ஷூமன்னின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. குறுக்கு நெடுக்காக விழுந்து கிடக்கும் மர உத்திரம் போல மனம் முழுவதும் ஒருமுனைப்பில்லாத குறிக்கீடுகள். தொழுவத்தில் கதகதப்புக்காகக் காத்திருக்கும் ஆடு போல ஏதோ ஒன்றின் வருகைக்காக காத்திருந்தார். இதற்கு முன் எதுவுமே நினைவில்லாதது போல மனம் அரற்றியபடி இருந்தது. மறுநாள் நினைத்துப் பார்க்கும்போது கடந்து போன இந்த இரவை மறப்பது கடினம். மளுக்கென சாயும் வெட்டப்பட்ட மரம் போல திடீரென ஒரு முறிவு. ஒரே ஒரு ஓசை. அதன் அங்க லாவண்யங்களை மனதுக்குள் ஒட்டிப் பார்த்தபடி இன்றிரவு கழிந்துவிடும் போல ஷூமன்னுக்குத் தோன்றியது.
கசிந்துகொண்டிருந்த சிறு ஒளிக்கீற்றில் பற்பல நிற தூசிகள் மிதந்தன. தங்களது இருப்பின் மூலாதாரமே இந்த வெளிச்சக்கீற்றுகள் தான் என உணர்ந்ததால் பதற்றத்துடன் மினுங்கின. எத்தனை நேரம் இதையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பது என ஷூமன் யோசித்தார். கலைமனம் கூட செயலில் தான் வெளிப்படும் என்றாலும் ஒவ்வொரு கவிதை வரிக்கும் சேர்க்கும் இசை தன்னை பாதிப்பது போல கேட்பவரையும் அதே விதங்களில் பாதிக்குமா என ஷூமன் சில நாட்களாக யோசித்தார். அதே குழப்பங்கள். அதற்கிணையான சங்கடங்கள். புரியாத பாடல் வரிகளை ரசிக்க இயலா ரசிகர்கள் போல, இசையை ரசிக்க முடியாத தளத்தில் தனக்கு என்ன மதிப்பு? தனது அனுபவத்தின் தீவிரத்தை, கடுமையை உணரத் தலைப்பட்ட ரசிகருக்கு இந்த இசை போய்ச் சேரும் என்பது நிச்சயமல்ல. அப்போது எதுதான் நிச்சயம்? தான் அழியப்போவது நிச்சயம். மொழியும் இசையையும் என்னை வெளிப்படுத்தப் போதவில்லை என்பது நிச்சயம். அரைகுறையாக வெந்திருக்கும் சாப்பாடு போல.
தனது நாட்குறிப்பைத் திறந்து எழுதத்தொடங்கினார்.
நான் கண்ட கனவு:-1
அந்த உருவம் நெருங்க நெருங்க எனது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. எங்கே என்னை வந்து பிடித்துவிடுமோ என வேகமாக ஓடுகிறேன். வளைந்து நெளிந்து வட்டச்சுழல் பாதையில் மிக வேகமாக ஓடிக்களைத்தபின் சுற்றிப்பார்த்தால் பெரிய சதுப்பு வெளியாக இருக்கிறது. நான் ஓடி வந்த பாதை முழுவதும் கருப்பு பூ தூவி நான் ஒடி வந்த தடத்தை அறிவிக்கிறது. கூர்மையான நாசியும் நீண்ட கேசமும் கொண்ட சுருக்கங்களே உருவமாகிய கிழவி கருப்பு பூக்களை சேகரித்தபடி என்னை நெருங்குகிறாள். நான் சென்ற பாதை வழியாக கதறியபடி பயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறேன். சுற்றிலும் இருட்டு, எனது நிழலைக் கூட திருடிக்கொண்டது. என்னைச் சுற்றிலும் இருந்த கருப்பு நிறப் பூக்கள் நிறமிழந்தன. வாயோரம் மிகுந்த கொடூரங்களைத் தாங்கிய சிரிப்புடன் என்னைத் தொடர்ந்தாள் அந்தக் கிழவி. அவளது பாதங்கள் தொட்ட இடமெல்லாம் செந்தீ போன்ற தடித்த தோல் மண்ணோடு ஒட்டிக்கொண்டன. தேவாலயத்தில் இருக்கும் வண்ணக்குடுவைக் கண்ணாடிக்குப்பி ஒன்றை கையில் வைத்திருந்தாள். நெருங்கி வரும்போதெல்லாம், ‘ஷூமன், உனது விரல்கள் வேண்டும். பியானோ இசைக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம்..என்னைத் தெரியவில்லையா?’ எனக் கதறுகிறாள். அவளை எங்கோ பார்தது போலிருந்தாலும், மனம் எதையும் ஒத்துக்கொள்ளாமல் ஓடப் பணித்தது. புனித செயிண்ட் பீட்டர் ஆலயத்தின் திருகலான தூண்களுக்குப் பின்னால் மறைந்துகொள்கிறேன். அவள் அருகே வந்தாலும் பீட்டரைக் காட்டிக்கொடுக்கக்கூடாது என மனம் கட்டளையிடுகிறது. ‘உனக்கு ஒரு தேவ தூதனைக் கொண்டாடும் இசையை எழுதிக்கொடுக்கிறேன்..அந்தக் கிழவியிடமிருந்து என்னைக் காப்பாற்று’ எனக் மன்றாடுகிறேன். கடவுளின் குழந்தையை மறுக்கும் வல்லமை பீட்டருக்கு இன்னும் வரவில்லை. ‘எழுதித் தா. அதில் உலகியல் கொடூரங்களுக்கென ஒரு இடம் கொடு, என்னை அதிலிருந்து மீட்டுக்கொள்கிறேன்’, எனப் பீட்டர் கட்டளையிட்டபடி கிழவியிடமிருந்து என்னைக் காத்தார். ‘ஷூமன், உனது எமிலியை மறந்துவிட்டாயா..மறந்துவிட்டாயா’, பேரமைதியை மீறி ஆலயத்தின் உயர்ந்த கோபுரங்களில் எதிரொலித்து ஆல்டரில் காதை பிளக்கும் ஓசையாக அது கேட்டது.
