முதல் பகுதி இங்கே.
*
லண்டனிலிருந்து பாரிஸுக்குச் சார்லஸ் சென்றதும் புதுவித பூதம் அவர் மனைவியை ஆட்கொண்டது. அதுவரை படிதாண்டா புருஷனாக இருந்த சார்லஸ் எந்த மானைத் தேடிப்போனார்? ஒருவன் காணாமல் போக எட்டு புள்ளி கோலத்தின் அளவு சாத்தியங்கள் இருக்க, பெண்களுக்கு ஒன்று மட்டுமே புகையாய் விரிகிறது. இலக்கியம், கலை என ரசனை சம்பந்தப்பட்ட எதற்கும் தொடர்பில்லாது வாழ்ந்த சார்லஸை மட்டுமே அவள் அறிந்திருந்தாள். அவர் திடீரென காணாமல் போனது குழப்பத்துடன் கூடவே சந்தேகத்தையும் வளர்த்து விட்டது. பாலே நடனக்காரியுடன் பாரிஸின் மோன்மாத்ரே பகுதிக்கு அவள் கணவன் சென்றுவிட்டதாக நண்பர்களுக்குள் வதந்தி பரவியது.
குடும்பத்தை விட்டு விலகி தனித்தடம் பதிக்க விரும்புவதை ஆண்கள் தன்னிசையாக செய்து வருகிறார்கள். இம்மீறல்கள் பல காரணங்களுக்காக அமைந்திருக்கிறது. பொதுவாக லெளகீக சுமைகளிலிருந்து விலக்கம் அளிப்பது வெளிப்படையான காரணமாக இருக்கலாம். சித்தார்த்தன் சிண்டோமாக இதைப் பார்த்தாலும், அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. ஓஷோவின் பிரசங்கங்களில் இக்கேள்வி முக்கிய பங்கு வகிக்கும். துன்பத்தைக் கண்டு வெதும்பி அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க புறப்பட்ட புத்தனின் பயணமும், உலக இருப்புக்கு காரணம் தேடி புறப்பட்ட சங்கரரின் தேடலும் துன்பத்தில் தொடங்கவில்லை. இவர்கள் அன்றாட வாழ்வில் அளவுக்கதிகமான சந்தோசத்தை அனுபவித்தார்கள். ஒருகட்டத்தில் திகட்டிப் போன சிற்றின்ப லெளகீக சந்தோஷத்தைத் தாண்டி என்ன இருக்கிறது என யோசித்ததன் விளைவே அவர்கள் மேற்கொண்ட பயணம். பேரின்ப சந்தோஷத்துக்கு குடும்பம் தடைகல்லாக அமையும் என்பதே அவர்களது வாதம். பொதுவாக, பல ஆன்மிக துறவிகளின் சிந்தனைக் கோணமும் இவ்வகையிலேயே அமைந்திருக்கிறது. இவ்வுலகை வெறுப்பதுடன் மேன்மையான உலகுக்கான சாவி அவரவர் வழியில் இருப்பதாக அத்துறவிகள் நம்பினர். நாம் நம்பும் கடவுள் நிஜம்;ஆனால் அவர் படைத்த உலகு பொய் என நம்பவைப்பதே இத்துறவிகளின் இலக்காக இருந்தது என ஓஷோ ஒற்றை வரியில் இவர்களைப் பற்றி கூறுகிறார். அதெப்படி கடவுள் படைத்த உலகை உதசீனப்படுத்துவது? துன்பத்துக்குக் காரணம் ஆசையே என்றால், அந்த ஆசை கடவுளின் பகுதியல்லவா? மாயையான உலகைப் எதற்கு படைக்க வேண்டும்? மகிழ்ச்சிகரமான விண்ணுலகை அடைவதே இப்பூலகின் இலக்கா? இவ்வுலகில் இன்பமில்லையா? எனத் தொடர்ந்து பல கேள்விகளை ஓஷோ முன் வைக்கிறார்.
