சமீபத்தில் ஜாலியாக விறுவிறுவென ஜெட் வேகத்தில் படித்த புத்தகம் இரா.முருகனின் ‘லண்டன் டயரி’. ஏதோ ஒரு நூலகத்தில் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வயோதிகர் பாபரின் சரித்திரத்தை படிப்பதைப் பார்த்த வியப்பு அடங்குவதற்குள், அவரது வாயிலிருந்து வெளிவந்த பா பர்ர் பா பர்ர் எனும் ’சொக்க’வைக்கும் கொர்ர் ஓசையில் சரித்திரம் எழுதும் ஆசைக்கனவு காத்தாடி போல் ஜிவ்வென அறுந்துப் பறந்ததாக இரா.முருகன் குறிப்பிடுகிறார். விளைவு - லண்டன் உருவான சரித்திரத்தை அதன் போக்கில் நகைச்சுவையாக எழுத முடிந்திருக்கிறது. உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே லண்டனை உணரச் செய்கிறது என பின் அட்டையில் எழுதியிருக்கிறது. உண்மைதான். எழுதும்போது எப்படி எழுதினாரோ எனக்குத் தெரியாது;ஆனால் நம்மால் படுத்துக்கொண்டு படிக்க முடியாது. அதே போல் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயும் இப்பஜனை நடக்காது. உட்கார்ந்தபடி மட்டுமே படிக்க இயலும். வயிறு வலிக்கும்படி சிரிப்பதைப் பார்த்து அருகிலிருப்பவர் ‘என்ன சார் படிக்கிறீங்க? ஜோக் புக்கா?’ எனக்கேட்கும்போது ‘சரித்திரம்’ என சொன்னால் அவர் பார்க்கும் பார்வை நம்மை கீழ்ப்பாக்கத்துக் கேஸ் என கன்பர்ம் செய்திருக்கும்.
ஸ்காட்லாந்தில் வேலை செய்தபோது வாரக்கடைசிகளில் லண்டனை சுற்றிப் பார்த்து இந்த டயரியை இரா.முருகன் எழுதியிருக்கிறார். மொத்தம் நூற்றி எண்பது பக்கங்களில் லண்டனின் துவக்க கால சரித்திரம், ரோமானியர்களின் ஆட்சி காலம், விக்டோரியா மகாராணியில் ஆட்சி, லண்டன் நாடக அரங்குகள், வணிக வீதிகளான பிகாடலி, ஈஸ்ட் ஹாம் என பல சரித்திரப் புகழ் பெற்ற இடங்களை அவரது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார். நகைச்சுவையும் சில நேரங்களில் அங்கத கோணஷ்டைகளும் கலந்த நடை என்பதால் ஒரு குழந்தையைப் போன்ற குதூகலம் நமக்கும் தொற்றிவிடுகிறது. அதன் பிறகு அவர் எது எழுதினாலும் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறது.
உதாரணத்துக்கு பக்கிங்காம் அரண்மனையைப் பற்றி விவரிக்கும் பத்தி:
அரண்மனைக்குள் எலிசபெத் மகாராணி வயிற்றைத் தடவிக்கொண்டு ஏப்பம் விட்டபடி சாய்வு நாற்காலியில் கால் நீட்டி சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார். ‘காலை சாப்பாட்டிலே சரியா வேகவைக்காத முட்டையைக் கொண்டு போட்டுட்டான் எழவெடுத்த பட்லர். ஒரு டம்ளர் சுடுதண்ணி எடுத்து வாங்க’. உட்கார்ந்தபடிக்கே வீட்டுக்காரர் பிலிப் இளவரசரை ஏவிக்கொண்டிருக்கிறார். தரையில் தவழ்ந்தபடிக்கு எதையோ தேடிக்கொண்டிர்ந்த பிலிப், ‘கிடைச்சுது’ என்ற வெற்றிக் கூச்சலும் தொடர்ந்து மூட்டு வலி முனகலுமாக எழுந்து நிற்கிறார். கையில் ஒரு பவுண்ட் காசு. .. ’நானும் வெளிய போய்க் கம்பிக்கதவைப் பிடிச்சுட்டு கொஞ்சம் நேரம் காத்தாட நிற்கிறேன். அங்கே பாரு, ஒருத்தன் சோடாபுட்டிக் கண்ணாடியும் கட்டை மீசையுமா வாசல்லே எக்கிப் பார்த்துக்கிட்டிருக்கான். போய் நாலு வார்த்தை பேசிட்டு வரேன்’.. நான் அவசரமாக பக்கிங்ஹாம் அரண்மை வாசலை விட்டு நகர்கிறேன்.
