போன வருடம் படிக்கத் தொடங்கிய இரு சிறுகதை[உயிர்மை பதிப்பகம்] தொகுதிகளைச் சமீபத்தில் தான் படித்து முடித்தேன்.
புத்தகங்களைப் பல வருடங்களாக படித்து வந்தாலும், கடந்த இரு வருடங்களாகவே ஒரு ஒழுக்கம் கைவந்திருக்கிறது. நாவல்,எவ்வளவு திராபையாக இருந்தாலும், தொடங்கினால் முடிக்காமல் வைப்பதில்லை. கவிதைகள் ஒன்றிரண்டு மேல் ஒரே நேரத்தில் தாங்காது. அதனாலேயே பல கவிதை புத்தகங்களை முடித்த திருப்தி இல்லை. சிறுகதைகள் தொகுப்பு பல மாதங்கள் ஊறுகாய் போல் அவ்வப்போது தொட்டுக்கொள்ளவே விருப்பமாயிருக்கிறது.
நேரத்தைப் பொருத்தும் படிக்கும் புத்தகங்கள் மாறுபடும். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரமிருந்தால் நாவல்/அபுனைவு பக்கமே கை போகும்.போகிறபோக்கில் கண்ணை மேயவிட கவிதை புத்தகத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்.
இந்நிலையில், போன வருட தொடக்கத்தில் வாங்கிய மனோஜின் ‘புனைவின் நிழல்’, யுவன் சந்திரசேகரின் ‘ஏற்கனவே’ சிறுகதைகளை முடித்ததும் மீண்டும் படிப்பேன் என சர்வ நிச்சயமாகத் தோன்றியது.
தரமானச் சிறுகதைகளை மிக எளிமையான மொழியில் கையாளக்கூடிய செகாவ்,காதரீன் மான்ஸ்பீல்ட், அ.முத்துலிங்கம் வரிசையில் அட்டைப் போல் ஒட்டிக்கொள்ளத் தகுதியுடைய இரு தமிழ் எழுத்தாளர்கள்.
பெரும்பான்மையான ஆங்கிலச் சிறுகதைகள் எல்லாமே செகாவின் தாக்கத்துடனேயே இருக்கும். காதரீனுடைய எழுத்தும் இந்த ரகம்தான். ரேமண்ட் கார்வர், ஏ.எல்.கென்னடி,நாடீன் கோர்டிமர் (Nadine Gordimer) போன்றோர் இப்பாதையிலிருந்து விலகி, சிறுகதையை பல கதைகளின் கூறலாக மாற்றினர். இன்று ஆங்கில சிறுகதைகள் இருபது, முப்பது பக்கங்களுக்கு நீளும் `பெரிய` சிறுகதைகளே. கசூ இஷிகாரோ (Kazuo Ishiguro) நாற்பது பக்கங்களுக்கெல்லாம் சிறுகதை எழுதி புகழும் பெற்றிருக்கிறார் (Nocturnes).
நம்மைப்போல் தமிழ் சிறுகதை படிப்போருக்கு இந்த அளவு பொறுமை இருக்குமா என்பது சந்தேகமே. ஐந்தாறு பக்கங்கள் வரை நம் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியும். குறிப்பாக, முடிவை நோக்கி பயணிக்காத கதைகளை நாம் மதிப்பதே கிடையாது. தூண்டில் கதைகள், முடிவில் ஒரு திருப்பம், நச் கதைகள் என சம்பவங்களை ஃபளாஷ் போட்டு `குறிப்பிட்ட கணத்தைப்` பிடித்தால் மட்டுமே சிறுகதை என அடையாளப்படுத்துவோம்.
இதில் விதிவிலக்கான கதைகளும் உண்டு. நான் படித்த வரை வண்ணநிலவன், ஜெயமோகன், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் சிறுகதைகள் இவ்விதியிலிருந்து சற்று விலகியவை.