மிகவும் அபாயகரமான சிந்தனை. ஆனால் நிலப்படியைத் தாண்டி ஆகாயத்தை அளக்க முற்படும் மனிதர்களுக்கு இவ்வார்த்தைகள் சவுக்கடி. உணவு, இருப்பிடம் எனத் தொடங்கிய இத்தாவல் துறவறம், தாபம் என பல காரணங்களுக்காக இன்றும் தொடர்கிறது. நிரந்தரமான பயணங்களுக்கு தடை இருக்கும் பட்சத்தில், தற்காலிக வெளிநடப்புகள், விலகல்கள் நம்மைச் சுற்றி நடந்தபடியே உள்ளது. நாமும் இவ்விதிக்கு உட்பட்டு தற்காலிக வெளியேற்றங்களை செய்துகொண்டிருக்கிறோம். நிரந்தரமாக வெளியேறும் மனிதன் அனேகமாகத் திரும்பிப்பார்ப்பதில்லை. திரும்பும் மனிதன் வேறொருவனாக வந்துசேர்கிறான்.எப்படிப் பார்த்தாலும் அவனை அக்குடும்பம் இழக்கிறது. மதமாக, ஆன்மிக புத்துயிர்ப்புகளாக, சமயத் தலைவர்களாக, கலைஞர்களின் வாழ்வு, படைப்புகள் என மீண்டும் மீண்டும் வெளியேற்றத்தின் கதைகள் பதியப்பட்டு வந்துள்ளன. பெரும்பாலும் வாழ்வு நோக்கை விரித்துப் பார்க்க இக்கதைகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. இக்கதைகளின் முன்னுரையில் கூட குடும்பங்கள் இடம்பெறுவதில்லை. பின்னுக்குத் தள்ளப்படும் அவர்களின் குடும்படங்கள் காணாமல் போய்விடுகின்றன. புத்தரின் மனைவி யசோதரா, ராமானுஜரின் மனைவி (பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்?) என ஆன்மிகத்தில் பல உதாரணங்கள். ஆன்மிக துறவிகளின் மனைவிமார்களையாவது ஆசார்ய சம்பந்தத்துக்காக ஒருசிலர் சேர்த்துக்கொள்வார்கள்.ஆனால், கலைஞர்களின் மனைவிகளுக்கு அதற்கான கடுகளவு பிராப்தி கூடக் கிடையாது (இதையே கண்ணீரைப் பின் தொடர்ந்து எனும் புத்தகத்தில் ஜெயமோகன் இந்திய இலக்கியத்தின் மையமாக நம் காவியப் பெண்களின் கண்ணீரை விவரித்திருப்பார்.)
அதே சமயம், புனைவுகளில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உயிர் பெற்றிருக்கின்றன. யசோதராவின் வாழ்வை மையமாகக் கொண்டு பல நாடகங்கள், சிறுகதைகள் இயற்றப்பட்டுள்ளன. புரட்சியாளர்களின் சொந்தங்களும் பல புனைவுகளில் உருப்பெற்றிருக்கிறார்கள்;கார்ல் மார்க்ஸின் காதலியைப் போல். கலைஞர்களின் மனைவி, காதலி இடம்பெற்ற புகழ்பெற்ற படைப்புகள் பல உள்ளன. மிகத் திறமையான பியானோ கலைஞராக இருந்தும் அவ்வளவாக பிரபலமாகாத கிளாரா ஷூமேன் பற்றி பல நாவல்களும், திரைப்படங்களும் உள்ளன. கஸ்தூரி பாயின் கதை மராத்தியில் பிரபல நாடகமாக அரங்கேற்றப்பட்டது. இதனாலேயே புனைவில் இப்பாத்திரங்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள்; வாழ்ந்திருக்கிறார்கள். உயிரோட்டமாக அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்குறிய இடம் புனைவில் நிறுவப்பட்டுள்ளது.
