லண்டன் வாழ் மக்களின் சந்தோஷங்கள் வெம்ப்ளி கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாடும் சிலரது கால்களில் திரண்டுகொண்டிருந்தன. தேன் கூட்டைக் கலைத்தது போல கூச்சலும் குழப்பமுமாக இலக்கை மட்டும் கருத்தில் கொண்டு எங்களைக் கடக்கும் கால்பந்தாட்ட ரசிகர் கூட்டத்துக்குப் புறமுதுகிட்டு ரஞ்சனா வீட்டுக் கதவுமுன் மனைவி ராதாவுடன் நின்றிருந்தேன்.
உலகின் பெருங் கவலைகளெல்லாம் ரஞ்சனாவின் முகத்தில் தெரியும் என்ற எதிர்பார்ப்போடு என் முகம் சோகத்தை கொஞ்சம் அதிகமாகவே பூசியிருந்தது. சஞ்சலம் கொஞ்சமும் இல்லாது முன்விழுந்த மயிர்க் கற்றைகளை ஒன்றாய் சேர்த்து காதுக்குப் பின் கொக்கியாக மாட்டியபடி கதவைத் திறந்தாள் அவள். 'உள்ள வாங்க' என வரவேற்று ஹாலுக்குத் திரும்ப நடக்கும்போது, துணி காய்ந்து கிடப்பது போல அவளது நீண்ட கூந்தலில் ஆங்காங்கே மாட்டியிருந்த கிளிப்புகள் அதிர்ந்து ஆடின. க்ஷண நேரம் மட்டுமே நீடித்த அற்புத நடனம். மீறல் கலையைக் கச்சிதமாகக் கற்றுக்கொண்டிருந்தாலும் நாங்கள் ஹாலுக்குப் போகும்வரை ஆட்டத்தின் தாளகதிக்கு மனம் ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தது. சே! இது என்ன எண்ணம் என ஒரு கணம் மன நாக்கு கடிந்து கொண்டது.
'சாரி, இன்னிக்கு மேட்ச் இருக்கிறதை மறந்திட்டேன், இல்லைன்னா நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேன். ரொம்ப டிராபிக்கா?'
ஹால் மூலையில் வெள்ளைத் திரைச்சீலையை விலக்கிவிட்டு மைதானத்தின் ஆர்ச் வளைவுவழியே மங்கும் மஞ்சள் சூரியனைப் பார்த்தபடி 'M25 ல அவ்வளவா இல்ல. வாவ்! நைஸ் வியூ' என்றேன். நண்பிகள் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்க விருப்பமிலாது தொடர்ந்து சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்ல ஒளிப்பிழம்பிலிருந்து ரேகையிலாது சுழலும் செந்தகடு மட்டும் புலனானது. சூரிய வெளிச்சத்தின் ஒளிமுழுவதும் என் கண்ணிலிருந்து வீசுவது போல் உலகமே வெளிச்சமாகத் தெரிந்தது. திரைச்சீலையை மூடியபின், கண்களை கசக்கி ஒரு நிமிடம் நிதானித்தபின் இருண்ட ஹாலின் உலகம் சகஜமானது.
'நீ இப்ப சொல்ற எல்லாத்தையும் முதல்லியே யோசிச்சிட்டேன்' - ஹாலைத் தாண்டி படுக்கையறைக்குப் போகும் இடத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தபடி ரஞ்சனா தீர்க்கமாகத் தன் முடிவை சொல்லிக்கொண்டிருந்தாள்.
'ஒரு குடும்பத்தை பிரிக்கிறேன்னு எனக்கும் தெரியும். அந்த கட்டத்தையெல்லாம் தாண்டிட்டேன் ராதா.' - மிக நிதானமாக ரஞ்சனா சொன்னாள்.
'பின்ன எப்படிடீ இந்த மாதிரி ஒரு விஷயத்தைச் செஞ்ச?' - தான் குற்றம் இழைத்தவள் போல் தழுதழுத்த குரலில் கேட்டாள் ராதா.
