போன வருடத் துவக்கத்தில் நண்பர் சித்தார்த் வெங்கடேஷுடன் பயண நூல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பிரபல ஆங்கில பயண நூலான Slowly Down the Ganges பற்றி கூறும்போது தமிழிலும் நதியோடு செல்லும் பயணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, “காவேரியில் பயணம் பற்றி ’நடந்தாய் வாழி, காவேரி’ என்று ஒரு கிளாஸிக் புத்தகம் இருக்கே,” என அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் தி.ஜானகிராமன் - சிட்டி இணைந்து எழுதிய புத்தகம் எனக்கு அறிமுகமானது. சிலப்பதிகாரத்திலிருந்து பெற்ற உந்துதலால் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என நண்பர் மேலும் கூறி என் ஆர்வத்தை அதிகரித்தார். அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வந்தபோது பல பிரபல தமிழ்ப் புத்தகக் கடைகளில் கிடைக்காமல், ஹிக்கின்பாதம்ஸில் விற்காமல் ஓரமாக ஒதுங்கியிருந்த பிரதியைக் கையகப்படுத்தினேன்.
அதுவரை, தமிழில் பயணங்கள் குறித்து நான் படித்தவை மேற்கு இந்தியப் பயண நூலான ’வெள்ளிப்பனி மலை மீது’ தவிர, எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் மட்டுமே. இவர்களது பல புனைவுகளும் பயணங்களை அடிப்படையாகக் கொண்டவை. பயணத்தில் கிடைக்கும் அனுபவத்தை பல புனைவுகளாக மாற்றி அமைக்கும்போது கற்பனைக்கும் கிட்டாத எல்லைகளை தாண்ட முடிகிறது. அப்புனைவுகளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தாலும் பல சமயங்களில், புனைவுகளாகவும், மறக்க முடியாத நிகழ்வுகளாகவும் மாற்றி எழுதும்போது பயண அனுபவங்களின் ஆதார சுருதி மாறிவிடுகிறது. இலக்கற்று பயணம் செய்பவர்களின் சிதறுண்ட குறிப்புகள் பெரும் தேடல் அனுபவமாக நம் முன் விரிகிறது. எந்தவித முனைப்பும் இன்றி கால் செல்லும் வழியெல்லாம் தங்கள் புலன்களைத் திறந்து வைத்தபடி பயணம் செய்யும்போது அனுபவங்கள் முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களாகக் குவிகின்றன. இவற்றை ஒருமைப்படுத்தி புனைவாக மாற்றும்போது ஒரு திட்டமிட்ட வடிவத்துள் அடங்கி, தெளிவான குறிக்கோளாக அந்த அனுபவங்கள் மாறுகின்றன. இப்புனைவுகள் எந்த அளவு பயணங்களின் சாரத்தைத் தொகுத்தளிக்கும் என்பது கேள்விக்குரியது. இதனால், பயண அனுபவங்கள் புனைவுகளாக மாறுவதை விட, வரலாறு மற்றும் சமூகப் பிரஞையோடு குறிப்புகளாக இருந்தால், பரந்த அனுபவ சுரங்கத்தை அளிப்பது போல் தோன்றுகிறது.
ஒரே ஆன்மிக அனுபவத்தை விவரிக்கும் பல மதங்கள் போல், ஒரே நதியைப் பற்றி பல பயணக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரே நதியின் வெவ்வேறு பரிமாணத்தை காட்டும். துருவங்களிலும் மலைகளிலும் பனிப்பாளங்களாக, சிறு ஊற்றுகளாக, உயரமான வீழ்ச்சிகளாக, மேகத்தைக் கறுத்து, கனக்க வைக்கும் நீர் பொட்டலங்களாக தண்ணீர் பல வடிவங்களில் உருமாறியபடி இருப்பதால், தண்ணீரின் பல முகங்களைப் பற்றிய சொற்குவியல்களாக மட்டுமே நதியை விவரிக்க முடியும். பயணம் செல்வோரின் மன விசாரத்தைப் பொருத்து நதியின் ரூபம் மாறும். தங்கள் அனுபவங்களை எழுத்தில் வடிக்கும்போது, நதியின் சித்திரம் உண்டாக்கிய மன எழுச்சியைப் பொருத்து பயணக் கட்டுரைகளின் தரம் அமைந்திருக்கும். நல்ல இலக்கியம் மற்றும் கவிதை அறிமுகம் இருக்கும் பயணியின் கண்களுக்குத் தெரியும் நதி, சுற்றுலாப் பயணியின் பார்வைக் கோணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். பல சமயங்களில் இருவரும் வெவ்வேறு நதிகளைப் பார்த்தனரோ எனத் தோன்றும்.
சிட்டி, தி.ஜானகிராமன், ராஜகோபாலன் மற்றும் சில நண்பர்கள் காவிரியோடு பயணம் செய்திருக்கிறார்கள். பூம்புகாரிலிருந்து ஆரம்பிக்க எண்ணியிருந்தாலும், பெங்களூர் - குடகுப் பாதையிலிருந்து காவிரியின் மூலத்தை நோக்கியே இவர்களது பயணம் தொடங்குகிறது. குடகு, சிவசமுத்திரா நீர்வீழ்ச்சி, ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர், பாகமண்டலம்,மெர்க்காரா, என கர்நாடக மாநில எல்லையிலிருந்து பல கிளை நதிகள் வழியே தலைக்காவேரி எனும் காவிரி மூலத்தை அடைகிறார்கள். பின்னர் அதே வழியாக திரும்பப் பயணித்து, ஹோகெனக்கல்,கரூர், திருச்சி, தஞ்சாவூர்,கொள்ளிடம், கல்லணை, காவேரிப்பூம்பட்டினம் அடைந்து காவிரி கடலில் சேர்வதில் பயணம் முடிகிறது.
நதி மூலத்திலிருந்து விழுந்தோடி கடல் அன்னையை கலக்கும் இடமான காவிரிபட்டினம் வரை காவிரியோடே பயணம் செய்வது இப்பயணத்தின் நோக்கம். தேடலின் விசித்திரம் சென்றடையும் இடத்தில் இல்லை; பயணத்தின் நுண்மையான அங்கங்களில் மட்டுமே அதன் ஆத்மா அமைந்திருக்கும் என்பதுபோல், நதியைத் தவிர பிற திசைகளையும், பல காலங்களையும் அவர்கள் கடந்தார்கள். பல இடங்களில் நதி காட்டுக்குள் புகுந்து, மலைக்களுக்கிடையே மறைந்து, ஊற்றாகப் பல இடங்களில் வெளிப்பட்டு விளையாட்டுக்காட்டியதால் அவர்களுக்கு அதன் முழு பரிமாணம் தெரியவில்லை என்ற குறை இருந்திருக்கிறது. மேலும், காரில் மட்டுமே பயணம் செய்ததால் காவிரி கரையோரம் இருந்த முக்கியமான ஊர்களை மட்டுமே பார்க்க முடிந்தது. பல மாதங்கள் பயணம் செய்தால் மட்டுமே காவிரியின் ஒவ்வொரு பகுதியையும் பார்க்க முடியும். அதற்கான நேரம் இல்லாததால் இப்பயணத்தை ஒரு முழுமையான அனுபவமாக இவர்கள் கருதவில்லை.
*
முழு கட்டுரையையும் இங்கு படிக்கலாம்
Recent Comments