இந்தவருடம் நான் படிக்க ஆவலுடன் எதிர்பார்க்கும் நூல் 'அன்புள்ள ஜெயமோகன்'. கடலூர் சீனு எனும் வாசகர், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. கடந்த சில மாதங்களாக அவரது கடிதங்கள் ஜெயமோகன் தளத்தில் தொடர்ந்து வெளியாயின. அவற்றைப் படித்ததும் இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.
ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அனைவரும் அவரது எண்ணப் போக்கை தொடர்பவர்கள் எனச் சொல்லிவிடமுடியாது. குறிப்பிட்ட அலைவரிசையில் துடிக்கும் இசைக்கவருக்கருகே கொண்டு செல்லப்படும் மற்றொரு இசைக்கவர் போல, பற்றிக்கொள்ளக்கூடிய மனவிரிவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். எழுத்தாளரை மட்டுமல்லாது, அவர் தொடரும் கேள்விகளையெல்லாம் தானும் தாங்கியபடி அவர் கூடவே எழுத்து மூலம் இயைந்து பயணிப்பவர்கள் கிட்டத்தட்ட எழுத்தாளருக்கு இணையானவர்களாக இருப்பர். அது தவிர, கூர்மையான பார்வை உள்ளவர்கள், விசாலமான வாசிப்பு கூடியவர்களால் எழுத்தாளர்கள் விடும் இடைவெளிகளை பல தளங்களுக்கு எடுத்துச் செல்லமுடியும். இவற்றுக்கு கடலூர் சீனுவின் கடிதங்கள் மிகச் சரியான உதாரணம்.
கடலூர் சீனுவின் கடிதங்களைப் படிக்கும்போது அப்படிப்பட்ட ஒரு வாசகர் இவர் எனத் தோன்றுகிறது. இவர் எழுத்தாளர் கோணங்கியின் நண்பர் என அறிமுக கடிதத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். எழுத்தாளர்கள் தொட்டுச் செல்லும் புள்ளிகளை தன்னுடைய அனுபவங்கள் மூலம் இன்னும் ஆழமாக இட்டு நிரப்பும் ஒருவரது அனுபவக் குறிப்புகள் என இவரது கடிதங்களைக் கூறலாம். எழுத்தாளரின் கதைகள், அனுபவம் மூலம் கிளைந்த மொழியைக் கொண்டு தன்னுள் நிறைந்த படிம நினைவுகளுக்கு உயிர் கொடுக்கிறார் வாசகர். அதன் மூலம் புது நிகழ்வுகளைப் பார்க்கிறார். புது வண்ணங்கள் சேர்த்து எண்ணங்களை விரிவாக்குகிறார். ரோலர் கோஸ்டர் போல நீர் வழி,வான் வழி நேராகவும் தலைகீழாகவும் பல ஊடகங்கள் வழி, மனிதர்கள் வழி, நிகழ்வுகள் வழி, ஒரே மாதிரியான எண்ணங்கள் மாறி மாறி வலம் வந்து விரிவடைகின்றன. இதனால் மிக செழிப்பான மற்றும் உயிர்ப்பான மன ஓட்டமாக இக்கடிதங்கள் இருக்கின்றன.
அவரது தாத்தாவுக்கும் ரஜி எனும் குரங்குக்கும் உள்ள உறவு, காணாமல் போன குழந்தை மஞ்சுளா (இதே கருவில் பாவண்ணன் ஒரு அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார்) , 'அடிமை' வாழ்க்கை வாழும் கர்ப்பிணிப் பெண், வீட்டருகே நடந்த கலவரத்தில் சிதைந்த பெண், சாமியார்களுடனான அனுபவம் எனப் பல நிலைகளில் உள்ள மனிதர்களைப் பற்றிய சித்திரம் இவரது கடிதங்களில் கிடைக்கின்றன.மனிதமனங்களை நெருக்கமாக அணுகி எழுதியுள்ளார்.அவர்களது அகத்தை எழுத முற்பட்டிருக்கிறார்.
கடலூர் சீனுவின் சில பார்வைகள் மிக ஆச்சர்யமாக இருந்தன. மிக நெகிழ்ச்சியான மனநிலை மட்டுமல்லாது, தொய்வு, துயரம், விரக்தி, எரிச்சல், சந்தோசம் என எல்லா உணர்வுகளிலும் அவர் புத்தகங்களையே நாடியிருக்கிறார். அதற்காக அறைக்குள் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பவராக மட்டும் அவர் இருப்பதில்லை. ஒவ்வொரு கடிதத்திலும் மிக துல்லியமாக தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறார். எழுதுவதற்கு முன் நிச்சயமாக அவர் அந்த அனுபவங்களில் வாழ்கிறார். சுற்றி நடப்பவற்றை அந்தந்த நிகழ்வுக்கேற்ப மிகவும் வருத்தத்துடனோ நெகிழ்வுடனோ பார்க்கிறார். எங்காவது சொல்லவேண்டுமே எனும் தவிப்பு அவரது மொழியில் தெரிகிறது.
'பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும்' - இந்தக் கடிதத்திலிருந்து கடலூர் சீனுவின் கடிதங்களைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன். இக்கடிதத்தில் 'காடு' நாவல் பற்றி அவரது அவதானிப்புகள் ஆச்சர்யப்படுத்தும். நாவலை ஆழப் படித்தவரால் மட்டுமே இப்படியெல்லாம் எழுதமுடியும் என நினைக்கிறேன். அதுவும் அவர் எழுதும் பல வரிகள் ஜெயமோகனின் பாதிப்பு நிறைந்தவை. பெரும் வாசகராக பலதரப்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைத் தொடர்ந்து படித்ததால் அவர்களது மொழியும், எண்ண ஓட்டமும் இவருள் மெருகேறி உள்ளதோ எனத் தோன்றுகிறது. அந்தளவு செறிவான மொழியும் நடையும் அமைந்துள்ளது.
'காடென்பது மிருகங்களுடன் தெய்வங்கள் வாழும் இடம். நாடென்பது மிருகங்கள் போல மனிதர்கள் வாழும் இடம். காடழிந்து நாடாவதே வளர்சிதை மாற்றத்தின் இயங்கியல் விதி.'
'நாம் பிறப்பதற்கு முன் துவங்கி இறந்த பின்னும் தொடரும் ஒன்று. பிரும்மாண்டமான தேன் கூடு. அதன் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு தேனியின் மரபணுவில் பொதிந்துள்ளது. தேன் கூடு போல காலமும் வாழ்வும், அதன் ஒரு தேனி நான். இதைப் பிரதிபலித்துப்பார்த்துக்கொண்ட புத்தகங்களில் ஒன்று காடு...
...மரத்தின் வேர் எதைப்பற்றி நிற்கிறது? இந்த மண்ணை. அதன் வழி இந்த முழு பூமியை. அதன் வழி இந்த மொத்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தை. நல்ல இலக்கியமும் மரத்தின் வேர்ப்பற்று போல ஒரு குட்டி “பிரபஞ்ச தரிசனம்” தான்'
'பொட்டப் புள்ளயப் பெத்து வளத்த ஒருத்தனுக்கு அவனச் சுத்திலும் எத்தன பொட்டப் புள்ளைக இருந்தாலும் பத்தாது. எல்லாம் ஒரு பேராசதான்...சாமி தெருவெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது தகப்பன்களாக'
ஜெயமோகனின் எழுத்துகள் மட்டுமல்லாது அவரது கடிதங்களில் பல எழுத்தாளர்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் வந்தபடி உள்ளன. அவற்றைப் பற்றிய அவரது அவதானிப்புகள் மூலம் எந்தளவு ஆழமாக அனுபவித்துப் படித்துள்ளார் எனத் தெரிகிறது. 'அறிதலுக்கு வெளியே' எனும் கடிதத்தில் தலாய் லாமா, சலீம் அலி, அஞ்சலை எனப் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுகிறார்.
முழு முற்றாக அனைத்தையும் அறிந்துகொள்ளும் பெரும்தாகம் அவரது கடிதங்களில் தெரிகிறது. வெறும் பெயர் உதிர்ப்பாக மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் என படித்தவற்றிலிருந்து அனுபவங்களுக்கும், பாதித்த நிகழ்வுகளிலிருந்து படித்தவற்றுக்கும் அவரது மனம் சதா ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. இதிலிருந்து அது, அதிலிருந்து இது என நிரப்பி நிரப்பி ஆழப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்.
ஞானமும் மெய்ஞானமும், அடிமை மானுடம் எனப் பல தலைப்புகளில் கடிதங்கள் எழுதியிருக்கிறார். மிக உயிர்ப்பான மொழியில் நெகிழ்வான தருணங்களின் தொகுப்பாக இவை அமைந்துள்ளன. புத்தகம் இந்த வருடம் வெளிவந்தால் கண்டிப்பாக வாங்க வேண்டும் எனக் குறித்துவைத்துள்ளேன்.
Recent Comments