அதில் உலகியல் கொடூரங்களுக்கென ஒரு இடம் கொடு, என்னை அதிலிருந்து மீட்டுக்கொள்கிறேன்’, எனப் பீட்டர் கட்டளையிட்டபடி கிழவியிடமிருந்து என்னைக் காத்தார். ‘ஷூமன், உனது எமிலியை மறந்துவிட்டாயா..மறந்துவிட்டாயா’, பேரமைதியை மீறி ஆலயத்தின் உயர்ந்த கோபுரங்களில் எதிரொலித்து ஆல்டரில் காதை பிளக்கும் ஓசையாகக் கேட்டது.
கொடிய சத்தம் காதில் விழாததுபோல ஒருத்தி தேவாலய இசைத்தூண்களுக்கு அருகில் ஆர்கன் இசைத்துக்கொண்டிருந்தாள். அறுபத்து நான்கு கம்பித் துளைகளாலான தூண்கள். இத்தனை சத்தத்துக்கு இடையே இனிமையான ஆர்கன் இசை ஒலித்துக்கொண்டிருந்தது. நான் அருகில் வருவதைக் கண்டும் பொருட்படுத்தாது அவள் வாசித்துக்கொண்டிருந்தாள். பூனை நடை போட்டு அவளருகே சென்றேன். எனது சிம்பொனி இசைக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருந்தாள். எனது கிளாராவுக்கு இசைக்குறிப்புகள் தேவையில்லை தெரியுமா? இசையின் சகல பரிணாமங்களும் அவளது விரல்களில் தேக்கி வைத்திருக்கிறாள். ஆர்கன் விசையிலிருந்து கைஎடுக்காமல் என்னைத் திரும்பிப் பார்த்தாள். எனக்கு முதன்முதலில் பியானோ இசையை அறிமுகப்படுத்திய எனது அம்மா. 'அம்மா! பார்வையாளர் மேஜை மேல் உட்கார்ந்திருக்கும் எமிலியைப் பார். உயிரோடு திரும்ப வந்துவிட்டாள். அவளைத் தேடிப்போன அப்பாவைத் தான் காணவில்லை. எமிலி, அருகே வா. எத்தனை வருடங்களுக்குப் பிறகு உன்னைப் பார்க்கிறேன். கிழவி போன்ற தோல் இருந்தாலும் உனது கண்களைக் கண்டுபிடித்துவிட்டேன்.'
கிழ உருவில் அவள் தள்ளாடி நடந்தபடி ஆல்டர் அருகே வந்தாள். 'அம்மாவுக்காக இல்லை ஷூமன். உனக்காகவே மீண்டு வந்தேன். உனது காதல் கதைகள் மிச்சம் இருக்கின்றனவா?' எனக் கேட்டபடி எனது கையை இழுத்துப் பிடித்தாள். ஒரே கணம் எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டன. கையை வெடுக்கென இழுத்துக்கொண்டேன். சிறுவயது நினைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமான காட்சி போல என் முன்னே ஓடின. அவளது இதழ்விரிவு கூடிக்கொண்டே போனது. 'இங்கே பார் ஷூமன், எனது இரு துருவங்களும் இணைந்துவிட்டன..' அவள் காட்டிய இடத்தில் எனது கிளாராவின் பச்சை நரம்பு துடிப்புடன் துடித்துக்கொண்டிருந்தன. மனதுக்கு நெருக்கமான இசையை வாசிப்பது போன்ற ஒரு உத்வேகம் அந்தக் கையில் தெரிந்தன.
நினைவுகள் தான் நானோ என உரைத்தது. ஒவ்வொரு நினைவுகளும் எனது சமகாலத்தை மறைக்கும் திரை. ஞாபகங்கள் அழிக்க முடியாமல் உடம்போடு ஒட்டிக்கொண்டன. இசையிலும் ஞாபகங்கள் உண்டு. இசை கேட்கும் போது ஞாபகம் இல்லாமல் தொடர்ச்சியாக இசையை கேட்க முடியாது. சிறு அசைவைப் புரிந்துகொள்ள அதன் மாற்றங்களையும் தொடர்புகளையும் நினைவு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. மாற்றத்தை உணராமல் இசையை ரசிக்க முடியாது. அந்த ஞாபகமே இசை. இசையே ஞாபகங்களின் கூட்டுத்தொகை தான். உணர்வு பரிமாற்றத்துக்கும், நினைவு அறுபடாமல் இருப்பதற்கும் இசையின் ஒவ்வொரு ஸ்ருதியையும் நினைவு வைத்திருக்கவேண்டியுள்ளது. ஞாபகங்களை ஒழித்தால் தான் எனது இசையே தொடரும் எனும்போது இது சிரிப்பை வரவழைத்தது. இசையே வேதனை. கில்லட்டின் கத்தி போல சதா என் நினைவுகளில் தங்கி எனது ஆன்மாவைத் துளைக்கப்பார்க்கும் இசை ஒரு கொலைக்கருவி தான். சிறு சிறு கொலைகளை செய்யத் தூண்டுகிறது. 'கிளாராவை விட்டு விலகிவிடு. பாவம் அவள். 'எமிலியின் கதறல்கள் தேவாலயம் முழுவதும் எதிரொலித்தது.
(தொடரும்)
Recent Comments