எனக்கு ஓரளவு விஷயம் புரியத் தொடங்கியது. ஆனாலும் ஒரு செவியை அவ்விடத்துக்குத் தத்துக்கொடுத்துவிட்டு மற்ற புலன்களோடு ஹாலில் இருந்த புத்தக அடுக்குகளையும், ஷோ கேஸ் பொம்மைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனை விதமான மான்கள்! ஒன்றாய் திரியும் புள்ளி மான்கள், கொம்பொடு உரசும் முரட்டு மான்கள் என பெரிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மான் பண்ணை இருந்தது. ஷோ கேசில் ரஞ்சனாவின் ஆங்கிலக் கணவர் புகைப்படம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தேன். நான் அவரைப் பார்த்ததில்லை. தேம்ஸ் நதி சலனத்தின் ஜொலிப்பில் வெஸ்ட்மினிஸ்டர் படம் மட்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. மற்றபடி சுத்தமான பழுப்பு சுவர்.
'ரெண்டு வருஷமா தனியா இருக்கே! என்கிட்டவாச்சும் சொல்லியிருக்கலாமில்ல?' என ராதா கேட்டுக்கொண்டிருந்தாள்.
இங்கு காரில் வரும்போதே இந்த சந்தேகத்தை நான் ராதாவிடம் கேட்டிருந்தேன்.
'எனக்கென்னவோ சந்தேகமா இருக்குமா..ஒண்ணு டைவோர்ஸ், இல்லைன்னா சண்டை..ரெண்டுத்துல ஒண்ணுதான் இருக்கும். ஸ்டீவை நீயாச்சும் பார்த்திருக்கியா உங்க ஆபிஸ் பார்டில எங்கியாச்சும்? '
நகத்தைக் கடித்துக்கொண்டே ராதா தலையாட்டினாள். ஸ்டீவ் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. எப்பவாவது விசேஷத்துக்கு வீட்டுக்கு அழைத்து வரலாமே எனக் கேட்டால் அவருக்கு இந்திய உணவு அவ்வளவா பிடிக்காது என்ற பதிலோடு ரஞ்சனா மட்டும் தனியாக வருவாள்.
இப்போது பார்த்தால் கதை இன்னும் தலைசுத்தும் குழப்பத்தில் இருக்கிறது. ஸ்டீவுடன் பிரிந்து ஒரு வருடம் ஆயிற்று என்பதை சொலும்போது ராதாவுக்கு பெரிய அதிர்ச்சி இல்லை. ஒரு மாதிரி யூகித்திருந்தாள். ஆனால் அதற்கு பின்னர் அவள் சொன்னதை தான் யாராலும் நம்பமுடியவில்லை.
'ஸ்டீவைப் பிரிந்து இந்த ஸ்டூடியோ அபார்ட்மெண்டில் தான் ரவியுடன் பழக்கமாச்சு. ஒரு விதத்தில் தனிமையின் ரி - பவுண்ட்ன்னு வெச்சுக்கோயேன்' - மிக கேஷுவலாகச் சொல்ல முயன்றதை ராதவால் தாங்க முடிவில்லை.
'என்னடி சினிமா மாதிரி இருக்கு. பதிமூணு வயசு பொண்ணு இருக்கிற ஒருத்தரை எப்படிடீ? உங்களுக்கே ஒரு பத்து வயசு வித்தியாசம் இருக்குமே! அவரோட மனைவியப் பத்தி யோசிச்சியா?'
'ராதா, இவ்ளோ நாளா இதெல்லாம் யோசிக்காம இருப்பேன்னு நினைக்கிறியா? உனக்கு முதல்ல வர்ற எண்ணமெல்லாம் எனக்கு வந்திட்டு உலுக்கி விட்டுப் போயாச்சு. நான் இப்ப அடுத்த கேள்விகளோடு இருக்கேன்! ஒரு குடும்பத்தைக் கலைக்கறது, மூணு பசங்களோட அப்பாவை அபகரிக்கிறது, இதெல்லாம் இப்ப ஜஸ்ட் அவுட் ஆப் மை மைன்ட்!'
அவள் தீர்க்கமாகப் பேசியது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவளா இப்படி பேசுவது? முதல்முறை சந்திக்கும்போது, நானும் புதுவை எனத் தெரிந்து சிறுவயதுப் பெண்ணின் உற்சாகத்தோடு வில்லியனூர் தேர் திருவிழா பற்றி நிறைய பேசியிருக்கிறாள். ஒரு வேளை, உலகத்தில் இப்போது இதெல்லாம் சகஜமாகிவிட்டதோ? கால்சென்டரின் சில மணித்துளிக் காதல்கள், தேன்நிலவில் கணவனை திட்டம் போட்டு கொல்வது என்பது போல இதுவும் சகஜமாகிவிட்டது போலிருக்கிறது.
