சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை.
சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை.
எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி. கோவணம். இடுப்பில் கடியாரம். கையில் குச்சி. தண்ணியிலிருந்து விடுட்டென ஊரை நோக்கி எழுந்து வருவதுபோன்ற நடையில் சிலை;முகத்தில் பால் சிரிப்பு. அவருக்கு நேர் எதிரே நேரு மாமாவின் சிலை. சட்டையில் ரோஜா குத்தியிருக்கும். இருவரையும் நடக்கவிட்டால் மோதிக்கொண்டிருப்பார்கள். நடுவே புகுந்த கடற்கரைச் சாலை இவர்களிருவரையும் பிரித்திருந்தது.
பாண்டிச்சேரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அங்கிருக்கும் இடங்களைவிட பல மனிதர்களே அதிகமாக நினைவிற்கு வருகின்றனர். பலரை நான் சந்தித்தது என் தாத்தாவுடன் காலை நடைபயிற்சிக்காக கடற்கரை வரை போகும்போதுதான். பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்த காலமது. அதற்குப்பிறகு நண்பர்களுடன் ஊர் சுற்றத் தொடங்கிய பின் அனுபவங்கள் குறைந்து போனது என்றே சொல்ல வேண்டும்.
`நம்ம ஊருக்குள்ள வர எத்தனை வழிடா தெரியும் உனக்கு ` - கடலையை கொறித்துக்கொண்டே அழகு வந்து சேர்ந்தான். என் பள்ளி நண்பர்கள் கூட்டம் நான்கும் ஒன்றாக சேருமிடம் கடற்கரை. பாண்டிச்சேரி பீச்சுன்னா சும்மாவா.காற்று அடித்து ஆளையே தள்ளிவிடும். சும்மா, வெள்ளென பொங்கும் அலை வந்து காலில்பட்டால் உச்சிமுடி வரை சிலிர்க்கும். ஆனால் எந்த ஊரில் இல்லாத ஒரு குறை ஒன்றுண்டு. எங்க பீச்சில் மணல் கிடையாது. பிரெஞ்சுக்காரன் தூக்கி வித்துட்டான் என தாத்தா சொல்லிக் கேள்வி. அந்த சின்ன வயதிலேயே இவ்வளவு மணலை எப்படி எடுத்துப் போனான் எனக் கேட்டு தாத்தாவின் நண்பர்கள் மத்தியில் சுட்டிப்பயல் எனப் பேர் வாங்கியிருக்கிறேன்.
என் தாத்தாவோ ஒரு விஷயத்தை சும்மா விடமாட்டார்.அது நல்லதாயிருந்தாலும் சரி, கெட்டதாயிருந்தாலும் சரி. எங்கோ தொடங்கி எப்படி வந்து எந்த இடத்திற்கு வந்துவிட்டேன். என் செட் நண்பர்களைப் பற்றி சொல்லும்போது தாத்தா எங்கே வந்தார்? எங்கூரிலே கோஷ்டி எனச் சொல்லமாட்டோம், செட் என ஸ்டைலாக விளிப்போம். எங்க செட்டுக்குன்னு கடற்கரையில ஒரு இடமுண்டு. அரவிந்தர் ஆசிரமத்திற்குப் எதிரில், டுபே பூங்காவிற்கும் அரசு தலைமைச் செயலகத்திற்கும் எதிரில் இருக்கும் கற்குவியலே எங்கள் இடம்.
`வந்துட்டார்யா அறிவுப்பய, டேய் அழகு பஸ்ல வரலாம், ஓடியே வரலாம், உன்ன மாதிரி M80 வெச்சிருந்தா சூப்பர் ஸ்பீடுல வரலாம்` - அழகு ஏற்றப்போகும் அறிவுமணிச்சுடரைக் கிண்டல் செய்தேன்.
`இப்படி வெடைச்சு வெடைச்சே விளங்காம போப்போறீங்க. நம் காந்தி சிலைக்கீழ ஒரு சுரங்கப் பாதை இருக்காம்டா தெரியுமா?`
இது எனக்கு புது கதையே கிடையாது. என் தாத்தா சொன்ன பாண்டிச்சேரியின் மறு சரித்திரம். அதை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஒவ்வொரு ஊருக்கும் தொடக்க கதை இருக்குடா என்பார் தாத்தா. பல்லாயிரம் கதையிருக்கில்ல அதில பல ஆளுங்க, அவங்க வாழ்ந்த காலமும் புதைஞ்சிருக்குடா. நம்ப மக்கள் புழங்க புழங்க ஊர் மாறியதா, அல்லதா ஊர் மாறியதால் மக்கள் மாறினாங்களா? என தாத்தா தனக்கே கேட்டுக்கொள்வார். அதிகாலை ஓஸோனில் நடை பழகும் சில பெருசுகள். அவர்களுக்காக மட்டுமே நடக்கும் பதநீர், அருகம்புல் சூஸ் போன்ற தள்ளுக் கடைகள். பதநீர் மிக விஷேசமான பாண்டிச்சேரி சரக்கு. நூறு சதவிகிதம் பாண்டிச்சேரி சரக்காகும். காலையில் இதற்காகவே தென்னை மரத்திலேரி மாலைக்கள்ளாவதற்குள் இறக்க வேண்டிய பானம்.காலையில் குடித்தால் குளிர்ந்த பதநீர்; மாலையில் கள்ளு. ஆகா, அதனை பனைஓலையில் ஊற்றி சின்ன சின்ன டம்பளர்களிலும்,குவலைகளிலும் தருவார்கள்.விலை ஐம்பது பைசா இருக்கும்.அதற்கு இணையான ருசிகர பானத்தை நான் இதுவரை குடித்ததில்லை.
இதெல்லாம் எனக்கு தாத்தாவுடன் நடை பழக்கத்திற்காக தினமும் பீச்சுக்கு செல்லும்போது கிடைக்கும் முத்துக்கள்.தாத்தா ரிடையர்ட் பாங்க் மேனேஜர். அவர் வாயிலிருந்து கேள்விப்பட்ட சரித்திரம் நூறு சதவிகிதம் உண்மையானது என்றால்,அதே நூறு சதவிகிதம் பொய்களும் கலந்திருக்கும்.ஆனால், அந்த பொய்களும் போதை தரும். அந்த மோகனக் கதைகளை கேட்டபடி பல நாட்கள் நடந்திருக்கிறேன்.
வெள்ளை குதிரையில் வந்த வீரன் இசைத்த சிகப்பு சங்கு, சிகப்பு் குதிரையில் வந்த வீரம் இசைத்த வெள்ளைச் சங்கு - இதன்வழியே தோன்றியதுதான் பாண்டிச்சேரி.
இதில் மாசோசான் செட்டி, மாணிக்கம் செட்டிகளின் கதையும் அடங்கும். வட்டிக்கு பிரெஞ்சு மன்னர்களே கடன் வாங்கும் செட்டிக்கள் இருந்த ஊர்.
மூன்று விதமான சித்தர்கள் காத்த ஊர்.அவர்களுடைய அசாதாரணக் கதையே அந்த மண்ணுக்கு உரமிட்டது என்றெல்லாம் தாத்தா சொல்லும்போது பாதி புரியாமல் தலையை மட்டும் ஆட்டுவேன்.
கடற்கரை அரவிந்தர் ஆசிரமத்துக்கருகே இருந்த பூக்கடைகளுக்குப் பக்கத்து பங்களாவிலிருந்த அறுவைக்கு தாத்தாவை ரொம்ப பிடிக்கும். இத்தனைக்கும் அறுவை சில மாதங்கள் முன் தான் எங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அவர் வீட்டின் வாசலிலிருக்கும் செடியிலிருந்து என் அம்மாவுக்கு பிச்சிப் பூவைப் பறிக்கும்போது தான் எங்களை முதலில் பார்த்தார்.முதலில் என் தாத்தா வழிந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் `உள்ள வாங்க,மிஸ்ஸே` என்றார். அதற்குப் பிறகு எங்கள் நடைபயிற்சியின் போது பல நாட்கள் பழகியது போல் எங்களை அவர் வீட்டுக்குள் தினமும் அழைத்து டீயும் , நவு நவு என்றிருக்கும் பிஸ்கெட்டும் தருவார். ஓசி பிஸ்கட் கிடைப்பதாலும் தன் கதைகளைக் கேட்க இன்னொருவர் கிடைத்ததில் தாத்தாவுக்கு ரொம்பவே சந்தோஷம். பள்ளிக்கு நேரமாகிவிட்டது என நான் நச்சரிக்கும்வரை அறுவையுடன் பேசிக்கொண்டேயிருப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சும்மா விடமாட்டார். இரண்டாம் யுத்தத்தின் போது தனக்கு நடந்தவை, தன் பங்களாவை பிரெஞ்சு அதிகாரியிடமிருந்து தந்திரமாய் விலை குறைத்து வாங்கியது, சொல்தாவாக பிரான்ஸில் பட்ட கஷ்டங்கள், பிரெஞ்சு மனைவி தன் ஊரை (Roen) விட்டு தனக்காக இங்கு வந்து சேர்ந்தது, தன்னுடம் சண்டை போட்டதினால் பிள்ளை பிரான்சிலேயே இருப்பது என தினமும் பிஸ்கெட்டுடன் வகை தொகையாக கதை கேட்போம்.
நாளாவட்டத்தில் அவர் கதைகளுக்கு `ஊம்` என்று கூடச் சொல்ல வேண்டாம் என்ற நிலை வந்தது. நான் அவர் வீட்டில் மேலும், கீழும் அலைந்து கொண்டிருப்பேன். என் தாத்தா அவர் பேச்சில் ஒரு காது, ஓசி தினசரியில் ஒரு கண் என இருப்பார். நேரமாகிவிட்டது என்றாலும் என்னால் தாத்தாவை தனியாக விட்டுச் செல்ல முடியாது. அதற்கு அறுவையின் கதைகளும் காரணம். அறுவை சொல்லும் சம்பவங்களில் இருக்கும் கவர்ச்சி , அவர் உபயோபப்படுத்தும் வார்த்தையிலும் இருக்குமே.
