முதல் பாகம்
மோகமுள் கதையில் பாபு, ராஜம் இருவரும் நண்பர்கள். ராஜம் - தெளிவான கருத்துகளுடன் அந்தந்த கணத்தில் வாழ்பவன். பாபு தணியாத இசை ஆர்வம் கொண்டவன். ஆனால் தாபம் அவன் மனதுள் கொந்தளிப்பை உருவாக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்து மட்டுமல்லாமல் இசை ஒருவனின் உள் இயல்புகளை காட்டும் கண்ணாடி என நம்புபவன். இசைக்கு, தன் அப்பாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக நினைக்கிறான். காதல் தாபத்தில் தவிப்பவன். இசை மூலம் காலத்தை பின்னுக்கு ஓட்டுபவன். அவனுக்கு இசை ஒரு மீடியம். உணர்வுகள் ஊற்றெடுக்கும் மீடியம்.
மயில்கழுத்து(2) கதையில் இந்த இருவரின் மனப்போக்கிலேயே பாலு, ராமன் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம். ராமன் எதற்கும் சட்டென உணர்ச்சி வசப்படுபவர். தன் ரத்தத்தில் இசை பெருக்கெடுத்து ஓடுவதாக நம்புபவர். ஜெயமோகனின் `தாயார் பாதம்` கதையிலும் இதே ராமன் தன் இசை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுவார். இசையில் இயங்க முடியாமல் எழுத்தில் கொஞ்சம் கொட்டுபவன் என எண்ணுகிறார். தன் எண்ணங்களைத் தெளிவான கருத்துகளாக முன்வைக்க முடியும் என திடமாக நம்புபவர் பாலு.
புள்ளிகளை இஷ்டம் போல் மனம் இணைக்கும்போது புதுப்புது வடிவங்கள் கிடைப்பது போல் நம் மனம் இசையின் ஏற்ற இறக்கங்களை இணைத்துப் புரிந்து கொள்வதாகத் தோன்றுகிறது. பாலுவின் எண்ண ஓட்டத்தில் அதை பார்க்கலாம் (அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும்முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?)
மோகமுள்ளில் ராஜம் ராகங்களுக்கு தனி அழகு கிடையாது, அது பாடுபவரை பொருத்தே அமையும் என விவாதிப்பார். பாபுவுக்கு ராக அமைப்பு தனி செளந்தர்யம். அதை மனதில் ஓட்டினாலே உன்மத்தமாக இருக்கும்.உணர்வுக்குவியலாக அந்த ராக ஓட்டங்களுடன் தன் எண்ணங்களை ஒட்ட வைத்துப் பேசும் சுபாவம் கொண்டவன் பாபு.இவ்விஷயத்தைப் பற்றி நிறைய விவாதிப்பார்கள்.
இதே ஒப்பீடு இக்கதையிலும் உண்டு. நடைமுறைவாதியான பாலுவுக்கு ஆலாபனை கூட புள்ளி வைத்து தெளிவான வடிவங்களாக அமையும் கோலமாகிறது. அதே ராமனுக்கு அது அழகு. கைக்குள் சிக்காத அழகுணர்வு. தோற்ற அழகில்லை. மனதளவில் கற்பனையில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் செடியான தாபம் - அதை அடக்க எந்த அழகாலும் முடியாது. அந்த தாபத்தை விளக்கலாம் - பாடல், கவிதை, ஓவியம் என பல பரிமாணங்களில். ஆனால் அந்த தாபத்தை அணைக்க முடியாது. (எனக்கு ஞானமும் மோட்சமும் ஒண்ணும் வேணாம். அழகு போரும். அழகோட வெஷம் என்னை எரிய வச்சாலும் சரி.. எனக்கு இன்னமும் அழகு வேணும். கால்வெரல் நுனி முதல் தலைமயிர் எழை வரை நெறைஞ்சிருக்கிற ஜீவனோட பேரழகு இருக்கே அது வேணும்… அழகுன்னா என்னதுன்னு இப்ப அண்ணா பாடிக்காட்டிட்டார். அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. )
கதையின் கடைசிப் பகுதி ராமனின் நீண்ட அரற்றலாக அமைந்திருக்கிறது. அதிலிருந்து எனக்குப் புரிந்தது கீழே:
இப்புலம்பல்கள் சந்திராவின் அழகு மேல் இருந்த மோகமா, உலக அழகுகள் மேலிருந்து தணியாத வேட்கையா? (வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு)
இல்லை சுத்த சங்கீத பித்தா? (அதுலே ஒவ்வொரு துளியும் சங்கீதம்னா? சுத்த சங்கீதம். காதாலே கேக்கிற சங்கீதம் இல்லே… இப்ப இந்தா அண்ணா இன்னமும் அதேதான் பாடிண்டிருக்கார்.)
காதால் கேட்கும் சங்கீதம் அல்ல. அது மனித மனதின் லயம். ஓயாத அரற்றல். தோலைத் தாண்டி வெடித்தெழும் தாபம். அதை வெளியேற்ற வழிதெரியாததே புலம்பல்களாக ராமனிடம் வெளிப்படுகிறது. வார்த்தைகளாக விரல் நுனி வழியே வெளியேறும் சங்கீதம் அதில் ஒரு பாவனை மட்டுமே. தாயார் பாதம் கதையிலும் இது வெளிப்படுகிறது.
