காலக்கண்ணாடி - அசோகமித்திரன் (இது முழுத் தொகுதியல்ல)
அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை ஒரு நல்ல புனைக்கதைக்கு எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல என ஆரம்பிக்கும் இந்த கட்டுரை தொகுப்பு பல தளங்களில் முக்கியமானது. முதலில், ஒரு எழுத்தாளராய் அறியப்பட்டு புனைக்கதை, கட்டுரை, நாவல், இதழ்த்துறை என பல தளங்களில் விரிந்தவரின் அக்கறைகளை சில புத்தகங்களில் தொகுக்க முடியாது. மேலும், இதழாளராக கணையாழியின் அரை டிராயர் காலத்திலிருந்து மிக ஆழமான படைப்பு வெளியாய் விஸ்வரூபம் எடுக்கும் காலகட்டம்வரை இருந்தவர்க்கு இது சாதாரணம். இதழாளர் அனுபவத்தையே பல நூறு பக்கங்களுக்குத் தொகுக்க முடியும். அதன் மேலோட்டமான பார்வையை இந்த புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நாட்டில் நடப்பவற்றிலெல்லாம் அதிக அக்கறை காட்டும் அதிகப்பிரசங்கித்தனம் இல்லாத நேரடியான விவரிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும். அசோகமித்திரனின் எழுத்து நம்மை வீறுகொண்டு எழச் செய்யாது. பாசாங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு பாதசாரியின் இயல்புடன் நடந்ததை வர்ணிக்கும் லாகவம். இவர் என் குரு, அவர் என் ஆத்ம நண்பன் என உணர்சிவசப்பட்டு எழுதி, பின்னர் பிரிந்து போன சோகத்தை தான் எழுதும் எல்லாவற்றிலும் பீய்ச்சி அடிக்கும் அரசியல் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக இவர் பவனி வந்த உலகத்தைப் பற்றிய அலட்டிக்கொள்ளாத புத்தகம். எல்லா கட்டுரைகளும் கணையாழியில் வெளியானவை. சுஜாதாவைத் தொடர்ந்தவர்களுக்கு கணையாழி கடைசி பக்கத்திலிருந்துதான் தொடங்கும். கோட்பாடாளர்கள் எழுதிய கட்டுரையோ என எண்ணவைக்கும் ஜிகிர்தண்டா வேலைகள் இந்த கட்டுரைகளில் கிடையாது. ஒரு முறை சுஜாதா எழுதிய பத்தியில், இந்திரா பார்த்தசாரதியின் `ஏசுவின் தோழர்கள்` புத்தக விமர்சனத்தைப் பற்றி எழுதியிருந்தார். அந்த விமர்சனத்தில் `ஏசுவின் தோழர்களை` கார்ல் மார்ஸ் எழுதியது போல் ஆராய்ந்திருப்பதாய் கேலி செய்திருப்பார். அசோகமித்ரனின் இந்த கட்டுரைகள் எழுதியது அந்த காலகட்டம் தான். தீவிரமான இடது சாரிகள் இயங்கிய எழுபதுகள்/எண்பதுகள். அது மிகவும் சிக்கலான மொழியில் வெளியான கட்டுரைகளுக்கும், ஜனரஞ்சக எழுத்துக்களுக்கும் பெரிய பிரிவிணையை ஏற்படுத்திய காலகட்டம்.
