சமீபத்தில் என் நண்பனுக்கு பிடித்த பைத்தியம் - புத்தக அலமாரிக்கருகே போகும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புத்தகத்தின் முதல்பக்கத்தைப் படித்து மூடி விடுவானாம். அந்த புத்தகத்தை ஏன் தனக்கு பிடித்தது, அது ஏன் வெற்றி/தோல்வி அடைந்தது என நாள் முழுதும் அலசிக் கொண்டிருப்பானாம்.
இந்த வேலையெல்லாம் நமக்கெதுக்கு என சில நாட்கள் சும்மா இருந்தேன். ஆனால் அந்த பூதம் நேற்று என்னை பிடித்துவிட்டது.
நேற்று `ஒரு புளியமரத்தின் கதை` புத்தகத்தை அடுக்கி வைக்கும்போது, சரி என் நண்பனின் பிளானை செய்து பார்க்கலாமே என முதல் பத்தியை படித்தேன். நாள் முழுதும் இந்த ஆரம்ப வரிகளே ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
`முச்சந்தியில் நின்றுகொண்டிருந்தது புளியமரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா.இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம்வரை கூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச் சுவடுபட்ட இடமெல்லாம் பாதைதானே?`
இந்த முதல் பத்தியிலேயே புத்தகத்தின் மொத்த உணர்வும் ஆரம்பமாகிறது. Tone எனப்படும் மீமொழி மீதான ஆதிக்கம் ரஸ்தா பற்றி விவரிக்கும்போதே தொடங்கிவிடுகிறது. ரஸ்தா எங்கே போனால் என்ன? அதன் மூலம் அந்த புளியமரத்திற்கு ஒரு முகவரி கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த கதையைச் சொல்லும் குரலுக்கான அதிகாரமும், தத்துவமும் நிறுவப்படுகிறது.
‘மனிதனின் காலடிச் சுவடுபட்ட இடமெல்லாம் பாதைதானே’ - ஜே.கேயின் தத்துவத்திலிருந்து உருவப்பட்டிருந்தாலும், இந்த தத்துவம் இங்கே தேவைப்படுகிறது. ஆசிரியர் குரலாக ஒலித்து - புளியமரத்தை ஒரு முக்கிய கதாபாத்திரமாக நிறுவுகிறது. நாவல் முழுவதும் இதைப் போன்ற தத்துவங்களால் நிரப்பப்பட்டுள்ளது. முதல் பத்தியில் பிம்பமாய் ரஸ்தா குமரியில் முழுகுவதே வருகிறது. இந்த கதையின் பல செய்திகளை முதல் பத்தியிலிலேயே சொல்லிவிடுகிறார். புளியமரத்தை சுற்றி பிண்ணப்படும் கதையானாலும், அது அந்த நிலத்தின் மக்களைப் பற்றிய செய்தியே. இதனாலேயே இந்த பத்தியின் கடைசி வரி முக்கியமாகிறது.
பானை சோறு, ஒரு சோறு பதம் என்ற பழைய சொல் பிரயோகத்தை நிரூபிக்கும்விதமாய் மாஸ்டர் எழுத்தாளர்களுக்கும், மசாலாக்களுக்கும் சில வரிகளிலேயே வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது.
Recent Comments