இசை மூலம், எழுத்தின் மூலம் தன்னால் முழுமையாக வெளிப்படுத்த இயலாத உணர்வுகளை சுப்பு ஐயர் சுலபமாக பாடல்களாகப் பாடிவிடுகிறார். கண்டிப்பாக தாபம் இல்லாமல் இல்லை. ஆனால் அதை அணைக்கும் வழி சந்திரா உட்பட யாரிடமும் இல்லை. சொல்லப்போனால், அந்த தாபம் அடங்கினால் ராமன் ஒன்றுமே கிடையாது. அந்த தாபமே அவரது படைப்பின் ஊற்று. அதில் சந்திரா போன்ற பெண்கள் நெய் போல் தூண்டுகோல்கள் மட்டுமே. அவர்களை அடைவதால் அந்த தாபம் தணியாது.
குமுறிக் குமுறி இசையாக வெளிப்படும் தாபம் சுப்பு ஐயருடையது. அது நேரடியாக ராமனின் இதயத்தை சுட்டுகிறது. தன்னால் விவரிக்க இயலாத உணர்வுகளை இப்படி அப்பட்டமாக போட்டு உடைக்கிறானே? (‘படுபாவி, அவன் கையிலே இருக்கறது நாகஸ்வரமா வேற எதுவுமா?நாசமா போக..கொல்றானே…மனுஷன மெழுகா ஆக்கிடறானே’).
அதே போல் பெண்மையின் உருவம் ராமனுக்குள் இயல்பான சலனத்தையும், பிரமிப்பையும் கலந்து உண்டாக்குகிறது. மோகமுள் பாபுவுக்கு யமுனா வெங்கலச் விக்கிரகம் என்பது போல் பெண்மைக்கு ஒரு ஆதிசக்தி இருப்பதை ராமன் குறிப்பால் உணர்த்திக்கொண்டேயிருக்கிறார். (இல்லே…திருச்செந்தூர் போகணும்னு தோணறது. ஒண்ணுமில்லே, திருச்செந்தூரிலே ஒரு மயில்கழுத்து பட்டு வாங்கி சாத்தணும்… நூத்தம்பது ரூபாயிலே கெடைக்கும்ல?’ ‘அது பாத்துக்கலாம்…யாருக்கு?’ ‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல? தெய்வானைக்குன்னா மாம்பழ நெறம்னு சொல்லுவாங்க’)
பெண்மையை சக்தி ரூபமாக, அம்பாள் வடிவமாக பல எழுத்தாளர்கள் உருவகப்படுத்தியுள்ளனர். லா.சா.ரா , தி.ஜா எனப் பலர். சக்தி ரூபத்தில் தலைகவிழ்ந்து ஆராதிப்பதும், பெண் ரூபத்தில் அடைய நினைப்பதும் ஒருங்கே நிகழ்வது தான். இக்கதையிலும் ராமனுக்கு அதுதான் நேர்கிறது. ஏதோ சந்திராவின் தாபத்துக்கு பரிகாரம் தேடுவது போல் மயில்கழுத்து பட்டு வாங்கி வள்ளிக்குச் சாத்தவேண்டும் என்கிறார்.
இசை மற்றும் தாபம் பாலுவையும் உலுக்குகிறது. எப்படி?
பாலு கைவிடப்பட்ட கருவி போல் தாபத்தை பாவிக்கிறார். இசை ஒரு கால இயந்திரம் போல் அவரை அவரது இளமைக்கு அழைத்துச் செல்கிறது (பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்தபாட்டு அடுத்து வந்தது ’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதிதிருநாள் பாட்டு).
ஆனால் தன்னுணர்வை மீட்டும் துடுப்பாக இசை பாலுவுக்கு எடுபடவில்லை. ஒரு நடைமுறையாளன், நவீன சிந்தனையாளன் எப்படி யோசிப்பானோ அப்படி செல்கிறது அவரது சிந்தனை திரி. தாபம் என்பதை ஆண் - பெண் என்ற லெளகீக அடையாளத்திலிருந்து மானுட துயரமாக அவருக்குத் தோன்றுகிறது. என்னை கைவிட்டுவிட்டாயா? ஏன் இவ்வளவு தனிமை என கழிவிரக்கம் தொண்டை அடைக்கும் துக்கமாக மாறுகிறது. (கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார்)
இசை பற்றி எவ்வளவு எழுதினாலும் சொல்லமுடியாதவற்றிலிருந்து சொல்லமுடியாததை விவரிப்பது போலவே இருக்கும். அள்ளிப் பருகும் கையளவு தண்ணீரில் மிதக்கும் முழு நிலவு போல். களையும், உடையும்,சலசலக்கும் - ஒருபோதும் கைப்பற்ற முடியாது.
இக்கதையில் ஒரே இசையை இரு பெரும் சிந்தனை தூண்களில் ஏற்றி வைத்திருக்கிறார் ஜெமோ. சக்திரூப அன்னை ஆதிவடிவம். ஆனால் சாதாரண மனதுக்கு தாபம். மற்றொரு நோக்கில் கைவிடப்பட்ட மிருகமாக மாறிவிட்டதாக மானிடனை நினைத்து கழிவிரக்கம் தாபமாக மாறுகிறது. இரண்டிலும் தாபமே அடிப்படை உணர்வு. ஆனால் ஒவ்வொரு மனதின் இயல்புக்கு ஏற்றவாறு இசை மூலம் அத்தாபம் புதுப்புது அர்த்தங்களாக உருமாறுகிறது. இசையின் இயல்பே அதுதான்.
Recent Comments