ப்ளூ டார்ட் கூரியரில் சென்னையிலிருந்து சில புத்தகங்கள் வந்து சேர்ந்தன. அவற்றைப் பற்றி தொடர்ச்சியாக சில பதிவுகளில் ஓரிரு வார்த்தைகள் எழுதலாமென்று எண்ணம்.
எந்நேரமும் சுத்துவட்டாரத்தில் யாரேனும் இந்தியா போகிறார்களா என மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பேன். கிடுக்குபிடி போட்டு ஒரு லிஸ்டை அவர் கைகளில் திணித்துவிடுவேன். இதற்காகவே சொல்லிக்கொள்ளாமல் ஊருக்கு போய் வருகிற பிரகஸ்பதிகளும் உண்டு. விஷ்ணுபுரத்தை எடுத்து வராமல் டபாய்த்த நண்பர்கள் வரிசை நீண்டு கொண்டேயிருக்க, ஒரு முறை இந்தியா போகும்போதுதான் எடுத்துவர முடிந்தது. இப்படி இம்சிப்பதால், பலர் முக்காடு போட்டுக்கொள்ளாத குறை. அதனால், பதிப்பாளர்களே, ஷிப்மெண்ட் செலவைக் குறைத்து என் சில நட்பு உருப்படிகளை காலாவதியாக்காமல் காப்பாற்ற வேண்டுகிறேன்.
இந்த முறை வந்த புத்தகங்கள்.
1. பூமியை வாசிக்கும் சிறுமி - கவிதை - சுகுமாரன்.
2. அரவான் - நாடகம் - எஸ்.ராமகிருஷ்ணன்.
3. சிலப்பதிகாரம் - தெளிவுரை - புலியூர்க் கேசிகன்.
4. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் - சிறுகதைகள்.
5. புலி நகக்கொன்றை - நாவல் - பி.ஏ.கிருஷ்ணன்.
6. ஏற்கனவே - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்.
7. கண்ணீரைப் பின் தொடர்தல் - கட்டுரை - ஜெயமோகன்.
8. கடவுளும் நானும் - கட்டுரை - சாரு நிவேதிதா .
9. மனோஜ் சிறுகதைகள்.
10. பாக்:ஒரு புதிரின் சரிதம் - வரலாறு - பா.ராகவன்.
பூமியை வாசிக்கும் சிறுமி.
கவிதை புத்தகங்களில் ஒரு செளகரியம். தொடர்ச்சியாகப் படிக்கத் தேவையில்லை; ஆங்காங்கே படித்து சிலாகிக்க முடியும். அவசரமாய் புரட்டி, இலக்கிய சேவை செய்தாகிவிட்டது என அங்களாய்க்க முடியும்.இவ்விஷேசங்களை மீறி, காட்சி படிமத்தை சில நொடிகளில் அனுபவிக்கக் கூடிய சவுகரியம். ஒரு சில வார்த்தைகளில் காவியத்தையே திறந்து காட்டும் ஆலிஸின் முயல் உலகம்.நாம் நின்றுகொண்டேயிருக்க, காலத்தை நொடிப்பொழுதில் கடக்கும் நுட்பம். நாம் நிஜமென நம்பும் உலகை, சில சொற்களில் தீயினில் தூசாக்கி விட்டு அனாவசியமாக கடத்தல் என கவிதைக்கு அலங்காரத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கிடைக்கும் நேரத்திலெல்லாம் சுகமாரனின் புத்தகத்தை புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பை ரசித்துப் படித்திருக்கிறேன். கட்டுரைகள் போலில்லாமல், சில கவிதைகள் இரண்டாம் வாசிப்பை கோருகின்றன. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் மனிதர்களுக்கு தன் மொழியால் உயிர் கொடுக்கிறார். வார்த்தைகளின் தேர்வில் இருக்கும் ஓசை நயம் இக்கவிதைகளை சத்தமாய் படிக்க தூண்டுகின்றன.
மழை பிடிக்கும் எனக்கு -
ஏனெனில்
நீர்க்கம்பிகளின் மீட்டலில்
இலை நடனம் நிகழும்
என snapshot விவரணைகள். இறுக்கமான கவிதைகளின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சரித்திரத்தை தாங்கி நிற்கும் பாரம்.
நிகழும் பொழுதுகளைவிடவும்
சில சமயங்களில்
அற்புதமானவை பின்னிகழ்வுகள்
சங்கீதத்தின் சுழிப்பைவிட
அற்புதம்
மெளனத்தில் அதிரும் நாத மிச்சம்
துயரம், தீராத வேட்கை, துயரம் தரும் கேவல், கவிஞர்களின் despair என சகலமும் இவர் கவிதைகளில் கைகூடுகிறது.
இப்புத்தகத்தைப் பற்றி தொடர்ந்து படித்து முடித்தபின் மேலும் எழுதலாமென்ற எண்ணம். பார்க்கலாம்.
இந்த வாரம் நான் படித்த கவிதைகளில் உயிரோடை லாவண்யாவின் `நாம் பறக்கும் போது’ மற்றும் யாத்ராவின் ’இருப்பு’ பரிமளிக்கிறது. தொடர்ந்து இவர்கள் எழுதும் கவிதையை படித்து , அற்புதமான பல கவிதை கணங்களுக்குள் சில நொடிகள் நுழைந்து பார்த்திருக்கிறேன். கவிதை எழுத விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டியவை.
Recent Comments