(கலாகேந்திரா விற்பனையாளர் பக்கத்திற்கு படத்தை சொடுக்கவும்)
பொதுவாக வாழ்க்கை வரலாறு கலைஞர்களைப் பற்றிய முழு சித்திரத்தை அளிக்காது. அதிலும் நுண்கலை வித்வான்களாக இருந்தால் அவர்களின் ஆளுமை கலையிலும், தனிப்பட்ட வாழ்விலும் சிதறுண்டு கிடக்கும். இதில் ஒன்றில் மட்டும் ஆழ பயணித்தாலும் ஓற்றை பரிமாணம் மட்டுமே கிடைக்கும். இதனாலேயே கலைஞர்களைப் பற்றிய படைப்புகள் - கலை நுணுக்கங்கள், தனிப்பட்ட வாழ்வு, கலைக்கான பங்களிப்பு என பல குதிரைகள் பூட்டப்பட்ட தேராகிறது. ஒன்று தொய்ந்தாலும் மற்றொன்றைக் கொண்டு சமன் செய்துகொள்ளலாம்.
கலைஞர்களின் ஒட்டு மொத்த வாழ்வை கணக்கில் கொண்டே அவர்கள் பங்களிப்பின் தரம் மதிப்பிடப்படுகிறது. சிலர் தங்கள் தனித்திறமையாலும், புதுவகை முயற்சிகளாலும் அவர்கள் வாழ்நாளிலேயே பிரபலமாகிறார்கள். பிற்கால ரசிகர்களின் ரசனை சார்ந்த மதிபீடுகளில் சில கலைஞர்கள் கண்டெடுக்கப்படுகிறார்கள். பலர் காணாமல் போகின்றனர். இப்படிப்பட்ட வரையறை கொண்டே கலைஞர்களின் தொகுப்புகளை பிரித்து அணுக முடியும்.
தன் வாழ்நாளிலேயே பிரபலமடைந்த ஒரு கலைஞன் இரு வகையான விமர்சனங்களை சந்திக்க இயலும். முகஸ்துதிகளும், அதீத உயர்த்திப் பிடித்தலும் நடக்கும் போது சக கலைஞர்களின் தர நிலைப்பாடுகள் ஆட்டம் காணும் - இது முதல் வகை விமர்சனம். கலைஞனின் வாழ்நாளுக்குப் பிறகு, தன் முன் இருக்கும் பல தரப்பட்ட கலைஞர்களை ஒப்பு நோக்கும் விமர்சகன், தலையில் பாரமில்லாத புது தர வரிசையை நிலை நாட்ட முனைவான். இது இரண்டாம் வகை விமர்சனம்.
தமிழ் இலக்கியத்துக்கு அப்படிப்பட்ட தர வரிசை, விமர்சன நோக்கு வளர்ந்ததுபோல் மற்ற கலைகளுக்கு வளரவில்லை என்றே தோன்றுகிறது.
பல நூற்றாண்டுகளாக இசை, நாடகம் நம் கலை வெளிப்பாடுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளன என்றாலும் அவற்றில் பல தொகுக்கப்படாமல் சிதறியிருக்கின்றன. இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். பண்டைய தமிழிசை, யாழ் போன்ற இசைக்கருவிகள், இசை நாடகங்கள், இசை மேதைகளின் வாழ்கை வரலாறு, இசை தொகுப்புகள் என பல காணாமல் போய்விட்டன. இது பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை என தட்டிக் கழிக்கலாம். அப்படியென்றால் கடந்த இருநூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்த இசைக் கலைஞர்களின் படைப்புகள், வாழ்க்கை பற்றிய தொகுப்புகள் எளிதாக கிடைக்கின்றனவா?
இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவிதாங்கூர் ராஜா சுவாதித் திருநாள் பாடல்கள் இயற்றவேயில்லை என வீணை எஸ்.பாலசந்தர் சிறு நூல் ஒன்றில் எழுதியுள்ளார். பல கலைஞர்கள் இயற்றிய பாட்டுக்கு சொந்தக்காராக தன்னை அறிவித்துக்கொண்டவர் சுவாதித் திருநாள் என அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அற்புதமான கவி நயத்துடனும், இசையறிவுடனும் பாட்டெழுதிய ஊத்துக்காடு கவி வெங்கட சுப்யையர் வாழ்ந்த காலம் திட்டவட்டமாக கிடைக்கவில்லை. அவர் எழுதிய பல பாடல்களும் கிடைக்கவில்லை.