பத்து வருடங்களுக்கு முன்னர், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஜெயந்தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். அதிலிருந்த எந்த கதைத் தலைப்பும் நினைவிலில்லை; மிக வித்தியாசமான மொழியில், புதுவகை சிறுகதை வடிவ யுத்திகளைக் கையாண்டிருந்தார்.
ஒளிவிலகலுக்குப் பிறகு, `ஏற்கனவே` நான் படிக்கும் யுவனின் இரண்டாவது தொகுதியாகும். பொதுவாக கவிதை எழுதுபவர்கள், புனைவு/கட்டுரை எழுதினால், கவித்துவ ஜாலங்கள் நிரப்பாமல் விடமாட்டார்கள். உதாரணத்துக்கு, கவிஞர் சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்பு.
ஆனால், யுவன் எழுதும் புனைவுகளில் அவருள் இருக்கும் கவிஞனின் பார்வை தென்படுவதேயில்லை.தொடர்ந்து இரு சிறுகதைத் தொகுப்புகளிலும் கவிதையிலிருந்து பிரத்யேகமான சொல்லாடல்கள், `கவிமன` உணர்வுகள் போன்ற எதுவும் வெளிப்படவில்லை. சிறுகதைக்காகவே தனிப்பட்டு பயிற்சி செய்து இம்முறையைக் கையாள்வது போல் உள்ளது. ஏனென்றால், சிறுகதை வடிவத்தில் உவமைகள் ஹனுமன் பலம் கொண்ட யுத்திகளாகும். அவை ஒரே வரியில் மலையையும் நகர்த்திக்காட்டும் பிம்பங்கள்; ஆச்சர்யமூட்டுபவை. ஆயிரம் வார்த்தைகள் ஒரு புகைப்படமாக அமைவது போல், உவமைகள் மூலம் ஐநூறையாவது தேற்றிவிடலாம்.
யுவனின் ஒரு கதையில் பல கதைகள் உலாவுகின்றன. ஒரு கதையை விவரிக்கும் போது அடுத்த கதைக்குத் தாவுவது [நூற்றிச் சொச்சம் நண்பர்கள்], முடியும்போதும் சூழலுக்குள் மறுபடியும் வட்டமாக நுழையும் கதைகள் [ஏற்கனவே], கிளைக்கதையின் முடிவில் ஆரம்பிக்கும் முதல் கதை [அவரவர் கதை], நாட்குறிப்பு கதை என கதை கூறும் பாணியே புது கதைகளை உருவாக்கியிருக்கிறது.
இக்கதைகள் சொல்லும் கருத்து குறைவுதான்.கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லவேண்டும். நீதி போதனை, கருத்து சொல்லும் கதைகளைத் தேடி நாம் கால இயந்திரம் தான் எடுக்க வேண்டும். கிட்டத்தட்ட எந்த சிறுகதைகளும் இவற்றை மையமாகக் கொள்வதில்லை என்பதே பெரிய பலம். நவீன கதைக்கூறு முறைகளில் இவற்றிற்கு இடமில்லை என்பது ஒரு காரணம். ஆனால் இவ்விதிகளைத் தலைகீழாக்க முடியும். முடிவில் ‘எதுவும் கிடைக்காமல்’ ஒரு வெறுமையான கசப்பை அனுபவிக்க முடியும். இம்முறையை யுவன் சில கதைகளில் கையாண்டுள்ளார்.
ஒரு கதைக்குள் இருக்கும் பல கதைகளை இணைக்கும் பணி மட்டுமே யுவனின் முக்கியமான பாணியாகத் தெரிகிறது. ஒரு கதையிலிருந்து நமக்கே தெரியாமல் மற்றொன்றுக்கு வழிந்தோடும் யுத்தி இதன் இன்பம்.உரையாடலில்லாத கதைகள் கூட நம்மிடையே பேசுவது போல் எழுதப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லா கதைகளும் படிப்பவர்களுக்கு கதை சொல்லும் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கு. ‘காற்புள்ளி’ முத்துச் சித்தப்பா சொல்லும் ராஜா கதை போல, யுவனும் கிருஷ்ணன்,இஸ்மாயில் பாத்திரங்கள் வழியே தொடர்ந்து நமக்குக் கதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் - யுவனின் நடை. போகிற போக்கில், நடந்து முடிந்த கதைப் பற்றி சொல்லிவிட்டு அடுத்த கதைக்குள் நுழைகிறார்.சம்பிரதாயமான முகாந்திரங்கள்,அறிமுகங்கள் போன்றவற்றுக்கு இங்கு வேலை இல்லை.