சார்லஸின் மனைவியும் இச்சிக்கலில் மையம் கொள்கிறாள். இப்படி தனித்து விடப்படும் பெண்களைப் பற்றி மாம் விரிவாக உளவியல் ஆய்வு செய்திருக்கிறார். முதலில் இப்பெண்கள் (குடும்பங்களையும் தான். ஒரு சவுரியத்துக்காக மனைவி என எடுத்துக்கொள்ளலாம்) குழம்பிப்போகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இக்குழப்பம் கலவரமாகிறது. குடும்பப் பொறுப்பின் தீராத வலைக்குள் மெல்ல இழுக்கப்படுகிறார்கள். ஆண் மையச் சமுதாயத்தில், பொதுவாக இவ்வலை பெண்களின் கழுத்தை இறுக்கிவிடும். அவர்களால் வேறொன்றும் செய்ய முடியாத நெருக்கடி ஏற்படும். தத்தளிக்கும் குடும்பத்தை கரை சேர்த்தால் போதுமென நினைப்பாள். தகுந்த பண வசதி, உறவினர் பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் குழப்பம் கோபமாக மாறும். நம் கதையும் இப்படித் தான் பயணிக்கிறது. சார்லஸின் மனைவிக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். பள்ளியில் படிக்கும் சார்லஸில் இரு குழந்தைகளை அவன் பார்த்துக்கொள்கிறான். வலையில் இறுக்கும் குறைவாக இருப்பதால், சார்லஸின் மனைவிக்கு கோபம் அதிகமாகிறது.
சார்லஸ் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டானென அவளும் திட்டவட்டமாக நம்பத் துவங்குகிறாள். பார்த்திராத அப்பெண்ணின் மேல் இருக்கும் கோபம் மெல்ல பொறாமையாக மாறுகிறது. சார்லஸைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும், அப்பெண்ணை சந்திக்க வேண்டுமென்று துடிக்கிறாள். இந்நிலையில், பாரிஸிலிருந்து சார்லஸ் கடிதம் அனுப்புகிறான். ‘என்னைத் தேட வேண்டாம். நான் திரும்பி வரமாட்டேன்’ என தான் தங்கியிருக்கும் ஹோட்டல் முகவரியையும் எழுதியிருக்கிறான். ஒரு பைசா கூட எடுத்துப்போகாத சார்லஸ் பணத்தைக் கேட்டே முகவரியை இணைத்துள்ளான் என அவன் மனைவி நினைத்துக்கொள்கிறாள். அதே சமயம், அவனுடன் ஓடிப்போன பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்குள் முளைக்கிறது. பாரிஸுக்குப் பயணம் செய்ய முற்பட்டவளை அவள் அண்ணனின் கோபம் தடுத்துவிடுகிறது.
தன் அண்ணனுக்குத் தெரியாமல் சிறிது பணத்துடன் தாமஸை பாரிஸுக்கு அனுப்புகிறாள்.
இந்நிகழ்வைக் கொண்டு பெண்களின் உளவியலை மாம் ஆராய்கிறார். மற்றொரு பெண்ணின் மேலுள்ள பொறாமையைத் தாண்டி, தன்னவன் என நினைத்த சார்லஸ் மேல் இருக்கும் பிடிப்பாக மனைவியின் செயல் அமைகிறது. அவ்வப்போது கோபமும் பொறாமையும் எட்டிப்பார்க்காமல் இல்லை. தன் நிலைமை மோசமாக இருந்தால் , கொலை செய்யத் தூண்டும் அளவுக்குப் பிரதானமாக கோபம் வெளிப்பட்டிருக்கும். காதலை மறந்த ஒருவனை வயது வந்த பிள்ளைகளையும் பிரிய வைக்கும் சக்தி என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அவளை மீறி இந்நிகழ்வில் வெளிப்படுவதாகவே தோன்றுகிறது. அதே சமயம், தன் கணவனின் ஈர்ப்பு, தாபம் முடிந்தவுடன் அடங்கிவிடும் என நினைத்திருந்தாள். தான் திரும்ப மாட்டேனெனக் கூறியிருந்தாலும், ஒரு நாள் தன்னைத் தேடி அவன் வருவான் என நினைத்தாள். அதனாலேயே பணத்தையும் கொடுத்து அனுப்பினாள். இச்செயலை ஒரு பதிவிரதையின் செயலாகக் குறுக்கிவிடக்கூடாது என்பதில் மாம் கவனமாக இருக்கிறார். தன் கணவனுக்கு தகுந்த தண்டனையைத் தரத் தயாராக இருந்தாலும், மனைவியின் இச்செயல்பாடுகள், ’பெண்களைப் பற்றி புரியாதவை’ எனும் புத்தகத்தின் ஒரே ஒரு பக்கம் தான்.