`அந்த கம்மணாட்டி ஜெனரல், எனக்கு குழந்தை பிறந்திருக்கு எனத் தெரிஞ்சும் லீவு குடுக்கல.சரிதான் போடா மசுரான்னு நான் உதறிவிட்டு கப்பலேறிட்டேன்`
`திரும்ப போனீங்களா?`
`தேவைப்படாம என்னய கூப்பிடுவானா? முத வருஷம் முழுக்க பீலயே மூழ்கணுமில்ல. எவன் செய்வான்?`
இந்த பீ கதை என்னை இழுக்க,மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
`ஆமாண்டா மொளகா குஞ்சான், எல்லா சொல்தாக்களும் கழுத்து வரை பீல ஒரு கம்பில தொங்கணும். இதுக்குதான் ஃபிராங்கு கொடுத்தான்`
இவன் என்னடா இப்படி வாயப் பொத்தி பொத்தி சிரிக்கிறான் என சொல்தாவாக அறிமுகமான தாத்தாவின் நண்பர்கள் கேட்பார்கள். பலர் பீ கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
அப்போதுதான் காந்தி சிலைக்கு கீழேயிருந்த சுரங்கப்பாதையை பற்றிக் கூறினார். அது சென்று முடியும் இடம் செஞ்சிக் கோட்டை. செஞ்சி மன்னன் பதினேழாம் நூற்றாண்டில் தன் தற்காப்புக்காகவும், தன் தலைமை அமைச்சர்கள் உடனடியாகத் தப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அது. இப்போது மூடி விட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதன் வழியே பல காலமாய் மன்னர்கள் சென்றுவந்து கொண்டிருந்தனர்; பிரெஞ்சு அதிகாரிகள் அதை தானியங்கள் பதுக்கும் இடமாக வைத்திருந்தனர் என பெரிய பிரசங்கம் கொடுத்தார். அதை இன்றும் நான் நம்பவில்லை. ஆனாலும், அப்போது இக்கதையின் சுவாரஸ்யம் கனவிலும் என்னை விடவில்லை.
அவர் வீட்டில் பெரிய பியானோ ஒன்று இருந்தது. அதன் மூலைகளில் தங்கம் போல் இழைக்கப்பட்டிருக்கும்.கடற்கரையிலிருந்து எழும்பும் காலை வெயிலால் பியானோ ஜொலிக்கும். தாத்தா அறுவையுடன் பேசும்போது மாடியிலிருக்கும் பியானோவை நோண்டுவது என் வேலை. மாலை வேளைகளில் தினமும் தன் மனைவி சோஃபியா பியானோ இசைப்பாள் என அதைத் தடவிப்பார்த்தபடி பழைய ஞாபகங்களில் மூழ்குவார்.
எனக்குத் தெரிந்த வரையில் அறுவையைப் பார்க்க யாருமே வரமாட்டார்கள்.நாள் முழுக்க அவர் வாழ்வது தன் நினைவுகளிலிருக்கும் மனிதர்களுடன் மட்டுமே. பத்து வருடங்களுக்கு முன்னர் அவரது மனைவி இறந்ததால் அன்றிலிருந்து தன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்தார்.ஆனாலும் பழைய கதைகளை அவர் சோகத்தோடு சொல்லி நான் கேட்டதில்லை. எல்லா கதைகளிலும் துளி கம்பீரம் இருக்கும். பழைய கதைகளில் மட்டுமே தன் உயிர் இருக்கு என தாத்தாவிடம் பொக்கை பல்லோடு கெக்கெளிப்பார். நம்மகிட்ட கதை சொல்லி ஏதோ அவன் வாழ்க்கையை ஓட்டிக்கிறான் - என தன்னுடைய பல கதைகளுக்கு நடுவே தாத்தா அறுவையைப் பற்றி அனுதாபப்படுவார்.
வழக்கம்போல் நடை பயிற்சி முடித்து விட்டு அறுவை வீட்டு வழியாகப் போனோம். வழக்கத்திற்கு மாறாக அவர் வீட்டு வாசல் கதவு உட்புறமாய் பூட்டியிருந்தது. காலிங்பெல்லை பலமுறை அழுத்தியபின்னரே மெதுவாகக் கதவைத் திறந்தார்.
அறுவையின் கண்கள் சிவந்திருந்தன. மெதுவாக ஒரு கடிதத்தை தாத்தாவிடம் காட்டினார்.
உங்க மகன் உங்க கூட தங்க வருவது நல்ல விஷயம் தானே; வியாபாரம் நஷ்டமானால் என்ன ? அவருக்கு உங்க கூட இருக்கிற தைரியம் இருக்குமே. சந்தோஷமான விஷயம் தானே? ஏன் அழுவறீங்க? என தாத்தா கேட்டுக்கொண்டிருக்கும்போதே பியானோவில் சாய்ந்துகொண்டு ஓவென ஓலம் விட்டு அழத்தொடங்கினார் அறுவை.
(மீள் பதிவு - பல பிழைகளைத் திருத்தியபின்னர்)
தமிழில் இதுகாறும் வெளிவந்துள்ள நாவல்கள் என விளித்துக்கொள்ளும் வரலாற்று நாவல்கள் நாவல்களே இல்லை. அவை வரலாறும் அல்ல,நாவலும் அல்ல? அவைகள் பொய்ம்மைகள். அவைகளைப் படைப்பெனல் நரியை பரியென்பது போலாம்.
- என முன்னுரையிலேயே படிப்பவர்களை நோக்கி உரையாடத் தொடங்குகிறது பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும்` புதினம்.
சமூக நாவலுக்கு முன்னர் வெளியான அனைத்து புனைவுகளும் வரலாற்றுப் பார்வையை மையமாகக் கொண்டவை. பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல்களில் அதிகம் வரவேற்பு பெற்ற புத்தகம். இதற்கினையாக சாண்டில்யன் எழுதிய பல கதைகளும் வரலாற்று புதினங்களாக இன்றும் படிக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் வரலாற்று நாவல்களின் சிறந்த மாதிரியாக இருந்தாலும், பாலகுமாரனின் உடையார் இவ்வரிசையில் பழங்கால ஐதீகங்களை மிக நெருக்குமாகக் கொண்டு வளர்ந்த புனைவு. உடையார் ஒரு இனக்குழுவின் வரலாறாக அமைந்தது.
பல துண்டுகளாகச் சிதறிய கண்ணாடியில் தெரியும் உதிரி பிம்பங்களைக் கொண்டு ஒருமுழு சித்திரத்தை உருவாக்கும் முயற்சியே வரலாற்றை எழுதுதல். துண்டுகளில் தெரியும் பிம்பத்தை கற்பனை வழியே இணைத்தல் புனைவுக்கு வழி வகுக்கும். நேர்த்தியான வரலாற்றாசிரியன் இருண்ட இப்பகுதிகளை மனித வரலாற்றின் துணை கொண்டு நிரப்புவான். சாமுவேல் பெபிஸின் நாட்குறிப்பிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேயர் வாழ்கை தெரிவது ஒரு உதாரணம். இவ்வகை மனிதர்களின் வாழ்கையிலிருந்து வரலாற்றை நிரப்பும் பொறுப்பு வரலாற்றாசியரின் கையில் இருந்தாலும், அதில் கற்பனை சேர்த்து விரிவடையும் போது அப்புனைவு பல சாத்தியங்களை உருவாக்குகிறது.
ஒரு வரலாற்று நிகழ்வாக சிலப்பதிகாரத்தை நாம் படித்தாலும், தமிழ் இனத்தின் வரலாறாக ஜெயமோகனின் கொற்றவை அதை நம் முன் நிறுத்துவது போல் எதிரெதிரே நிறுத்தி வைக்கும் கண்ணாடியாக, வரலாறும் கற்பனையும் ஒன்றை ஒன்று விழுங்கியபடி வளர்ந்து காப்பியமாக உருவெடுக்கிறது. கொற்றவையில் விரிவடையும் இக்கற்பனை, பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள் கொண்டு புதுக்காப்பியமாகிறது.
இவ்வகையில் பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும்` - ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியன் தன் முன் இருக்கும் செய்திகளைக் கொண்டு மக்களின் பன்முக வரலாற்றை கற்பனை மூலம் முழுமை செய்யும் படைப்பாகிறது.
நாவலின் முன்னுரை தமிழில் வெளியான வரலாற்று புனைவுகளை நிராகரிக்கிறது. இந்நாவல் ராஜாக்களின் கதையல்ல. அவர்கள் வாழ்கையில் அனுபவித்த கேளிக்கைகள், நடத்திய போர், ஆக்கிரமிப்புகள் பற்றிய தொகுப்பல்ல. சாமானிய பிரஜைகளின் வாழ்வை நெருக்கமாக காட்டும் சம்பவங்களின் தொகுப்பு. பிரெஞ்சு நெறிகளை பிரதியெடுக்க முற்படும் மக்கள், தமிழ் மரபை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பிரெஞ்சு துபாஷிகள் என ஒரேசமயம் பல முரணியக்க உணர்வுகளை இந்நாவல் காட்டிச்செல்கிறது.
மாமனிதர்களின் வாழ்வே வரலாறு என்ற காலந்தொட்டு வந்த தமிழ் புனைவை இந்நாவல் மாற்றி அமைக்கிறது. போர்,வீரம்,காதல் போன்ற மரபார்ந்த பார்வையே தமிழ் இலக்கியத்தின் வரலாற்று தொகுப்பாக இருந்து வந்ததால், சாமானியர்களின் வாழ்வு தொகுக்கப்படாமலேயே மறைந்து வந்திருக்கிறது. இந்த வசவு என்னால் தீர்ந்தது என பிரபஞ்சன் கூறுவதில் உள்ள உண்மை நாவல் முழுவதாக படித்து முடிந்தவுடன் புரிகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையின் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய நாட்குறிப்பு இந்நாவலுக்கு மிக பலமான அஸ்திவாரம். துய்மா பிரான்ஸிலிருந்து 1735ஆம் ஆண்டு கவர்னராக புதுவைக்கு வருகிறார். ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரான்ஸுக்கு சென்றுவிடுகிறார். இடைபட்ட காலத்தில் நடக்கும் தென் நாட்டு அரசியலைக் கொண்டு பாண்டிச்சேரியின் வரலாற்றை சொல்ல முற்படுகிறது இப்புதினம்.