புத்தக அலமாரியில் இருந்த பாரதியார் கவிதைகள், ஓஷோவுடன் உரையாடல், கீதை உரை, சாய்பாபா பஜன் என தொட்டுக்கொண்டே வந்து காமசூத்ரா புத்தகம் மீது விரல் பட்டதும் சட்டென விலக்கிக் கொண்டேன். அவர்கள் பார்த்துவிட்டார்களா என ஒருகணம் திரும்பிப் பார்த்தேன். ரஞ்சனாவின் ஒரு வருடக் கனவுலகை சில சொற்களில் கலைத்து நிதர்சனத்துக்கு விழிக்க வைக்க ராதா போராடிக்கொண்டிருந்தாள். மீண்டும் ஒரு தடவை புத்தகத் தலைப்பு சரிதானா எனப் பார்த்தேன். 'காமசூத்ரா எனும் கலை' என தங்க நிற எழுத்துகள். சுற்றிலும் சிகப்பு நிற ரோஜா மலர்கள். உள்ளே புரட்டிப் பார்த்தால் வாசனை வருமோ?
அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டும் என உள்மனம் பதற்றத்தில் அறிவுறுத்த, ஹாலின் வலது மூலையில் இருந்த டிவிக்கு அருகே நின்றுகொண்டேன். அருகிலிருந்த ஜன்னலைத் தட்டி கதைகேட்கும் ஆர்வத்தோடு சிறு மழைத்துளிகள் உள்நுழையப் பார்த்தது. காக்காவுக்கும் நரிக்கும் இங்கிலாந்தில் தினமும் கல்யாணம் உண்டு. தடுப்புக் கீலை நீக்கிவிட்டு ஜன்னலை மூடிவிட்டு நடப்பவற்றை எங்களுக்கு மட்டுமேயான சொந்தக் கதையாக அடைத்துவிட்டேன்.
நான் இருந்த இடத்திலிருந்து படுக்கையறை கட்டில் தெரிந்தது. செம்மஞ்சள் நிற படுக்கைவிரிப்பில், ஆங்காங்கே கருப்பு பூ இதழ் விரித்திருந்தது. கட்டிலின் கால் பகுதியிலிருந்து நீண்ட தூண்கள் மேலிருந்த சுவரில் செருகியிருந்தததைப் பார்க்கும்போது அந்தகால அரண்மனைக் கட்டில் போல் இருந்தது. தடிமனான தலையணைகளில் சூழலுக்குப் பொருந்தாத 'கலையே கடவுள்' என்ற வாசகம் பச்சை நிற எம்ப்ராய்டரில் மினுக்கியது. படுக்கையறையைப் பார்ப்பது கூட ரொம்ப கூச்சமாக இருந்தது. என்னை யாரும் கவனிக்கவில்லை எனத் தெரிந்தாலும் பார்வையை விலக்கிக்கொண்டு அவர்களுக்கு அருகில் சென்றேன்.
ரஞ்சனாவின் ஐந்து மாத கர்ப்பம் பற்றிய சிக்கல்களை பேசிக்கொண்டிருந்தனர். எனக்கென்னவோ அவளைப் பார்க்கும்போது எட்டு மாதம் போலிருந்தது. ஒருவேளை இதையும் மறைக்கிறாளோ? தெரியாது. ஏதோ கர்ப்பமானதால் அவளது குழப்பங்கள் வெளியே வந்தது. ஒரு வருடமாக மறைத்துவைத்ததை ராதாவிடம் சொல்கிறாள் என்றால் குழந்தைதான் காரணம்? அல்லது ரவி மேல் நம்பிக்கை குறைந்துவிட்டதா?
'உங்க வீட்ல யாருகிட்டயாவது சொல்லிட்டியா? உங்க அக்காவுக்காச்சும் சொல்லேன்..என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்?' - எப்படியும் தீர்வு கண்டுபிடிக்கவேண்டும் என்ற தீவிரம் அவளது குரலில் ஏக்கமாக வெளிப்பட்டது. நான் ஏதாவது சொல்லலாம் என வாயெடுப்பதற்குள்,
'அம்மாகிட்ட குழந்தை பத்தி சொல்லிட்டேன், ஆனா ரவி பத்தி இல்ல', சிறுகச் சிறுக விடுவிப்பதற்கு இது என்ன புதிர் விளையாட்டா? இல்லை கேட்டால்தான் சொல்லுவேன் என்றால் கதை கேட்பவர்கள் மீது நம்பிக்கையில்லையா? குறைந்தபட்சம் இதைச் சொல்பவன் மேல் வைக்கும் நம்பிக்கைக்காகவேனும் முழுவதும் அவள் சொன்னால் என்ன?