தாமஸ் பாரிஸ் ஹோட்டலுக்குச் செல்கிறான். தன் மனைவி அனுப்பியவன் எனத் தெரிந்ததும், சார்லஸ் அவனை துரத்திவிடுகிறான். பல நாட்கள் முயற்சி செய்தும் அவனை சந்திக்க முடியவில்லை. இதற்காகவே அந்த ஹோட்டலுக்குத் தினமும் போகும் தாமஸ் அங்கு வேலை செய்பவனிடம் சார்லஸ் பற்றி விசாரிக்கிறான். சார்லஸ் தனியாக தங்கி வரும் விஷயம் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. மேலும், வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சார்லஸ் ஹோட்டலை விட்டு வெளியே செல்கிறார் என்பதும் தாம்ஸுக்குப் புரியவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில், அறையின் வாடகையைக் கொடுக்க முடியாமல், சார்லஸ் வெளியெ தள்ளப்படுகிறார். அப்போது, வாடகை பணத்தை தாமஸ் தந்து உதவுகிறான். அவன் உதவியை ஏற்றுக்கொண்டாலும் சார்லஸ் அவனிடம் பேச மறுக்கிறார் . உலகின் கடைந்தெடுத்த அயோக்கியனிடம் பேச முயற்சிக்கிறோம் என தாமஸுக்குத் தோன்றுகிறது. சில நாட்களுக்குப் பிறகு, கடைசி முறையாக முயற்சி செய்து பார்த்தபின் லண்டனுக்குத் திரும்பலாம் என சார்லஸின் அறைக்குச் செல்கிறான்.
பல முறை கதவைத் தட்டியும் திறக்காமல் போகவே, ஹோட்டல் மேனஜரைத் தொடர்பு கொண்டு கதவை உடைக்கிறார்கள். உள்ளே, ஜூரத்தில் படுத்தபடி சார்லஸ் பிதற்றிக்கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி, பல ஓவியங்கள் சிதறிக்கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பல ஆயிரம் பவுண்டுகள் விலை போகும் எனத் தெரியாமல், அவற்றை அங்கேயே தாமஸ் விட்டுவிடுகிறான். நண்பரின் வீட்டுக்கு சார்லஸை மாற்றுகிறார்கள். ஓவியக் கலைஞனான தாம்ஸின் நண்பன் மூலம் சார்லஸ் எப்பேர்ப்பட்ட கலைஞன் எனத் தெரியவருகிறது.
முதல் போராட்டம்
சில மாதங்களாக இந்தியரில்லாதவர் இந்தியாவைப் பற்றி தயாரித்த ஆவணப்படங்களை டிவிடிக்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து வெறுத்தேன். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், வர்ணனையாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளிலும் இருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்தியா என்றாலே கூட்டம், சந்தடி என்ற காட்சிகளைத் தவிர்த்து அக்கூட்டங்களைத் திறமையாக சமாளிக்கும் இந்திய போக்குவரத்துத் துறை, பழனி திருப்பதி போன்ற கோயில் நிர்வாகங்களைக் காட்டலாம்.
கிராம, நகர தெருக்களில் திளைக்கும் ஏழ்மையைத் தவிர்த்து, தன்னார்வலர்கள் நடத்தும் சமூக மேம்பாட்டுக் கழகங்கள், கிராம வளர்ச்சிக் கழகங்கள், பெண்கள் நடத்தும் சிறு குழு அமைப்புகளைக் காட்டலாம்.
தென்னகம் என்றாலே கேரள கடற்கரைகளில் பெரிய தொப்பிகள் அணிந்து நின்றபடி ஸ்பைஸி சிக்கன் மசாலா செய்வது எப்படி என்ற ருசிகர தகவல்களைத் தவிர்த்து, துறைமுகங்களில் சின்ன குழுக்களால் திறமையாக நடத்தப்படும் கடல்வாழ் விலங்குகள் ஏற்றுமதி நிறுவனங்களைக் (இங்கு வேலை செய்பவர்களில் பலர் பெண்கள்) காட்டலாம்.