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு கிட்டதட்ட 12 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. இவை தமிழிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. பெரும்பாலும் அவர் துபாஷியாக இருந்த நாட்களில் எழுதப்பட்டவை. பாண்டிச்சேரியின் பிரெஞ்சு காலனியாதிக்க துவக்கத்தை இந்த நாட்குறிப்பில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். வாணிபத்துக்காக புதுச்சேரிக்கு வந்த பிரெஞ்சு அரசு மெல்ல தமிழரின் பழக்கவழக்கங்களை புரிந்து கொள்ளத் துவங்கும் காலகட்டத்தின் இந்நாவல் ஆரம்பிக்கிறது.
கவர்னருக்கு மக்களின் குலப் பிரிவினைகள் புரிவதில்லை. அவற்றை விளக்க நம் துபாஷிகள் உதவுகிறார்கள். நாவலின் ஆரம்பத்தில் வரும் ஒரு சம்பவம் - கவர்னர் தினமும் காலை வேளையில் நகர்வலம் போவார். ஒரு நாள், காலைகடன்களுக்காக கடற்கரை ஓரமாக வரிசையாக உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து வருத்தப்படுகிறார் - ஓலைத் தடுப்பு சட்டம் மூலம் காலைகடன்களை மறைமுகமாக முடித்துக் கொள்ள வழிவகுக்கிறார். இச்சட்டம் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் உள்ளது. ஆனால் அதற்கு மக்களின் எதிர்வினை எங்கும் பதியப்படாததால், பிரபஞ்சன் தன் கற்பனை மூலம் செய்திகளைத் தாண்டிச் சென்று முழுமைப்படுத்துகிறார்.
கோவில் தாசியான கோகிலாவின் கதை - அந்நாளைய தாசியின் காரியங்களை எதிர்க்கத் துவங்கும் தலைமுறையின் வாழ்வு முறையை கூறிச்செல்கிறது. ஊர் பெரியவர்களின் மார்பில் சந்தனம் பூச அவர்களின் கோபத்துக்கு பயப்படாமல் கோகிலா மறுக்கிறாள். அவளுக்குத் துணையாக கோயில் அர்ச்சகர் வாதிடுகிறார். தாசி குலத்தின் அன்றைய இயல்புகளை இந்நிகழ்வு வெளிப்படுத்தினாலும், சமூகத்தில் இப்பழக்கத்தை எதிர்த்தவர்களும் இருந்ததையும் பதிவு செய்கிறது.
நாவலின் வரும் முக்கியமான கட்டம் பிரெஞ்சு துரைக்கும், தஞ்சை அரசருக்கு நடக்கும் அரசியல் ஒப்பந்தத்தில் ஆரம்பிக்கிறது. இதுவே இந்நாவலின் கதைக்களன். இந்த அரசியல் சதுரங்கத்தைக் கொண்டு மற்ற கதைகளை நகர்த்திச் செல்லப்பட்டுள்ளது.
பிரெஞ்சுப் படை தஞ்சையை பாதுகாத்தால் காரைக்கால், கருக்களாச்சேரி கோட்டைகள் புதுச்சேரிக்கு அன்பளிப்பாக தரப்படும் என தஞ்சை அரசர் சாயாஜியும் கவர்னர் துய்மாவும் செய்து கொள்ளும் ஒப்பந்தம். நாவலின் அடிப்படை கரு இந்த அரசியல் நிகழ்வை சுற்றி அமைந்திருக்கிறது. காரைக்கால் தனிப்பகுதியாக கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தினம் நடக்கும் போரால்,மக்களுக்கு ஆட்சியில் இருக்கும் ராஜாவின் பெயர் கூடத் தெரியாமல் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் தங்களுக்குத் திண்டாட்டமான வாழ்வே என வருத்தப்படுகிறார்கள். அப்பகுதி வழியாக செல்லும் மராட்டிய, வடக்கு ராஜாக்களின் படைவீரர்களை கொண்டே அம்மக்களின் அவஸ்தையை பிரபஞ்சன் விளக்குகிறார்.
போரின் கொடுமைகளையும் விஞ்சி நிற்கக்கூடியதாக,படை வீரர்களின் அழிப்பு வெறி போர்முனையைத் தாண்டியும் விரிவடைவதைக் இந்நாவல் காட்டுகிறது. குறிப்பாக ஒரு கிராமத்தின் வழியே செல்லும் படைவீரர்களின் புழுதி கிளப்பும் சித்திரம் நம்மை விட்டு அகல மறுக்கிறது. மகளின் திருமணத்துக்காக வளர்க்கும் நெற் பயிற்கள், தானியங்களை அழித்துச் செல்லும் படைவீரர்கள் திசையைப் பார்த்து-`ஐயோ என் மகளே` என அழும் ஓலம் போரின் உக்கிரத்தை தாண்டி மனிதனின் அரக்க குணத்தை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
புதுச்சேரி இனக்குழுவின் தொகுப்பாகவும் இப்புத்தகத்தை நாம் வாசிக்க முடியும். கவர்னர் துய்மா அதிகாலை வேளை நகர்வலத்தின் போது பார்க்கும் காட்சிகளை பதிவு செய்யும்போது அன்றைய மக்களின் வாழ்வு முறை தொகுக்கப்படுகிறது. அதே போல், அக உலகை இன்னும் ஆழமாகப் பதிவு செய்ய புற உலகின் இயற்கை வர்ணனைகளை பிரபஞ்சன் அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.
பிரெஞ்சு மக்களைப் போன்ற பழக்க வழக்கத்தை பின் பற்றத் துடிக்கும் தமிழர்கள், தினமும் நாட்குறிப்பு எழுதி அன்றாட அரசியலை மறுபரிசீலனை செய்யும் ஆனந்தரங்கப்பிள்ளை, அவருடன் தினச்செய்திகளைக் கேட்டு விவாதிக்கும் பண்டிதர், தேவதாசிகளின் வாழ்வை நிராகரிக்கும் கோகிலாம்பாள், அவளுடைய தம்பி போல் கூடவே இருக்கும் வெகுளியான குருசு எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் வழியே புதுச்சேரியின் அன்றைய அரசியல், சமூக வாழ்வு விரிவடைகிறது.
இப்படி பல கதாபாத்திரங்களின் செய்திகளாக வளர்வதால், நாவலில் ஒரு மையக் கரு இல்லாதது போலத் தோன்றும். இதை ஒரு குறையாகவே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஆங்காங்கே தோன்றும் மக்களின் வாழ்கையிலிருந்து ஒரு தொகுப்பாக அக்காலகட்டம் நம் முன்னே நிற்க வைக்க இது மிக நல்ல உத்தியாகவே தோன்றுகிறது. சில பக்கங்களே வந்தாலும் இந்நிகழ்வுகள் வரலாற்றின் ஒரு இழையை தக்க வைத்துகொள்வதால் ஒரு பெரும் வரலாற்றுத் தொகுப்புக்கான முகாந்திரம் இந்நாவலுக்கு அமைகிறது.
பிரபஞ்சன் எழுதிய வரலாற்று புதினத்தில் `மானுடம் வெல்லும்` முதல் பகுதி. இரண்டாவது பகுதியில் ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்கையும்,அதற்கடுத்தப் பகுதியில் புதுவையின் சுதந்திரப்போராட்ட வரலாறும் புனைவாக்கப்பட்டுள்ளது.
தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்ற இல்லையே என்ற வசை என்னால் ஒழிந்தது என பிரபஞ்சன் கூறுவதற்கு நூறு சதவிகிதம் பொருத்தமான நாவலாக இது அமைந்திருக்கிறது.
பதினைந்து வயது வரை, எல்லா சிறுவர்களைப் போல நானும் வீட்டுப் பூனையாய் வளர்ந்தேன். வீட்டுக்கு எதிரே இருந்த செட்டிக் கடைக்கு கூட தனியாகச் சென்றதில்லை. பாண்டிச்சேரியின் பெரிய தெருவான மகாத்மா காந்தி வீதியின் என் வீடு இருந்தது. எல்லா ஊரிலும் இதே பெயரில் ஒரு தெரு இருக்கும். பெரும்பான்மையான ஊர்களில் இது புழுதி கிளம்பும் மெயின் ரோடாக இருக்கும். பாண்டிச்சேரியிலும் இதே தான். தெருக்கோடி என எதுவும் கிடையாது. இதனால் தெருக்கோடிக்குக் கூட தனியாகப் போனது கிடையாது.
வருடத்தில் ஒரு நாள் மட்டும் தனியாக வலம் வர அனுமதி உண்டு. ஒரு முழு நாள். 24 மணி நேரம். அது மாசி மக தினத்தன்று மட்டுமே.
என் வீட்டை ஒட்டி இருந்த சந்து கடலாடும் வழியாகும். கடலாடுவது என்ற வார்த்தை மாசி மாசம் நடக்கும் மகத்துக்கு மட்டுமே உரியது. மாசி மகத்தன்று, பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள கோயில்களிலிருக்கும் மூலவர் விக்கிரகங்களை கடலில் குளிக்க வைப்பார்கள். கடலாடு தீர்த்ததில் விக்கிரகங்கள் மட்டுமல்ல;எல்லா மக்களும் குளிப்பார்கள். முதல் முறையாக குளிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.
உள்ளூரிலிருந்து மட்டுமல்லாது, பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள கடலூர், திண்டிவனம் என பல ஊர்களிலிருந்து திரளாக மக்கள் கூடும் நாள். அன்று முழுவதும் என் வீட்டில் அனைவரும் பெண்ட் நிமிரும் வேலை இருக்கும். எனக்கு ஒரு முக்கியமான வேலை உண்டு. அதிகாலையில் என் வீட்டுக்கு எதிரே இருந்த வாழைத்தோட்டத்திலிருந்து, பல கருவேப்பிலை தண்டுகளை நான் பறித்து விடுவேன்.
