சொல்புதிது குழுமத்தில் எழுதியவை.இவை இலக்கியம் பற்றிய என் புரிதல்கள் மட்டுமே. இப்புரிதல்களின் நிச்சயத்தன்மை கேள்விக்குறியதுதான். எழுதியவற்றை இங்கு சேமித்து வைக்கிறேன்.
*
வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை முன்வைக்கும் எந்த தரப்பையும் இலக்கியம் எனச் சொல்லிவிடலாம். சரி, அப்ப வணிக எழுத்து இலக்கிய எழுத்து ரெண்டுமே இலக்கியம் தானே?
பறவையைப் பார்க்கும் எவனும் தான் ஒரு பறவைப் பார்ப்பவன் (bird watcher) எனச் சொல்ல முடியாது.சும்மா,சந்தோஷத்துக்காக அட அழகா இருக்கேன்னு பார்ப்பவனுக்கும், பறவையின் ரெக்கை, மூக்கு வடிவம், நிறம், கண்ணின் பார்வைக் கோணம், விரலமைப்பு, அதன் உணவு என தனித்தனியாக பார்த்து அவற்றை தொகுத்து பிரிக்க வேண்டுமே எனும் எண்ணத்தோடு செயல்படும பறவைப் பார்வையாளனுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், ரெண்டு பெரும் பார்ப்பது பறவையை தானே?
எந்த நோக்கத்துக்காகப் பார்க்கிறான் என தரப்பு பிரியும்போதே அவர்களது செயலின் நோக்கம் புரிந்துவிடும். அதே மாதிரி, வணிக எழுத்தும் எழுத்து தான் - அதன் நோக்கம்கேளிக்கை, வாசகர் சந்தோசம். அதுவும் வாழ்வை தான் பேசுகிறது. ஆனால், அதற்காக அது வாழ்வை தீவிரமாக முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்வே தீவிரமாக இருப்பவர்கள் டயம் பாசுக்காக படிப்பவர்களே பிரதானமானவர்களா இருக்கலாம். (இதில் வேறுபாடுகள் இருக்கலாம்)
வாழ்க்கையை அதன் தீவிரத்தன்மையோடு அணுகும் படைப்புகளை இலக்கியம், வணிகமில்லாத எழுத்து என அளவிடலாம். அதன் நோக்கம் வாழ்க்கையை சொல்வது மட்டுமே. அதற்காக சுவாரச்யமில்லாமலும் இருக்கலாம். தப்பில்லை. சொல்லப்படும் கருதுகோளுக்கு ஏற்றவாறு அதன் மொழி அமைந்திருக்கும். மிக நுணுக்கமான விவரங்கள் மூலம் கண்ணுக்குத் தெரியாத இழைகளை அமைத்திருக்கும். அதன் தீவிரம் அதிகம். சொல்லப்படும் கருத்துகளும் அதிகம். எத்தனை தளங்களுக்கு பல பேசுபொருட்களை உண்டாக்கி அவற்றை முன்வைத்து வாழ்வை சொல்கிறதோ அத்துணை தீவிர இலக்கியமாகிறது. அதாவது நேரடியாக சொல்வதைத் தாண்டி மறைமுகமாக சொல்லாமலும் உணர்த்தி செல்வதில் இருக்கிறது இலக்கியம்.
இதன் நோக்கம் காரணமாக வணிக மற்றும் இலக்கிய எழுத்தை இரண்டு எல்லைகளாக கொள்ளலாம். நமக்கு புரிந்தது போல எழுத்தாளர்களை வலது கோடியிலிருந்து இடது கோடிக்கு இழுத்து விளையாடலாம்.
எளிய உதாரணம். Who dunnit என்றால் அகதா கிறிஸ்டி நாவல்கள். Why dunnit என்றால் தஸ்தயேவ்ஸ்கி (குற்றமும் தண்டனையும்) என மேலோட்டமாகப் பிரித்துக் கொள்ளலாம்.
இரண்டுமே கொலை பற்றி பேசும் படைப்புகள் தான். ஆனால், வாசகர்களை ஆர்வத்தில் ஆழ்த்தி திகில் கூட்டி கடைசியில் எப்படி யார் குற்றவாளி என சொல்வதில் வாழ்க்கை நழுவி விடுகிறது. இங்கு யார் செய்த கொலை என்பதில் தான் ஆர்வமே இருக்கு. ஒரு மனிதனின் கொலை கதை. வணிக கேளிக்கை எழுத்து.
குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் கொலை வாழ்க்கையை நுணுக்கமாக ஆராய்கிறது. ஏன் சிலது குற்றம்? ஏன் மனிதன் காலாகாலமாகக் குற்றம் செய்கிறான்? குற்றம் செய்யும் மனதுக்கு என்ன நடக்கிறது? போன்ற விசாரங்களில் மனிதனின் ஆழ் மனதுள் நுழைகிறது. அது கொலை செய்தவனின் மனது மட்டுமல்ல. வாசகர்களின் மனதுக்குள்ளும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு அவனது மதிப்பீடுகளை விசாரணைக்கு உட்படுத்துகிறது. அதனால் இது இலக்கியம்.
தீவிரத்தன்மையை எப்படி கணக்கிடுவது?
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வேறுவேறு வெளிப்பாடு பாணி இருக்கும். சிலர் முழங்குவார்கள், சிலர் ஆணித்தரமாக இதுதான் சரி தப்பு என பேசுவார்கள், சிலர் குழப்பவாதிகள், சிலர் தொட்டும் தொடாமல் இருப்பார்கள், சிலர் சூசகமாக எண்ணங்களை தெரிவிப்பார்கள், சிலர் ஒன்றை சொல்வது போல சொல்லி பெரிய தீர்ப்புகளை வழங்குவார்கள். சிலர் தடவிக் கொடுத்து இப்படிப் பார் கண்ணா என சொல்லிச்செல்வார்கள். சிலர் சொல்ல வந்ததை தவிர எல்லாவற்றையும் சொல்வது போல தோன்றும்.இதனால் குழம்பிப் போவது நாம் தான்.
சிலர் மிக எளிமையாக நம்மை ஏமாற்றுவார்கள். அதை நம்பி பலரை முதல் முறை படிக்கும்போது ஒதுக்கியிருக்கிறேன்..என்னடா ஒண்ணுமேயில்லையே எனத் தோன்றியிருக்கிறது. உதாரணம்: வண்ணநிலவன், ஜி,நாகராஜன். எளிமை,வெளிப்படையான பூச்சு தன்மையில்லாததைப் பார்த்து ஏமாந்தால் உள்ளிருக்கும் சுவை தெரியாது.
மொழியில், பாத்திரப படைப்பில், சொல்லும் கருத்தில், படைப்பின் மெளனத்தில் என இந்த வேறுபாடு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இதுதான் அவர்களது பாணி என பிடித்துவிட்டால் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடியும்.
சுஜாதா, அசோகமித்திரன் , முத்துலிங்கம, ஜெயமோகன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், கந்தர்வன் , சு.வேணுகோபாலன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிப்பாட்டு மொழி. அவர்களது தேடல், வாழ்க்கைப பார்வை, அதில் முன்வைக்கும் விமர்சனங்கள் என நுணுக்கமாகவோ, பெரிதாகவோ ஸ்கேல் மாறும்.
விபத்து என்ற தலைப்பில் அசோகமித்திரன், சுஜாதா, மாமல்லன், கந்தர்வன் என எல்லாரும் ஒரு விபத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒருவர் அதை மனிதத்துவத்தின் ஒரு துளி என்பார். இன்னொருவர் அதை விதி என்பார்.மற்றொருவர் அதே விபத்தை பல சாத்தியக்கூறுகளில் ஒன்று என்பார். அடுத்தவரோ அதைசமூகத்தின் நமுட்டு சிரிப்பு என்பார். இப்படி பல பாணி. இவையெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இலக்கியமாகிறது என்று தோன்றுகிறது. Granularity is the difference.
வணிக எழுத்தும் எங்கிருந்தோ கருக்களை சுமப்பதில்லை.அதுவும் வாழ்க்கையிலிருந்தே பெறுகிறது.ஆனால் அது வெளியாகும் தளத்தில் அதன் தீவிரத்தன்மையை முழுவதும் வெளிப்படுத்த முடியாது. பக்கங்கள் கிடையாது. அதற்கான மொழியும் வணிக மொழியாக இருக்காது. அதனால் அதே விஷயங்களை இன்னும் சிக்கனத்துடன் சுவாரஸ்யமாக, சரியாக போய் சேர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கு - அதனாலே கதை முடிவுகளும் தீர்ப்பு வழங்குவது போல் இருக்கும். இது எப்படி சமரசம் ஆகும்?