வட மாநிலங்களென்றால் அழுக்கான பனாரஸ், காசி போன்ற ’ஷேத்திர’ இடங்களைத் தவிர்த்து, அங்கு வளரும் பிள்ளைகள் திடமான வேலை,குடும்ப மேன்பாடு, பம்பாய், தில்லி போன்ற கனவுகளில் ஒற்றை ஆசிரியர் புழங்கும் பள்ளிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம் என படித்துத் தேறுவதைக் காட்டலாம்.
அரசியல்வாதிகளின் மோசடி, பணக்காரர்களின் கருப்புப் பணம், ஷேர் மார்க்கெட்டில் தில்லுமுல்லு செய்யும் ப்ரோக்கர்கள் பற்றிய சூடான செய்திகளை ‘கவர்’ செய்யாமல், தனிப்பெரும் சக்தியென கூட்டுக் குடும்ப முன்னேற்றத்துக்காக பல மணி நேரங்கள் ரயில்/பஸ்களில் பயணம் செய்து சம்பாதிக்கும் சாதாரணப் பெண்களின் அசாதாரண தின வாழ்வைக் காட்டலாம்.
ரோட்டில் நடமாடும் ஆடு/மாடுகள், பாம்பாட்டிகள் என படம்பிடிக்காமல், இட நெருக்கடிக்காக இயற்கையை பதம் பார்க்காமல் இருக்கும் அரசின் பசுமைத் திட்டங்களைப் (Green Belt) பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறலாம்.
பள்ளிக்கு பொதி மூட்டைப் போல புத்தகங்களை தூக்கிச் செல்லும் பத்து வயது சிறுவர்களைப் பேட்டி காணாமல், அவர்களுக்கு இச்சிறு வயதில் தெரியும் கணித வாய்பாடுகள், அறிவியல்/உலக அறிவு தங்கள் நாட்டில் இருக்கும் ஒத்த வயது சிறுவர்களுக்கு இருக்கிறதா என யோசிக்கலாம்.
ஆளுயர சினிமா போஸ்டர்கள், அரசியல் கட்சிகளின் கோமாளித்தனம் போன்றவற்றைத் தவிர்த்து, இந்தியா இன்று அடைந்திருக்கும் தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் கீழ்+நடுத்தர குடும்பங்களின் பங்கு, தியாகம் போன்றவற்றை பல டெர்ரா பைட்டுகள் பதியலாம்.
பூசாரிகள், பஜனைக்காரர்கள், பட்டை அடித்து யோகா போஸ் கொடுக்கும் வித்தைக்காரர்களைத் தவிர்த்து, நம் கோயில்களின் பிரம்மாண்டம், சிற்ப அழகு, இந்திய இறையாண்மை, நாட்டார் கலைகள் போன்றவற்றை ஓரளவிற்கு படம் பிடிக்கலாம்.
நான் பார்த்தவரை வரலாற்றாசியர் மைக்கேல் வுட் தயாரித்த The Story of India ஆவணப்படம் மட்டுமே இந்தியாவைப் பற்றிய வேறொரு கோணத்தைப் பதிவு செய்கிறது. நம் நாடு என்ற பெருமைக் கொண்டாட இவ்வாணப்படங்கள் தேவையில்லைதான் . ஆனாலும், பத்து ஆவணப்படங்களில் ஒன்றிரண்டிலாவது நல்ல அம்சங்களைத் தொகுக்கலாம்.
இதில், பதியப்பட வேண்டியவற்றை திறமையாக மறைப்பதில் இருக்கும் அரசியல் மிகவும் அருவருப்பூட்டுகிறது.
*
போன போராட்டம் ரொம்பவே சீரியஸாக இருந்ததால், இப்ப கொஞ்சம் லைட்டான போராட்டம். இது ஆண்களுக்கான போராட்டம் என்பதால் லைட்டான போராட்டம் என நினைக்க வேண்டாம்.தப்பு, மேளம், விசில் எதெல்லாம் கைல கிடைக்குதோ, எல்லாத்தையும் தூக்கிக்கொண்டு தெருவில் நாம் இறங்கினால் கூட இதைச் சரி செய்ய முடியாது.ரொம்பவே நுண்ணரசியல் அதிகம்!
