பகுதி ஒன்று - இப்பதிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் பிரசுரித்திருக்கிறேன்.
*
என் படிக்கும் அறையின் மேஜைக்கு அருகே நின்றுகொண்டிருந்தேன். பின்னால் ஜன்னலின்வழி காற்று மேஜையிலிருந்த நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தது.
படிப்பதற்காக என் அறைக்குள் வரவில்லை.அதற்கான வயதில்லை. நான் கேட்கும் சொற்களும் பார்க்கும் படங்களும் என் தேவையை பூர்த்திசெய்யாது.வேண்டியது ஓசை;சத்தம்.
இருள் மனதில் தாரை பாய்ச்சும் அந்த கர கர குரல்.
இந்த முறையேனும் உரையாடலை முழுவதும் கேட்டுமுடிக்க என்னுள் ஒரு வேண்டுதல்.ஸ்டீரியோ ரிவியூ-1963 வருட ஒலி தகடு.இந்த சம்பாஷனையை என்னால் முழுவதும் புரியவைக்க முடியாது.இந்த இயலாமைக்காக மன்னியுங்கள்.பல காலங்களாக என்னைக் குழப்பிய உரையாடல் பகுதி.
சில நிமிட இடைவேளிக்கு பிறகு -
"டெஸ்ட் ஆன்"
"மிஸ்டர் கராயன், இந்த இசை ஒருங்கிணைப்பாளர் பயிற்சியில் இன்றியமையாததாக நீங்கள் நினைப்பது என்ன?"
"சுருதி,லயம் இவையாவும் ஒரு ஆப்ரிக்க பழங்குடிகளின் பிறப்பியல்பாக நான் கருதுகிறேன்.அவர்களுக்கு இசை இயல்பான பழக்கம். ஆனால் ஒத்திசைவு புதியது. பயிற்சியால் மட்டுமே நம் வசம் சரணடையும்.ஒத்திசைவு தாளத்துடன் சேர்ந்து படிக்கவேண்டிய ஓர் இணை புத்தகம் போல.தாளம் ஓர் கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர வேண்டிய ஒன்று.ஏனென்றால் ஒவ்வொறு முறை வாசிக்கும் போதும்,ஒரு இசை கோப்பு பண்படுகிறது.இது என் அனுபவ உண்மை.ஒவ்வொரு வாத்தியத்திலும் தாளத்தை ஒருங்கிணைப்பது இந்த பயிறிசியின் ஆதாரம் மற்றும் முடிவு."
"நன்றி கராயன்.தங்கள் முன் வைக்கப்படும் மற்றொரு முக்கிய குற்றச்சாற்று பற்றி கேள்வி கேட்கலாமா? இசைக்கான அடிப்படைத் தன்மைமெருகேற்றுதல் என ஜாஸ்,ஸ்விங் போன்ற அமைப்புகளின் கூற்றிற்கு எதிர்ப்பாக, பாரம்பரிய இசையின் இயல்புகளை மட்டுமே இசைத்து வருகிறீர்கள். நீங்கள் ஷோன்பெர்க் போல இசையில் ஆராய்ச்சிகளை அனுமதிப்பதில்லை. ஏன்? இசை மேதைகள் மோசார்ட்,பீத்தாவேன் அமைத்த வடிவங்களை அதன் இயல்புடனே கையாள்வது மக்களைச் உடனடியாக சென்றடையும் யுத்தியா? அல்லது அந்த மேதைகளுக்கு தரும் கவுரவமா?"
"அடுத்த தலைமுறையினருக்கு புரியும் வகையில் ஒருங்கிணைப்பு செய்வது என் பொறுப்பு. அதே சமயம் மக்களின் ரசனையில் தேக்கத்தை உருவாக்கும் எண்ணமும் இல்லை.ஒவ்வொறு இசையமைப்பாளரிடமும் ஒரு ஒழுங்கியல் உள்ளது. அதை மீள்பார்வை பார்க்கும்போது தரம்,இசையின் அரசியல் உணர்வுகள் போன்றவைத் தடம் மாராமல் இருப்பது அவசியம். நான் செய்யும் வேலை ஒருவித தொகுக்கும் பணி.ஆய்வுகூடத்தின் நுட்பதன்மையை நான் இசையமைக்கும் நாடகம் மற்றும் ஒத்திசைவுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.என் தொகுப்புகளின் விற்பனையே மக்கள் கருத்தின் எதிரொலியாக நினைக்கின்றேன்."
"கராயனின் இசையைக் கேட்கும்போதெல்லாம் ஜெர்மன் நாஜிக்களின் SS அணிவகுப்பின் சத்தத்தையும்,அதன் நுண்ணதிர்வுகளில் கராயனின் ஆதிக்க புழுக்கத்தில் விளைந்த சில்லரைகளின் சத்தம் மட்டுமே கேட்பதாக அனந்தன் - அனந்த தேசிகன் கூறியதைப்பற்றி?"