நாடகத்தனமான கதை அமைப்புகளோ,சித்தரிப்புகளோ இக்கதைகளில் இல்லை.’அவமானம்’ போன்ற பாலுணர்வு சார்ந்த பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளைக்கூட நாம் அன்றாடம் சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளாக யுவனால் சொல்ல முடிந்திருக்கிறது. சிற்றிதழ்களின் தீவிரமான மொழி அலங்காரங்கள் இல்லை. நம் தோளில் கைப் போட்டு கதை சொல்லும் நண்பனாக கிருஷ்ணன், இஸ்லாயில் பாத்திரங்கள் எல்லா கதைகளிலும் இருக்கிறார்கள். இக்கதாப்பாத்திரங்கள் இல்லாவிட்டாலும், கிருஷ்ணன்/இஸ்மாயில் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நமக்கு இருந்து கொண்டேயிருக்கிறது.
மிக கவனத்துடன் பல சொற்றொடர்களின் மொழி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வரி எழுதப்படுமுன்பே,முழுசாய் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.
தீக்குழி இறங்குவது, அலகு குத்தி ஆடுவது, கத்திப் போடுவது இவற்றுக்குச் சமானமான புனிதப்பணிதான் தினசரி செய்தித்தாள் படிப்பதும் என்பது இஸ்மாயிலின் அபிப்பிராயம்.
அப்பா சொல்லாமல் விட்டுப்போன கதைகளைத் தேடி நான் அலைந்தது ஒரு தனிக்கதை. நண்பனாய் இருந்த தகப்பனைப் போல், தகப்பனாய் இருந்த நண்பர்கள் கிடைக்கச் செய்த அலைச்சல் அது.
பெரிய உணர்ச்சிகளை இக்கதைகள் கொட்டுவதில்லை . கதையின் நோக்கம் என்ன என்று பல சமயங்களில் யோசிக்க வைக்கிறது. சுண்டி இழுக்கக்கூடிய மையத்தை, பிய்த்து எல்லா வாக்கியங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்ட வைத்துள்ளார் யுவன். இதனால் முடிவை நோக்கி பயணிக்கும் துர்பாக்கியம் இல்லாமல், சுகமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது.
யுவன் சிறுகதைகளைக் கட்டுரை போல படிக்கலாம். ஆரம்பித்த கதையை முடிக்க வேண்டிய அவசியமில்லை.சமயத்தில் ஓரிரு பக்கங்களை மட்டும் ரசித்து மூடிவிடலாம். அதே சமயம், யுவன் மிக கனமான விஷயங்களைக் கொண்டு மொழியைச் சிக்கலாக்கிக்கொள்ளவில்லை. இதனால்,நம்மிடையே நடக்கும் இயல்பான உரையாடலாகத் தொடங்கி, அப்படியே முடியும்.
இது ஒருவிதத்தில் முடிவுறாத உணர்வைக் கொடுக்ககூடும். கதாப்பாத்திரங்களின் சிக்கல்கள் நினைவில் நிற்காமல் போகலாம்.ஆனால் இக்கதைகளுக்கிடையே இருக்கும் உறவுகள் நம்மை பாதிக்கிறது. தொடர்பில்லாமல் இரு நிகழ்வுகள் ஒரே கதையில் வந்தாலும், படித்த முடித்த பின் யோசித்தால் சிறு பாலம் கிடைக்கிறது. மீண்டும் இக்கதைகளை படிக்கும்போது, அந்த பாலத்தை ரசித்தபடி இவ்விளையாட்டில் நுழையலாம்.
