கீழுள்ள காணொலியில் மேற்கின் தேவாலய இசையின் தொடக்கங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
பாரீஸின் நாத்ரு தாம் தேவாலயத்தில் பனிரெண்டாம் நூற்றாண்டில் லாங்பார்ம் எனும் பாட்டு வடிவம் உருவானது. இதைக் கண்டெடுத்தவரின் பேட்டி கூட சேக்ரட் மியூசிக் ஆவணத்தில் உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக அப்படி பாடும் பாணி, தேவாலய மனிதர்களின் மன்றாடல் போல உருவாகிவிட்டது. சக்தி வாய்ந்த தேவாலயங்களினால் இது பன்முகம் பெற்றது, குறிக்காக மார்டின் லூதர் போன்ற சக்தி படைத்தவர்கள் தெய்வ இசை என இதை முன்னெடுத்து வாத்திய கருவியிலும் ஹார்மனியை கொண்டுவந்தனர். அவரது இடத்தில் பாக் பின்னர் வந்தமர்ந்து இறையிசையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார். ஐரோப்பாவில் பரவிய அளவு இந்தியாவில் இசைக்கென தொடர்ச்சியான ஆதரவு எந்த அமைப்பும் கொடுத்தாகத் தெரியவில்லை.
மேலும் இப்படி பல ஸ்தாயிகளில் ஒரே சமயத்தில் பாடுவது தேவாலய சுவர்களில் எதிரொலித்து ஒரு பிரம்மாண்ட கூட்டொலியை உருவாக்கியது. இதுக்காகவே கட்டிட கலைஞர்கள் திட்டம் தீட்டி அரங்கம் போல பர்ரோக் பாணியில் தேவாலயத்தை அமைத்த்னர். இன்றும் இங்கிலாந்து திருச்சபை உட்பட அனைத்து தேவாலயங்களிலும் hymn இசை உள்ளது.
ஐரோப்பாவில் பரவிய அளவு இந்தியாவில் இசைக்கென தொடர்ச்சியான ஆதரவு எந்த அமைப்பும் கொடுத்தாகத் தெரியவில்லை.
ஒரு சக்தி வாய்ந்த சமூகமே முன்னடத்தியதால் ஐரோப்பா இசை உச்சகட்டத்தை சீக்கிரம் அடைந்தது. இந்திய இசை இன்றளவும் தனிப்பட்ட கலைஞர்களின் உந்துதலில் தான் முன்னகர்ந்துள்ளது. அதிலேயே செவ்வியல் பள்ளிகளின் purists சில மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி தனிமனித முயற்சிகளில் எவ்வள்வு மாற்றங்களைச் செய்து விட முடியும்? சின்ன உதாரணம் சைனா - இன்று மேற்கத்திய செவ்வியலில் சக்கை போடு போடுகிறது. பள்ளிகளில் இசை கட்டாயப்பாடம். ஆச்சர்யம்.
ஆபரா எனும்போதே பிரம்மாண்டம், ஹார்மனி வாத்திய இசை, உணர்ச்சி கொந்தளிக்கும் நாடகம் என்பதையும் தாண்டி, அது ஒரு தனி கலை வடிவம். கிரேக்க வடிவ நாடகங்களில் இத்தாலிய காதல் கதைகளைப் போட்டுப் பார்த்ததன் விளைவு ஆரம்பகால ஆபரா. ஆனால் அதில் பாடல் பாணிகள் தேவாலய hymn வகையில் இருந்தன. பழைய தொன்மங்களை மீட்டெடுத்த ரிச்சர்ட் வாக்னர் வரும்வரை - அவர் ஆபராவில் ஒரு சமனிலை கொண்டுவந்தார். பாடல் சொல்லாததை இசை உணர்த்தும். இசை தொடாத தளங்களை பிரம்மாண்ட நாடக தருணம் மூலம் காட்டுவார். இவற்றையெல்லாம் வசனம் மூலம் சரிசெய்யும் கிரேக்க பாணி அல்ல, பாடல்கள் மூலம் அளிக்க இத்தாலிய பாணியல்ல, தொன்மங்களை மறுவரையறை செய்யும் ஜெர்மானிய புணருத்தான வழி. கிட்டதட்ட தனி கலை வடிவம் வழி பிரம்மாண்ட கனவை நிகழ்த்துகிறார். இங்கு இசை நாடகம் நடனம் எதுவும் முக்கியத்துவம் பெறாது - வால்கைரி எனும் அவரது ஆபராவை மட்டும் பார்த்திருக்கிறேன். எவ்வளவு உணர்ச்சிகரமான நாடகம், இசை? இந்த் சங்கமம் எப்படி நிகழ்ந்தது? சொல்லத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தை முன்னிறுத்துவது?