இலக்கியம் சார்ந்த செய்திகள், எழுத்தாளர் பற்றிய தகவல்கள், புத்தக விமர்சனம் மற்றும் சினிமா/நாடகம் பற்றிய செய்திகளை பல கட்டுரை வடிவில் எழுதியுள்ளார். மிக சுவாரஸ்யமான எழுத்துக்குச் சொந்தக்காரர் எனக்கூறுவதைக்காட்டிலும் நடுநிலைமையாய் சொற்சிக்கனத்துடன் பரிபூரணமாய் எழுதுபவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. புத்தக விமர்சனமா - கடைசி முற்றுப் புள்ளிவரை அலசிப் பார்ப்பதில் ஆர்வமில்லாதவராயிருக்கிறார்; ஆனாலும் சொல்லும் வார்த்தைகள் தமிழ் எழுத்துக்கும், இலக்கிய முன்னகர்வுக்கும் மிக நேர்மையான விமர்சனமாகிறது. ‘இன்னொரு மாதம் முடிந்தது’ என பல கட்டுரைகள் உள்ளன. அனைத்திலும் கணையாழியின் இன்றியமையாத மாற்றங்களை, தமிழ் இலக்கிய மாற்றங்களுடன் தெளிவாக விவரித்துக்கொண்டே போகிறார். இசை வித்வான்கள், எழுத்தாளர்கள், வானொலி/திரைப்படம் நட்சத்திரங்கள் பற்றியும் தொட்டுச் செல்லும் பத்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒரு விதத்தில் சுஜாதா தொட்டுச் செல்லாத விஷயங்களே இல்லையெனக் கூறுவார்கள். அசோகமித்திரனின் கட்டுரைகளும், பத்தி எழுத்துகளும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது. சுஜாதாவிலிருக்கும் ஹாஸ்யத்தில் தெரியும் புத்திசாலித்தனம், அசோகமித்திரனின் நம்முடன் commiserate பண்ணும் ஹாஸ்யத்தின் ஒரு கை நம் தோளிலிருக்கும். மிகத் தெளிவான சிந்தனை, அதிக பொறி வைக்காத விமர்சனங்கள், எனோ தானோ என எழுதாமல் அதே சமயம் எழுத்தித்தான் ஆகவேண்டும் என்ற முகாந்திரமும், உந்துதலும் இல்லாமலிருக்கும் கட்டுரைகள். ஏதோ ஒரு நாட்டின் சிந்தனாவாதி இறந்தவுடன், வரிந்து கட்டிக்கொண்டு அடுத்த நாளே பல பக்கங்களில் ’அவருடன் இட்லி சாப்பிடும்போது, உங்களைப் போல யாருமே தமிழ்நாட்டில் இல்லயே, ஏன்’ என என்னைக் கேட்டார் - என்ற விதத்தில் வரும் கட்டுரைகள் ஒரு விதத்தில் வியாபார முதலாளிகளை சமாதானம் செய்ய மட்டுமே உபயோகப்படும். இதைப் போன்ற உபத்திரவங்களில் சிக்காமல் தெரிந்த விஷயத்தை எளிமையாக விவரித்ததே இந்த கட்டுரைத் தொகுப்பின் வெற்றியாகும்.
அசோகமித்திரனின் புனைவுலகில் சாதாரண மனிதர்களுள் இழையோடும் உணர்வை கச்சிதமாக கையாண்டிருப்பார். அபுனைவுலகில் அந்த சாதாரண மனிதராகவே மாறி உலகத்தைப் பார்க்கிறார்;விவரிக்கிறார்;நகர்ந்து செல்கிறார். எந்த விஷயத்தோடும் ஒட்டி உறவாடுவது கிடையாது. நகர்ந்து கொண்டேயிருக்கும் தண்ணீரின் மேலிருக்கும் இலை போல. It gathers no mass but moves us all.
*
இக்கட்டுரைத் தொகுப்பில் இளையராஜாவின் எப்படிப் பெயரிட (How to Name It) கேஸட் வெளியீடு பற்றி எழுதுயிருக்கிறார். (ஏற்கனவே வேறொரு பதிவில் இருநது)
`
“இந்த ஊரில் உள்ள சங்கீத வித்வான்கள் அனைவருக்கும்தான் நான் அழைப்பு அனுப்பியிருந்தேன்” என்று இளையராஜா கூறினார். ஆனால், அவருடைய புதிய படைப்பான `எப்படிப் பெயரிட` இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் அநேகமாக எல்லாருமே சினிமாத் துறையினர்தான். டி.வி.கோபால கிருஷ்ணன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கோபால கிருஷ்ணனையே பாதி சினிமாக்காரர் என்று நினைப்பவர்களுண்டு.