'இன்னும் பெரிய சிக்கலில்லையா? சொல்லாமலேயே இருக்க முடியாது, பாவம் உங்க அம்மாவும் உடம்புக்கு முடியாம இருக்காங்க. சொன்னா ரொம்ப தவிச்சுப் போயிருவாங்களேடி?' - உன் பதட்டம் அவளுக்கு கொஞ்சமாவது தொற்றிக் கொள்ளுதாப் பாரேன் என ராதாவிடம் கேட்க வேண்டும்போலக் கோவம் வந்தாலும் அடக்கிக்கொண்டேன். ஆனால், ஏதாவது கேட்காமல் இருக்க முடியாது என்பதால்,
'இப்ப வாட்ஸ் தெ நெக்ஸ்ட் ஸ்டெப்? ஸ்டீவ் கிட்ட பேசிப் பார்த்தியா?'
கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டதுபோல இருவரும் துணுக்குற்று என்னைத் திரும்பிப் பார்த்தனர்.
'அம்மாவிடம் சொல்லப் போறதில்லை. நேத்து கூட வளைகாப்புக்கு வளையல் அனுப்பறேன். தேங்காய்பால் வேணுமான்னு கேக்கிறாங்க..நான் என்னத்த சொல்ல?' - ஒரு நிமிடம் அவளது முகத்தில் தெரிந்த கவலை படபடவென அடித்துக் கொண்ட படுக்கையறை ஜன்னலைத் திரும்பிப் பார்த்ததும் போய்விட்டது.
அதற்குள் நான் படுக்கையறைக்குள் சென்று ஜன்னலைச் சாத்தினேன். சிறிது நேரம் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆங்காங்கே ஒழுகிய சிறுதுளிகள் மெதுவாகத் தொடங்கி வழியில் மேலும் சில துளிகளுடன் சேர்ந்து வேகவேகமாய் ஜன்னல் விளிம்பை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தன. எவ்வளவு விரைவாக வந்தாலும் இக்கதையை நீங்கள் கேட்க முடியாது என்பதில் துளி சந்தோசம் வந்தது.
படுக்கையறை டேபிள் மேல் வெள்ளி நிற சட்டகத்தில் ஒரு புகைப்படம் கவிழ்ந்து கிடந்தது. ஸ்டீவ் அல்லது ரவி? படத்தைத் தூக்கிப் பார்க்கத் தயங்கி ஹாலுக்கு வர எத்தனித்தபோது அதற்கு அருகில் இருந்த அலமாரிக்கருகே நீளமாக சில புகைப்படங்கள் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. நவீன வண்ண குழப்பங்களுடன் கொலாஜ் போல இருந்தாலும் அவற்றில் ஒன்று தனித்துத் தெரிந்தது. இரு சிறுவர்கள் வானவில்லின் வண்ணங்களைக் கைகளால் கட்டி தங்கள் வீட்டுக்குள் இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். சட்டகங்களுக்குள் அடங்காத வண்ணக்கலவை. வளைந்து நீண்டு எந்நேரமும் திமிறி விடுமோ எனப் பூட்டிய வில் போல வானவில் புடைத்துக் கொண்டிருந்தது. சிறுவர்களின் நீண்ட கரிய நிழல்களின் தீர்க்கத்தில் அவர்களது வேகம் தெரிந்தாலும் முகத்தில் மட்டும் அதீதக் குழந்தைத்தனம்.
புகைப்படம் பெரிதாக என்னை ஈர்க்க ஹாலில் இருந்த ரஞ்சனாவிடம் காட்டி 'நீங்க படம் வரைவீங்களா?' எனக் கேட்டேன்.
புகைப்படத்தில் அசைவற்று இருந்த சிறுவர்களின் ஆர்வமானக் கண்களை சில நொடித்துளிகள் பேசாமல் பார்த்தாள். அதுகாறும் தீர்க்கமாக முடிவெடுப்பவள் போலிருந்த அவளது கண்கள் நிலைகொள்ளாமல் தவித்தன. உடலசைவில் குழைவும் எந்நேரம் விம்மலாக வெளி வருமோ எனும்படியான தொண்டை அசைவுகளும் அவளது நிலையின்மையை உணர்த்தின. அசைவுகளற்ற அவளது வறண்ட உதடுகளில் கசப்பின் சுவையை ரசித்தவள் போன்ற சுழிப்பு.
