அழகு தமிழில் சுவாரஸ்யமான கதை படிக்க வேண்டுமா? புனைவு வேண்டாம் , அது உண்மைக் கதையாக இருந்தால் மட்டுமே படிப்பேன் என சொல்பவரா? உண்மையான மனிதரின் உயிரோட்டமான கதையாக மட்டும் இருந்தால் போதாது, நேர்மையான பதிவாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவரா? நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை எழுதிய 'என் கதை' (சந்தியா பதிப்பகம்) சுயசரிதை நூலில் இந்த அனைத்து அம்சங்கள் ஒருங்கே அமைந்திருக்கின்றன.
முன்னூறு பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தை வேகமாக சில மணிநேரங்களில் படித்துவிட முடியும். முடித்ததும் எட்டு புல்ஸ்கேப் பேப்பரில் நாமக்கல் கவிஞரைப் பற்றி குடுகுடுவென கட்டுரை எழுதிவிடக்கூடிய அளவுக்கு விஷய அடர்த்தி உள்ள நூல் தான் இது. அதே சமயத்தில் மிக சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது.
இதேல்லாம் தாண்டி கவிஞர் சொல்லாமல் உணர்த்தும் விஷயமும் உள்ளது. தமிழில் எளிமையாக சுவாரஸ்யமாக எழுதுவது எப்படி என சப்டைட்டில் இந்நூலுக்குத் தாராளமாக கொடுக்கலாம். அந்தளவுக்கு படிப்பவர்களை இம்சிக்காத எளிமையான உரைநடை எழுத வேண்டும் என்ற ஆசை நமக்கும் வந்துவிடுகிறது. அழகான தமிழில் பல நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் எழுதியிருக்கிறார்.
தன் வாழ்வில் நடந்த விஷயங்களை நேர்மையுடன் கவிஞர் முன்வைத்திருக்கிறார். அதனால் ஒளிவு மறைவில்லாத வாழ்க்கை குறிப்பு நூலாக இது அமைந்திருக்கிறது. நிறைகளை விட பல குறைகளையே பதிந்திருக்கிறார். புகழ் பெற்ற ஒரு தனி மனிதனின் கதையாகப் பார்க்கும்போது இது மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
கவிஞர் விவரிக்கும் பல நிகழ்வுகளில் அவரது மனைவி பற்றிய குறிப்பு மிக உணர்ச்சிகரமானது உயிரோட்டமானது. தந்தையின் கட்டாயத்தின் பெயரில் மனதுக்குப் பிடிக்காத பெண்ணை மணந்திருக்கிறார். அதனால், திருமணத்துக்குப் பின் மனைவி மேல் காரணமில்லாத காழ்ப்பு பல மாதங்கள் தொடர்ந்திருக்கிறது. மிகுந்த வருத்தமடைந்தாலும் அவரது மனைவியும் விடாமல் கவிஞர் மேல் அன்பு பாராட்டியபடி இருந்திருக்கிறார். ஒரு நாள் மனைவின் கண்ணீரைப் பார்த்த அந்த ஒரே நொடியில் தன் வெறுப்பு காணாமல் போனது என மிக அந்தரங்கமான நிகழ்வை மனிதத்துவத்தின் ஒரு துளி கருணை வெளிப்படும் நேரம் என விவரித்திருக்கிறார். எந்தொரு புனைவில் வெளிப்படும் காதலையும் வென்றுவிடக் கூடிய உணர்ச்சிபெருக்கு இந்நிகழ்வில் நமக்கு உண்டாகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒளிவுமறைவில்லாமல் இதை முன்வைத்த பாங்கு எனத் தோன்றுகிறது.
சித்திரம் வரைவதில், தமிழ் கவிதைகள் எழுதுவதில், சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றதைப் பற்றி பல நிகழ்வுகளாக நயமாக எழுதியிருக்கிறார்.கவிஞருக்கு சித்திரக் கலையில் இருந்த ஈடுபாடும், அதனால் தந்தையுடன் இருந்த மனஸ்தாபங்களும், பின்னர் அதுவே வாழ்வின் லட்சியமாக உருமாறிய பருவத்தின் நிகழ்வுகள் மிக சுவாரஸ்யமானவை. சித்திரத்துக்காக பல பரிசுகள், சன்மானங்கள் வாங்கிய சமயத்திலேயே தமிழார்வமும் அதிகமாகி பாட்டுகள் புனைந்து பல அரசியல் மேடைப் பேச்சுகளிலும் பிரபலம் அடைந்திருக்கிறார்.