சங்கீதத் துறையினர் வரவில்லை என்றாலும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கி, இளையரஜாவின் மேற்கு-கிழக்கு இசை இணைப்பு முயற்சிகள் ரசமானவை; பல ஆண்டுகள் முன்பு அவரே எண்ணியிருந்த முயற்சிகள் என்றார். பழுத்த அனுபவம் மிகுந்த பியானோ நிபுணரான ஹாண்டல், இளையராஜாவிடம் அழைத்துச் சென்ற மேல்நாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜாவின் கிரகிப்பு ஆற்றலையும், திரைப்படக் காட்சிக்கு ஏற்றபடி நொடிப்பொழுதில் இசை அமைத்து அதை வாத்திய கோஷ்டிக்குத் தெரிவித்து ஒலிப்பதிவு செய்யும் திறமையையும் கண்டு வியந்திருக்கிறார்கள் என்றார். `எப்படிப் பெயரிட` இசை மாஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்திய விழாவுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும் என்றார். நாற்பதாண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பெருமதிப்புக்குரியவராக இருந்து வரும் நெளஷாத் அவர்கள் இளையராஜாவிடம் கற்க நிறைய இருக்கிறது என்றார். இவை எல்லாம் சாதாரணமாகக் கிடைக்ககூடிய பாராட்டுகள் அல்ல.
வெறும் டியூன்கள் என்று பிரித்துப் பார்த்தோமானால் `எப்படிப் பெயரிட` இளையராஜாவின் பல முக்கிய திரைப்படங்களின் சிறப்பான இடங்களை நினைவுபடுத்தும். ஆனால் இந்தப் படைப்பின் சிறப்பம்சம் வாத்திய கோஷ்டி நிர்வகிப்பு; திரு.வி.எஸ். நரசிம்மனின் பிரதான வயலின்; சுவரூபத்தைக் கலைக்காதபடி இந்திய ராகங்களுக்கு மேலைய இசை வடிவம் தருதல். இத்திசையில் முயற்சிகள் இதுவரை செய்யப்படவே இல்லை என்று கூற முடியாது. ஐந்தாறு மாதங்கள் முன்பு ஒரு போர்ச்க்கீசிய இசைக்குழுவுடன் சென்னை வந்த வயலின் நிபுணர் எல்.சுப்பிரமணியன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய முயற்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்.
`சங்கீதக் கனவுகள்` என்ற நூலின் ஒவ்வொரு எழுத்தும் இளையராஜாவால் எழுதப்படாமல் இருக்கலாம். இளையராஜா எழுத்தாளரல்ல. ஆனால் நூலில் கூறப்பட்டிருக்கும் அனுபவங்கள், சிந்தனைகள், உணர்வுகள் அவருடையதே என்பதைச் சந்தேகிக்க இடமில்லை. உண்மையில் இம்மாதிரி நூல்களில் இவைதான் முக்கியம். ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இசை மேதைகளின் இல்லங்கள் ஷேத்திரங்களாகப் பராமரிக்கப்பட்டு வரும் விசுவாசத்தைக் கண்டு மனமுருகி, `நமது நாட்டில் தியாகப்பிரும்மம் வாழ்ந்த வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் சொல்வதற்கே வெட்கமாயிருக்கிறது…என்னைக் கேட்டால் தியாகையருக்குக் கோயிலையே கட்டிவிடுவேன்…நான் கேட்டால் `நீ சினிமாக்காரன்` என்பார்கள்.` என்று ஓரிடத்தில் இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி அந்த நூலில் பல பொறிகள். இவ்வளவு உலக நடப்புப் பரிச்சயம் கொண்ட இளையராஜாவுக்கு அவருடைய விழாவுக்கு சங்கீதப் பிரமுகர்கள் வராதது வியப்பைத் தந்திருக்காது.
`
Recent Comments