*
சாரு திட்டினாலும், கட்டிப்பிடித்தாலும் ஆயிரம் பொன் தான். பொதுவாக எழுத்தாளர்களில் பலர் புது எழுத்துக்களை அறிமுகம் செய்வது குறைவாக இருக்கும். சுஜாதா,அ.முத்துலிங்கம், அசோகமித்திரனுக்குப் பிறகு எஸ்.ரா, சாரு, ஜெயமோகன் பல புது எழுத்துக்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. இதுவும் நான் படித்தவை மட்டுமே. வேறு பலரும் இதைச் செய்திருக்கலாம்.
நான் படித்தவரை இந்த அறிமுகங்கள் சோடை போனதில்லை. ஹைப்பர் லிங்கு போல் தொடர் சங்கிலியாய் புதியவர்களைப் பிடித்துக்கொண்டேயிருப்பதுதான் வாசகனின் விதி. இவற்றிலிருந்து மேலும் பல துறைகளின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது - எஸ்.ரா எழுத்தைப் படித்த பிறகுதான் ஆவணப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன், ஜெயமோகன் சொன்ன பின் பல இந்திய ஆக்கங்களை சென்றடைந்தேன்.
சாருவின் படிப்பனுவம் மேல் நம்பிக்கை வைத்து கண்டிப்பாக பல புத்தகங்களை வாங்கிவிடலாம். ஆனால், இவர் அறிமுகப்படுத்திய பல எழுத்தாளர்களின் புத்த்கங்கள் சந்தையில் கிடைக்காது. குறிப்பாக, பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், தடை செய்யப்பட்ட Readers International புத்தகங்கள் போன்றவை அச்சிலே இருக்காது. இது தான் பிரச்சனை.இவற்றையெல்லாம் குறிப்பு வைத்துத் தேடுவதும் சாத்தியமல்ல. அதனால், ஞாபகத்தில் இருப்பவை கிடைத்தால் மட்டுமே போதுமென்று விட்டுவிட்டேன்.
குறிப்பாக, தமிழ் அறிமுகங்களை விட்டுவிடக்கூடாது என்பது என் அனுபவம். ஏனென்றால் புது பதிப்புகள் வருவதற்கு குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகிவிடும் அபாயம் உள்ளது. கிடைக்கும் போதே வாங்கி வைத்துவிட வேண்டும் என்பது என் அறிவுரை.
இப்படித்தான் சாரு தன் தளத்தில் சிலாகித்து அறிமுகப்படுத்திய மனோஜின் `புனைவின் நிழல்` வாங்க நேர்ந்தது. மனோஜ் தினகரன் நாளிதழில் பணியாற்றுபவர். இது அவர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுதி.
மிகச் சுவாரசியமான சிறுகதைத் தொகுப்பு. சிற்றிதழ்களில் வரும் தலைப்பு போல் இருந்தாலும், செரிவான நடையில் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதால் முதல் டிக் மார்க்.
ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவை அல்ல என்பதால், பல பாணியில் கதைகள் அமைந்திருக்கின்றன. சரித்திர புனைவு[857,ஏவாளின் விலா எலும்பு], மன உளைச்சலில் புலம்பும் கதை[புனைவின் நிழல்,அட்சர ஆழி], வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் கதை[அச்சாவோட சிச்சாமணி], மிகு புனைவு [பால்], சரித்திரக் கதை [மஹல்] என ஒவ்வொன்றும் புது பாணியில் அமைந்திருக்கிறது.
நீங்கள் இப்புத்தகத்தை வாங்கி அச்சாவோட சிச்சாமணி கதையை மட்டும் படித்தாலே போதும் - முழு பைசா வசூல்.மிச்சமெல்லாம் ஓசி அல்ல. அன்பளிப்பு. அதனால், முதலில் இக்கதையைப் படித்து விடவும்.