ஐன்ஸ்டீன் தர்க்க சமன்பாடுகளோடு பகல் முழுவதையும் ஆய்வறையில் கழிப்பார். இரவில் கவித்துவ மனதோடு பல மணிநேரங்கள் வயலின் வாசிப்பார். ஆஹா, இத எப்படி ரசிக்கிற? தந்தியின் அளவுபடி சத்தம் வருது அவ்வளவுதாநேன்னு அவர் நினைப்பதில்லை. யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. அவர் எண்ணங்களுக்கு அப்படி ஒரு நெகிழ்வான வெளிப்பாடு அவசியமாயிருந்திருக்கு. அப்ப தர்க்கத்துக்கும் கவித்துவ மொழி வெளிப்பாட்டுக்கும் இடையே சமரசமா என கேட்க முடியாது? அதே போல தான் சில விஷயங்களை கருத்தின் தீவிரத்தன்மைக்காக சிற்றிதழ்களில் எழுதுவார்கள். அதே வணிக இதழ்களில் பலரைச் சென்றடைய சற்று ஜனரஞ்சகமாக எழுதுவார்கள். இங்கு பெரியாரை உயர்த்தி பேசிவிட்டு, வணிக இதழில் அதற்கு எதிராக எழுதினால் தான் தப்பு.மொழியையும் பேசும் விஷயத்தையும் இலகுவாக மாற்றினால் கூடவா சமரசம்? எனக்குப் புரியவில்லை. இலக்கியத்தன்மை குறைந்திருக்கலாம். வாழ்க்கையை பட்டவர்த்தமாக முன்வைக்கும்போது இலக்கிய நெகிழ்வு தேவையா, வண்ண மொழி தேவையா என ஒரு காரணம் இருக்கலாம். அது
சொல்லப்படும் கரு தீர்மானிக்க வேண்டியது என்றே நினைக்கிறேன்.
இலக்கிய அமைதி
கடல் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியா இருக்கு? கொந்தளிப்பு, மலையளவு அலைகள் எல்லாம் தாண்டியும் ஒரு அமைதி தெரியுமில்லையா?
அடுப்பை ஆன் செய்வதிலிருந்து உலை கொதித்துக்கொண்டேவா இருக்கு? இறக்கிவைக்கும்வரை? வெந்து இறக்கிவைத்தபின் எந்த இடத்தில சரியா சாதம் வேகத் தொடங்கிச்சு சொல்லுங்கன்னு கேட்க முடியுமா? ஆரம்பத்திலிருந்து தானே மெல்ல எல்லா நொடிகளிலும் நடந்து கொண்டிருக்கு. ஆரம்பத்தில நமக்குத் தெரியாது, உலை கொதிக்கும்போதுதான் வெளியே தெரியும்.அது வரைக்கும் ஒண்ணுமே நடக்கலைன்னு சொல்ல முடியாதில்லையா? அதேபோல், அது எந்நேரமும் கொப்பளித்துக்கொண்டே இருந்தால் எப்படி சாப்பிடுவது, எப்படி கப்பலில் பயணிப்பது?
ஒரு விதத்தில் மொழியின் அமைதி இது மாதிரி தான் - பரபரப்பாக இருக்க வேண்டியபோது அப்படி இருப்பதில் தப்பில்லை. ஆனால் ஆழ்கடல் போல், எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஒரு மெளனம் அடித்தளத்தில் இருந்துகொண்டே இருக்கும். நாவலைப் படிப்பவர்களை அந்த மெளனம் தான் பாதிக்கும். கடல்புரத்தில், கன்னி, விஷ்ணுபுரம் நாவல்களில் வேண்டிய அளவு மொழி அமைதி இருக்கு. தேவையான அளவு அந்த மெளனத்தில் எல்லாமே அமிழ்ந்துகொண்டு தான் இருக்கும்.
மொழி அமைதி இருந்தால், எல்லாவற்றையும் சுவீகரித்துச் சென்று முடிக்கும்போது படிப்பவர்க்கு ஒருவித விலக்கம் மட்டுமே உண்டாகும். நாவல் முடிந்த பின் யோசித்துப் பார்க்கையில் ஒரு பெரிய வாழ்வை வாழ்ந்து விட்டது போலச் சோர்வு உண்டாகும் (பக்க அளவினால் அல்ல, காட்டப்படும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களினால்).
அதனால தான், சில விமர்சகர்கள் ஜெயமோகனின் 'காடு' நாவலை ரொமாண்டிக் வகை அழகியல்ன்னு பிரிச்சிருப்பாங்க. அதன் அளவுகோல் காட்டப்படும் வாழ்க்கையில் அல்ல , வெளிப்படும் அழகியலில் தான் இருக்கு. 'இரவு' நாவலுக்கு கண்டிப்பா அந்த அழகியல் ரொம்ப முக்கியம். ஆனால், இரவு குழுவைத் தவிர பகல் மனிதர்களுக்கு அதனால் உண்டான பாதிப்பு தெரியலை என ஒருவர் வாதாடலாம். அதனால், இரவுக் குழுவைச் சுற்றி இயங்குகிற வாழ்க்கை படம் பிடிக்கப் படலை. அவங்களுக்குள்ளேயே தொடங்கி அங்கேயே முடிந்துவிட்டது என அவர் முன்வைக்கலாம்.
அதனால் 'இரவு' நாவலை, இலக்கியமாகாத அமைதி எட்டாத குறுநாவல் என வகைப்படுத்தலாம்.
Recent Comments