ஐந்தாம் நாளான இன்று லண்டன் இசை நிகழ்ச்சிக்காக யூஸ்டன் எனும் பகுதியில் இருந்த புனித மேரி மேக்தலின் தேவாலயத்துக்குச் சென்றேன். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே நேரமாகிவிட்டது. வழியும் தெளிவாகத் தெரியாது என்றாலும் வாரன் வீதி தரையடி ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில் தான் இருக்கிறது என மேப்பில் போட்டிருந்தார்கள். அதை நம்பி நடக்கத்தொடங்கியதில், சிறு சதுக்கத்தின் மூலையில் மறைந்திருந்த தேவாலய வாசலைத் தாண்டிச் சென்றுவிட்டேன். ஆங்காங்கே வழி கேட்டபின் தேவாலயத்துக்குள் செல்வதற்குள் நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடங்கள் ஆயிருந்தன.
இது மிகவும் பழைய பரோக் பாணி தேவாலயம். மர வேலைப்பாடுகள் மிகுந்த உயரமான வளைவுகள் ஆலயத்தின் உயரத்தை அதிகமாகக் காட்டியது. இன்றைய நிகழ்ச்சியில் பீத்தாவனின் பியானோ ட்ரியோவும், ஷுபர்டின் பியானோ ட்ரியோவும் இசைப்பார்கள் எனப் போட்டிருந்தது. தேவாலயத்தின் மூலையில் இருந்த சிறு மேடையில் பியானோ, வயலின் மற்றும் செல்லோ கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தனர். கூட்டம் கம்மிதான். இருபது நபர்களுக்கும் குறைவாகவே இருந்தனர். சத்தம் போடாமல் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துகொண்டேன். ஆச்சர்யமாக படம் எடுக்கவும் தடை அறிவுப்புகள் எதுவும் இல்லை.
ஸ்டாட்லர் ட்ரியோ எனும் குழுவினரது இசை நிகழ்ச்சி. பியானோ, செல்லோ மற்றும் வயலின் கலைஞர்களான மூவர் குழு, பீத்தாவன் பியானோ ட்ரியோவின் (Op 70, D Major) இரண்டாவது பகுதியை இசைத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் செல்வதற்கு முன் இன்றைய முக்கிய இசையாக அமைந்த ஒப்லிவியன் எனும் இரண்டாவது ட்ரியோ பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
இரண்டாவது இசையாக வரவேண்டிய ஷுபர்ட் பியானோ ட்ரியோ என்ன காரணத்தினாலோ இன்று நடைபெறாது என அறிவித்தார்கள். அதற்கு பதிலாக அவர்கள் இசைத்த அஸ்டர் பியாசொலா எனும் டாங்கோ கலைஞரின் சாஸ்திரிய இசை தான் இன்றைய ஆச்சர்யம். முதல் முறையாக அவரது பெயரைக் கேள்விப்படுகிறேன். பீத்தாவன் தான் கேட்க தாமதமாகிவிட்டது, ஷுபர்டாவது முதலிலிருந்து கேட்கலாம் என ஆசையாக காத்திருந்ததால் டாங்கோ இசை என்றவுடன் கொஞ்சம் எரிச்சல் வந்தது. ஆனால், அவர்கள் வாசித்த நான்கு நிமிடங்களும் அந்த இசையோடு ஒன்றிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். வயலின் செல்லோ குழைந்து குழைந்து விளையாடின. மிகவும் சோகமான இசை, ஆனால் கேட்க அழகாக இருந்தது. நான்கே நிமிடங்கள் மட்டும் இருந்த இந்த இசை 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாம். மிகவும் உருக்கமான இசை.இரவு நேரத்துக்கு உகந்த இசை. தந்திக் கருவிகள் நம்மை உருக வைக்கவே பிறந்தவை எந்த் தோன்றியது. எத்தனை நுண்ணிய உணர்வுகளை தங்கள் கம்பிகளில் தேக்கி வைத்துள்ளன!
மிகக் குறைவான கூட்டம் இருந்ததால் இன்று நிகழ்ச்சி முடிந்ததும் இசைக்கலைஞர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக செல்லோ கலைஞர் நிறைய பேசினார். அவரிடம் கேட்க வேண்டும் என சில கேள்விகள் வைத்திருந்தேன். ஆனால், ஒன்றிரண்டு தவிர மீதத்தைக் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை - அவரே நிறைய பேசினார்.
'நிகழ்ச்சி ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துகள். ஏன் பீத்தாவனின் இந்த குறிப்பிட்ட ட்ரியோவை ஒப்லிவியானுடன் சேர்த்து வைத்தீர்கள்? இவ்விரண்டு இசைகளின் கரு முற்றிலும் மாறுபட்டவையாகத் தோன்றியதே?' எனக் கேட்டேன்.
'பீத்தாவைன் ட்ரியோ மிகவும் குதூகலமானது. ஒப்லிவியான் மிகவும் சோகமான இசை. பொதுவாக பல பாடல்கள் இருந்தாலும் ஒரே போன்ற கருவைத் தான் நிகழ்ச்சிகளில் வைப்பார்கள். ஆனால், வெரைட்டிக்காக இன்று இப்படி வைத்தோம். அதுவும் தவிர ஒபிலிவியன் போன்ற இசையை பெரும் அரங்கங்களில் வாசிக்கக் கூடாது. மிகவும் ரசித்து இழைக்கப்படும் சிற்பம் போல, சிறு அரங்கங்களில் குளிருக்கு அடைக்களமடையும் பறவைகள் போல, ஒன்றினால் தான் அந்த உருக்கத்தில் கறைய முடியும்' என்றார்.