இருபது லிட்டர் பால், தயிர் என முன்னரே ஆர்டர் செய்து, வீட்டு வாசலில் மூன்று பெரிய அண்டாக்களில் அவை நிரப்பப்படும். மோர், தயிர் வகைதொகைகள் ஐஸுடன் அண்டாக்களில் நிரப்பப்பட, நான் கருவேப்பிலை இலைகளை சேர்த்துக்கொண்டே வருவேன்.மிச்ச்சமிருக்கும் இலைகளை அண்டாக்கள் சுற்றி வைக்கப்படும். ஈ, பூச்சிகளை அண்டவிடாது என்பதால், என் தாத்தா இதில் மிக கண்டிப்பு. மகத்தைப் பார்க்க வரும் மக்களுக்கு, சின்ன குவளைகளில் இவற்றைக் கொடுப்பது என் குடும்பத்தில் உள்ளவர்களின் வேலை. இதைப் போல் கடல் ஆரம்பிக்கும் இடம் வரையுள்ள வீடுகளில் பல மைல்கள் கடந்து வரும் மக்களுக்கு கொடுப்பதற்காக ஏதேனும் இருக்கும்.
மத்தியானத்துக்கு மேல் நான் டேக்கா கொடுத்து கிளம்பிவிடுவேன். மாமா, சித்தப்பா, நண்பர்கள் என யாராவது கிடைப்பார்கள்.அவர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன். எல்லா கூட்டமும் மகம் நடக்கும் வைத்திகுப்பம் என்ற கடலோர இடத்தில் இருக்கும். பாண்டிச்சேரி டவுன் பீச்சில் கூட்டம் இருக்காது. அடுத்த சில வருடங்களில், காலேஜ் படிக்கும் போது, தினமும் பீச்சுக்கு சென்றாலும், சின்ன வயதில் நண்பர்களுடன் சுதந்திரமாக ஊர் சுற்றுவதே பரம திருப்தி. இந்நாளுக்காக பல வாரங்கள் காத்திருப்போம்.
சைக்கிளில் வேகமாக காற்றைக் கிழிக்க பீச் ரோடில் பறப்போம். பாண்டிச்சேரியில் உள்ள தெருக்கள் அகலமாக, நீண்டதாக இருக்கும். இதனால், சைக்கிள் ரேஸ் மிக சகஜமாக நடக்கும். பீச் முடியும் பகுதியில் இருக்கும் லைட் ஹவுஸ், பாறைகள் பின்னால் பதுங்கியிருக்கும் கட்டுமரங்கள், மீதமிருக்கும் ரயில்வே பாளங்கள் என மூலை முடுக்கெல்லாம் நடப்போம்.
கடற்கரைக்கு அருகே இருக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு பக்கத்தில் ஒரு புக் ஸ்டால் உண்டு. இந்திய மற்றும் வெளிநாட்டு புத்தகங்கள், காஸெட்டுகள் நிறைய கிடைக்கும். பல ஆசிரம தயாரிப்புகளும் உண்டு. அங்கு கிடைக்கும் மட்டிப்பால் ஊதுபத்தி மிகப் பிரபலம். தீபாவளி சமயத்தில் லஷ்மி பட்டாசுக்குள் மட்டிப்பால் ஊதுபத்தி மருந்தை நிரப்பி வெடித்தால் சூப்பர் வாசமாக இருக்கும். ஆனால் எப்போதும் கிடைக்காது. மகம் நடக்கும் நாட்களில் நிறைய கிடைக்கும்.அதனால், பல கட்டுக்கள் வாங்கி வைத்துக்கொள்வோம்
கடற்கரையை ஒட்டி காலாற நடந்தால் மகம் நடக்கும் வைத்திக்குப்பம் வந்துவிடும். நூற்றுக்கணக்கான சிலைகள் கடலில் குளிப்பது புகைப்படக் காட்சி போல என் ஞாபகத்தில் நிலைத்து விட்டது. ஒவ்வொரு சிலை மூழ்கும் போதும் தண்ணீரில் கரையும் சந்தனம் மஞ்சள் குங்குமம் நிறங்கள், பூக்கள் போன்றவை சேர்வதால் கடலே வானவிலால் குழைத்தது போல இருக்கும்.
சாமி சிலைகள் மேள தாளத்தோடு பிரமாதமாய் ஊர்வலம் வரும். கரைக்கு வந்தவுடன் சிலைகள் கடலில் மூழ்கி குளிக்கும். பல மணி நேரங்கள் நடந்து வந்ததால், வாத்தியக்காரர்கள் கரையில் இருக்கும் கற்களில் உட்கார்ந்திருப்பர். அவர்கள் அடிக்கும் வம்பை ஒட்டுக்கேட்பது அலாதியான அனுபவம்.
பெரிய சிகப்பு பொட்டு, கழுத்து முழுவதும் சந்தனம், பல தங்க ஆபரணங்கள் , நீண்ட ஜடா முடி என வேஷக்காரர்கள் போல் நாதஸ்வர வித்வான்கள், சதா வெத்திலை மென்றுத் துப்புவதால் ரத்தச் சிகப்பேறிப்போன வாய்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பர். இரண்டாம் ஆட்டச் செய்திகள் மட்டுமே இவர்கள் உரையாடல்களில் இருக்கும். பல புரிந்ததில்லை.
பக்தர்களால் ஒரு புறம் அலை மோதினாலும், பலூன் ,மண் பொம்மைகள், குழந்தைகளுக்கான உண்டியல்,தோல் மேளம், மிளகாய் பஜ்ஜி/போண்டா விற்பவர்கள் பலரும் இந்த வாத்தியக்காரர்களின் அரட்டையில் சேர்ந்து கொள்வர்.
சமயங்களில் உரையாடல்கள் விரசத்தைத் மீறி அருவருப்பூட்டும். அவற்றைப் பேசி முடித்த எச்சிலைக் கூட விழுங்காமல், சாமி, பூஜை என அதே வேகத்தில் பேச்சு தொடரும்.
அவை மிக சுவாரஸ்யமான நாட்கள். தொடர்ந்து நினைவில் உள்ள் ஓரிரண்டு சம்பவங்களை இங்கு எழுதலாமென்ற எண்ணம்.
இந்த ஊருக்கு வந்த பிறகு நான் வானத்தைப் பார்க்கவில்லை. தலைக்கு மேலே என்ன உள்ளது எனத் தெரியாமல் அலுவலகத்துக்கு போய் வருவதற்கே மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. பின்னர் வேலை மாற்றத்தில் ஒரு புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு அடுக்குகள் கூட இல்லாத கட்டிடங்களைக் கொண்ட பகுதி.
இப்போதுதான் இந்த ஊரில் வானத்தை முதல் முறை பார்க்கிறேன்.
கூடவே ரமேஷ் ஞாபகம் வந்தது. ரமேஷ்,பாண்டிச்சேரியில் என் வீட்டருகே இருந்தவர். என்ன வேலை செய்தார் எனத் தெரியாது. நாற்பது வயது. எந்நேரமும் தாடி, கையில் குறைந்தது இரண்டு புத்தகங்கள் , சார்மினார் சிகரெட்.கைகள் எப்போதும் நடுங்கியபடி இருக்கும். கண்ணுக்கு கீழிருந்த கருவளையம் நான் பார்த்த நாள் முதல் அதிகரித்துக்கொண்டேபோனது. விவாகரத்தானவர் என மற்றொரு சமயத்தில் கூறியிருந்தார்.
எங்கள் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என ஞாபகம் இல்லை.ஆனால்,கண்டிப்பாக ஒரு சுபயோக சுபதினத்தில் சுமூகமான முறையில் ஆரம்பித்திருக்காது என உறுதியாகத் தெரியும்.
அப்போது எனக்கு பதிமூன்று வயதிருக்கும். என் வீட்டருகே இருந்த நண்பர்கள் ரமேஷைக் கண்டாலே ஓடத்தொடங்க, நான் மட்டும் பேமாரமாய் மாட்டிக்கொள்வேன். பல நேரங்களில் ரமேஷுக்கு பயந்தே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருக்கிறேன். ரமேஷ் அப்படி என்ன செய்வார்?
ரமேஷிடம் சில விசேஷ குணங்கள் இருந்தன. அவரால் தொடர்ந்து மூன்று மணி நேரம் சளைக்காமல் பேசிக்கொண்டேயிருக்க முடியும். முதல் சில மாதங்களில் வாரக்கடைசிகளில் சந்தித்துக் கொண்டிருந்தோம். என் வீட்டு வாசலில் வந்து கூப்பிடுவார். வார்த்தைகள் வரும் வேகத்தில், புகை ரிலீஸ் ஆகும். சிகரெட் பிடித்தவர்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்திராத எனக்கும், அந்த புகை போதையைத் தந்தது போலிருந்தது. வீட்டுக்குள் போனால், புகை வாசம் வருமே என்றெல்லாம் பயந்து கொண்டிருப்பேன்.
கிட்டத்தட்ட உன் சித்தப்பா வயதுள்ள ஆளுடன் உனக்கு என்னடா பேச்சு என என் வீட்டில் கேட்காத நாளில்லை.ஆனால், ரமேஷுக்கு இதெல்லாம் கவலை இல்லை. தொடர்ந்து அரசியல், இலக்கியம், அறிவியல், சினிமா மட்டுமே உலகம்.
