் சொல்றேன்னு கண்டுபிடித்துவிடுவார். அப்படியே என்னைத் தூக்கி போடப்போறேன்னு சுத்துவார்.` - கைகளை வானவில் போல் அகலமாக விரித்தபடி அவள் அப்பாவாக மாறினாள்.
தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் கண்டுபிடிக்கும் வழி எல்லாத் தேடலிலும் உள்ளதுதான். இந்த அம்சம் பறவைகளைப் கண்டுபிடிப்பதிலிருக்கும் தேடலில் மிக முக்கியமானது. தேடலில் அடையாளப்படுத்தி பகுக்கும் பணி பிரதானமாயிருப்பதுபோல்,பயண நிருபராய் இயற்கையுடனானத் தேடல் எனக்கு முக்கியமானது.
*
கதைகள் மேலுள்ள நம்பிக்கை பல காலத்திற்கு நம்மை வாழ்விக்கிறது. கதைகள் உருவாக்கும் தர்க்கத்துடன் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவையாக இருந்தாலும், நமது நம்பிக்கைகளுடன் நாம் பயணிக்கிறோம். நம் வாழ்வின் அர்த்தங்களைத் அந்த பயணத்தில் தேடும்போது, இந்த கதைகள் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. கதைகள் நம் இருப்பில் இருக்கும் நியாயங்களை பூரணமாக்குகிறது; நாம் நிம்மதி அடைகிறோம்.
ஆம், நிம்மதி.
திடீரென ஒரு நாள், தொப்புள் கொடி போல் படீரென நம் நம்பிக்கைகள் அறுந்து போகும். அதிரடியாய், முன் அறிவிப்பில்லாமல். நாம் மட்டும் தனித்து நிற்போம். என்ன நடந்ததென பிடிபடாமல் அறுத்துவிடப்பட்ட பட்டம் போல. நம்முடன் பயணித்த கதைகள், வேகமாக முன்னகர்ந்து போய்கொண்டிருக்கும். அடுத்தவனின் வலிபோல் நமக்கு எதுவுமே புரியாது. சட்டென அறுந்த கதைகள் நமக்கு என்ன கூறியது? பல சமயங்களில் எதுவும் கிடையாது. அது தேடலுக்கான கேள்வி வெளிப்படும் தருணம். அப்படிப்பட்ட கணங்களில் கேள்வி மட்டும் போதும்.
கடல், மாறாமல் நுரைத்துக்கொண்டிருப்பது போல் இருக்கும் தோற்றம். அதன் மேல் பறவைகள் தங்கள் வாசனையைத் தூவிச் செல்வதற்காக காத்துக்கொண்டிருக்கும். வயதானவர்களின் சுருக்கங்கள் போல எதற்கோ காத்துக்கொண்டிருக்கும். பறவைகள் தங்களைக் கடந்து செல்லும்வரை சத்தமில்லாமல் ராட்சஸ கடல் தலையைக் கவிழ்த்துக்கொள்ளும்.
அப்போது கடல் நம்மை பயமுறுத்தாது. ஆனால், என்றாவது ஒரு நாள். மெளனத்தில் நுழையும் ஊசி சத்தம் போல், ஆரவாரமில்லாமல் ராட்சஸன் கடலுக்கடியிலிருந்து பிளந்து வந்து தன் அசுரக் கைகளால் அந்த பறவைகளை பிடிக்கக்கூடும்.
அன்று அவற்றின் தேடல்கள் முடியும்.
*
நான் கடற்கரையை நோக்கி நடக்கும்போது புயல் ரேகைகள் கரைந்திருந்தன. புயல்,நான்கு நாட்களாய் கூத்தாடி, எங்கெங்கோ மறைந்திருந்த பொருட்களை வீதிக்கு கொண்டு வந்திருந்தது. என்னுடன் தைரியமூர்த்திகளாய் ஓரிருவர் மட்டுமே கடறகரைக்கு வந்திருந்தனர்.
`இதோ, மிச்சமிருப்பதெல்லாம் இதுதான்` என கவிழ்த்து கொட்டிவது போல், ருத்ரமாய் ஊழிப் பேரலைகள் கொண்டு சேர்த்தவை அங்கங்கே கிடந்தன. இதுதான் உண்மை . தண்ணீரும், நிலமும் ஆக்ரமித்தது போக மிச்சமுள்ளவை மட்டுமே நம் சம்போகத்துக்கு.
ஒட்டிய வயிறு போல் பின்வாங்கிய அலைகள்,கிடுகிடுவென ஆழத்திற்கு இழுத்து செல்லும் அகலமான கரை - நான் இந்த கடற்கரையைப் இப்படிப் பார்த்ததில்லை.கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இந்த ஊருக்குள், வேலை விஷயமாக விருப்பமில்லாமல் வந்திருக்கிறேன்.
வானத்திலும் நிறம் மாறியது.மூன்று நாட்களாய்,கனவுக் காட்சியைப் போல், அதிரூபமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது. கரையில் ஒதுங்கிய கட்டுமரத்துண்டில் காலை வைத்தபடி வானத்தைப் பார்த்து நின்றேன். காற்றின் ஓலம் அதிகரித்து, அரைகுறையாய் சாய்ந்து தொங்கிய தகரப் பலகையில் சத்தத்துடன் மழை தொடங்கியதும், அருகிலிருந்த வீட்டு வாசலில் தஞ்சம் புகுந்தேன்.
தொலைக்காட்சி சத்தம். போன வருடத்தைவிட அதிகமான மழை நாட்களை அறிவித்துக்கொண்டிருக்கிறது. அடித்த புயலில், இருண்ட அறையின் மூலையில் ஒடுங்கியபடி, மெழுகு வெளிச்சத்தில் வானொலி கேட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. அப்படிப்பட்ட செய்திகளைத் தொகுத்து அடுத்த நாளுக்குள் அனுப்பியாக வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு - `புயல் கடக்கும் பகுதிகளிலிருந்து நமது நிருபர்` என முதல் பக்க ஒண்டுக்குடித்தனத்தில் தொடங்கும் செய்தி, அடுத்த பக்கத்தின் எட்டாவது கட்டத்தில் சென்று முடியும்.
*
பழைய ஞாபகங்களிலிருந்து நம்மால் தப்பிக்க முடியுமா? ரயில் ஸ்டேஷனிலிருந்து கிளம்பி, வேகம் பிடித்து கணந்தோறும் புது இடத்திற்கு வந்து சேர்வது போல் நம்மால் ஞாபகங்களை மறக்க முடியுமா?
Recent Comments