இந்திய இசையில் ஆபரா நிகழ்த்தத் தேவையான காவியங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட வகையில் இந்திய இசை மேற்கிசை பாணியைப் பின்பற்றினால் மட்டுமே ஆபரா எனும் வடிவத்துள் அமரும் என்பது என் எண்ணம். நடனம் பற்றித் தெரியவில்லை - ஆனால் நமது இந்திய நடனத்தின் அழகியல் ரொம்பவும் எல்லைக்குட்பட்ட தனிநபர் உணர்ச்சியை நம்பியிருக்கு, கூட்டு நடனத்தின் வெளிப்பாடு எப்படியிருக்கும் எனத் தெரியாது.
இதையெல்லாம் தாண்டி புதுவகை வெளிப்பாட்டுக்கு இசையின் புனிதம், நடனத்தின் ஆசாரம் என்பதெல்லாம் தள்ளிவைக்க வேண்டும். ஆனால் இந்த அடிப்படைகள் இல்லாமல் நாம் எதிர்பார்க்கும் ஆபரா போன்ற பிரம்மாண்ட அமைப்பு இந்திய இசையில் முடியாது. அவ்வளவு ஏன் ரவிஷங்கர் போன்ற மேதைகளாலேயே சிம்பொனி போன்ற பெரும் இசை கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை? அவரது சமீபத்திய முதல் சிம்பொனி சில இசைத் துண்டுகளின் தொகுப்பாக மட்டுமே இருந்தது..ஏன்?
நமது பெரும் இசைக்கலைஞர்கள், வி.நரமிம்மன், எல்.சுப்ரமணியம், ரவிஷங்கர் போன்ற யாராலும் பெரும் இசைக்கட்டமைப்புகளை உருவாக்க முடியாது. அதுக்கான பெரும் கனவுகள் அவர்களிடம் இல்லையா? பெரும் தீம்கள் இல்லையா? சிம்பொனியைப் போல பலமடங்கு சிக்கலானது ஆபரா. இசை தவிர அரங்க அமைப்பு, ஒலி அமைப்பு, நடிகர்கள், காவிய உணர்வு வெளிப்பாடு, பாடல், செட் என பல விஷயங்கள். நூறு சிம்பொனிகளின் உழைப்பை கோரும் பெரு முயற்சி. சொல்வனம் கட்டுரையில் சில விசயங்கள் எழுதியிருந்தேன் - முக்கியமாக நமது மண்ணின் இசைவேர் பற்றி நாட்டாரியப் பார்வை தரும் கருத்துவத்தை முன்வைக்கும் படைப்புகள் இவர்களுக்கு சாத்தியமில்லை. ஏனென்றால் இவர்கள் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியின் வித்தகர்கள். இசை கட்டமைப்பு வாத்தியக் கருவிகளை இணைக்கும் பெரும் பணி மட்டுமல்ல.
ரவிஷங்கர், நரசிம்மன் போன்றவர்கள் மேதைகள் - இந்திய இசையின் ஜீனியஸ்கள். இந்திய இசையில் உச்சகட்ட சாதனைகளைச் செய்தவர்கள், அதனால் மேற்கிசையின் உச்சகட்டத்தை அவர்கள் ஏன் எட்டவில்லை எனும் அர்த்தமில்லாத கேள்வியைத் தவிர்த்து இந்திய இசை பரிமாணத்தின் உறைபனி உடைத்து நன்னீர் வெளிப்படும் சாத்தியங்கள் குறைவாகவே வந்துள்ளன, அது ஏன் என்பது சரியான கேள்வியாக இருக்கும். ஞானி நித்யா அவர்கள் கேட்டதை அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். பெரும் கனவில் திளைத்து அனைத்து கலை உச்சத்தையும் அள்ளிப் பருகி தனக்குள் அடக்கிய பிரம்மாண்டமான நிகழ்கலை உருவாகும் சாத்தியம் ஏன் நமக்கு அமையவில்லை?
அல்லது பண்டைய தமிழ் பண்பாடுகளின் வீழ்ச்சிக்கு முன்னர் சிலம்பு காலத்துக்கு முன்னர் இவை இருந்திருக்குமா - இந்த கேள்விக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பலவிதம் சொல்லியிருந்தாலும் இன்றும் முழுமையான பதிலில்லை.
Recent Comments