நீங்கள் மேட்ரிக்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். கிளைமாக்ஸ் காட்சியில் குண்டுகள் தரையில் சரமாறியாக விழுந்து கொண்டேயிருப்பதை ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள். இங்கு குண்டுகளுக்கு பதிலாக, வார்த்தைகள். கீழிருக்கும் இந்த மூன்று வரிகளை ரமேஷ் ஒரு சில வினாடிகளில் பேசியிருப்பார். யாரிடம்? வர்ற பொங்கலுக்கு எந்த ரஜினி படம் பார்க்கலாம், என் நண்பன் அருணுக்கு மீசை முளைக்கத் தொடங்கிவிட்டது - எனக்கு எப்போ என தடவியபடி இருக்கும் பதிமூன்று வயது பையனிடம் -
`இஸ்ரேல்ல wailing wall சுற்றி இருக்கும் இடத்தில் குறைந்தது 2000 ஒற்றர்கள் இருப்பார்கள் தெரியுமா? அவங்க அரசியலே வேறப்பா. ரிலிஜியனுக்கு , ஹுமானிட்டிக்கும் நடுவுல எவ்வளவு காலத்துக்கு இப்படி நடக்கும். ஐன்ஸ்டீனை அந்த நாட்டு பிரசிடெண்டா கூப்பிட்டாங்க. அவரோ அப்பத்தான் ரிலேட்டிவிட்டி வீக்கா மாறிப்போனதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிற காலகட்டம். ஸ்விஸ்ல அப்போதான் அவர் கண்டுபிடிச்ச தியரி சிலது தப்புனு ப்ரூவ் பண்ணத் தொடங்கினாங்க..என்ன சிக்கல்னா..`
இதே ரீதியில் குரங்குத் தாவலாய் சப்ஜக்ட் தாண்டிக்கொண்டேயிருப்பார். ஆழமாக ஏதாவது சொல்லிவிட்டு, அதை என் முகம் ஆமோதிக்கிறதா எனப் பார்ப்பார். ஓரிரு வினாடிகள் தான். அடுத்ததது வேறொரு விஷயத்துக்கு தாவிவிடுவார். இதைப் போன்ற வாரகடைசி சந்திப்புகள் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நீடித்தது.
என் ஏரியா நண்பர்களுடன் வாரக்கடைசிகளில் தான் கிரிக்கெட் விளையாடுவேன். இதனால் ரமேஷை சந்திப்பதை தவிர்க்க முயல்வேன். சில நேரங்களில் நான் விளையாடும்போது, ஓரமாய் வந்து நின்று கொள்வார். விளையாடும் போது தொந்தரவு செய்ய மாட்டார். தன் புத்தகத்துக்குள் புதைந்து கிடைப்பார். ஆட்டம் முடிந்ததும், வேறு வழியில்லாமல் அவரைப் பார்க்கச் செல்வேன். பிறகு மீண்டும் ஒரு மூன்று மணிநேரங்கள் ஒரு வாய் ஓசை தொடரும்.
இது நண்பர்கள் மற்றும் என் வீட்டார் மத்தியில் பெரும் பிரச்சனையாக மாறியது. எங்கள் நண்பர்கள் மத்தியில் ரமேஷை ஒரு கிறுக்கன் என்றே நினைத்தனர். நாங்கள் விளையாடும்போது எங்களைப் பார்த்தபடி ரமேஷ் நிற்பது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. வீட்டிலோ நான் ரமேஷுடன் சேர்ந்து `கெட்டுப்` போய்விடுவேன் என பயந்தார்கள். எனக்கும் கொஞ்சம் அறுவையாக இருந்தாலும், அவர் கூறும் பல விஷயங்களைப் பற்றி மெல்ல ஆர்வம் அதிகமாகத் தொடங்கியது.
சின்ன வயதில் பல மணிநேரங்கள் வானத்தைப் பார்த்து படுத்த இரவுகள் உண்டு. பாண்டிச்சேரியில் இருந்த வீட்டில் விசாலமான மொட்டை மாடி இருந்தது. வானவியல் ஆராய்ச்சி என பல கும்பல்கள் தொலைநோக்கியை ராக்கெட் லாஞ்சர் போல வானத்தை நோக்கி நிறுத்தியிருப்பார்கள். இவர்களைப் போல எனக்கும் தொலைநோக்கி வாங்க வேண்டுமென்ற ஆசை அதிகமானது. ஆனால், பத்தாங்கிளாஸ் படிப்பு, பரிட்சை என ராட்சஸர்கள் ஆட்டி வைக்கும் வயதானதால் நான் கேட்ட எதுவுமே நடக்கவில்லை.
ரமேஷ் இதில் விற்பன்னர். அவர் வீட்டின் மாடியில் ஒரு தொலைநோக்கி இருந்தது.முதல் முறை அவ்ர் வீட்டுக்கு போனபோது தொலைநோக்கி வழியே நிலாவைப் பார்த்தேன்.பல கருவிகளுடன் ஒரு ஆராய்ச்சிகூடம் போல் அவர் மேல்மாடி அறை இருந்தது. நல்ல வெளிச்சமான வீடு. ஆங்காங்கே புத்தகங்கள், கேசட்டுகள், பலவிதமான போஸ்டர்கள் என ஒரு பேச்சிலர் குடியிருப்பு போல இருக்கும். முதல் முறையாக `அப்பா`, போனிஎம் போன்ற பாடல்களையும், ரஸ்புடீனின் கதையும் அன்று கேட்டேன். இயல்பிலேயே இவர் ஒரு ஜீனியஸ் என்ற நினைப்பு எனக்குள் உருவான நாட்கள் அவை.
வாரக்கடைசியில்லாமல், சில வார நாட்களிலும் அரைமணிநேரம் பேசத் துவங்கினோம். இதற்குள் என் நண்பர்கள் மத்தியில் ரமேஷ் ஒரு ரஷ்ய உளவாளி என்ற புரளி பரவியது. ரஷ்யாவுக்கு பாண்டிச்சேரிக்கும் ஸ்நானப்பிராப்தி கூட கிடையாது என எங்களுக்குத் தெரியாது. ஏதோ உளவாளி என்ற அளவில், தீண்டத்தகாதவராகவே கருதப்பட்டார். பெரியவர்கள் மத்தியில் என்ன அபிப்பிராயம் இருந்தது எனத் தெரியவில்லை.அவர்களுக்கு ரமேஷைப் பிடிக்காது எனத் தெரியும்.
பத்தாவது பயிற்சித் தேர்வு என சில மாதங்கள் அவரைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். அடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகு பார்த்தபோது, மேலும் உருக்குலைந்தது போல் இருந்தார். முன்னர் பேசும்போது தெளிவாக இருந்தது அவர் குரல், இப்போது எச்சையுடன் கலந்து கொழ கொழ என்றானது. வாயோரங்களில் ஈரம் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ ஒரு மனவலியில் இருப்பது போல், விட்டேற்றிதனமான பார்வை கண்களில் குடிகொண்டது.
என் பரிட்சை நேரத்தில், அவரைத் தொடர்ந்து தவிர்த்து வந்ததால் சற்று குற்ற உணர்வு ஏற்பட்டது. அடுத்த வாரம் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மனிதர் சற்று நிதானமாக இருந்தார். அவர் மேல் மாடி அறையில் உட்கார்ந்து தொலைநோக்கி, அவர் பிரத்யேகமாக வைத்திருந்த பிரொஜெக்டர் என நோண்டிக்கொண்டிருந்தேன்.
திடீரென நடந்தது போலிருந்தாலும் - மெல்ல ஏதேதோ பேசியபடி, என் தொடையில் கை வைத்துத் தடவினார். அதற்கு முன்னர் என்ன நடந்ததெனத் தெரியவில்லை. உங்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதுபோலத்தான் எனக்கும் இருந்தது. இந்த செயலுக்கான ஆரம்ப சுவடுகள் இதுவரை தென்பட்டதில்லை. எனக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், அவர் பார்வையில் தப்பு இருப்பது தீர்க்கமாகத் தெரிந்தது. என்ன தப்பு அது? நான் என்ன பெண்ணா? என்னை என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை.
ஏதோ தப்பாட்டம் எனப் புரிந்தது. ரமேஷ் திட்டமிட்டு செய்ததுபோலவும் இல்லை. ஏனோ கனவில் நடந்ததுபோல், அவருக்கும் இது அதிர்ச்சையாக இருந்திருக்க வேண்டும். மற்றொரு கையிலிருந்த லென்ஸைக் கீழே போட்டார். தடுமாறியது போல் திரும்பியபோது அருகிலிருந்த டேபிலில் இடித்துக்கொண்டார்.
அடுத்த சில நிமிடங்களில் என் வீட்டை நோக்கி நான் ஓடிக்கொண்டிருந்தேன். கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த என் நண்பர்கள் கூப்பிடுவது கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. என் வீட்டை அடைந்த பிறகு டாய்லெட்டில் புகுந்து கொண்டேன்.
அரைக்கால் சட்டைக்கு கீழே மயிர்கள் குத்திட்டு நின்றிருந்தன.இனம் தெரியாத பயத்தில் என் தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
The most haunted city என்று லண்டனைக் குறிப்பிடுகிறார்கள். இது எதனால் என என்றைக்குமே புரிந்ததில்லை. அப்படி ஒன்றும் பேய், பிசாசு நடமாட்டத்தை நான் கண்டதுமில்லை. சின்ன வயதில் பயப்படும்போது `கூப்பிட்ட உடனே வ்ருவதால் - வரதா, வரதான்னு கூப்பிடு` அப்படின்னு அம்மா சொல்லி பேய் பயத்தை போக்கியிருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் இருந்த வீடு கொஞ்சம் பழைய வீடு என்பதால், பேய்க்கு நான் பயந்ததைவிட எப்போதும் பழையதாகவே இருந்த வீட்டைப் பார்த்து பேய் பயந்திருக்கக்கூடும்.
நான் பள்ளிக்கு செல்ல ரிக்ஷாவைப் பயன்படுத்தினேன். தினமும் வண்டிக்காரர் ராஜகோபாலு சரியாக எட்டு மணிக்கு வந்துவிடுவார். இரண்டு கிலோமீட்டரிலுள்ள் பள்ளிக்கு வண்டி - பாடி, பேஸ்மெண்ட் இரண்டும் சொஸ்தானதற்கு இதுவே காரணம்.