இப்படி பல கலை வேர்கள் தொகுக்கப்படாமலே காணாமல் போய்விட்டன.
இசைக்கலைஞர் ஜி.என்.பி-யின் (ஜி.என்.பாலசுப்பிரமணியம்) நூற்றாண்டு மலர் தொகுப்பு இப்படிப்பட்ட காணாமல் போன செய்திகளிலிருந்து நம்மை மீட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள வைக்கிறது. சில பக்கங்களில் `இசைக் கடல், இசை ராட்ஸசன்` என எழுதிவிட்டு, காபி சமுஸா சாப்பிட்டு தட்டை கீழே வைக்குமுன் பலரும் மறந்திருக்க அதிக வாய்ப்புள்ளது, நண்பர் லலிதா ராம், ஸ்ருதி இதழ் ஆசிரியர் ராம்நாராயணும் இணைந்திராவிட்டால்.
விளைவு? 264 பக்க நூற்றாண்டு மலர் (ஜி.என்.பி பாடிய ஐந்து பாடல்கள் அடங்கிய தேன் தகடு புத்தகத்துடன் இணைப்பு). ஒரு இசைக் கலைஞருக்காக தொகுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை நூலாக நம்முன் விரிகிறது. ஜி.என்.பி மேல் தீராத காதல் கொண்ட ரசிகர்களால் மட்டுமே இப்படிப்பட்ட மலர் வெளிக்கொண்டுவந்திருக்க முடியும். இது மேம்போக்காக இணையத்திலிருந்து நான்கு கட்டுரைகள், சில பெரிய மனிதர்களிடம் ஓரிரு வார்த்தைகள் என தொகுக்கப்பட்ட புத்தகம் இல்லை.
பல நூலகங்ளில் கிடைத்த கட்டுரைகள், Journal of Music Academy போன்ற பழைய தொகுப்புகளிலிருந்தும் பல கட்டுரைகள் பத்திரமாக எடுக்கப்பட்டு அச்சு கோர்க்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை லலிதாராம்,ஸ்ருதிஇதழ் ஆசிரியர் ராம்நாராயணனும் தொகுத்திருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாது, ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் கட்டுரைகள் மூலம் ஜி.என்.பி-யின் மேதமைத்தனத்துக்குள் செல்லும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.
ராகம்- தானம்-பல்லவி என புகழ்பெற்ற மூன்று பகுதிகளாக இம்மலர் தொடுக்கப்பட்டுள்ளது.
ராகம் - இசை நுணுக்கங்களை முடிவிலா ஆழம் வரை அள்ளி எடுக்கக்கூடிய பகுதி. ஜி.என்.பி-யின் இசை முறை, தனிப்பட்ட மேதமை, அவர் இயற்றிய பாடல்கள், அதன் சிறப்பியல்புகள் என கர்நாடக இசை நுணுக்கங்கள் இப்பகுதியில் உள்ளன. குறிப்பாக, Dr.N.ராமநாதன் எழுதிய The Intellectual Approach, Graha Sruti Bedham, வித்வான்.டி.எம்.கிருஷ்ணா எழுதிய The influence of Music, லலிதா ராம் எழுதிய பிரகலாத பக்தி விஜயம் கட்டுரைகள் ஜி.என்.பி என்ற மகாகலைஞனை பற்றிய நம் அறிவை விரிவுபடுத்துகின்றன. கூடவே இசை பற்றி பலப்பல புது செய்திகளையும் வரிக்கு வரி தெரிந்துகொள்ள முடிகிறது.ஆங்காங்கே ஜி.என்.பி-யின் அரிய புகைப்படங்கள், மறைந்த ஓவியர் எஸ்.ராஜம் வரைந்த ஓவியங்கள் அற்புதமாக அலங்கரிக்கின்றன. பொதுவாக இசை கட்டுரைகள் புது செய்திகள் கொடுக்குமளவு அவற்றை விரிவாக விளக்குவதில்லை என்ற குறை இப்புத்தகத்தில் எங்குமே இல்லை.
