சில நாட்களாக Ryszard Kapuscinski என்ற போலிஷ் பத்திரிக்கையாளரின் The Cobra's Heart என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 60களின் மத்தியில் ஒரு ரிப்போர்ட்டராக ஆப்பிரிக்காவுக்கு சென்ற ரிஸ்ஸார்ட் பயணக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
ஒரு ரிப்போர்ட்டருக்குத் தேவையான கூர்மையான எழுத்து, உணர்ச்சிகளுக்கு இரையாகாத பார்வை எனச் சரியான கலவையில் இவரது எழுத்து பயணிக்கிறது.குறிப்பாக, ரிப்போர்ட்டிங் கட்டுரைகளையும் ஒரு புனைவை அணுகுவது போல் அமைத்திருப்பது அந்த காலத்தில் புதுமையாக இருந்திருக்க வேண்டும். மிகப் பிரபலமான பத்திரிக்கையாளராக உலகப் புகழ் பெற்றார். நமிபியா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகள் விடுதலையை நோக்கிப் படையெடுத்துகொண்டிருந்த நாட்களில் இவர் அங்கிருந்திருக்கிறார். தனது ரிப்போர்ட்டில் புனைவு சாத்தியங்களையும் கையாண்டு அதே சமயத்தில் அங்கு நிகழ்ந்த வெள்ளையர்களின் அரசியலையும், ஆப்பிரிக்க மக்களின் வாழ்வு முறைகளையும் தெளிவாகச் சித்தரித்துள்ளார்.
இவ்வளவு பெரிய நிலப்பரப்பை, பலதரப்பட்ட குழுக்களை ஆப்பிரிக்கா எனும் ஒற்றைச் சொல்லால் எப்படி அளவிட முடியாது என்பதை பல நிகழ்வுகள் மூலம் கூறுவது இவரது பலமாகத் தெரிகிறது. அதேபோல் இவர் மலைக்கும் மற்றொரு விஷயம் ஆப்பிரிக்க விலங்குகள். ஆப்பிரிக்காவில் அன்றாடம் நடக்கும் காட்சி - வெயில் தாங்கமாட்டாமல் ஆயிரக்கணக்கான அப்பிரிக்க எருமைகள் பாதி மயக்கத்தில் காட்டில் படுத்துக் கிடக்கும். பல மைல்கள் தாண்டி போகும் ஒரு மோட்டார் வாகனச் சத்தம் அவற்றை எழுப்பிவிட்டால் ஒரு மாபெரும் பிரளயம் போல் புழுதி கிளம்ப அவை அச்சத்த்த்தை நோக்கி வேகமாக ஓட்டமெடுக்குமாம். நடுவில் மாட்டினால் சட்டினி தான். அதேபோல் மலைப் பாம்புகளைப் பற்றி அவர் விவரிக்கும்போது நம் கால்களை ஒரு மீட்டர் தூக்கி வைத்துக்கொண்டுதான் படிக்க முடியும்.
பல சமயங்களில் இவர் எழுத்து அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளை நினைவூட்டுகிறது. அதே போன்ற துள்ளியமான பார்வை, தாமரை இலை நீர் போல் எட்ட நின்று பார்த்து, ரசிக்கும்படி எழுதிபின் எதுவும் தெரியாததுபோல் அவற்றைக் கடந்து செல்லும் பாணி என அ.முத்துலிங்கமே ஆங்கிலத்தில் எழுதியது போலிருக்கிறது. ஒருவேளை இவரும் ஆப்பிரிக்காவைப் பற்றி எழுதியதால் இருக்கலாம்; ஆப்பிரிக்க மக்களின் வாழ்வை விவரிப்பதால் இருக்கலாம்.
ஆனால் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் இருக்கும் ஒன்று இவரிடம் இல்லை. அது காருண்யம்.
Recent Comments