வண்டியில் போகும்போது ராஜகோபாலோ பல பிரெஞ்சு வார்த்தைகளை அள்ளி விடுவார். பொதுவாக பாண்டிச்சேரியில் பிரெஞ்சு விட்டுச் சென்ற பலவற்றில் இன்னும் மிச்சமிருப்பது பல வார்த்தைகள், சில `சொல்தா` - அந்த கால ராணுவத்தில் பணிபுரிந்த சிப்பாய்கள் - நாங்கள் சோதாக்கள் எனக் கூப்பிடுவோம் , செண்ட் அடித்து எல்லாவற்றிற்கும் தாமதமாகச் செல்லும் மனோபாவம்.
அவரைப் பற்றி இப்போது நினைக்கும்போதெல்லாம் ஸீரோ டிகிரியில் வரும் கொட்டிகுப்பன் மற்றும் புளிய மரத்தின் கதையில் வரும் ஆசானின் கலப்படமாகத் தெரிகிறார். முன்னவரைப் போல் வார்த்தை விளையாட்டுகளும், பின்னவரைப் போல் கதைசொல்லியாகவும் இருப்பார்.
`ரியூ பால் வீதியில ஹொப்பித்தால் பக்கத்துல பெத்தி சந்து மிஸ்ஸே` எனப் பாதி பிரெஞ்சு வார்த்தைகளே வரும். அவர் நம்பிக்கைபடி பாண்டிச்சேரியில் பல சித்தர்கள் இருக்கிறார்களெனவும், பல நூற்றாண்டுகளாக காற்றிலும், ஊரைச் சுற்றியும் காவல் இருக்கிறார்கள் எனவும் கூறுவார்.
அவர் கூறிய விஷயங்கள் பல இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவை மறைவதற்குள், இங்கே பதிந்துவிடுகிறேன்.
- இப்படிப்பட்ட ஒரு சித்தர் - தாந்தேயர் என ஞாபகம். இவரால் தான் பிரெஞ்சு அரசு பாண்டிச்சேரியை விட்டுச் சென்றது.
- அரவிந்தர் ஆசிரமத்தில், அவர் இன்னும் ஞான ரூபத்தில் இருக்கிறார். அவர் மன வலிமையினாலும், மற்ற பல சித்தர்களின் ஞானப் பார்வையாலும் தான் மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் - ம்ஹும் - என உருமினாலும் உலகப் போர் மூண்டுவிடும்.
- ஒரு விரையுள்ளவன் மிக மிக கோழை. அதனால் அவனிடம் வன்மம் அதிகமாக இருக்கும். ( இதை இவர் எங்கிருந்து பிடித்தாரெனத் தெரியாது. ஆனாம் ஹிட்லருக்கு ஒரு விரையே இருந்தது என படித்திருக்கிறேன்)
- நான் ஊரை விட்டுச் செல்லும்போதெல்லாம், என் வீட்டு கூரையைப் பார்த்து சிரித்தபடியே தலையாட்டுவேன் - அங்கிருக்கும் என் சித்தர் நான் திரும்பும்வரைப் வீட்டைப் பார்த்துக் கொள்வார்.
இப்படி பலதரப்பட்ட சித்தர் கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அவை மறந்து விட்டன. நண்பர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லக் கூப்பிட்டபோதும் அவற்றை மறுத்துள்ளேன். இப்படி பாண்டிச்சேரியில் இருந்த நாட்களில் பலவற்றை மிஸ் பண்ணியிருக்கிறேன். சென்னையை போல் இல்லாமல், எல்லாம் மிகச் சுலபமாகக் கிடைப்பதால் தான் , எங்க போகப்போகிறது என்ற திமிர்தான்.
கொஞ்சம் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருந்தால், இன்னும் பல சித்தர், பேய், பிசாசு கதைகளை அள்ளியிருக்கலாம்.
சம்பந்தமேயில்லாமல் எழுதிக்கொண்டேயிருந்தாலும், லண்டனுக்கும் பேய்/பிசாசுகளுக்கும் தொடர்பு இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் பரபரப்பாக இயங்கும் இங்கு எப்படி?
அதே இருபத்து நான்கு மணிநேரத்தில், தரைக்குக் கீழே ஒரு உலகமும் இயங்கிவருகிறது. ட்யூப் எனப்படும் தரை மட்டத்திற்குக் கீழே செல்லும் ரயில். இந்த ரயில்களின் ப்ளாட்ஃபார்மும் தரைக்கு அடியிலேயே இருக்கும்.
'This is the sound of inevitability' என நியோவைப் பார்த்து வில்லன் மாட்ரிக்ஸில் சொல்வாரே, அதே போன்றதொரு செட்டிங்; இதே வார்த்தைகளையும் உபயோகப்படுத்தலாம். திடீரென இருளிலிருந்து வரும் ரயில்களின் சத்தம், ஒரு inevitability தான்.
Necropolis : London and its dead என்ற புத்தகத்தில் Catharine Arnold அற்புதமான லண்டலுக்கடியிலிருக்கும் உலகத்தை விளக்குகிறார். பல நூற்றாண்டுகளாக புதைக்கப்பட்டு வரும் இடமாதலால், லண்டனுக்கடியில் ரயில் பாதை அமைக்க மிகவும் கடினப்பட்டிருக்கிறார்கள்.
பல தெருக்கடியில் தோண்டவே முடியாதபடி எலும்புகளும், குப்பைகளும் மண்டியுள்ளன. பல இடங்களில் வரும் வாசனையினால் தொழிளாலர்கள் மனம் பேதலித்துப்போயிருக்கிறார்கள். அப்படியும் தோண்டப்பட்ட இடங்களில் இரவு வேலை செய்யும்போது ஏதேதோ சத்தம் கேட்பதாகவும், தட தடவென ஓடும் காலடி அதிர்வு தெரிவதாகவும் கூறி வேலையை விட்டிருக்கிறார்கள்.
இதையும் மீறி நன்றாக வேலை செய்துகொண்டிருக்கும் ரயில் பெட்டிகள் திடுமென திறந்துகொண்டு, சில நிமிடங்களில் மூடிக்கொள்வதாவும் அங்கு வேலைப்பார்த்த சங்கிமங்கி (பேரா முக்கியம்) என்ற சீன இளைஞர் பதறி தன் நாட்டுக்கே ஓடியிருக்கிறார். அங்கு நேர்மையாக பால் வண்டி ஓட்டுவதாகக் கேள்வி.
எது எப்படியோ நான் இத்தனை முறை ரயிலில் பயணம் செய்துள்ளேன்,ஆனால் இதைப் போன்ற பேய்/பிசாசு ஆட்டங்களைப் பார்த்ததில்லை.
அடுத்தப் பகுதியில் கடந்த மாதம் முதல் முறையாக பார்த்த திகில் அனுபவம்
*********************************************************************************************************************************************************************************************************************************************************
கடந்த ஜூன் மாதம் பத்தொன்பதாம் தேதி ஜாக்கீர் ஹுஸைன் இசை நிகழ்ச்சிக்காக பார்பிகன் அரங்கம் சென்றேன். பல முறை இசை/நாடக நிகழ்ச்சிக்காகவும், வெட்டித்தனமாகச் சுற்றிக் கொண்டிருக்கவும் அங்கு சென்றிருக்கிறேன். ஆனால் அன்று போல் எந்த நிகழ்ச்சிக்கும் இத்தனை கூட்டம் வந்ததில்லை.
Blaze என்ற இசை நிகழ்ச்சிக்காக ஜாக்கீர், நீலாத்ரி குமார் போன்ற மேதைகள் ஒன்றுகூடி சங்கம (Fusion, but indian) இசை பந்தி போட்டார்கள். ஏதோ சந்தைப் போல இந்தியர்கள் கூட்டம். சரி நம்மாளுங்க தானேன்னு பார்த்தா, எல்லாமே இரண்டாம் தலைமுறை ஒழுங்கர்கள். நான் ஏதோ ஓரமாக உட்கார்ந்து விட்டு, கேட்டோமா, வீட்டைப் பார்த்து போவோமா என்றிருக்கும் ஜாதி. இவர்களோ இந்தி பட ரேஞ்சில் காலில் விழுவதும், சுற்றி நின்று கும்மாளம் போடுவதும். சிறுவர்கள் ஓடி விளையாடுவதுமாய் ரவுசு பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
தமிழ் சினிமா வரும்போதுதான் இதைப் போன்ற கூட்ட அதிகாரமும், உரிமை நிலை நாட்டலும் நடந்து பார்த்திருக்கிறேன். இங்குள்ள மக்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் பார்பிகன் போன்ற உலகலாவிய மேஸ்ட்ரோக்கள் வரும் இடங்கலிலாவது ச்சும்மா இருக்கலாமில்லையா? இது மட்டுமல்ல -
- பொதுவாக Orchestra க்கள் சரியான நேரத்தில் தொடங்கும், திரையரங்குகளைப் போல் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்து, `இப்பதான் ஆரம்பித்ததா?` என பக்கத்து சீட்டிடம் கேட்க முடியாது. அன்று சரியாக இருபது நிமிடம் தாமதமாகத் தொடங்கியது. ஏதோ பெரிய இந்திய ஸ்பான்ஸர் வரக் காத்திருப்பு.
- நிகழ்ச்சி நடக்கும்போது இடைவேளை சமயத்தில் மட்டுமே உள்ளே விடுவார்கள். அன்று சாரை சாரையாய் மக்கள்; ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு ஜாகீரின் தலைமுடி பாதிதான் தெரிந்தது- இவரா அவர் என நம்ப கடினமாக இருந்தது. டீ விளம்பரத்தை மட்டும் பார்த்து வந்தால் இப்படித்தான். கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிய நிம்மதியாகத் தெரிந்தது. தலைவருக்கு வயதாகிவிட்டது.
- எட்டு வயதுக்கு கம்மியாக யாரையும் விடுவதில்லை. ஆனால் அன்று அரை டிக்கட்டுகள் அதிகம். அவர்கள் போட்ட சத்தத்தில், ஜாகீரே திசை நோக்கிப் பார்த்தார். இது இசை கலைஞர்களுக்கு செய்யும் அவமரியாதை.