விஷயம் ஒண்ணுமில்லை. பல ஆண்டுகளாக ஆண்களுக்கெதிராக நடந்து வரும் சதியை, மெளனமா ஏற்றுக்கொள்ளாமல், புஜபராக்கிரம அங்கமாய் எதிர்க்கப் போகிறோம்.அதனால, சல்லிசான மேட்டர் தான் என நினைக்க வேண்டாம்
விஷயம் இதுதான்.
ஒரு கடைக்கு வாழ்த்து அட்டை வாங்குவதற்காக என் மனைவியுடன் சென்றிருந்தேன். பொதுவாக, இவ்விஷயங்களில் ஜகா வாங்கிவிடுவது என் வழக்கம். வாழ்த்து அட்டைத் தேடுவதில் இருக்கும் சோம்பேறித்தனம் முக்கிய காரணம். மற்றொரு காரணம் வாழ்த்துக்கள்னு சொல்லி இவங்க செய்யும் ரவுசு.
ஆனால் அன்றைக்கு மாட்டிக்கொண்டேன்.
இரண்டாவது காதலி,நாலாவது மனைவி,படிக்கத் தெரியாத ஒரு வயசு குழந்தை, எழுபது வயது கிழவி, உருப்படாத மச்சினன் என பலதரப்பட்ட வாழ்த்து அட்டைகளை நீங்கள் வாங்கியிருக்கக்கூடும். அப்பாக்களுக்கான வாழ்த்து அட்டையைப் பார்த்திருக்கிறீங்களா?
எந்த வயசு அப்பாவானாலும் சரி, சோம்பேறி, டி.வி முன்னாடியே தவம் கிடக்கும் கிராக்கி, அப்படி சும்மா உட்காராமல் எதையாவது கொறித்துக்கொண்டோ, பீர் பாட்டிலும் கையுமாக இருக்கும் படம் நிச்சயமாக அட்டையில் இருக்கும். உள்ளே -`அப்பா, என்னிக்கும் போல இன்னிக்கும் டி.வி முன்னாடியே உட்கார்ந்திரு` என்ற வாசகங்கள் பல நிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும். விலை அதிகமான அட்டைகளில் `கல்யாண சமையல் சாதம்` என்ற ரேஞ்சில் யானை பிளிறும் சத்தம் போல் சில சத்தங்களோ, குறட்டையோ கண்டிப்பாகக் கேட்கும்.
ரொம்பவே சிந்திக்கிற பார்ட்டிங்க தான் இதை தயாரிப்பார்கள் என நினைக்கிறேன். எவ்வளவு கிரியேட்டிவ்வாக இருந்தாலும், கருத்து ஒன்றுதான். உன்னுடைய சோம்பேறி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.
இது அப்பாக்கு மட்டுமில்லைங்க, காதலன், நண்பன் என பெண்கள் ஆண்களுக்கு கொடுக்கும் அட்டைகளிலெல்லாம் இருக்கும் விஷயம் தான். அப்படி ஒண்ணும், ஹியூமரும் அதிகமாக இருக்காது (ஆண்களுக்கு!). இவர்களுக்கு ஒரே யோசனை. நல்ல விக்ரமன் படங்களைப் பாருங்கள். ஆண்கள் செண்டிமெண்டலா புல்லரிக்க வைக்க முடியாதுன்னு யார் சொன்னது?
சமீபத்தில் பார்த்த வாழ்த்து அட்டையில்
உனக்கு குத்து சண்டை வீரர் அலி தெரியும்
சதம் அடிக்கும் ப்ரையன் லாரா தெரியும்
ஒத்தையாக பந்தைத் துரத்தி கோல் போடும் ரொனால்டோ தெரியும்
ஆனால், உட்கார்ந்த இடத்திலிருந்து இவை எல்லாவற்றையும் சேர்த்துச்
செய்யும் வீரரை எனக்கு மட்டும் தான் தெரியும்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
Recent Comments