தனிப்பட்ட முறையில் எனக்குச் சரித்திரக் கதைகள் மேல் எப்பவும் ஈடுபாடு உண்டு. சொல்லாமல் விட்ட பக்கங்களை பூர்த்தி செய்யும் குறுகுறுப்பு ஒரு காரணம். கதை வழி புது தரிசனங்களை அடைய முடிவதும், மோர்டர்-லாக் வடிவம் போல் புனைவு உண்மையை சந்திக்கும் கச்சிதமான இடமாகவும் இருப்பது மற்ற காரணங்கள்.
857- தசரதச் சக்கரவர்த்தியில் 857ஆவது மனைவி பற்றிய சிறுகதை. அதேபோல் மஹல் ஷாஜஹானின் கதை. மிகையில்லாமல் கதையை எளிமையான விவரிப்பு மூலம் மனோஜ் ரசிக்கும்படி எடுத்துச் சென்றுள்ளார். மிக விஸ்தாரமான விவரிப்புகள் இல்லை, அரண்மனை, ராஜ்ஜியம் பற்றிய பின்னணிகள் இல்லை. ஆனால் தெரிந்த கதைகளில் தெரியாத நிகழ்வுகளை கச்சிதமாக இணைத்துள்ளார்.
சர்ப்ப வாசனை என்றொரு கதை. உண்மையாகவே சர்ப்பங்களின் நடவடிக்கைகளை நமக்கு உணர்த்தியுள்ளார் மனோஜ். இயல்பிலேயே நமக்குள் இருக்கும் சர்ப்ப பயத்தைக் கொண்டு இக்கதையை நகர்த்தியுள்ளது வித்தியாசமாக இருந்தது.
மிகுபுனைவுகள் எனக்கு அவ்வளவாகப் புரிவதில்லை. போர்ஹே, எஸ்.ரா, கோணங்கி எழுதும் பல மிகுபுனைவுகள் எனக்குப் புரிந்ததில்லை. போர்ஹேவின் எல்லா கதைகளும் [Labyrinth]குழப்பமாக இருந்ததால்,மொழியில் சிக்கலால் மறுமுறை என்னால் அவற்றைப் படிக்க முடிந்ததில்லை.அதேபோல், இத்தொகுப்பில் இருக்கும் பால் என்ற கதையும் புரியவில்லை. ஆனால், மற்ற புரியாத கதைக்கும் இதற்கும் வித்தியாசமுள்ளது. இக்கதையை தடையில்லாமல் என்னால் வாசிக்க முடிந்ததே இதன் வெற்றி. மொழியை குழப்பாமல் எளிமையாக கையாண்டதால்,இம்மிகுபுனைவு மார்க்கேஸின் சிறுகதை போலிருக்கிறது.
`சூன்ய வெளி`- நாம் அன்றாடம் இணைய்த்தில் பார்க்கும் சாட் (அரட்டைப்) பற்றிய கதை.முகம் தெரியா மனித உறவுகளின் அபத்தத்தை அற்புதமாக விவரிகிறது. ராஸ லீலாவில் விஸ்தாரமாகப் பார்த்துவிட்டாலும் இணைய உறவுகளின் fragility என்றுமே சுவாரஸ்யமானவை.
இக்கதைகளில் நான் ரசித்த சில வரிகள் -
நிர்வாண உடலின் இளம்சூடும் வியர்மை மணமும் கிறக்கத்தின் லாகிரி அளவைக் கூட்டின.
எதிர்க் காற்றைக் கிழித்து போகையில் முகம் அழுந்திக் கிழிவது போலிருந்தது.
மையச் சரடாக எல்லாக் கதைகளிலும்,யதார்த்தமும் புனைவும் இடம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. யதார்த்தமாக விவரித்துக்கொண்டே செல்லும் போது திடுமென புனைவு திருப்பத்தை அடைகிறது. இத்திருப்பம் இயல்பாக எளிமையாக படிக்கும்படி இருப்பதே மனோஜின் வெற்றி.
Recent Comments