- என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாத்தா, முதலிலேயே ஒரு pint தள்ளியிருந்தார். இடைவேளையில் மற்றொன்று - ஜுகல்பந்தி தொடங்கிய சமயம் `ஹம் ஆப்கே ஹே கவுன்` ரேஞ்சில் ஆடத்தொடங்கிவிட்டார். அவரை ஆசுவாசப்படுத்துவதற்குள், அவன் மனைவிக்கு தாவு தீர்ந்தது.
இவை எல்லாவற்றையும் மீறி அன்று நடந்தது பிரளயம் என்றே சொல்லவேண்டும். முதல் முறையாக தபேலாவையும், எலெக்ட்ரிக் சிதாரையும் ஒன்றாகக் கேட்கிறேன். சாதாரண சிதார் மயக்கும்; எலெக்ட்ரிக் சிதாரை Victor Wooten இசைத்தே பார்த்திருக்கிறேன். அது சின்ன கருவி. சுலபமெனச் சொல்லலாம்.
சிதார் போன்ற பெரிய கருவியில் rock இசைச் சங்கதிகளை இசைப்பது சுலபமல்ல என்றே தோன்றுகிறது. Music genious என அறிமுகப்படுத்தப்பட்ட நீலாத்ரி குமாரின் இசைப் பற்றி தனியாக எழுத எண்ணம். மனிதர் கலக்குகிறார்.
சிவமணியின் தொகுப்பு - மஹாலீலாவில் வரும் சிதார் - இவர் இசையே. மும்பாய் Hard Rock Cafe யில் இசைத்த இந்த வீடியோவைப் பாருங்கள்.
இவர் சிதார் நம்மை கண்டிப்பாக மகுடியாய் ஆட்டுவிக்கப்போகிறது. பம்பரம் போல் சுத்த காத்திருப்போம்.
போகுமுன், நான் பார்த்த பேய்/பிசாசு பற்றி. பார்பிகனில் பார்ப்பேன் என நினைக்கவில்லை. முகப்பூச்சுக்கும் , வெள்ளை அடிப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். ஆனால் அன்று பார்த்தவை அந்த கலைசொற்களை மறக்கச் செய்துவிட்டது. நம்மூர் மக்கள் எங்கு சென்றாலும், இந்த பாரம்பரிய torch bearers மகுடத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அபிரிதமான முகப்பூச்சு, தாத்தாவின் ஆட்டம், சிறுசுகளின் சத்தம் - ஏதோ பஞ்சாபி வீட்டு கல்யாணத்திற்குப் போனது போல் இருந்தது. இனி பேய்/பிசாசெல்லாம் சிறுதெய்வங்கள் போல், கண்டுகொள்ளவே மாட்டேன்.
Thriller ஆல்பம் போல் அவற்றின் கூடவே இசை நிகழ்ச்சி பார்த்துவிட்டு வந்திருக்கிறேனாக்கும்!!
நன்றி திண்ணை
நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன. தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது. மதிய நேர சோம்பல் உள்புகுமுன் ஜன்னலை மூடினேன். சரியாக இரண்டு நாட்களாக எங்குமே செல்லாமல் அஜந்தா விடுதியில் கடலைப் பார்த்த அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன். சோம்பல் பல காரணங்களில் ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன்னர் மாரி மழை பெய்த மாதங்களில் இதே அறையில் தங்கியுள்ளேன். நூறில் பாதி, இருப்பதோ சோக மீதி எனப் பாடத்தோன்றும் வயது. மறுபடி முட்டைக் கரு நிறத்திலிருந்த திரைச் சீலையை விலக்கி கடலைப் பார்க்கிறேன். ஜெயந்திக்குப் பிடிக்காத அதே முட்டை கரு திரை. ஏனோ போன தடவைப் போல மாற்றச் சொல்லவில்லை. ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது. அப்படி என்னதான் ஆழ,அகலமோகமோ;பல ஜன்மங்களாய் அதே காட்சியளிப்பு. இதில் மட்டும் நிலம்-ஆகாசத்திற்கு தப்பாமல் பிறந்தது இந்த குளுமை. இதே, பாண்டிச்சேரியின் கரையில் தான் எத்தனை வருடங்கள் நடந்திருப்பேன். தாத்தாவுடன் தொடங்கி, நண்பர்கள், காதலி , மனைவி என ஒவ்வொரு முறையும் மாறாத நடை. இல்லை, இல்லை காதலியுடன் தடம் பதித்த மணற்குவியல்களைத் தான் தேடி வந்திருக்கின்றேனே. அதனால் காதலியுடன் நடை மட்டும் கிட்டத்தட்ட மேக நடை தான். பிற்காலத்தில் தேவையென சில/பலவற்றை தொகுப்பதைப் போல் என் ஞாப சாளரங்களை தூசி தட்டுவதற்காக இந்த பயணம். பிறையைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் ஞாபகங்கள். இப்படியே நடந்து காலாபெட் கடற்கரையை அடைய முடியும். கடைசியாக அங்கு சென்றபோதுதான் பல தேவதைகள் தோன்றி மறைந்தனர். தங்க மீனை வாலாகக் கொண்ட கடல் கன்னியின் வருகை என்றான் மீனவ நண்பன். எனக்கென்னவோ அப்படித் தோன்றி மறைந்ததும் காணாமல் போவதாக சபதத்துடன் பிறந்த பாவனா மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறாள். இப்படி ஒரு கடல் கன்னிதான் தன்னுடைய தினப்படி வேலைக்கு பாவனாவை வைத்துக் கொண்டிருப்பதாக பல வருடங்கள் நம்பி வந்தேன். பாவனா என்னுடன் பள்ளி, கல்லூரியில் படித்தவள். ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும். உருளையாக இருந்தால் விலா மீனைப் போல் வழுக்கிக் கொண்டேயிருப்பேன் எனச் சொல்வாள். நாங்கள் ஒட்டுதலாய் இருக்கவே நங்கூரம் அவள் முகம். கல்லூரி கடலுக்கருகேயே இருக்கும் வசதி தெரியுமா? கல்லூரி முடிந்த அடுத்த நிமிடம் ஆங்காஙகே இரு தலைகள்-ஓர் உடல்களாய் கடற்கரையில் திட்டு தீவுகளாய் இருப்போம். பல ஜோடிகள் வந்தாலும், எங்கள் இடம் மரப்படுகைதான். மரக்காயர் இடுப்பு எனக் கூப்பிடுவோம். அகலமாயிருந்தாலும் வசதி குறைவு கிடையாது. இருவர் தாராளமாய் சாய்ந்து கொள்ளலாம்.தினமும் அங்கு ஜாகை அடித்தாலும் ஒழுக்க சீலர்கள் தாம் நாங்கள். அப்படி என்னதான் பேசுவோம். இப்போது பல ஞாபகத்தில் கழண்டு விட்டது. பிடித்தது/பிடிக்காதது போன்ற பால்ய காதல் கேள்விகள் பள்ளியிலேயெ நீர்த்துப் போனதால், பல சமயங்களில் கூடப் பிறந்தவர்கள் போல பேசிக்கொண்டிருப்போம். கை மட்டும் கோர்க்க விடுவாள். பல மணிநேரம் பிடித்த கைகளில், எது யாருடையது போன்ற சந்தேகங்கள் விலகும்போது வந்ததுண்டு. ஈருடள் ஓருயிர் சமாசாரம் போல். பாருங்கள், யோசிப்பதால் எவ்வளவு விவரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றது. முதல் தடவை தேவதைகளைத் தேடி வந்து ஏமாந்திருந்தேன். இப்போது அவற்றைத் தேடி போனால் வயது கூடிக்கொண்டே போகிறது.இந்த விவரங்களுக்காகவே பாண்டிச்சேரிக்கு மீண்டும் வந்தேன். காதலும் ஊடலும் மின்னல் இடி போல. ஒன்று மட்டும் இருந்தால் குறையேற்படும். கடல் கன்னி பாவனாவை கொண்டு சென்றதற்கு முன் பலமுறை சண்டையிட்டிருக்கிறோம். பொதுவாக எனக்கு அவளிடம் பிடிக்காது அவள் உடையின் சராசரித்தனம். கசக்கிய காகிதத்தை அழுத்திச் சரிசெய்ததுபோன்ற சல்வார். அதை சரிசெய்யவும் தோன்றாது கல்லூரிக்கு வருவாள். பல புதிய உடைகளை வாங்கிக் கொடுத்தும் அதே பாணி. மிகக் குறைந்த அளவிலேயே உடைகளுண்டு அவளிடம்.