'இது ஸ்டீவ் வரைந்த படம். அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு அறைக்குள் ஒரு வாரம் அடைந்துகிடந்து வரைந்தது.'
'ஒ..அந்தளவு ஆர்வமா இருந்திருக்காரா!'
'இந்தப் படத்தை அவர் முடிக்கவில்லை. அவரது சாமான்களை எடுக்க வந்தபோது கூட இந்தப் படம் நல்லாயில்லை, எனக்கு வேணாம் நீயே வெச்சிக்கன்னு சொல்லிட்டார். ஓரளவு நிறைய பணம் சம்பாதித்ததும் பாரீஸ் போய் அங்க இருக்கிற ஆர்டிஸ்டோடு வேலை செய்யணும்னு எப்பவும் சொல்லுவார், அந்தளவு நடைமுறை தெரியாத அப்பாவி!'
'முன்ன தான் பாரீசுக்கு போனாதான் இந்த மாதிரி விஷயமெல்லாம் செய்யமுடியும்னு சொல்லுவாங்கயில்லை?' என நான் ராதாவைப் பார்த்துக் கேட்க, 'ஆமாம், பாட்டிலில் இருக்கும் பூச்சியோடது மாதிரி அவரோட உலகம். உள்ள இருக்கிற வரை இதுக்குதான் பொறந்தோம்னு இருக்கும். வெளிய விட்டா சில நிமிடங்கள் கூட தாக்குபிடிக்க ரொம்ப சக்தி இருக்காது' என ரஞ்சனா தனக்குள் பேசினாள்.
மெல்ல, ஸ்டீவுடனான வாழ்வின் உறைந்த கசப்புகளை நோக்கி அவளது வார்த்தைகள் திரும்பிக் கொண்டிருந்ததைக் கண்டேன். நான்தான் அவ்விடத்துக்கு அவளைச் செலுத்திவிட்டேனோ எனும் நிர்க்கதியற்ற முகபாவத்துடன் ராதாவைப் பார்க்க, இக்கணமே என்னை மறைந்துபோகும்படியான மந்திரத்தை அவளது இமைக்காத கண்களில் தேக்கி வைத்திருந்தாள்.
'இப்படியெல்லாம் வாழ்ந்தா நல்லதுன்னு ஒரு லிஸ்ட் இருக்கில்ல? அது என்னென்னு எனக்குத் தெரியும். அப்படி வாழுன்னு எதிர்பார்க்கும்போதுதான் நமக்கே தெரியாத சக்திகளால அலைகழிக்கப்பட்டு எல்லாமே மாறிடும்னு தோணுது.'
ஒரு வருட மனக்குமுறல் அவளை தத்துவார்த்தமாகப் பேச வைக்கிறது. என்னுடைய நெருங்கிய நண்பனாக இருந்தால் 'என்னடா மந்திரிச்சி வுட்டாங்களா?' எனக் கேட்டிருப்பேன். சிறு கூழாங்கற்களால் பாளம் பாளமாகப் பிரிந்திருந்த தரையைப் பார்த்தபடி அவள் பேசிக்கொண்டேபோக அகராதியிலிருந்து எங்களுக்குத் தெரிந்த சமாதான வார்த்தைகளைத் தேடித் தேடிப் பிரயோகித்தோம். சட்டி சீக்கிரம் காலியாகப் போகிறதென எனக்குத் தோன்றியது.
'என்னடா ரொம்ப ஞானி மாதிரி பேசறேன்னு நினைக்கிறீங்களா? இப்ப, ரவியோட அப்பா அம்மாவை அவனது மனைவி லண்டனுக்கு அழைத்துவந்திருக்கிறாள். சமாதானம் பேச! காதலிக்காத ஒருவனோடு எப்படி அவளால் குடும்பம் நடத்த முடியும்? நான் யோசிச்சதுல பாதியாவது அவள் யோசிச்சிருப்பாளான்னு தெரியலை.'
'என்னடி, நீ உன்னோட கனவு உலகத்திலருந்து பாக்கற. நாற்பது வயசுக்காரிக்கு மூணு குழந்தைகளோட அவளோட எதிர்காலத்தைத் தக்கவைக்கிற கடைசி ஆயுதம் இது. இங்க காதல் கத்திரிக்கா எல்லாம் எங்க வந்தது?' - முதல் முறையாக ராதாவின் குரலில் எரிச்சல் வெளிப்பட்டது.