பாரதியை சந்தித்த ஓர் இரவை மறக்க முடியாத தரிசனம் எனக் குறிப்பிடுகிறார். அந்த நிகழ்வைப் பற்றிப் படித்தால், கவிஞரைப் போல், நம்மாலும் மறக்க முடியாது. அந்தளவுக்கு தத்ரூபமாக அதை வர்ணித்துள்ளார். அந்தி சாய்ந்த சமயம். இருட்டான ஒரு தோட்டத்தில் பாரதியை முதன்முதலில் சந்தித்திருக்கிறார் கவிஞர். வெளிசசம் குறைவாக இருந்ததால் பாரதியின் உருவம் முழுவதும் அவருக்கு சரிவர பிடிபடவில்லை. கவிஞரைப் பற்றித் தெரியாத பாரதி, தன நண்பர்களுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். கவிஞரின் நண்பர் வெங்கட கிருஷ்ணய்யர் அவரை ஓவியர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'ஒ,பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மை காவியத்தில் தீட்டுவோம்' என சொல்லி கலகலவென சிரித்திருக்கிறார் பாரதி. 'ராமலிங்க பிள்ளையும் பாட்டுகள் செய்வார் ' என நண்பர் சொல்லும்போது , 'ஒ, ஓவியக் கலைஞர் ஒரு காவியக் கலைஞருமா.கவிஞரே நீங்கள் ஒரு பாட்டு பாடுங்கள்?' எனக் கூற கவிஞரும் தான் எழுதிய ஒரு விருத்தத்தை நடுங்கும் குரலில் பயத்தோடு பாடிக் காட்டியிருக்கிறார். 'பலே பாண்டியா, பிள்ளை, நீர் ஒரு புலவன் தான் ' எனப் பாராட்டியதோடு, அவரது வீட்டுக்கும் கவிஞரை அழைத்து சென்றுள்ளார்.
கவிஞருக்கு ஒரே ஒரு ஆசை. சிம்மக் குரலில் கணீரெனப் பாடுவார் பாரதி எனக் கேள்விப்பட்டதால், அவரை ஒரே ஒரு பாட்டு பாடச சொல்லவேண்டுமென ஆசைப்பட்டார்.மிகவும் தயங்கியபடி தன் கோரிக்கையை அவரிடம் சொல்லியிருக்கிறார். பாட்டா? அது ஆர்டருக்கு வராது.வரும்போது தான் வரும். பாடும்போது கேளும் என பாரதி தூங்கப் போய்விட்டாராம். அதிகாலை மூன்று மணி அளவில் தன்னை யாரோ எழுப்புவது போல் தோன்றியதில் கண்விழித்திருக்கிறார் கவிஞர். 'பாட்டு கேட்டீரே? இப்ப பாடப் போறேன். கேளுங்கள்' என எழுப்பி மூன்று மணி நேரங்கள் பாடியிருக்கிறார். அதிகாலை சூரியன் வருவதற்குள் பாடி முடித்துவிட்டு, சென்னைக்கு செல்ல ரயிலேறிவிட்டார் பாரதி. எப்பேர்ப்பட்ட ஆளுமை, என்ன வீர்யமான மனசு எப்போது மீண்டும் சந்திப்போமோ என அவரது உருவம் ஒரு புகை மூட்டமாக மறைவதை கவிஞர் வருத்தத்துடன் பார்த்து விம்முகிறார். நம்மாலும் அதை உணர முடிகிறது.
அப்பா வெங்கட்ராம பிள்ளையுடன் அவருக்கு இருந்த உறவு, காந்தி பக்தியாகத் தொடங்கிய விடுதலைப் போராட்ட உணர்வு, தமிழ் மேல் இருந்த அதீத காதல், பாட்டு எழுதுவதில் இருந்த புலமை, கிட்டப்பா சகோதரர்களுடன் இருந்த நட்பு, மனைவி மேல் இருந்த வெறுப்பு என கவிஞரின் பல முகங்களை அவரது வார்த்தைகளில் ஒளிவு மறைவின்றி அறிந்துகொள்ள முடிகிறது.
குறிப்பாக திருக்குறளுக்கு அவர் எழுதிய புதிய உரை பற்றிய பின்கதை மிக சுவாரஸ்யம். அதுவும் பரிமேலழகர் உரையை பல இடங்களில் தப்பெனக் கூறி சரியான விளக்கத்துடன் எழுத முற்பட்ட கதையை நயமாக வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையில் பரிமேலழகர் மேல் எந்தவித குற்றச்சாட்டும் முன்வைக்காமல் எழுதியிருப்பது கவிஞரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
மிக இயல்பான நகைச்சுவை உணர்வோடு பல நிகழ்வுகளை வர்ணித்திருக்கிறார். குறிப்பாக, அவரது அம்மா விரட்டிய பேய் பற்றிய கதையை சொல்லும்போதும், அவரது அப்பாவின் ஆங்கில புலமையைப் பற்றி விவரிக்கும்போதும் கள்ளமில்லாத அவரது மனது வெளிப்படுகிறது. கவிஞரின் அரசியல் ஈடுபாடுகள், பல தலைவர்களுடன் அவருக்கு இருந்த உறவு, மனஸ்தாபம் என அந்த கால தமிழக அரசியலை நம்முன் காட்டியுள்ளார்.
படித்து முடித்ததும் மிகத் திருப்தியாக இருந்தது. நம் மண்டையைப் பிளக்காத கவிஞரின் உரைநடையைப் படிக்கும்போது வருடிக்கொடுக்கும் தென்றலாக இருக்கிறது. இதைப் போல ஒரு புத்தகம் வேண்டாம், ஒரு பத்தி எழுதினால் கூட போதும் அந்த க்ஷணமே சுகமாக ரிட்டையர் ஆகிவிடலாம்.
Recent Comments