மீண்டும் மீண்டும் ஒரே உடுப்பில் பார்ப்பதுபோல் இருக்கும். இப்போது ஞாபகத்திலுள்ளதும் வண்டு நிறத்தில் அவள் காணாமல் போன அன்று உடுத்திய சல்வார் மட்டுமே. உடையில் தவறிய அழகை அவள் நடை சரிசெய்தது. கல்லூரியில் ஒயில் நடைக்காரி எனப் பேர். சகஜமாகப் பழகிவந்ததால் கிண்டலுக்கு ஆளாகவில்லை. இல்லையெனில் பாண்டிச்சேரி போன்ற குறுகிய மனப்பாங்குள்ள இளைஞர்கள் கூட்டம் வேறெங்குமில்லாததால் சேதாரம் அதிகமாயிருக்கும். கடல் அலைகளில் நிற்க எனக்குப் பிடிக்காதபோதும், அவள் நின்ற இடத்தில் மேல் நின்று கை கோர்த்து சிப்பி சேர்த்து காதில் கேட்பது போன்ற எதையும் செய்ததில்லை. கடல் கன்னியின் வருகைக்காக முதல் முறை வந்த போது அலையில் சிறிது நேரம் நின்றிருந்தேன். அப்படி ஏன் இதற்கு அங்கலாய்க்கிரார்கள்? நுரையைத் துப்பிய அலை காலில் பட்டபோது அருவருப்பாக இருந்தது. இருந்தாலும் கடல் கன்னி வருவாள், என் பாவனாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகலாம் என்பதால் அலையைப் பொறுத்துக்கொண்டேன். இது என் நண்பர்களுக்கு எப்போதுமே ஆச்சர்யமாக இருக்கும். அலையில் நிற்கப் பிடிக்காதவனா? அதுவும் காதலி கையை பிடித்துக் கொண்டு நின்றால் சொர்க்கம் முத்தமிடுமே? காரணம் தெரியாதபோது சிரித்து மழுப்பலாம், அனுபவம் பிடிக்காத போது சும்மா இருக்கவே தோன்றுகிறது. யாருக்காக நான் அலைக்கெல்லாம் வக்காலத்து வாங்க வேண்டும். சும்மாகவே இருப்பேன். கடலில் அவளுக்குப் பிடித்தது மீன். அவற்றை தொட்டியில் பார்ப்பதை தின்பதுபோல் ரசிப்பாள். அன்றும் மீன் குழம்பு வாடையே அவளிடம் அடித்தது. சொல்லிக் கொள்ளத் தேவையில்லாதது போல் பரவும் அந்த வாடை எனக்கும் பிடித்துப்போனது. நான் பேசும்போது நனைந்த பிஸ்கட் வாசம் வருவதாகச் சொன்னாள். அது எப்படி இருக்குமென நான் கேட்கவில்லை. பாவனா என்னை போலதான். காற்றடிக்கும்போது படபடக்கும் பாவனாவின் இமைகள், திரும்ப கனவு நிலைக்குள் வருவதற்குள் அடுத்த காற்று அடிக்கத்தொடங்கும். இமைகள் படபடத்துப் பார்த்துப் பழகிவிட்டது. இதைப் பார்த்து மயங்கிய நிலையில் தேவையென்ன அலை, நுரை, சுண்டல் போன்றவை. அன்றும் அப்படித்தான் கடல் கன்னியுடன் பேசியபடி அமர்ந்திருந்தோம். மதியம் சாப்பிட்ட மீன் குழம்பு , சாயங்கால நட்சத்திரங்களின் மெளன சிமிஞ்சை பற்றி எனப் பேசினோம். காற்றில்லாமல் வறண்டிருந்தது கடற்கரை. வாக்கியங்கள் முடிவடையவில்லை. அதுவரை கைகளை இறுக்க பிடித்தபடி இருந்த அவள், மெதுவாக தோளில் சாய்ந்தாள். மற்றபடி பேசிக்கொண்டுதான் இருந்தாள். திடீரென அலையில் நிற்பது பற்றி தோன்றியதோ என்னமோ - இன்று நிற்போமா - சாதாரணமாக நெட்டி முறிக்கும் அவகாசத்தில் நிதானமாய் கேட்டாள். காற்றில்லை, கடல் கன்னியும் பேசுவதை நிறுத்தவில்லை. நிலவு அரைகுறையாக மெளனமாக இருந்த அந்த கடைசி வெள்ளிக் கிழமை அந்தி சாயும் நேரத்தில், காற்றி ஈரப்பசை குறைந்திருந்தாலும் - என் கன்னத்தில் கொடுத்த முத்தம் மட்டும் சத்தியமான உண்மை. அதற்கு பிறகு விபரீத ஆட்டத்தை துவங்கினேன். அலையில் நிற்கலாம். கடல் கன்னியை நெருங்கலாம். வாரி அணைக்கலாம். இது அத்தனையும் செய்ய கடவுமாறு கால்களுக்குப் பணித்து நடக்கத் துவங்குமுன், திடீரென அடித்த காற்றினால் பறந்தது அவள் துப்பட்டா. அதைப் பிடிக்க அவள் சாலையோரம் சென்ற நேரம், புழுதி கிளம்பியதில் தெருவில் வந்த லாரி அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது... ரத்ததிற்கு வாடை கிடையாது. முழுவதுமாய் மீன் குழம்பு வாடைதான். அன்று சாலை முழுவதும் கழுவியதுபோல் மீன் குழம்பு பரவியது. அப்போதுதான் தேவதைகள் கடல் கன்னியுடன் போவதைப் பார்த்தேன்.
காலையிலே வித்தியாசமான தினத்தை சந்திக்கப்போவது அர்விந்தனுக்கு புரிந்தது. வினாடிகள் தொகுத்து நிமிடமாவதுபோல் ஒரு நாளாவது தன் வாழ்க்கையில் சாதாரண நிகழ்வுகள் அடுக்காக வராதா என கடந்த இருபது வருடங்களாக ஏமாறிக்கொண்டிருக்கிறான்.போலீஸாக தனக்கு அது எப்போதும் கிடைக்கப்போவதில்லை என்று மனதில் தெரியும்.வழக்கமாக செல்லும் கடற்கரைச் சாலை வழியாக செல்லாமல் ஒரு மாறுதலுக்காக லப்போர்த் வீதி வழியே ஸ்டேஷனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.ஸ்டீரியோவில் ஓ.ஸ்.அருணின் மீரா பஜன்.இசை அவனை சாந்தப்படுத்த முதல் முயற்சியாக நாம் எடுக்கலாம். பாண்டிச்சேரி அப்படி ஒன்றும் பெரிய ஊர் அல்ல. அவன் தாத்தா,அப்பா எல்லோரும் சைக்கிளிலேயே பாண்டியை அளந்துவிடுவார்கள்.முன்னேயெல்லாம் அப்படித்தான்.1940 என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.2000 ங்களில் கூட சைக்கிளில் செல்பவர்கள் அதிகமாக இருக்கும் டவுன்ஷிப் இந்த ஊர் தான். அதனாலேயே ஊரே மந்தமாக உள்ளதோ என்று தோன்றும்.இந்தியன் காபி ஹாவுஸின் வாசலில் உட்கார்ந்து கொண்டு பராக்கு பார்த்தால் இந்த ஊர் மக்களின் வாழ்வு முறை புரியும். பத்திற்கு எட்டு வண்டி இரண்டு சக்கரம்,மீதி ஒன்று பஸ் மற்றும் டெம்போ.டெம்போ ஒரு பெரிய சைஸ் மீன் வண்டி.பத்து பேர் வரை செல்ல முடியும்.உள்ளே உட்காராமல் ட்ரைவர் அருகில் உட்கார்ந்தால் ஒரு மினி வயரிங் பாக்ஸே இருக்கும்.பிரேக்,ஆக்ஸிலரேட்டர்,கியர் எல்லாமே பல தந்திகளாலேயே இழுக்கப்படும்.எப்போதும் முன்னால் செல்லும் சைக்கிளை இடிக்கும் தோரணை.அதுவும் பெண்கள் சைக்கிளென்றால் தனி குஷி தான். இதனாலேயே பல விபத்து கேஸ்கள் அவன் ஸ்டேஷனுக்கு வரும். இதோ லபோர்த்து வீதியில் வலது திரும்பி காந்தி வீதியில் நுழைந்தால் இரண்டாவது இடது நேரு வீதிதான்.காந்தியும் நேருவும் சேரும் இடத்தில் தான் விதி விளையாடியிருக்கிறது - இரண்டு செருப்பு ,ஒரு திருட்டு சி.டி
கடை மற்றும் காணாமல் போன வண்டிகள் இருக்கும்.நேரு வீதி செஞ்சி சாலையை தொட எத்தனிப்பதற்குள் அவன் ஸ்டேஷன் வந்துவிடும்.
தபால்களை மேம்போக்காக பார்த்துக்கொண்டிருந்தபோது கைத்தொலைபேசி அழைத்தது.
Chief commissioner நாகேஷ்.
'அர்விந்த், உங்க டோசியர்ல ஒரு புது பேப்பர் வெச்சிருப்பேன்.இப்பொவே பாத்திடுங்க.'
மெதுவாக எடுத்துப்பார்த்து குழப்பத்துடன் 'கொலையே பண்ணிட்டானா ஸார்??!'
'அதுக்குள்ள அவன்னு முடிவுபண்ணிட்டீங்களா? ஒரு முக்கியமான இசைக் கலைஞர கொலை பண்ண ஸ்ட்ராங் மோட்டிவ் வேணும்.ம்..நீங்க உடனே என்னோட ஆபீஸுக்கு வாங்க'
அவன் படிக்கெட்டுகளில் இறங்கும் போது கலைஅரசு கேட்டான் - 'இன்னிக்கும் கூப்பிட்டாரா சார்?'. கலைக்கு என் வயதானாலும் ,பப்ளிக் ரிலேஷன்ஷிப் பிரிவு.பென்சு தேய்க்கும் பணி.பதில் சொல்ல தோணாமல் டோசியருடன் ஓடிக்கொண்டிருந்தான்.
அனந்தனின் FIR கூட மை கலைந்திருக்காது.இந்த நேரத்தில் காணாமல் போன அந்த பெண்ணை பற்றிக் கூட அர்விந்தனுக்கு தெரியாதது ஆச்சர்யமில்லை.
-----------------------
அதே நாள் மத்தியானம் -
அன்புள்ள உமேஷ்,
இந்த கடிதம் கிடைக்கும் நேரத்தில் தங்களுக்கே விஷயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும்படி இக்கடிதத்தை 'நீதிபதியிடம்' கொடுத்துவிடவும்.
ரிப்பேர் செய்ய வருபவனிடம் 'பறவையை பறக்க வைக்க வேண்டாம்' என்று தெரியப்படுத்தவும்.
நன்றி,
இமானுவேல்.
தேதி - 12-03-'80.
இந்த கடிதத்தை பார்த்த நொடியில் செய்ய வேண்டியதை அரவிந்தின் மூளை உணர்த்தியது.எதிர்வரும் சர்வரை பொருட்படுத்தாது லே காஃபே ஹோட்டல் கதைவை தள்ளிவிட்டு தன் காரை நோக்கி ஓடி , ரியூ பால் வீதிக்குத் திருப்பினான்.
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
Recent Comments