'இவ்வளவு நடந்தபின்னால அவனோட தொடர்ந்து குடும்பம் நடத்த முடியுமா?' - பதில் தெரிந்தும் எங்களுக்குப் பொழுது போகணுமே எனக் கேட்டது போலிருந்தது.
'ஏன்? எப்பவாவது அவன் திருந்திருவான் என அவ நினைக்கலாம். நீயே அவனைப் பத்தி இவ்வளவு யோசிக்கும்போது அவளுக்கு அந்த உரிமையில்லையா?' - எங்களது வருகை மனநிம்மதியை விட குழப்பங்களையே அதிகம் செய்யப்போகும் தளத்திற்கு பாதை மாறிக்கொண்டிருந்தது.
கூச்சல் போட்டாவது உடைக்கவேண்டும் எனும் ஆவேசத்தைக் கொடுக்கும் கனத்த மெளனம் அடுத்த ஐந்து நிமிடத்துக்கு அறையின் சுவர்களில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. வானவில் சிறுவர்களின் கரங்கள் வருடப்பட்டுக்கொண்டிருந்தன. அழுதுவிடும் பாவனை அவளது முகத்தில் தெரிந்தாலும் எதை நினைத்து அழுவது எனும் பிரமிப்பும் கூடவே சேர்ந்திருந்தது எனத் தோன்றியது.
ராதாவால் மட்டுமே இந்த இறுக்கத்தை உடைக்க முடியும் என நான் நினைத்துக்கொண்டிருந்தபோது,
'ரவிகிட்ட பேசிப் பார்த்தியா? இனிமேலாவது ஏதாவது முடிவெடுக்க வேண்டாமா?' என் எண்ணத்துக்கு வாயசைத்தாள்.
'சந்தேகமா இருக்கா? ரவி ரியலி லவ்ஸ் மி. ஹி இஸ் சின்சியர்லி இன் லவ்.'
எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஏதாவது மிடில் ஏஜ் கிரைசிசாக இருக்கலாமோ எனக் கேட்டுப் பார்க்க நினைத்தேன். எல்லாவற்றையும் கட்டிலுடன் தொடர்பு படுத்துவது ஆண்களின் குணம் என வழக்கம்போல ராதா முறைத்தால் என்ன செய்வது?
'ஆனா ஒண்ணு. முதல்ல ஒரு வெள்ளைக்காரன், அடுத்து நாற்பது வயசைத் தாண்டிய குடும்பஸ்தனோடு தொடர்பு. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு தோணாம இருக்கணும். அதுதான் வேணும். அப்படி தோணினா அப்புறம் பிரயோஜனமில்லை. எல்லா திசையிலும், என்னால எவ்வளவு நல்லவங்க உருவாகறாங்கன்னு நினைச்சா சில சமயம் வேடிக்கையா இருக்கு. நாளைக்கு என் பொண்ணோ, பேத்தியோ இதைப் பத்தி என்கிட்டே சொல்லி சிரிச்சிட்டு எவ்வளவு நல்லவங்களை நான் அடையாளம் காட்டியிருக்கேன்னு சொல்லும்போது நானும் நல்லவளா ஆயிருவேன் இல்ல? அதுவரை, என் குற்றங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை மட்டும் கொடுங்கன்னு இந்த வீட்ல இருக்கிற பொருளெல்லாம் கேக்கப் போறேன்!'
அவளது சுழிப்பு சிரிப்பாக மாறி எங்கள் மூச்சுகளை சீராக்கியது. உலகம் புரண்டது போல அறையின் சீதோஷண நிலையும் கட்டுக்குள் வந்தது. பொதுவான சில விஷயங்களைப் பேசிவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பத் தயாரானோம்.
வெளியே வந்ததும் எங்கள் முதுகுக்குப் பின் கதவு சாத்தப்பட்டது. ஏதோ ஒரு கால்பந்தாட்ட அணி வென்றிருக்க, பார்வையாளர்கள் வருத்தத்தையும் குதூகலத்தையும் பங்குபோட்டபடி எங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். ஊரில் உள்ள நிழல்களை எல்லாம் திருடிக்கொண்டு வானம் கறுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.
Recent Comments