"அந்த சத்தங்களின் நடுவே புல் முளைத்த வீடுகளில்,மெழுகுவத்தி ஏற்றி வைத்து நடு இரவில் நான் படைத்த என் தனிப்பட்ட இசையை அனந்தன் கேட்டதில்லை. அவை ரத்தத்தின் வாசனையில் படைக்கப்பட்டவை அல்ல. நாஜி குழுவின் உறுப்பினராக என்னை என்றும் நினைத்ததில்லை.வெய்யிலில் கிடந்த நிழல் உங்களை காரணம் காட்டினால்,எங்கு ஓடினாலும் அதன் குரல் உங்களுக்குக் கேட்காமல் இருக்குமா? இதுதான் எனக்கு நடக்கிறது. அனந்தனுக்கு என்னால் விடைக் கூற இயலாது."
கடந்த இருபது வருடங்களாக இந்த இடத்தில் நிறுத்திவிடுவேன். இன்று அதை செய்யப்போவதில்லை. என் நிழல் இன்று காரணம் கேட்கிறது. அதற்காகவாவது இந்த உரையாடலைத் தொடர வேண்டும்.
"அரசியலை சற்று ஒதுக்கி இசைக் கூறுகளை பற்றி விவாதிப்போம். இன்று தாங்கள் ஒரு மகத்தான இசை ஆளுமை.வியன்னா,மற்றும் இங்கே அமெரிக்காவிலும் தங்களின் இசை பதிவுகளுக்கு பலத்த வரவேற்புள்ளது.இசை மேளாளர்கள்,தரகர்கள், ஆர்வலர்கள் நம்பிக்கைக்கு உட்பட இசையில் சமரசம் செய்துள்ளீர்களா?"
"கடந்த நூற்றாண்டுவரை இசை கோப்புகள் தனிப்பட்ட பணக்காரர்கள், சேகரிப்பாளர்கள்,அரசாங்க நிர்வாகிகள் போன்றோரின் கட்டுப்பட்டிற்குள் இருந்தன. அரசுடமையாக்கப்பட்ட பல மேதைகளின் கோப்புகளை பல ஆண்டுகளாக பயின்று வந்துள்ளேன்.அதன் தரங்களின் உண்மையில் நான் என்றுமே சமரசம் செய்ததில்லை.வரும் தலைமுறைக்கு என் நேர்மையின் சான்றாக இது அமையும்.நான் மதிக்கும் பல ஒருங்கிணைப்பாளர்கள் வழியில் வந்ததால் இசையின் உன்னதத்தில் சமரசம் செய்யாமல் அதன் அரசியலில் சமரசம் செய்துள்ளேன்."
"அனந்தன் போன்றவர்கள் புது முயற்சி செய்து ஷோன்பெர்க், அர்னால்ட் கோப்லாண்ட் வழியில் அடிப்படை நாதத்தை அதன் (tonal)பிறப்பிடமான வேரிலிருந்து பிரித்தது பாரம்பரிய இசையில் ஒரு கிளையாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதா? The Rite of Spring போன்ற ஒரு படைப்பை காலத்தால் அழியாத அமைப்பாக கருத முடியுமா?"
"காலத்தால் அழியாத இசை ஒரு மாயை. தற்போது நான் செய்வது ஒரு மறு அனுபவம்.பிராம்ஸ் போன்ற மேதைகளின் காலத்தில் விளைந்த சந்தங்கள் நம் ஒவ்வொறு காலத்தின் இயல்பிலும் மாறுதலுக்கு உட்படும். அவை ஏற்றுக்கொள்வது அந்தந்த காலத்தின் அளவுகோல்.பீத்தோவனின் 9வது ஒத்திசைவை கேட்கும்போதெல்லாம் இந்த உலகத்தின் நிச்சயமின்மை எனக்கு வெளிப்படுகிறது.இபோதுள்ள செல்லுலாய்ட் உலகத்தின் மையத்திலுள்ளது நம் கனவு மட்டுமே.வாழ்க்கை நம் கனவை கணிணியின் வேகத்தில் ஓரம்கட்டிவிடும். பீத்தோவன் இந்த நிச்சயமின்மையை இயற்றும்போது ஒரு கணமும் எண்ணியிருக்க இயலாது.கணம் தோறும் மாறும் வரம் நம் வாழ்க்கைகு மட்டுமல்ல இசைக்கும் பொருந்தும் என்றே எனக்குப் படுகிறது.ஆயிரத்திற்கும் மேலான இசைக்கோர்வைகளில் பங்கு கொண்டவன் என்ற முறையில் என்னால் உறுதியாக இசையின் மாயயை நிறுவமுடியாவிட்டாலும் உணர முடிகிறது."
"நாஜி மிருகமே!"
என்னை மன்னியுங்கள். இதற்கு மேல் என்னால் கேட்க முடியாது.சத்தத்தை நிறுத்த வேண்டும்.என் முன்னே பல ஆயிரக்கணக்கான இசைத் தகடுகள் குவிந்துள்ளன. கராயனின் குரலில் அவை பட்டுப்போக வாய்ப்புள்ளது. அதற்கான வலிமை அந்த குரலுக்கு உள்ளது.
ஆனால் வலியைத் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால் நான் சொல்ல வந்தது எல்லாம் நிசப்தத்திலோ சூன்னியத்திலோ குவியும் வாய்ப்புள்ளது. அந்த கர கர குரல் என்னை பயமுறுத்துகிறது.என் மண்டையிலுள்ள வார்த்தைகள் உருவாகுமுன்னே மறைகின்றது.நானும் என் வார்த்தைகளோடு விழுகின்றேன், பாறைகள் இடையே இருக்கும் முடிவில்லா பள்ளத்தில்...
Recent Comments