'ஒப்லிவியான் எழுதியவர் யார்? கேட்க மிகவும் இனிமையாக இருந்ததே?' என நான் கேட்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தார் 'பியாசொல்லா எனும் தென் அமெரிக்க டாங்கோ கலைஞர். பத்து வருடங்களாக சாஸ்திரிய சங்கீத இசைப் படைப்புகளை உருவாக்கி பாரீசின் ஆசிரியர் நாடியா புலான்ஞேரிடம் எடுத்து சென்றார். அதையெல்லாம் பார்த்த அவரோ, டாங்கோ தான் உன் விரல்களில் இருக்கு. அதிலிருக்கும் அம்சங்களை சாஸ்திரிய சங்கீதத்தில் இணைத்துப் பார். நவீன ஜாஸ் எல்லாம் முயற்சி செய்யாதே, விட்டுவிடு, டாங்கோவின் வேரை சென்றடைந்து அதிலிருந்து உன் ஆதார கருக்களைப் பெற்றுக்கொள் எனச் சொன்னதும் பிறந்ததுதான் நவயுக டாங்கோ. ஆனால் டாங்கோ புனிதமான இசை, அதை கெடுக்கக் கூடாது என அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாம்' என உற்சாகத்தோடு விளக்கினார். தான் அவருடைய மிகப் பெரிய ரசிகன் என்று அவர் சொல்லும்போது அவரது குரலில் பெருமிதம் தெரிந்தது.
'நீங்கள் வாசித்தது ரொம்ப அழகாக இருந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் பிரத்யேக வாசிப்பு அடையாளம் இருக்கும் இல்லையா? அப்படி உங்கள் சேம்பர் குழுவுக்கு எது அடையாளம்?' எனக் கேட்டேன்.
வயலின் கலைஞரைப் பார்த்து சிரித்துவிட்டு, 'மெலடி தான் எங்கள் பலம். குறிப்பாக வாசிக்கும்போது மற்றவருக்கு பெரிய இடைவெளியை திட்டமிட்டு விடுவோம். அது சில நொடிகள் இருக்கலாம். அதற்குள் அவரால் சில துணுக்குகளை மேம்படுத்த முடிந்தால், அதையும் எங்கள் இசையில் சேர்த்துக் கொள்வோம்..நாங்கள் டுயட் இசைக்கும் மூவர்' எனச் சத்தமாகச் சிரித்தார்.
'அப்படி மெருகேற்றும்போது மூல இசையுடன் ஒத்துப்போகும்படி எப்படி அமைப்பீர்கள்?' எனக் கேட்க நினைத்த கேள்விக்கு முன் வேறொருவர் அவரது கேள்வியைக் கேட்கத் தொடங்க, எனக்கு வாய்ப்பு பறிபோனது. கூட்டம் கலைந்ததால் இக்கேள்வியைக் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை.
இப்போது முதல் நிகழ்வான பீத்தாவனின் பியானோ ட்ரியோ (Op 70, D Major) பற்றிப் பார்ப்போம். தாமதமாகச் சென்றதால், நான் கேட்கத் தொடங்கும்போது செல்லோ இசை மிக ஆழத்தில் கேட்பது போல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பொதுவாக இரண்டாம் பகுதிகள் மெதுவாக அமைந்திருக்கும். முதல் பகுதியில் இசைத்த கருவிலிருந்து ஏதேனும் குறிப்பிட்ட இசைத் துணுக்கை மட்டும் மேலும் விரிவாக இரண்டாம் பகுதியில் இசைப்பார்கள். இப்பகுதி முழுவதும் பியானோவும், வயலின் மட்டுமே பிரதானமாக இசைத்தது போலிருந்தது. நிகழ்ச்சி நிரலில் இந்த இசையை 'Ghost' என வகைப்படுத்தியிருந்தனர். செல்லாவின் ஆழமான அதிர்வலைகளால் இருக்கலாம்.
மூன்றாம் பகுதி மிகவும் ரசிக்கும்படியாக வேகமாக அமைந்திருந்தது. வயலினும் செல்லாவும் டூயட் போல கைகோர்த்தபடி சில இசைத் துணுக்குகளை வாசிக்க பியானோ அவற்றுக்கு பக்கவாத்தியமானது. பின்னர் பியானோ பிரதானமாக ஒலிக்கத் தொடங்க, வயலினும் செல்லோவும் மாறி மாறி அதற்கு பக்கவாத்தியமானது. மொத்தத்தில் ஒரே மாதிரி ஸ்வர வரிசையைத் தான் மூன்று கருவிகளும் இசைத்தன, கால தாமதத்துடன். ஷுமன் பியானோ ட்ரியோவில் ஒவ்வொரு வாத்தியமும் வெவ்வேறு ஸ்வரங்களை இசைத்தன. அவை ஒன்றாகச் சேருமிடத்திலிருந்து ஒட்டியோ விலகியோ இசை தொடரும். பீதாவனின் இந்த ட்ரியோ மிக எளிமையாக இருந்ததோடு மட்டுமல்லாது, அழகான ஒத்திசைவையும் கொடுத்தது.
Recent Comments