தானம் - ஜி.என்.பி, அவர் தந்தை நாராயணஸ்வாமி ஐயர் இருவரும் தேர்ந்த இசை கலைஞர்கள் மட்டுமல்ல. எளிமையாக, அதே சமயம் கடினமான இசை சங்கதிகளை சுவைபட எழுதுவதிலும் விற்பன்னர்களாக இருந்துள்ளனர். அவர்கள் எழுதிய கட்டுரைகள் இப்பகுதியை நிரப்பியுள்ளது.கர்நாடக பாணி என்றால் என்ன, காட்டிலே விளைந்த கஸ்தூரி போன்ற கட்டுரைகள் இசை சம்பந்தமான கட்டுரைகளுக்கு நல்ல மாதிரி. தன் எழுத்துக்களில் ஜி.என்.பி எங்குமே தன் இசையின் மேதாவிலாசத்தை பிரஸ்தாபிப்பது இல்லை.மாறாக எளிமையான சொற்றொடர்களில் இசையின் சாராம்சங்களை விளக்கிச்செல்கிறார்.
குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் Art: It's Dawn, Perfection and Future Role ஒன்று. கலையின் தேவை மானுடத் தேவை. மானுட ஒற்றுமைக்கானத் தேவை என கலையை காக்கும் சக்தியாக மகத்தான பீடத்தில் உயர்த்துகிறார். இக்கட்டுரையில் இலக்கியம், கலை, இசை , மானுடம் என பலவற்றை ஒற்றை சரடு மூலம் தொடுக்கிறார்.ஆங்கில இலக்கியம், வரலாறு, இசையின் தொன்மை என ஜி.என்.பி-யின் எண்ண ஓட்டம் தங்க நூலிழையாக கலையெனும் பொக்கிஷத்தை அணுகுகிறது. இசையில் மட்டுமல்லாது பல நுண்கலைகளில் அவருக்கு இருந்த அறிவின் வீச்சு பிரமிப்பூட்டுகிறது.
பல்லவி - ஜி.என்.பி ரசிகர்களின் மேடை இது. எம்.எல்.வசந்தகுமாரி, லால்குடி ஜெயராமன் என பல ஜாம்பவான்களுக்கு குருவாக ஜி.என்.பி இருந்திருக்கிறார். பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களையும் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.பத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் கட்டுரைகள் மூலம் ஜி.என்.பி-யின் மனித உறவுகளைப் பற்றிய புரிதல் கிடைக்கிறது.
ஜி.என்.பி-யின் இசை, கர்நாடக இசை பாணி, இசை கற்ற குருக்கள், சிஷ்யர்கள், ரசிகர்கள் என பெரிய ஜாம்பவான்கள் பட்டாளமே இப்புத்தகத்தில் அணுஅணுவாக நிரம்பியுள்ளனர்.ஒரு இசைக் கலைஞனுக்கு இதை விட பொருத்தமான மரியாதை யாராலும் கொடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
குறை என பூதக்கண்ணாடியில் தேடினால் - சில எழுத்துப்பிழைகளை காட்டலாம். ஜி.என்.பி-யின் இசையுடன் அவ்வளவாக பழக்கமில்லாததால் சில பகுதிகளின் ஆய்வுகள் கடினமாக இருந்தன. புத்தகம் முழுவதும் சுவாரசியமான கருத்துப்பிழையில்லாத நடை. மெய்க்கோப்பாளரின் கடின உழைப்பு தெரிகிறது. ஒரே ஒரு வேண்டுகோள் - பல நல்ல கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளதால், கூடிய விரைவில் தமிழில் அக்கட்டுரைகள் வெளிவர வேண்டும்.
லலிதா ராம், ஸ்ருதி ராமநாராயணன், ஜி.என்.பி-யின் குடும்பத்தார்கள் போன்ற குழு இல்லாமல் இப்படிப்பட்ட தொகுப்பு சாத்தியமேயில்லை. இமாலய வேலையைச் செய்திருக்கும் அவர்களின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. அதே சமயம், கர்நாடக இசை உலகில் இது முதல் முயற்சியாக இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதற்கு பிறகாவது இப்படிப்பட்ட பல தொகுப்புகள் வெளியாவதற்கு தகுந்த ரசிகர்கள் ஆங்காங்கே பிறக்க வேண்டும்.
ஒரு கர்நாடக இசை கலைஞரைப் பற்றி முழு சித்திரத்தை அளிக்கும் முதல் தொகுப்பு என நாம் பெருமைப்படலாம். இசை ரசிகர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கிளாஸிக் தொகுப்பு.
Recent Comments