இப்படி பல இடங்களைப் பற்றி சுவையான நிகழ்வுகளாக நகர்கிறது இப்புத்தகம். இரா.முருகன் தான் கண்ட இன்றைய லண்டனை விவரித்தது போக, லண்டனின் சரித்திரத்தையும் நடுநடுவே தனி இணைப்புகளாக விவரித்துள்ளார். இதனால், புது இடங்களைப் பற்றிய செய்திகளுக்குப் பின் சரித்திரக் கதைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. சீரான டூரிஸ்ட் கைடு வேகத்தை இது தடுக்கிறது. பாட புத்தகமாக இருக்ககூடாது எனக் கவனமெடுத்து சரித்திரம் சுவாரஸ்யமாக எழுதப்பட்டாலும், புத்தகத்தை முடிக்கும்போது லண்டனின் பழங்கதை முழு சித்திரத்தை தருவதில்லை. இரா.முருகனின் நகைச்சுவையும், நடையும் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் நின்றது. இது இப்புத்தகத்தின் மிகப் பெரிய பலவீனமாக எனக்குப் பட்டது.
லண்டன் தீ விபத்தைப் பற்றி எழுதப்பட்ட பகுதிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. பெரியளவு இயற்கை சீற்றம் அண்டாமலிருந்தாலும், லண்டனை பிளேக் நோய், தீ விபத்து என பல மனித சேட்டைகளின் சீற்றம் பல காலங்களாக துரத்தியிருக்கிறது. அதில் பெரியது 1666ஆம் ஆண்டு நடந்த தீவிபத்து தான். அதன் நினைவாக தேம்ஸ் நதிக்கரையோரம் ஒரு பெரிய கோபுரம் கட்டப்பட்டது. முன்னூறு சொச்சம் படிகள் ஏறி அக்கோபுரத்தின் உச்சிக்குச் செல்லலாம். அதற்கு டிக்கெட் வாங்கும்போது நடக்கும் சம்பாஷணை -
‘மேலே போகமுடியுமா’ வாசலில் காவலரை விசாரிக்கிறேன். ‘ரெண்டு பவுண்ட் டிக்கட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்’ எனச் சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பேர் ஏன் திடீர் என மாற வேண்டும் என்ற குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன்.’Bob's your uncle’என்ற பிரிட்டிஷ் சொலவடைக்கு, ‘அம்புட்டுத்தான், ரொம்ப ஈசி’என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.
அதே போல் பழைய புத்தகக் கடைகள் இருக்கும் ஆக்ஸ்போர்ட் தெரு பற்றி எழுதப்பட்ட பகுதியும் நன்றாக உள்ளது. நிறைய இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய தமிழர்கள் வாழும் ஈஸ்ட் ஹாம் பகுதி, ஸ்ட்ராண்ட் எனும் பழைய இலக்கிய முட்டுச் சந்து, பல நாடக அரங்கங்கள் என இன்றைய லண்டனின் முக்கியமான பல இடங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்விடங்களின் சரித்திரங்கள் ஆங்காங்கே சொல்லப்படாமல், சம்பவங்களாக மட்டுமே நினைவில் நிற்கின்றன. (முன்னர் யானி புத்தகத்திலும் இதே போன்ற குறை இருந்தது. சம்பவங்களை நாடகத்தன்மையுடம் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் தான். ஆனால், அதில் விஷயம் நிறைய சேர்க்காவிட்டால் அபுனைவிலிருந்து கிடைக்கும் விஷய ஞானம் குறைபட்டுவிடும் என நான் நினைக்கிறேன்.)
‘காந்திக்குப் பிறகான இந்தியா’ (India After Gandhi), சென்னை மறுகண்டுபிடிப்பு போன்ற ஆழமான சரித்திர புத்தகங்களை கிழக்கு வெளியிட்டுள்ளது. ஆனால் இப்புத்தகமோ சரித்திரம், நாட்குறிப்புகள், பயணநூல் போன்ற எந்த பகுப்பிலும் சேரவில்லை. இப்படி கலந்துகட்டி இருப்பதால் இப்புத்தகம் மிகவும் பலவீனமாகி படிப்பவர்களின் நினைவில் நிற்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இரா.முருகனின் ஜாலி நடைக்காகப் படிக்கலாம். மற்றபடி இப்புத்தகத்தை முடிக்கும்போதும், மறுபடியும் ஒருசேர தொகுத்துப் பார்க்கையில் லண்டனின் சரித்திரம் அவ்வளவாக நினைவில் தங்கவில்லை. ஒரு ஊரைப் பற்றிய ஜாலியான தீற்றல் குறிப்புகளாக மட்டுமே இப்புத்தகம் நின்றுவிடுகிறது.
Recent Comments